நிலா மோனாஇராக்களில்
கண்களில் கவிழ்ந்து கிடக்கின்றன
உன் கனவுகள் !

பகலிலோ...
மூடிய விழிகளைத் திறக்கின்றேன்
நினைவுகளில் உன் முகம்!

#காதல்_அன்பான_அவஸ்தை!

-------------------------------------------------------------------------------

வாழ்க்கையை உன் னன்பில் கற்றுக் கொண்டேன்....
வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்.....
நிழலாய் தொடரும் உன் ஞாபகங்களுடன்!

------------------------------------------------------------------------------

ஒவ்வொரு முறையும் உன்னை என்னிடம் விட்டுச் செல்கின்றாய்
முத்தங்களாய்!

------------------------------------------------------------------------------

இந்த உலகத்தில் ரொம்ப பாக்கியசாலி உண்மையான அன்பு கிடைத்தவர்கள்தான்...அந்த அன்பை உணரும் இதயத்தின் துடிப்பொலிகள் மகிழ்ச்சியின் அலைவரிசை! ஏனெனில் அந்த அன்பை வார்த்தைகள் அளவிடாது!

#என்னவனே.....!

நீ எனக்குக் கிடைத்த இனிய வரம்........டா!

------------------------------------------------------------------------------

வெட்கப்பட்டுக் கிடக்கின்றேன் - நீயென்
பக்கம் வந்து நின்றதால்...
பட்டுக் கன்னங்கள் சிவந்தும் நின்றேன் - நீ
தொட்டுச் சென்ற நினைவுகளைச் சிந்தி!

-------------------------------------------------------------------------------

காதல்.......
உனக்கான என் பரிசு!
இந்த உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஒலிக்கும் காதலின் உச்சரிப்புக்களும், காதலுக்கான பிரார்த்தனைகளும் நம் அன்புக்கான அடையாளங்கள்!

-------------------------------------------------------------------------------

பெருமழை கைக்குட்டை தாங்குமோ
பனிக்குளிரை மெழுகனல் தடுக்குமோ
உன் மௌன முணர்த்தும் பிரிவுத் துயரில்
என் வலி யாறுமோ
அன்பே சொல்!

------------------------------------------------------------------------------

இட்ட மணலையும் தாண்டி தலை நீட்டும் செடிபோல்
கட்டிளங் காளையுன் பார்வையென்னில் படர்கையில்....
நாணம் அவிழ்ந்து விழி விரிக்கின்றேனடா - உன்
அன்பி லென்றும் கரைந்திருக்க!

-------------------------------------------------------------------------------

காலம்தான் மனக்காயத்தின் மருந்து!
சில துன்பம் சீக்கிரம் கரைந்து விடும்...
சில துன்பம் நம்மை அரித்து விடும்...

------------------------------------------------------------------------------

துன்பம் நெஞ்சைக் கரைக்கும்போதெல்லாம்
கைக்குட்டையாய் நீ!
வலி தீர்க்கும் உன் அன்பால் - என்
வாழ்வின் கற்கள்கூட பூக்களாய் மாறும் அதிசயம் பார்!

------------------------------------------------------------------------------

உன் பார்வை ஒன்றே போதுமே
என் கண்ணீர் ஒற்றிக் கொள்ள!

------------------------------------------------------------------------------

நீ பேசாத பொழுதுகளில்
வானம் கரைந்தோடுகின்றது
எனக்காக!

நீ அருகிலிருக்கும்போது
அந்த வானமே குடையாகின்றது

-----------------------------------------------------------------------------

நீ சூடும் முத்தப்பூக்களை நுகர்வதற்காய்...
ஒவ்வொரு இரவுகளிலும்
உன் னருகில் நான்...
கனவாக!

------------------------------------------------------------------------------

களவாய் கனவில் வந்து
கன்னம் கடிக்கும் கள்வனடா நீ!

அழகாய் சிரித்து
ஆழமாய் உள்ளமிறங்கும் அன்பனடா நீ!

நீ.......
என் செல்லமடா

-------------------------------------------------------------------------------

உன் உதடுகள்  மௌனம் பிழிந்தால்.....
என் பார்வைகள்
என்றுமினி தனிமைக்குள் மொய்க்கும்
யாருமின்றி!

-------------------------------------------------------------------------------

எனை மறந்து போனாய்
மனதில் வலி வார்த்து......

உயிரறுந்து போகின்றேன்
உனைப் பிரிந்ததில...

இருந்தும்....
உனக்காய் பிரார்த்திக்கின்றேன்

நிம்மதி தேடும் உன் மனதிற்குள்
இறைவன் அமைதி தருவானாக!

------------------------------------------------------------------------------

உன் முத்தச் சத்தத்தில்தான் - என்
ஒவ்வொரு விடியலும்......
சோம்பல் முறித்துக் கொள்கின்றது
என் அன்பே!

------------------------------------------------------------------------------

காதல்....!

ஓர் அழகான உணர்வுதான் மறுக்கவில்லை. ஆனால் அந்தக் காதலின் ஒவ்வொரு உணர்வும் அன்பால் எழுதப்படும்போது எழுகின்ற ஏக்கம், தவிப்பு, கூடல், ஊடல், ஆசைகள்.........

எனப் பல மெதுவாக மனதில் ஊர்ந்து அதை அருட்டுமே!
அப்போது எழுகின்ற வலி கலந்த சுகம்....

அதனை வர்ணிக்க வார்த்தைகளேது!

----------------------------------------------------------------------------------

என் கருவிழியில் படரும் விம்பமாய் நீயானதில்
என் நடைபாதையெங்கும் உன் பாதச் சுவடுகள்தானடா!

-----------------------------------------------------------------------------------

உன்னை தினமும் மனப்பாடம் செய்ததில்
என்னையே மறந்துவிட்டேன்

--------------------------------------------------------------------------------------

நாம் தினம் சண்டையிடுவோம்
அப்பொழுதுதான்...........
உன் முத்தங்களும் கொஞ்சல்களும்
அதிகமாக கிடைக்கும் !

---------------------------------------------------------------------------------------

தினம் சண்டையிட்டுக் கொண்டுதானி ருக்கின்றோம்
இருந்தும்.....
உன்னை நானும்
என்னை நீயும்
யாருக்கும் விட்டுக் கொடுப்பதாயில்லை!

என்னவனே...
இதுதான் காதலின் குணமோ!

----------------------------------------------------------------------------------------

காதல்......!

நம்மை ஸ்பரித்துச் செல்லும்போதெல்லாம்....

கூடலும்.....
ஊடலும்.....

நம் விதி நெய்யும்
ஆயுள் ரேகையாய்!

என்னவனே...
அன்பை உன்னிடம்தானே  கற்றுக் கொண்டேன்...!

காற்றும் நுழையா நம் நெருக்கத்தின்
சாட்சியாய் என்றும் நம் நினைவுகள்!

------------------------------------------------------------------------------------
நாம் மௌனிக்கும்போதெல்லாம்
உரத்துப் பேசி விடுகின்றது நம் முத்தம்!

நாம் சண்டையிடும் போதெல்லாம்
நம்மை அமைதிப்படுத்தி விடுகின்றது நம் முத்தம்!

முத்தங்களின் தித்திப்புக்கூட
காதலுக்குச் சுவைதானோ என் அன்பே!
--------------------------------------------------------------------------------------

உன்னை நானும்....
என்னை நீயும்.....
மனதில் சுமந்து
மகிழ்ச்சியாய் மணிக்கணக்காய் பேசுகின்றோம்!

என்ன பேசுகின்றோம்
எதுவுமே புரியவில்லை...

இருந்தும்.....

பேச்சை நிறுத்தும்போதல்லவா - என்
சுவாச மூச்சு திணறுகின்றது!

