About Me

2014/10/29

24 வருடங்கள்

எங்கள் அகதி வாழ்விற்கு வயது
24.......
.
இதய மின்னும் இற்றுப் போய்த்தான்
இருக்கின்றது....
இரண்டு மணி நேர இனச் சுத்திகரிப்பின்
வீரியத்தில்!
.
நவீனத்தின் பற்றுதலோடு
சுற்றிச் செல்லும் இப் பூமியின் எச்சமாய்
இன்னும்
இடிந்த கட்டிடங்களும்
உருக்குலைந்த மனிதங்களும்
அகதிச் சரிதத்தின்
முகப்புக்களாய் முகங்காட்டித்தான்
கிடக்கின்றன!
.
களமிறங்கும் அரசியல்கள்
கச்சிதமாய் வேட்டுக்களை ஏப்பமிட்டும்
இன்னும் திரும்பிப் பார்க்கவேயில்லை
இருண்ட எம் தாயத்தை!
.
யுத்தம் சப்பிய ஆன்மாக்கள்
நாமாய்...
விரட்டப்பட்டும் மிரட்டப்பட்டும்...
அவலத்தின் சந்ததியாய்- இவ்
அவனிக்கும் பாரமாய்
அந்ததரித்துக் கிடக்கின்றோம்!
.
நிவாரணங்கள் நிர்க்கதியானதில்...
தேய்ந்து போன தாயத் தெருக்கள்
எம் சுவடுகளின்றி
இன்னும்...
குற்றுயிராகத்தான் கிடக்கின்றன!
.
ஆகாயம் வெறித்துக் கிடக்க
அலை புரளும் கடலும்
வியர்த்துக் கிடக்க.........
பனையும் தென்னையும் உரசும்
யாழ்க் காற்றில்..............எம்
மூச்சும் கோர்த்துக் கிடக்கு
மந்தக் காலம் மட்டும்
ஏனோ.......
இன்னும் விடை தரா வினாவாக!
----------------------------------------------------------------------------------------

(30.10.2014 அன்று நாம் யாழ் மண்ணிலிருந்து விரட்டப்பட்டு 24 வருடங்கள் ..............
காலங்கள் ஓடலாம்- ஆனால் எம் ஞாபகச் சுவர்களின் அந்தக் கண்ணீர்த்துளிகள் நாம் மரணிக்கும் வரை ஈரம் உலர்த்தாது.........

உண்மையில்.............

வீடு தேடி அலையும்போதுதான் அகதி வாழ்வின் விரக்திச் சுமை மனதை வருத்தும் அரக்கனாக மாற்றுகின்றது.

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!