About Me

2015/02/14

என்னுள் நிரம்பும் நீ

 
காதல்
தனிமை    நிரப்பிய வெற்றிடத்தை
நிரப்புகின்றது அன்பால்!

ஒவ்வொரு இரவுகளும்
அவிழ்க்கும் கனவுகளில் - உன்
வாசம் தாலாட்டாய்
விழி மடிக்கின்றது!

என்
விரல்கள்  உன்னை மீட்டும் போதெல்லாம்
உதிரும் நாணத்தில்
உன் புன்னகையுமல்லவா
சிவந்து போகின்றது மருண்டபடி!

அன்பே
காதல் அழகிய வரம்!
அதனாற்றான்
நம் சுவாச வேலிகளில்
சுகத்தை தேய்த்துச் செல்கின்றது
உயிரும்!

நம்மைக் கடந்து செல்லும்  தென்றலில்
கசங்கிக் கிடக்கும் நம் முத்தங்கள்
இன்னும்
ஈரங் கக்கிக் கொண்டுதான்  கிடக்கின்றன
கதுப்புக்களில்!
ரகஸியமாய் தொட்டுப்பார்
ராத்திரிகளின் கிண்டல்களில் அவை
உலர்ந்துவிடப் போகின்றன!

என்னவளே..
இமைகள்  உரசிச் செல்லும் பார்வைகள்
மனவௌியில் சொக்கிக்  கிடக்கையில்
நம் வாலிபப் போர்வைக்குள்
வசந்தங்களின் வருடலல்லவா
வந்து வீழ்கின்றது!

அடடா
வெட்கித்து  கிடக்கும் - நம்
காதலின் கூடல்
சிலநொடிகளில் மோதலாய் வெடிக்கையில்
நம் விழிகளின் விசாரிப்பில்
அன்பும் அடங்கிப் போகின்றது
சிறு குழந்தையாய்

செல்லமே! - என்
காட்சியின் நீட்சியில் உறைந்திருக்கும்
தேவதை நீ
அதனாற்றான்  - என்
தனிமை விலக்கி
அரவணைக்கு முன்னன்பில்
நானும்
அரணமைத்து வாழ்கின்றேன்!

இறுக்கமாய் பற்றிக்கொள் என்னை
இதமாய்
உறவாய் - நம்
காதலும் வாழட்டும்!

நம்மைப் பரிமாற்றும்  குறுஞ்செய்திகள்
நிறுத்தப்படுமபோது
சொல்லிவிட்டுத்தான் போகின்றேன்
தினமும்
ஆனாலும் மனது
உனைப் பிரிந்து வரமறுக்கும் போதெல்லாம்
நீயோ ஊடல் கவிதையில்
உனை  எழுதுகின்றாய் வலியோடு!

காமம் துறந்த நம் காதலில்
தாய்மையின் விலாசம் முகங்காட்ட
நீயும் நானும்  சிறு கிள்ளையாகி
அன்பால்
வாழ்வை நெய்துகொண்டிருக்கின்றோம்
அழகாய்!

அன்பே
உன் மனதைக்  கிழித்து
நானெழுதும் அன்பின் வருடல்கள்
உன்னுள் விதைக்கும்
கனவுளையும் ஏக்கங்ளையும் தொட்டுக்கொள்ள
வருவேன் ஓர் நாள்

அதுவரை
உன்
நினைவுக்குள் கவிதையெழுதும்
பிரதி விம்பமாய் நான்
சுருண்டு கிடக்கின்றேன் உன்னுள்

- Jancy Caffoor-
  14.02.2015

2015/01/06

தேர்தல் வந்து விட்டால்

தேர்தல்கள் வரும்போது
ஆரத்தி வன்முறைகளால்!

தலைமைகளுக்காக
தலைகள் உருள்கின்றன!

வேஷம் கிழிக்கும் மேடைகள்
ஆவேச முழக்கங்களால்!

தொண்டர்கள் அடிதடி
மண்ணாழ்வோர் கூண்டுக்குள்!

வோட்டுக்களின் முரசறைவில்
வெற்றியாளர் கரமசைக்க

காலம் கடந்து செல்கின்றது
அமர்க்களமாய்
செல்வங்களைக் குவித்தபடி!

ஆனால்

தோற்றுப் போகும்
வாக்குகளின் நம்பிக்கைகள் மட்டும்

நிரப்பப்படாத
வெற்றிடமாய் அடுத்த தேர்தலைத் தேடி!

- Jancy Caffoor-
  06.01.2015

2015/01/05

அஸ்கா - சித்திரம் பேசுதடீ



சின்னப்பிள்ளைகளுக்கு ரொம்ப பிடித்தமான கலை சித்திரம் வரைவதுதான் பேப்பரும் கலரும் கிடைத்து விட்டால் போதும் கைகளில் வர்ணங்கள் அவர்களின் உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுத்து விடும். எங்க வீட்டு அஸ்காக்கும் இது பொருந்தும்.

-Jancy Caffoor-
 01.05.2015

2015/01/04

அல்லாஹ்வின் அருட்கொடை


ரபியுல் அவ்வல் பிறை 12
அவனியெங்கும் பூத்தூறல்
அண்ணல் நபி பூ முகங் காண!

இருளின் வெம்மையில் மானிடா்
மருண்டெழுந்த நேரம்
திருமறையின் வாசகங்கள்
மாநபியின் மாண்பின் சுவாசமாய்!

ஜாஹிலியா  துகிலுரித்த நாட்களில்
அருள் மொழியின் சுவடுகளாய்
ஔிப் பிராவகம்
அரபுத் தேசமதில்!

வஹி
அஹிம்சையின் ஆதாரம்!
அகிலத்தின் வாழ்க்கைக் கையேடு!
இவ்வுலகின் அறியாமை
பிழிந்தழிக்கும் அதிசயம்!

இஸ்லாம்
முஸ்லிம்களின் முகவரிகள்
தீன் அமுதூட்டலில்
இவ் வையகத்தை நிமிர்த்திட
உம்மி நபியின்  உன்னதங்களை
உரைக்கும் உரைகல்!

எம் பெருமானார் அவதரித்த
இந்நாளில்
முழங்கட்டுமெங்கும் அவரற்புதங்கள்!
சந்தனம் கமழும் நம் ஸலாம்
மொழிவில்
எந்தன் நபியின் கண்ணியம் மிளிரட்டும்!

அல்லாஹ்வின் அருட்கொடை
அண்ணல் நபியவர்கள் பிறந்த
இன்னாளில்
நல்லமல்கள் செய்தே
வல்ல அல்லாஹ்வின் அருள் பெறுவோமே!


-Jancy Caffoor -
 01.04.2015

ஆரோ வருகினம்


நேற்று காலையில இருந்தே வாசல்ல காகம் கரைஞ்சிட்டே இருந்தது.

"சூ  சூ"

துரத்தினாலும் போகல. அதப் பார்த்து அஸ்கா கேட்டாள்.

"ஏன் காகம் நம்ம வீட்டப் பார்த்து கரையுதுனு"

நானும் பதில் சொல்லனும் எனும் கடமை உணர்ச்சியில சொன்னேன்

"காகம் கரைஞ்சா யாரும் வீட்டுக்கு வருவாங்களாம்"

யாரோ நான் சின்னப்புள்ளயில சொன்னது இன்னும் ஞாபகத்தில கரைய சொன்னேன்
இந்தக் காலத்து புள்ளங்கள சமாளிக்கிறதே ரொம்பக் கஷ்டம்
பட் பட்டுனு அடுத்தடுத்த கேள்விகள்
யாரு? எப்போ? அப்படினு தொடர்ந்த கேள்வி கடைசிக் கேள்வியோட முடிஞ்சுது இப்படி

"அப்ப யாரும் வராட்டி"

சந்தேகத்தோடு கேட்டாள்.
நானும் சொன்னேன்.

"யாரும் வராட்டி  இனி காகம் கரைஞ்சா யாரும் வரமாட்டாங்க என்று நினைப்போம் சரியா"

நான் சொன்னதைக் கேட்டு மெல்லத்  தலையாட்டினாள்.

பி.கு
-------
இனி யாரும் காகம் கரைந்தால் யாரும் வருவாங்க என்று சொன்னால் நம்பவே மாட்டேன்.நீங்க!

(என்னதான் நாம் விஞ்ஞான உலகத்தில நம்மைப் பதித்தாலும்கூட இப்படியான மூடநம்பிக்கைகள், எதிர்வுகூறல்களை மனசும் நிராகரிக்காமல் நம்பிக் கெட்டுப்போகுது)


-Jancy Caffoor-
 01.04.2015