-------------------------------------------------------------------------------------
உன்னை மறந்துவிட்டு உறங்குவதாய்
திட்டுகின்றாய் இப்போதெல்லாம்.....

அட......

என்னவனே....

கனவுகளில் உன் கரம்பற்றி உலாவ வல்லவோ
இவ்வுறக்கம்!

------------------------------------------------------------------------------------
வான்குடை கவிழ்த்து தேன்துளி சிந்தும்
தருணம்......
சாரலாய் மெல்லத்தழுவியென்
ஈரமுறிஞ்சும் வண்டாய் உன்னிதழ்கள்!

-----------------------------------------------------------------------------------

மௌனமுடைத்து
நீ
பேசும்போதெல்லாம்...
ஆசைகள் வெட்கம் துறந்து
அரவணைத்துக் கொள்கின்றன
உன்னைச் சுற்றியே!

---------------------------------------------------------------------------------
அகிலத்தின் உயிர்ப்போட்டத்திற்கு இயக்கமாக இருக்கும் உன்னதமான உறவே காதல்..

இது  மனிதர்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்த ஒர் உணர்வு, தாம் நேசிக்கின்றவர், தன்னை நேசிக்கின்றவர் எனும் வட்டத்தின் சுழற்சியின் அச்சாணி..
தன் நினைவுகளுள் புரண்டு உயிரோடிணைந்து உயிரை வருடும் தன் நேசிப்பின் நெருடலோடு ஆயுள் முழுதும் சேர்ந்து வாழ வேண்டுமென்ற  ஆசை....இந்த அன்பு போராட்டத்தின் முதற்படியாகத் தொடங்கினாலும் இறுதியின் உச்சக்கட்டம் ரம்மியமான நினைவுகளின் சுகம்...

காதல் வெற்றி பெறலாம், தோற்றுப் போகலாம்....ஆனால் அதன் நினைவுகள் மரணம்கூட பிரிக்க முடியாதது!
-------------------------------------------------------------------------------------
நீ எனும் ஒற்றைச் சொல்......என்
வாழ்வின் முடிவுப்புள்ளி!

-------------------------------------------------------------------------------------
என்னிதயத்தை நினைந்து பெருமைப்படுகின்றேன்...

ஏனெனில்....

கண்ணீர் கசியும் துன்பம், ஏமாற்றம், சோதனை எல்லாம் என்னை வருத்தும் போதெல்லாம் துடிப்பது இதயம்தானே!
-------------------------------------------------------------------------------------------
தனிமை இனிமையானதுதான்...

ஆனால் அதைவிட இனிமையானது - தினமும்
அன்பானவர்களால் சூழ்ந்திருப்பது!
------------------------------------------------------------------------------------------------
அன்பை வருடித் தந்தாய்....
உன்னில் உணர்ந்தேன் தாய்மையையும் தூய்மையையும்!

-----------------------------------------------------------------------------------------------
நிசப்தத்தின் இம்சையில் - நீ
விட்டுச் செல்லும் மௌனமே
இனி யென் கவிதையாய்!
----------------------------------------------------------------
மேகங்கள் தீண்டா நிலாப்பெண் நானடா...
இருந்தும்....
உன் ........
விரல்கள் தீண்டும் கவிதையாய்
பிறப்பெடுக்கின்றேன்  உன் ஞாபகத்துள் நசிந்தபடி!
----------------------------------------------------------------------------
தோல்வி என்பது அனுபவங்கள் பெற்றுத் தரும் களமேடை..........

எனவே ........

தோல்வியற்ற வாழ்வு கிடைக்கும்போது நாம் நம் அனுபவங்களை இழந்து விடுகின்றோம்......
------------------------------------------------------------------------------------

2 comments:

 1. வணக்கம்
  கவிதையின் ஒவ்வொரு வரிகளையும் பல தடவை இரசித்துப்படித்தேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை