என்னுள் நிரம்பும் நீ

என்னுள் நிரம்பும் நீ.............காதல் .................
தனிமை    நிரப்பிய வெற்றிடத்தை
நிரப்புகின்றது அன்பால்!

ஒவ்வொரு இரவுகளும்.......
அவிழ்க்கும் கனவுகளில் - உன்
வாசம் தாலாட்டாய்
விழி மடிக்கின்றது!

என்
விரல்கள்  உன்னை மீட்டும் போதெல்லாம்
உதிரும் நாணத்தில்
உன் புன்னகையுமல்லவா...
சிவந்து போகின்றது மருண்டபடி!

அன்பே......
காதல் அழகிய வரம்!
அதனாற்றான்....
நம் சுவாச வேலிகளில்
சுகத்தை தேய்த்துச் செல்கின்றது
உயிரும்!

நம்மைக் கடந்து செல்லும்  தென்றலில்
கசங்கிக் கிடக்கும் நம் முத்தங்கள்
இன்னும்......
ஈரங் கக்கிக் கொண்டுதான்  கிடக்கின்றன
கதுப்புக்களில்!
ரகஸியமாய் தொட்டுப்பார்
ராத்திரிகளின் கிண்டல்களில்...அவை
உலர்ந்துவிடப் போகின்றன!

என்னவளே..
இமைகள்  உரசிச் செல்லும் பார்வைகள்
மனவௌியில் சொக்கிக்  கிடக்கையில் .........
நம் வாலிபப் போர்வைக்குள்
வசந்தங்களின் வருடலல்லவா
வந்து வீழ்கின்றது!

அடடா.........
வெட்கித்து  கிடக்கும் - நம்
காதலின் கூடல்...........
சிலநொடிகளில் மோதலாய் வெடிக்கையில்
நம் விழிகளின் விசாரிப்பில்
அன்பும் அடங்கிப் போகின்றது
சிறு குழந்தையாய்.........

செல்லமே! - என்
காட்சியின் நீட்சியில் உறைந்திருக்கும்
தேவதை நீ.........
அதனாற்றான்....... என்
தனிமை விலக்கி
அரவணைக்கு முன்னன்பில்
நானும்
அரணமைத்து வாழ்கின்றேன்...!

இறுக்கமாய் பற்றிக்கொள் என்னை
இதமாய்.....
உறவாய் - நம்
காதலும் வாழட்டும் ...!

நம்மைப் பரிமாற்றும்  குறுஞ்செய்திகள்
நிறுத்தப்படுமபோது.....
சொல்லிவிட்டுத்தான் போகின்றேன்
தினமும் ..
ஆனாலும் மனது
உனைப் பிரிந்து வரமறுக்கும் போதெல்லாம்
நீயோ ஊடல் கவிதையில்
உனை  எழுதுகின்றாய் வலியோடு!

காமம் துறந்த நம் காதலில்
தாய்மையின் விலாசம் முகங்காட்ட.......
நீயும் நானும்  சிறு கிள்ளையாகி
அன்பால்
வாழ்வை நெய்துகொண்டிருக்கின்றோம்
அழகாய்!

அன்பே....
உன் மனதைக்  கிழித்து
நானெழுதும் அன்பின் வருடல்கள்.......
உன்னுள் விதைக்கும்
கனவுளையும் ஏக்கங்ளையும் தொட்டுக்கொள்ள
வருவேன் ஓர் நாள்......

அதுவரை....
உன்
நினைவுக்குள் கவிதையெழுதும்
பிரதி விம்பமாய் நான்
சுருண்டு கிடக்கின்றேன் உன்னுள்


            - A. AMEER  MONA -

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை