About Me

Showing posts with label தரிசனம். Show all posts
Showing posts with label தரிசனம். Show all posts

2019/05/04

இருள் குமிழ்

இருளில் கரையும் தரையை
உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன
மின் விளக்குகள்

- Jancy Caffoor -
  04.05.2019

2014/08/08

பணத்தின் அருமை


Anuradhapura Bank town

அன்பியா ஜூவலர்ஸ் முன்னாலுள்ள வீதி மஞ்சள் கோட்டுக்கருகில்!

இன்று மாலை ஒரு தேவையின் பொருட்டு கடைக்குச் சென்றிருந்தேன். எனது வேலை முடிவடைந்த பின்னர் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த எனது மோட்டார் சைக்கிளை இயக்க ஆரம்பித்த போது..................

எனக்கருகே மோட்டார் சைக்கிளொன்று உரசி நின்றது..

திரும்பிப் பார்த்தேன்...

"ஸ்கூட்டி பைக்"

நடுத்தர நவநாகரிக சிங்களப் பெண்மணி அவசரமாக உந்துருளியிலிருந்து இறங்கினார்.

அவரைச் சுற்றி என் கண்கள் மொய்த்தன.........

எனக்கு மிக அருகில்  காற்றில் படபடத்துக் கொண்டிருந்த நூறு ரூபாய் நோட்டினை  தனது சைக்கிள் சில்லினால் மறைத்தவறே நின்றிருந்தார். அருகில் நான் நிற்பது அவர் அவசரத்திற்குப் புரியவில்லை.

மின்னல் வேகத்தில் கீழே குனிந்து அந்தப் பணத்தை தன் கைகளுக்குள் பொத்தியவாறே பறந்தார்.

அவர் முகத்தில் சந்தோஷக் களை...ஆனால் பணத்தைத் தொலைத்தவர் மனதில்!

சனநடமாட்டம் உள்ள இடத்தில்கூட அடுத்தவர் பற்றிய எண்ணமில்லாது பாய்ந்திறங்கி பணத்தை எடுத்த அப்பெண்மணியைக் கண்டதும்....

என் மனதில் பணத்தின் அருமை புரிந்தது.

நானோ  ....

மனம் தேவையொன்றைத் தீர்மானித்ததும் கவலையின்றி பணத்தைக் கரைக்கும் தவறு  உறைத்தது...

சாதாரணமாக கவலையின்றி நான் செலவளிக்கும் அந்தப் பணத்தை, அப்பெண்மணி எடுத்துக் கொள்ள பதினைந்து நிமிடங்கள் செலவளித்திருக்கின்றார். அடுத்தவர் பணத்தை எடுப்பது தவறு என்றாலும்கூட, அச்சிறு பணத்தின் பெறுமதி அம்மணிக்கு நன்கு புரிந்திருக்கின்றது!

என் நலனில் அக்கறை கொண்டோர், பணத்தை வீண் செலவு செய்யாமல் சேமிக்கப் பழகிக் கொள் என்று அடிக்கடி கூறும் வார்த்தைகள் அப்பொழுது எனக்குள் சுழல, மனதில் ஒரு தௌிவும் படர்ந்தது...

இன்ஷா அல்லாஹ்......

இனி பணத்தை வீண்செலவு செய்யக்கூடாதெனத் தீர்மானித்துக் கொண்டேன்!

2013/05/22

அவன்




இன்று விஞ்ஞானப் பாடம் கற்பிப்பதற்காக வகுப்பினுள் நுழைகின்றேன். வழமைபோல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் மாணவர் கூட்டங்கள் என் தலையைக் கண்டால்தான் சற்று அடங்கிக்கிடப்பார்கள்........

அவன்...................

வகுப்பில் குழப்படியான மாணவன்...

ஆனால் ..........

ஏனோ என்னிடம் அடங்கி நிற்பான். நான் வகுப்பிற்குள் போகும்வரை வாசலில் காத்து நிற்பான். அல்லது என்னைத் தேடி நானிருக்கும் இடத்திற்கே வந்துவிடுவான்...

இன்றும் மூலகங்கள் பற்றியும் சோடியம் பற்றியும் கற்பித்துக் கொண்டிருந்தேன். எல்லோரின் கவனமும் பாடத்தில் ஒட்டிக் கிடக்க, அவன் மட்டும் அழுது கொண்டிருந்தான். நானோ பாடத்தை கற்பித்து முடிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில், அவனைக் கவனிக்காமலே மற்றவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அவன் மேசையில் தலைசாய்த்திருந்தான்....

பாடம் நிறைவுற்று மணி அடித்தபோது, நானும் வகுப்பை விட்டு வெளியேறி சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தேன்............

"மிஸ்....மிஸ்"

யாரோ ஓடியவாறு வருவதை உணர்ந்து திரும்பினேன். அழுது கொண்டிருந்த மாணவன்தான் நின்று கொண்டிருந்தான்.

"போறீங்களா மிஸ்"...அவன் கேட்டபோது என் நடையும் நின்றது.

"ம்ம்........." நான்

"ஏன்டா அழுதே. விடாமல் தொடர்ந்து கேட்டேன்!......

அவனோ சில நிமிடம் மௌனித்த பிறகு மெதுவாகப் பேசத் தொடங்கினான்....

"போன வருஷம், இதே நாள் என் தம்பி செத்திட்டான் மிஸ், அவன நெனைச்சேன்...அதுதான்"

மீண்டும் அவனுக்குள் கண்ணீர் கருக்கட்ட ஆரம்பித்தபோது, எனக்குள்ளும் மனசு லேசாய் கலங்கத் தொடங்கியது! அவன் பாசத்தை எப்படி சமாதானப்படுத்துவது.......

இழப்புக்கள் வரும்போதுதான் அதன் அருமை புரியும்!

ஏனெனில்

"ஞாபகங்கள்......மறதிக்குள் ஒருபோதும் வீழ்வதில்லை"

2013/05/21

பொய்த்துப் போன வாழ்க்கை



வாழ்க்கையில் மிகக் கொடுமையான விடயம் வறுமை. சென்ற வாரம் அண்மையூரில் (வவுனியா) நடைபெற்ற விடயமொன்று இன்னும் எனக்குள் உழல்கின்றது.........

அவள்.......

இளந்தாய்......

மூன்று பிள்ளைகளின் தாய்......

இளமையில் ஏற்படும் வறுமை கொடுமையென்பதற்கு மேலாக அவள் வாழ்க்கையும் அந்த வறுமையால் சிதைந்தது. சுயநலக்கார கணவன், வெறும் சுகநலன்களுக்காக அவளைக் கைவிட்டு வேறு பெண் பின்னால் போய் குடும்பம் நடத்த அவளும் அவளது குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். பத்துப் பாத்திரம் தேய்த்தும் உழைக்க முடியாத சூழ்நிலையில் அவள். காரணம் மூன்று பிள்ளைகளும் பச்சிளம் பாலகர்கள்...........

பலரிடம் கையேந்தி வாழும் இந்த வாழ்க்கை வெறுத்துப் போக அவள் எடுத்த முடிவு..........

தற்கொலை!

தன் வீட்டு ஆழ் கிணற்றில் ஒவ்வொரு குழந்தையாக வீசினாள் அந்த இதயமற்ற பெண். பச்சிளங் குழந்தைகள் மூவரும் துடிதுடித்து  இறந்ததை அந்தத் தாயவள் எப்படித்தான் சகித்தாளோ.......

இனி தனது நேரம்..............

தானும் கிணற்றினுள் பாய்ந்தாள்.. ஆனால் உயிர் பறிபோகும் கடைசி நிமிடத்தில் உயிர் வாழ ஆசைப்பட்டு அருகில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து காயங்களுடன் அப்பெண் உயிர் தப்பினாள்............

கணவன் மனைவிக்கிடையிலான கோபத்தின் உச்சநிலையில் பறிபோனது 3 பிஞ்சுக் குழந்தைகள்தான்!

அந்தப் பெண் இப்போது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். மனநிலை பாதிக்கப்பட்டவள் எனும் முத்திரையுடன்!

3 கொலைகளை செய்து விட்டு அப்பெண்ணால் உயிர் வாழ முடியுமா என்ன...............?

அவள் உலகம் இனி சிறைக்கம்பிகள்தான் என அறியாமலே வாழ்ந்து கொண்டிருக்கும் அப் பெண்ணின் அவசரமும் , கோபமும் எல்லோருக்கும் ஒரு பாடம்!

2013/04/29

வண்ணாத்தி



இரவொன்றில்...........!

சிறகடித்து பறந்து வந்த வண்ணாத்திப்பூச்சியொன்று தவறுதலாய் என்னறைக்குள் நுழைந்தது...

அதன் பரபரப்பில் என் உறக்கம் அறுந்தது. அடித்து விரட்ட ஆவேசம் கொண்டபோதும் , என்னிடம் சிக்காமல் ஜாலியாய் அறையை நோட்டம் விட்டு பறந்து கொண்டே இருந்தது, நானோ அதனுடன் போராடித் தோற்ற நிலையில் களைத்துறங்கினேன் வண்ணாத்திப்பூச்சியை வெளியே விரட்ட முடியாதவளாய்....!

ஆழ்ந்த உறக்கத்தில் வண்ணாத்திப்பூச்சி மறந்தே போக,
எழுகின்றேன் ஏதுமறியாதவளாய் அதிகாலையில்........

கண்ணெதிரே சிறகிரண்டு பிய்ந்து தரையில் சிதறிக் கிடக்க, பதற்றத்துடன் வண்ணாத்தியைத் தேடுகின்றேன்.

நேற்று சபித்த நான், இன்றோ வேதனையுடன் அச்சிற்றுயிரைத் தேடுபவளாய்.......

நச்....நச்....

பல்லியொன்றின் சப்தம் உரப்போடு என்னருகில் கேட்க,

அறைச் சுவற்றை உற்று நோக்குகின்றேன்...

வண்ணாத்தியின் சுதந்திரம், பல்லியின் இரையாகிக் கொண்டிருந்தது..

"எப்போதும் ஆபத்துக்கள் எம்மை நெருங்கிக் கொண்டுதானிருக்கின்றன. தவிர்ப்பதும், சிக்குவதும் நம் மதி, விதி வசப்பட்டது.

2013/04/17

மருந்து



நள்ளிரவின் நிசப்தத்தில் என் அறைக் கதவு பலமாக தட்டப்படுகின்றது. அப்பாதான் பெயர் சொல்லி அழைத்தார். வெளியே வந்த போது அவரது கைகளால் மார்பினைப் பொத்தியவாறு வலியால் துடித்துக் கொண்டிருந்தார். 

"நெஞ்சுக் குத்துது மக........ரெண்டாவது அட்டாக் வந்திட்டுது போல"

அவர் சிரமப்பட்டு சொன்னபோது, என் மனமும் இற்று துடிக்கத் தொடங்கியது. 

"உங்களுக்கு ஒன்னும் ஆகாதுப்பா"

அப்பாவைத் தைரியப்படுத்தினாலும் கூட, மனசு அப்பாக்கு ஏதும் நடந்திடுமோ என்று பயந்தது..

அந்த நடுநிசி நேரத்தில் எங்கள் வீட்டில் மட்டும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, கொடுக்க வேண்டிய மருந்துப் பக்கெற்றுக்களை துலாவுகின்றேன்.. 

அப்பா தொடர்ச்சியாக மருந்து பாவிப்பதில்லை என்பதால், மருந்துகள் தீர்ந்திருந்த விடயம் கூட தெரிந்திருக்கவில்லை. வருத்தம் வந்தால் எப்போதாவது பாவிப்பார்.  எப்படியோ தேடி கண்டுபிடித்து இரண்டு அஸ்பிரின் சார் மருந்து வில்லைகளை குடிக்கச் செய்தேன். அப்பா நாளைக்கு வாங்கித் தாரேம்பா "

என் உறுதி மொழியில் அப்பாவும் சற்று வேதனை துறந்து சிரமப்பட்டு தூங்கிய போது கண்கள் பனித்தது. 

"பிரிந்திருப்பதை விட பிரியப் போகின்றோம் என நினைக்கும் போது அதன் வலி அதிகம்."

நாளை கட்டாயம் அப்பாக்கு பாமஸில மருந்து எடுத்துக் கொடுக்கணும். மனசு பல தடவை மனப்பாடம் செய்ய உறங்கிப் போனேன்......

அதன் பின்னர் விரட்டி வந்த இரண்டு நாட்களும் மன அழுத்தங்களுடன் இறங்கிப் போனது. அந்த விடயத்தை மறந்தே போனேன்...

"மக மருந்து வாங்கினீங்களா"

அப்பா கேட்ட போது மனசுக்கு யாரோ சம்மட்டியால் அடித்த வலி...

"சொறிப்பா.........மறந்திட்டன், நாளைக்கு வாங்கித் தாரேன்"

நான் பதிலளித்த போது அப்பா எதுவுமே பேச வில்லை...

அந்த மௌனம் என் வலியை இன்னும் அதிகரிக்கச் செய்தது. இரண்டு ஏச்சு ஏசியிருந்தாலும் கூட அந்தக் கணத்துடன் கோபம் கரைந்திருக்கும் இப்படி மனசு வலித்திருக்காது...

அப்பா சாறீப்பா...........மனசு மீண்டும் எனக்குள் பல தடவைகள் மன்றாடியது.

அப்பா அந்த மௌனிப்புக்களுடனேயே உறங்கிப் போனார்...

நானோ குற்ற உணர்ச்சியில் உறக்கத்தை தொலைத்தவளாக அழ ஆரம்பித்து விட்டேன்..

"அப்பா........என்னை மன்னிச்சுடுங்கப்பா"

விடிந்ததும் அப்பாக்கான மருந்துகள் கைகளில்!

2013/04/11

குறத்தி மகன்



சென்ற மாதம் ஒரு நாள் , காலை நேரம்...........

இடம் : வவுனியா பேரூந்து நிலையம், இலங்கை

பிச்சை எடுப்பதை தன் தொழிலாகக் கொண்ட குறவர்க் கூட்டமும் அந்த பகுதியிலுள்ள பிரபல்ய ஹோட்டலொன்றுக்கு அருகிலுள்ள தரையொன்றில் உட்கார்ந்து கொண்டார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக பதினைந்துக்கும் மேற்பட்ட தலைகள்..............!

பெண் குறத்திகள் , தமது முதுகில் தொங்க விடப்பட்டிருந்த சேலைத் துணியை நிலத்தில் பரப்பி, தாம் பிச்சையெடுத்த சில்லறைக் காசுகளை அதில் கொட்டி விட்டு மீண்டும் தமது சிறு குழந்தைகளை இடுப்பில் செருகியவாறு பிச்சைத் தொழிலுக்குத் திரும்ப, கணவன்மார்கள் அந்தச் சில்லறைகளை எண்ணி எண்ணி தமது பைகளுக்குள் நிறைத்தார்கள்.

நானோ, அவர்கள் அறியாமல் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். எனது கல்லூரிக்குப் போக வேண்டிய முச்சக்கர வண்டியின் தாமதம் எனக்கு வசதியானது.

எல்லாப் பணமும் எண்ணி முடிந்ததும், அவ் ஐந்து ஆண்களும் தமது மனைவிமார் கொடுத்த பொற்காசுகளுடன், அப் பஸ் நிலையத்திற்கு எதிராகவுள்ள கடையொன்றை நோக்கி வேகமாகச் சென்றார்கள்....


அந்தக் கடை "சாராயக் கடை"

இவனுகளுக்கெல்லாம் ஒரு பொண்டாட்டி, குட்டி குடும்பம்....................நானாக இருந்தால் காசு கொடுத்திருக்க மாட்டேன். தலையைச் சீவி காக்காக்கு போட்டிருப்பன்..

உழைப்பறியாத மாக்கள் இப்படித்தான் பணத்தைச் சீரழித்து நாசமாகிப் போவார்கள் போல!





2013/04/10

ஒரு காதல் கடிதம்


அன்புள்ள......................!

நான் உன்ன நேசிக்கிறது உனக்கு தெரிஞ்சும் கூட ஏன்டி என்னக் காயப்படுத்துற. உன் மேல எவ்வளவு ஆச வைச்சிருக்கிறேன். உனக்காக உசிரய தருவேன்டி அது உனக்கு தெரிஞ்சும் உன் மௌனத்தால கொல்றீயடி.....சத்தியமாச் சொல்றன்.....நீயெனக்கு கெடக்கலைன்னா செத்துப் போய்டுவேன்டீ"

இப்படிக்கு ..........................

இது எனக்கு நேற்று கிடைத்த காதல் கடிதமொன்று......

(அட.....வெயிட்.....எனக்கல்லப்பா....மொறைக்காதீங்க)

இத எழுதினது 16 வயது மாணவன், (தரம் 1 1) எங்க ஸ்கூல்தான் படிக்கிறான். அவனுக்கு நான் சயன்ஸ் பாடம் படிப்பிக்கிறேன். ரவுடித்தனத்தில பர்ஸ்ட்.. படிப்பில சத்தியமா அவனுக்கு மண்டைல ஒன்னுமே ஏறாது. தினம் தினம் என்னட்ட ஏச்சு வாங்கும் போது மண்டைய மண்டைய ஆட்டுவானே தவிர அதில ஒன்னுமே ஏறாது.

அவள் தரம் 9 படிக்கும் மாணவி. கெட்டித்தனம், அழகு, அமைதி, செல்வம் எல்லாம் ஒரே இடத்தில குவிந்திருக்கும் பிள்ளைதான் .. இவன் தொடர்ந்து 2 வருஷமா அவளை ட்ரை பண்ணிட்டு வாறன்,. அவளோ அவனத் திரும்பிக் கூடப் பார்க்கல. கடைசில அவர் பொறுமை இழந்தவராக தன் நண்பியிடம் இக் கடிதத்தைக் கொடுத்து தூதனுப்ப, அவள் இதை வாங்க மறுத்து வீசியெறிய.................

அக்கடிதம் ஆல் ரவுண்டராகி கடைசியில் அந்தப் பெண் பிள்ளையின் வகுப்பாசிரியையான என்னிடமே திரும்பி வந்து சேர்ந்தது. விசாரணையை நான் தொடங்கி விட்ட போது, அந்தப் பிள்ளை தனக்கு நடந்ததை சொல்லி அழ, அவனைத் தேடினேன்.

எப்படியாவது ............ அவன் திங்கட்கிழமை என்னிடம் மாட்டுவான்தானே .அப்ப இருக்கு..........!

இதுகள் எல்லாம் லவ் பண்ணி........கருமம் கருமம்....

படிக்கிற வயசில நாசமாக போகத் துடிக்கிறவன அடி கூடத் திருத்தாது!







ஆட்டோ கிராப்


அது.......பதினாறு வயசு நிரம்பிய பருவம்!

வெறும் கனவுக்குள்ளே மனதைக் கிறங்க வைத்து, அழகான உலகத்தில் அமிழ்ந்து வாழ்ந்த காலம். திரைப்படத்தில காணும் அழகான நடிகர்களுடன் ஜோடியாய் இரகஸியமாய் இணைந்து கற்பனை உலகில் சொர்க்கித்துக் கிடந்த காலம்...........................

பின்னால சைட் அடிச்சு திரிஞ்ச பசங்களயெல்லாம், திரும்பி பார்க்காம கொஞ்சம் திமிரோடு நடந்த பருவம்!

வந்த தூதுக்களையெல்லாம் சுக்கு நூறாக்கி துடிக்க வைத்த காலம்................

அந்நாட்களில்...........!

எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு ஜஸ்பழக் கடை இருந்தது...அங்கே ஒரு பையன் வேலைக்குச் சேர்ந்தான்..என்னை விட அவன் ஆறு வயது மூத்தவன். அவன் ரொம்ப அழகு,............நான் கற்பனையில் லயித்திருந்த அந்த கனவு நாயகனைப் போலவே,

ஆனால் அவன் கூட ஒரு நாளும் பேசியதில்ல......நான் அவனைக் கடந்து போகும் போதெல்லாம் என்னை பார்த்து ஒரு லுக் மட்டும் விடுவான்....
அவன் மீசையோரம் கொஞ்சம் புன்னகைகளையும் சேர்த்து!

அவனும் அவன் வேலை செய்யும் கடை முதலாளியின் பொண்ணும் லவ்வுன்னு செய்தி காதுக்கு எட்டின பிறகு (அந்த பொண்ணு என் நண்பி) அவன நான் கொஞ்சம் அதிகமாக வாச் பண்ணினேன்.....

அடப் பாவி.........

அவன் கொஞ்ச நாள்ல என்னையே அவுட் ஆக்கிட்டான்.

(அப்போ அந்த பொண்ணு லவ்..என்னாச்சுன்னு தெரியல)

கொஞ்சம் கொஞ்சமாக அவன்ர பார்வை, சிரிப்பு, அந்த அன்ப நானும் ரசிக்கத் தொடங்கினேன். அவன் யாரு, அவன்ர பின்னணி என்ன எதுவுமே அப்ப தெரியல......
அவனின் பார்வைக்குள் என்னை நாட்ட அடிக்கடி அவன் கடைப் பக்கமாக போவேன்.ஏதாவது பேசுவான்.......
பதில் சொல்ல மாட்டேன்...என் மௌனத்தை அவனும் ரசிப்பான்......இப்படியே ஆறு மாதம்..............!

யாருக்கும் எங்க உணர்வு தெரியாது!

இது லவ்வா......இல்லையா....தெரியல! நாங்க ஒரு வார்ததை கூட பேசினதில்லை...ஆனால் ஒருவர ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம்.அவனப் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல மனசுக்குள்ள பீலிங்ஸா இருக்கும். அவனும் வாசலுக்கு வந்தா எங்க வீட்டு வாசலையே நோட்டம் விட்டுக் கொண்டு நிற்பான்.

எங்க அப்பா ஒரு பொலிஸ்காரர். ஸோ...........ரொம்ப என்னைக் கட்டுப்படுத்தி இருந்தேன்......
ஒருநாள் எங்க வீட்டு கதவில இருக்கிற சிறு துவாரம் வழியாக அவன பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அப்பா வந்துட்டார். வசமாய் மாட்டினேன். நான் ஏறியிருந்த இடத்தில ஏறி அப்பாவும் றோட்ட பார்த்தார்.

அவன்......................

எங்க வீட்டு வாசலப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அப்பா என்கிட்ட ஒரு வார்ததை கூட பேசல....அந்த மௌனம் என்னை ரொம்ப கஷ்டப்படுத்திச்சு. அம்மா சாடைமாடையாய் அவனுக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு புற கௌரவத்தை எடை போட்டாங்க..

யாரும் எங்க அன்ப புரிஞ்சு கொள்ளல.....அது காதலா இல்ல பருவக் கிளர்ச்சியா........எனக்கும் தெரியல!

மறுநாள் அவன் வேலைக்கு வரல...........

அந்த முதலாளிக்கு அப்பாதான் ஏதோ சொல்லியிருக்கணும். ...

அவன்ர பிரிவு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. சகிக்க முடியல. வெளிப்படையாக அழக் கூட முடியல. அழுதா அப்பா அடிப்பாருன்னு பயம். மௌனமா மனசுக்குள்ள போராடி காலத்தின் போக்குல அந்த துயரத்தில இருந்து மெல்ல மெல்ல விடுபட்டேன். அதுக்குப் பிறகு அவனச் சந்தித்த போது, ஏதோ என் கூட பேச பின்னால விரட்டிக் கொண்டு ஸ்கூல் கேட் வரை வருவான். பட்...நான் அப்பாக்கு பயந்து அவன நிமிர்ந்து கூட பார்க்கல. ஒருநாள் அவன நான் புறக்கணிச்சதால எங்க ஊர விட்டே பொயிட்டான். இந்த செய்தியை அவன் தன் தம்பி மூலமாக எனக்கு சொல்லியனுப்பினான். இன்னைக்கு வரைக்கும் அவனுக்கு என்ன நடந்துச்சு என்று எனக்குத் தெரியல..........பட் எப்போதாவது அவன் என் ஞாபகத்தில எட்டிப்பார்த்து விட்டுப் போவான்................

(சேரனுக்கு மட்டுமல்ல, நமக்குள்ளும் எத்தனையோ ஆட்டோ கிராப்கள்)

இது சத்தியமா கற்பனைதான்!

ஊனம்



இருள் மெல்ல கவிழ ஆரம்பிக்கின்றது இந்நேரம்....

மாலை 5.20.......

காற்றில் சலங்கையை உதிர்த்துக் கொண்டிருந்தன பறவைகள். வீட்டு முன்றலில் அகலமாய் தன் தோள் பரப்பிக் கொண்டிருந்த வேப்ப மரக் கொப்பிலிருந்தவாறு குயிலொன்று இனிமையாய் கூவிக் கொண்டிருந்தது. முருங்கை மர சின்னஞ் சிறு இலை இடுக்கின் வழியாக அணில் இரண்டு ஓடிப் பிடித்துக் கொண்டிருந்தன. முந்தநாள் எட்டிப் பார்த்த ரோசாப் பூவொன்று காற்றின் மிரட்டலில் தன் இதழ்களை உதிர்த்துக் கொண்டிருந்தது.

இயற்கையின் அழகை தரிசித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைய எத்தனிக்கின்றேன். வீதியில் தென்பட்ட காட்சியொன்று மனதை சுண்டியிழுக்கின்றது.

"ஆரோக்கியமான அழகான கணவனொருவன், தன் கால் ஊனமான மனைவியை கையில் ஏந்தியாவாறு நடந்து கொண்டிருந்தான். என் கண்கள் பனித்தன. இவ்வுலகில் அன்பை மட்டும் யாசிக்கின்ற, ஆண்களும் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது மனசு அவர்களுக்காக பெருமிதப்படுகின்றது,

"மன ஊனத்தை விட கால் ஊனம் ஒன்றும் பெரிய விடயமில்லை" என்பதைப் போல் அந்த சகோதரியும் அவரிடமுள்ள தன்னம்பிக்கையின் சில துளிகளை என்னுள் விட்டுச் செல்கின்றார்................

"நான் இனி எதற்கும் அழப்போவதில்லை"

மனம் லேசாக , புதுப்பிறவி எடுத்தாற்போல வீட்டினுள் நுழைகின்றேன்.............

2013/03/10

இனவெறி


இடம் : food city (Anuradhapura)

காலம் : 05.03.2013

சம்பவம்:

ஒரு கிப்பி வந்தான். அவன் தோற்றம் ரௌடி என்பதைப் பறைசாட்டிக் கொண்டிருக்க, பார் கவுண்டருக்குள் கை நீட்டி உயர்தரமான மதுபான வகைகளை வாங்கியவன், தின்பதற்கு சில நொறுக்குத் தீனிப் பக்கெற்றுக்களையும் வாங்கினான். திடீரென பக்கெற்றுக்களை உற்றுப் பார்த்தவன்........


"இதுல ஹலால் போடப்பட்டிருந்தா எனக்கு வேணாம்" 

 என சிங்களத்தில் கத்தினான்"

"நாங்க சிங்களவர்" என்று புன்னகைத்தான் அவன். அவன் கெட்ட கேட்டுக்கு இந்த பெருமிதம் வேறு...........

இப்படி இனவாதம் பேசுறவங்களுக்கு செருப்படி போதாது. துப்பாக்கிச் சூடுதான் போடனும்..........

இலங்கையை சிங்களவர் தங்களுக்கு சொந்தம் கொண்டாடினால், அப்ப நாங்க எங்க போறதாம்........

ஹலால்.....பேசுற இவன மாதிரி ஆட்களுக்கு ஹராமான வழியிலதான் மரணம் கிடைக்கனும்.

ஆனால் அதே பூட் சிட்டி வாசலில் நின்ற சிங்கள வாயிற் பாதுகாவலன், அந்த இனவாதியைப் பார்த்து என்னிடம் கூறினான் "அவன் பைத்தியக்காரன் "

ஒரே இனத்துக்குள் வித்தியாசமான எண்ணவோட்டங்கள்....

2013/01/19

இதுவும் காதல்தான்



            அவரை 'எஸ்' என்கிறேன். சிறிய வயதிலிருந்தே அவரைத் தெரியும். நான் வீட்டுச்சாமான்கள் வாங்கச் செல்லும் கடைக்கு முன்னால் தான் அவரின் வீடும் இருந்தது. நான்கு பிள்ளைகளின் தாயாக இருந்தாலும் இளமையாக, சிறிய பெண்ணாகவே இருந்தார். அவரைக் கடந்து நான் செல்லும் போதெல்லாம் சிறு புன்னகையொன்றை உதிர்ப்பார். அப்பொழுது அவரின் கடைக் குட்டிக்கு மூன்று வயதிருக்குமென்று நினைக்கின்றேன். ஒருநாள் அவரின் கணவனுடன் அவர் எங்கேயே பயணித்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அவரின் கணவன் முகம் என்னுள் பார்வையாகப் பதிந்தது. கணவருக்கு அப்பொழுதே அறுபது வயதுக்கு மேலிருக்கும். வழுக்கைத் தலையில் ஓரமெல்லாம் ஓரிரு நரை முடிகள் குத்திட்டு நின்றன. அரச ஊழியர். பென்ஷனில் வாழ்ந்து கொண்டிருந்தார். நரை விழுந்த முதுமைத் தோற்றம். இருவரும் தந்தை மகள் போன்ற பார்வையை பிறருக்கு அளித்துக் கொண்டிருந்தது. ஊரார் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டாலும் கூட, இல்லறத்தின் செழுமையில் அவர்கள் இரண்டறக் கலந்ததன் விளைவு நான்கு குழந்தைகளும் முளைத்திருந்தனர்.  இரண்டாம் தாரமாகவே வாழ்க்கைப்பட வைத்தது அச்சகோதரியின் வறுமை. வறுமையின் கொடுமைகளுள் இதுவும் ஒன்றா? வாலிபக் கனவுகளை சிதைத்து விட்டு இலகுவாகவே பெண்களை கண்ணீர்க்கம்பிகளுக்குள் சிறைவைத்து விடுகின்றது இந்த வறுமையின் இயலாமை!

எங்களது புன்னகைப் பரிமாற்றம் தொடர, நாங்களும் ஓரளவு அறிமுகமாகி கதைக்கத் தொடங்கும் போதுதான்,  எங்களது கடைக்காரரும் தனது கடையின் இருப்பை வேறொரு வீதிக்கு மாற்றி விட்டார். இதனால் எங்கள் சந்திப்பும் தடைப்பட எங்கள் யாழ்ப்பாணச் சந்திப்பும் தடைப்பட்டது.

நாட்களின் வேக ஓட்டத்திற்கு நாமும் ஈடுகொடுத்து,  பல யுத்த கொடூரங்களைச் சந்தித்த பிறகு,  வேறு பிரதேசத்திற்கு அகதியாக இடம்பெயர்ந்திருந்தோம். அப்போது , மீண்டும் 'எஸ்' ஸை பாடசாலையில் சந்தித்தேன். அவர் கணவன் இறந்துவிட்டதாக அறிந்தேன். எனினும் விதவையாக இருந்தாலும் கூட , முன்னரை விட அழகாகவும் , இளமையாகவும் இருந்தார். பிள்ளைகள் எல்லாம் வளர்ந்திருந்தனர். நான் கற்பிக்கும் பாடசாலையிலேயே அவர்களும் கற்றுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நான் விஞ்ஞானப் பாடம் கற்பித்ததால், மீண்டும் எமக்குள் விடுபட்ட புன்னகை தொடர்ந்தது. கடைக்குட்டி என்மீது ரொம்பப் பிரியமாக இருந்தாள். "மிஸ்" மிஸ் என என் பின்னால் சுற்றுவதில் அவளுக்கு கொள்ளைப் பிரியம். அவள் அன்பும் எனக்குப் பிடித்ததால் நானும் அவள்மீது கரிசனை காட்டத் தொடங்கினேன்.

ஒருநாள் திடிரென 'எஸ்' பற்றி சில கதைகள் என் காதில் விழுந்தன. அவருக்கும் 'ஏ' என்பவருக்கும் லவ் என்றனர் பலர். ஏன் விதவைகள் மறுமணம் செய்யக் கூடாதா? சாதாரண பெண்ணுக்கு இருக்கக்கூடிய இயல்பான ஆசைகள், வாழ்வு பற்றிய கனவுகள் , எதிர்பார்ப்புக்கள் இச்சகோதரிக்கும் இருக்கும் தானே? ஆண் துணையின்றி தன் குழந்தைகளை எப்படி வளர்த்தெடுப்பார், தன் குடும்பம் படர  அந்தப் பெண்ணுக்கும் ஒரு கொம்பு தேவைப்பட்டது தப்பில்லைதானே.. எனக்குள் பல வினாக்கள் புரண்டெழுந்து விடை கண்டதன் பயனாக , அவரின் செயல் தவறாகப் படவில்லை. ஆனால் அவரை விட அவரது காதலன் பதினைந்து வயது குறைவானவர் என்பதால் அவர்கள் காதலை ஊரும் அங்கீகரிக்கவில்லை. உண்மைக்காதலுக்கு வயது ஒரு தடையில்லை என்பதைப் போல, அவர்களும் யாரைப் பற்றியும் அலட்டாது தம் பாதையில் உறுதியாக இருந்தனர்.

 'ஏ' அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போனார். பிள்ளைகள் அவரை 'சாச்சா' என அன்பொழுக அழைத்துப் பழகினார்கள். பிள்ளைகளின் படிப்புக்கும் அந்தச் சாச்சாவே ரொம்ப உதவினார். அந்தக் குடும்பமும் வறுமையிலிருந்து ஓரளாவது மீள அந்த சாச்சாவே உதவினார். 'ஏ' வவுனியாவில் பொறியிளாளராக வேலை செய்ததால்  இவர்கள் வீட்டில் தங்கியே வேலைத் தளத்திற்குச்  செல்வார். அவர்களின் காதலுக்கு பிள்ளைகளும் ஆதரவாகவே இருந்தனர். காதல் சந்திப்புக்கு தடையின்றி வழிவிட்டனர். ஆனால் 'ஏ'யின் வீட்டில் இந்தக் காதலுக்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது .இந்த எதிர்ப்பின் மத்தியிலும் கூட, 'எஸ்' சோரவில்லை. காதல் கசிந்துருகியோடியது.

'எஸ்' ஸின் பிள்ளைகள் படிப்பில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. மூத்தவள் மட்டும் உயர்தரத்தை தொட்டு இடைவிலகி நின்றாள். மற்ற இருவரும் சாதாரண தரத்துடன் வீட்டுக்குள் முடங்கினர். ஆனால் சின்னவள் மட்டுமே படிப்பில் படு சுட்டியாக இருந்து பல்கலைக்கழகத்திற்கும் தெரிவானாள்.. தன் மூன்று பெண் பிள்ளைகளையும் கேட்டு வரும் சம்பந்தங்களில் இணைத்ததன் மூலம் வசதியான இடங்களில் மக்களை அந்தத் தாய் கரையேற்றினார். பிள்ளைகள் அழகென்பதால், அந்தக் கிளிகளை வாலிபக் கூட்டங்கள் போட்டி போட்டு கொத்திக் கொண்டு போனது. இப்பொழுது 'எஸ்' ஸூடன் கடைக்குட்டி மட்டுமே தங்கினாள்.

நாட்களும் மேலும் பல மாதங்களைத் தொட்டன. மாமியின் காதல் விடயம் கேள்விப்பட்டு, மருமகன்மாரும் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர். மூன்றாவது மருமகன் தனது மனைவியை அவள் தாய் வீட்டுக்கே அனுப்புவதைத் தவிர்த்தான். மூத்தவளும் தன் அவசர திருமண வாழ்வை அறுத்தெறிந்தவளாய் தாயுடன் ஒதுங்கிக் கொண்டாள். 'எஸ்'ஸூக்கு வாழ்க்கைச் சுமை மேலும் இறுகும் போது, எதிர்பாராதவிதமாக அந்தத் திருப்பம் ஏற்பட்டது.

விடுமுறையில் ஊருக்குச் சென்ற காதலன்  "ஏ" வீட்டில் அவனுக்கே தெரியாமல் அவசர அவசரமாக அவனது திருமணத்தை ரகஸியமாக முடித்து விட்டார் அவர் தந்தை. 'ஏ" சிறிய வயதிலேயே தனது தாயை காச நோய்க்கு பறிகொடுத்து பாசத்துக்கு ஏங்கியவன். .ஊரிலேயே செல்வாக்குப்பெற்ற அவனின் தந்தை, தனது மனைவி இறந்ததும் மனைவியின் சகோதரியை இரண்டாம்தாரமாகத் திருமணம் செய்து தன் பிள்ளைகளுக்கு துணை சேர்த்தாலும் கூட,  சிறிய வயதில் தாயை இழந்த 'எஸ்' தனது முழுமையான அன்பை 'எஸ்' ஸிடமிருந்தே பெற்றான். ஊரில் 'எஸ்'ஸின் வீடு அவனின் வீட்டருகே இருந்ததும்,  'எஸ்' ஸின் கணவர், 'ஏ' யின் நெருங்கிய உறவினர் என்பதாலும் , "ஏ" "எஸ்" சந்திப்புக்கு யாரும் தடையாகவிருக்கவில்லை. சிறு வயதிலிருந்து அவர்கள் வீட்டுக்குப் வந்து போகும் "ஏ" யின் பாசம்........காதலாக மாற, அவ்விருவரின் தேவைகளும் சூழ்நிலையும் அன்பும் காரணமாகிவிட்டன.

'ஏ' திருமணம் முடித்த  மனைவி அழகான ஆசிரியை. அவனின் வயதையொத்த உறவுக்காரப் பெண் என்பதால் அவள் பெற்றோர் துணிந்து 'ஏ'யை திருமணம் முடித்து வைத்தனர். இளம் மனைவி கொடுக்கும்  திருமண வாழ்வால், வயதால் முதிர்ந்த அப்பெண்ணை 'ஏ' மறப்பாரென்பதே பலரின் எதிர்பார்ப்பாகவிருந்தது. .

   அவன் கல்யாணம் முடிந்து இரண்டு வருடமாகியும் இவர்களின் சந்திப்புத் தொடர்ந்தது. இந்த கால மாற்றத்தில் 'ஏ' ஒரு ஆண்பிள்ளைக்கும் தந்தையானார். தன் முதல் கணவனின் பென்ஷன் பணம், தான் திருமணம் முடித்தால் கிடைக்காது எனும் எதிர்பார்ப்பில், 'எஸ்'ஸூம் 'ஏ'யை வற்புறுத்தவில்லை. ஆனால் முன்னரைப் போல 'ஏ' வருகை இருக்கவில்லை. அந்தப்பிரிவு 'எஸ்'ஸை ஆட்கொள்ளவே ஒருநாள் 'ஏ'யின் வீட்டுக்கே தன் மக்களுடன் சென்றுவிட்டார். 'ஏ'யின் மனைவிக்கும் , காதலிக்கும் இடையில் உக்கிரமான போராட்டம் நடைபெறவே, 'ஏ' தான் காதலித்தவளுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் அவளையும் தன் மனைவியாக ஊரறிய சட்டப்படி ஏற்று, கொழும்பில் வீடு ஒன்றையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இன்று இரு மனைவிகளுக்கும் அவர் நல்ல புருஷனாகத் தன் கடமைகளைச் செய்கின்றார். மனைவியின் கடைக்குட்டிக்கும் அவரது அலுவலகத்திலேயே வேலையும் பெற்றுக் கொடுத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன்.

சிலருக்கு இந்தக் காதல் முறையற்றதாக முணுமுணுப்பைத் தரலாம். ஆனால் காதல் எனும் பெயரில் பெண்களை ஏமாற்றி,  கண்ணீருக்குள் அமுக்கி, அவர்கள் வாழ்வை வீணடிக்கும் ஆண்கள் இருக்கும் இச்சமுகத்தின் முன்னிலையில் இந்த ஆண்மகனின் உண்மைக் காதல் மரியாதைக்குரியதாகவே உள்ளது.

இது நமது கலாசாரம், பண்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயமாக இருப்பதனால், அவ்விருவரும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். இக்காதல் சரியானதா/ முறையற்றதா எனும் வாதத்திற்கு நான் தயாராகவில்லை. அவரவர் வாழ்க்கை, அவரவர் விருப்பத்தின்பாலே நகரும். சரி, பிழையென விமர்சிக்கும் ஊரால், அவர்களுக்கு ஒரு வழியை, விடிவை நிச்சயம் காட்டமுடியாது. சமுகத்திற்கு  இது ஒவ்வாததாக காதலாக இருந்தாலும் கூட, ஒரு விதவைக்கு வாழ்வளித்த கதாநாயகனாகவே அந்த 'ஏ' என்னுள் மிளிர்கின்றார்.

இரு மனைவிமாரும் பாதிப்பின்றி வாழும் அந்த வாழ்க்கை இன்னும் பல வெற்றிகளை அந்தத் தம்பதியினருக்குக் கொடுக்கட்டும் .அவர்கள் வாழ்க்கை இன்னும் பல்லாண்டு காலம் ஜொலிக்கட்டும்!

Jancy Caffoor

ஏதேதோ நினைவுகள்


ரெட்டை ஜடை கட்டி சிட்டாக பறந்து திரிந்த அந்த பசுமை மிகு அந்த பிள்ளைப் பருவம் ஏனோ இன்று நினைவுக்குள் வருகின்றது. வாழ்க்கைச் சுமை மறந்த, எதிர்பார்ப்புக்கள் பற்றி அறிந்திருக்காத அந்த வயதில், நாம் பண்ணிய குறும்புத் தனங்களும், விளையாட்டுக்களும் செயல்களும் ரொம்பவே மறக்க முடியாத நினைவலைகள்தான்!

அந்த நினைவுகளில் ஒன்றுதான் இன்றைய ஸ்பெஷலாய் உங்களுக்குள் வருகின்றது....

அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்திருந்தேன்..ரொம்ப அமைதியான டைப். யாருடனும் வலிந்து பேச மாட்டேன். என் நெருங்கிய நண்பிகள், உறவினர்களைத் தவிர...........

வயதுக்கு மீறிய சற்று குண்டு உடம்பும், நீளமான தலை முடியும், கல்வியில் நான் காட்டிய சுட்டித்தனமும் எல்லோர் பார்வையையும் என்னுள் விழ வைத்திருந்தது. நீல நிற "சொப்பர்" பைக் தான் என்னுலகின் இறகுகள். அந்த சைக்கிளிலில் பாடசாலை, முஸ்லிம் கொலிஜ் வீதியிலிருந்த உமம்மா வீடு என பறந்து திரிவேன்.  எனக்கு கச்சான் ரொம்பப் பிடிக்கும் என்பதால், இடைக்கிடையே கொலிஜ் வீதியில் இருந்த சித்திக்கா ராத்தா வீட்டுக்கும் போய் கச்சான் வாங்கி வருவேன். எப்போதாவது ரோஜா வீட்டுக்கும் (அமான் மாஸ்டர்) , சபீல் வீட்டுக்கும் (சலீம் மாஸ்டர்) விளையாடச் செல்வேன்..றவூப் காக்கா கடையும் அடிக்கடி என் கால் பதியும் வாசற்றலங்களாகும் .இதுதான் என் அன்றாட செயற்பாடுகள்!

எங்கள் வீடு யாழ்ப்பாண ஜின்னா வீதியில் இருந்தது. வீட்டிலிருந்து 3 வீடுகள் தள்ளினால் ஒஸ்மானியாச் சந்தி. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணத்தில் ஆடு, மாடு போன்ற கால் நடைகள் அதிகமாக இருக்கும். அவற்றுக்கு தீனி போடுவதற்காக புல் வியாபாரமும் நடக்கும். முஸ்லிம் கல்லூரி வீதியும், ஜின்னா வீதியும் சந்திக்கும் இடத்திலுள்ள ஒஸ்மானியாச் சந்தியில்தான் ஆட்கள் ஒன்றுகூடி ஏதாவது ஊர்ப் புதினங்கள் பேசுவார்கள்.

உங்களுக்கு போரடிக்காம இருக்க, பேச்சு வழக்கில இந்தப் பதிவத் தாறன்....சரியா.......

சனத்தால் நிரம்பி வழியும் அந்த இடத்தில்தான் "புல்லு" ஆச்சியும் தனது புல் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தா. அவக்கு பக்கத்தில அவட ஒற்றை மாட்டை சுமந்து கொண்டிருக்கும் மாட்டுவண்டிலும் கட்டப்பட்டிருக்கும். புல்லு ஆச்சியிட காது தோடு போட்டு இழுபட்டு தொங்கிக் கொண்டிருக்கும். மூக்கிலயும் சின்ன மூக்குத்தி. களையா ரொம்ப அம்சமா......ஆனா அவ ரொம்பக் கறுப்பு. அவட ஊரு இந்தியான்னு ஆக்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறன். என்னடா ஆச்சிய இழுத்து விடுறாளேன்னு யோசிக்கிறீங்களா..........வெயிட் பண்ணுங்க......என்ர கதயில அவவும் ஒரு கதாநாயகிதான்.

எங்க வீடு ஜின்னா றோட்டில இருந்துது. ரெண்டு வாசல். ஒன்னு கேட் போட்டிருந்தது. அத நாங்க பெரிசாகப் பாவிக்கிறதில்ல. மற்ற வாசல் கதவத்தான் நாங்க பாவிச்சம். அந்த கதவு முன்ஹோலோட சேர்ந்திருந்துது. அந்த ஹோலில தான் வீட்டுக்கு வாற நல்ல தண்ணீ டாங்கும் இருந்துது. அது தண்ணீ டாங்குதான்..ஆனா ஊரடங்கு சட்ட நேரங்களில நான் அதில ஏறித்தான் றோட்டில ஆமி போறத "விடுப்பு" பார்ப்பன். அது ஒரு அழகான கனாக்காலம்தான்.

அந்த தண்ணி டாங்க மூடி அதுக்கு மேல என்ட சின்ன பைசிக்கிள ஏத்தி வைச்சிருந்தம். அந்த பைக்க என் சின்ன தங்கச்சி ஓடிக் கொண்டிருந்தா (இப்ப அவ டாக்டர்)

ஒருநாள் வீட்டுக்கு ஹதியா கேட்டு அந்தப் பெரியவர் வந்தார். "அவர் முந்தி வசதியோட இருந்தவராம். பாவம் மனுஷன் கொஞ்சம் கஷ்டப்பட்டு பொயிட்டார்." உம்மா சொல்லித்தான் எனக்கு இந்த விஷயம் தெரியும். அவருக்கு ஹதியா குடுத்தனுப்பினது நான்தான். அவர் கொலிஜ் றோட்டிலதான் இருந்தார்.

மாலை 6 மணி இருக்கும். ஏனோ எனக்கு கச்சான் தின்னுற ஆச வந்திட்டுது. உம்மாவ அலட்டி ஒரு ரூபா வாங்கிக் கொண்டு, குட்டி சொப்பர் பைக்கையும் மிதிச்சுக் கொண்டு சித்திக்கா ராத்தா வீட்டுக்கு போய் கச்சான் வாங்கினேன். என்னட்ட உள்ள நல்ல பழக்கம் றோட்டில வச்சு எதையும் சாப்பிட மாட்டன். ஆசய அடக்கிட்டு வீட்டுக்கு வந்துதான் ஒரு பிடி பிடிப்பன். அப்படி வரும்போது, ஏனோ புல்லு ஆச்சிய பார்த்திட்டன். அவட பக்கத்தில நின்ற அதையும் பார்த்திட்டன்......

அடடா...........என் ஹார்ட் வேகமாக அடிக்க ஆரம்பிச்சுது. புல் ஆச்சி வீட்டுக்கு போக ரெடியாகிறத கண்டதும் டென்ஷன் இன்னும் கூடிட்டுது. பாஸ்டா வீட்டுக்கு ஓடி விசயத்தச் சொன்னன் வாப்பாட்டா..........

"வாப்பா......புல்லு ஆச்சிட்ட நம்ம சின்ன சைக்கிள் நிக்குது"

வாப்பாவும், உம்மாவும் அது இருந்த இடத்த வந்து பார்த்தா அத காணல. உடனே வாப்பா என்னயும் கூட்டிக் கொண்டு புல்லு ஆச்சிட்ட போனாரு. (வாப்பா முந்தி பொலிசில இருந்துதான் ரீச்சிங்கிற்கு வந்தாரு) அந்தப் பாணியில விசாரிச்சப் போது, ஆச்சி எல்லாத்தையும் சொன்னா...........

எங்க வீட்டுக்கு ஹதியா கேட்டு வந்த அந்த பெரியவருதான் தனக்கு இன்னைக்கு 150 ரூபாவுக்கு இந்தச் சைக்கிள வித்ததா சொன்னா..

நாங்க எங்க சைக்கிள வீட்டுக்கு கொண்டு வந்தம்...பாருங்கோ, ஆச்சிதான் பாவம்..காசை இழந்திட்டா பரிதாபமா......ஆனாலும் ஆச்சி காசு விசயத்தில உஷாரா நின்னு அந்தக் காச அந்தப் பெரியவர்ட மகன்ட இருந்து ஒருமாதிரியா புடிங்கிட்டா...

அன்றைக்கு என்னை நினைச்சு நானே ரொம்ப சந்தோஷப்பட்டன். என்ட முயற்சியால காணாம போனத கண்டுபிடிச்சேனே..

அந்தச் சம்பவத்துக்கு பொறகு கொஞ்சம் வீட்டுக்கு வாற வெளியாட்கள் மேல ஒரு கண்ணு வைச்சம் என்பது வேற விஷயம்..........

என் மனசு இப்படி உங்ககிட்ட பேசுறது எனக்கு புடிச்சிருக்கு. உங்களுக்கும் பிடிச்சிருக்கா....புடிச்சா சொல்லுங்க.

2012/12/17

தோற்றங்களும் தொழில்களும்......


காலம் - 16.12.12
இடம் - வவுனியா, தனியார் பஸ் நிலைய அருகிலுள்ள சைவ உணவகம்

கடிகாரம் 8.30 இனை தொட்டு நின்றதும், வியர்வைத்துளிகள் உடலை நனைத்தன. 9 மணிக்கு B,Ed வகுப்பு.....அதுக்குள்ள சாப்பிட்டுட்டு, ஆட்டோ பிடிச்சு பூந்தோட்ட கல்விக் கல்லூரிக்குப் பறக்கணும்...

வேகத்தை விரைவுபடுத்தி, சைவ உணவகத்தையடைகின்றேன்.விடுமுறை நாளென்பதால் உணவகம் முழுதும் தலைகள் நிறைந்திருந்தன. இருக்கை தேடிய போது, தனித்திருந்த யுவதியொருத்தியின் மேசை அகப்பட்டது. அருகே சென்றேன்..

"யாராவது இருக்கிறாங்களா"

சிங்களத்தில் கேட்டேன்........இல்லையென முறுவலித்தார். அமர்ந்தேன்....சொற்ப நொடிகளில் சினேகப் பார்வைகளும் புன்னகைகளும்  இடமாறின. ஆடர் கொடுத்துவிட்டு உணவுக்காக காத்திருந்தோம்.

எங்கள் மௌனத்தை நானே உடைத்தேன் மெதுவாக.........

"இங்கதான் வர்க் பண்றீங்களா" - நான்

"நான் ஆமி, கிளிநொச்சி காம்ல இருக்கிறேன், லீவுக்கு குருணாகல் வீட்டுக்கு போறேன்"  - என்றார்  புன்னகையைச் சற்றும் குறைக்காதவாறு.........

நானும் என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது எமக்கான உணவுகளும் மேசைக்கு வந்தன....

இரண்டு தோசைகளை பீங்கானிலிட்டு சாப்பிடத் தொடங்கினார். நானும் இடியப்பத்தை காலி பண்ணத் தொடங்கினேன்....

"காம்ல எப்பவும் சோறுதான், இப்பதான் இத சாப்பிடுறேன்" என்றார் அந்தச் சிங்கள சகோதரி...

"ம்ம்......வடையும் சாப்பிடுங்கள்......ருசியா இருக்கும்" - நான்,

"ம்ம்....ரஸயி , இந்த "பொல் சம்பல்"     கிரைண்டர்ல அரைக்கிறதா "   மீண்டும் மலர்ந்தார்.

இவ்வாறு தொடர்ந்த சம்பாஷணை, எங்கள் உணவுத்தட்டு நிறைவடையும் போது முடிவுக்கு வந்தது.

அந்த இராணுவப் பெண், கைகளை கழுவதற்காக எழுந்த போது, பக்கத்தில் காலியாக இருந்த மேசையை நிரப்ப நான்கு வாலிபர்கள் வந்தார்கள். அவர்களின் பார்வையும் இந்தப் பெண்ணின் மீதுதான் மொய்த்துக்கிடந்தது. அவர்களும் இராணுவத்தினர்தான். விடுமுறைக்காக ஊர் செல்ல பஸ்ஸிற்கு வந்தவர்களாக இருக்க வேண்டும்.

அந்தப் பெண் தங்களைப் பார்க்கட்டுமென்ற நப்பாசையில் கிசுகிசுத்தார்கள். ஆனால் அவளோ அவர்களைத் திரும்பிப் பார்க்கவில்லை. என்னிடம் விடைபெற்றுச் சென்றார்............

அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த, அவர்களில் ஒருவன் மெதுவாகச் சொன்னான்

"டேய்.....அவள் ஆமிடா"

அவளைப் பற்றி எதுவுமோ தெரியாத நிலையில், அந்த இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெற்ற அவள் உடலமைப்பைக் கொண்டு அவளைச் சரியாக "ஆமி"யாக இனங்கண்டது ஆச்சரியமாக இருந்தது. தன் தொழிலை இனத்தை சரியாக இனங்கண்ட திருப்தி அவர்கள் முகத்தில்.........

"ரீச்சர்............"

கையில் பில்லுடன் நின்று கொண்டிருக்கும் சர்வரைக் கண்டதும், மனதுக்குள் சிரித்தேன்....

"தோற்றத்தைக் கொண்டு தொழிலை எடைபோடும் நம்மவர்கள் புத்திசாலிகள் தான்"

பணத்தைக் கட்டுவதற்காக வெளியேறினேன்!







2012/12/06

பிஞ்சுக் காதல்



அவன்................!

இன்னும் பதினான்கு வயது நிரம்பாதவன்...பருவ வயதுக்குள் உள்நுழைய விளிம்பில் நிற்பவன்.. அரும்பி நிற்கும் மீசையை ரகஸியமாக தடவித் தடவி இன்பம் காணும் பருவத்தினுள் வாசம் செய்பவன்...........

ஒருவாரமாக அவனை அவதானிக்கின்றேன்.....சற்று பரபரப்புடன் காணப்பட்டான். அவனுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். பாடசாலை முடிவடைந்ததும் வீட்டுக்கு செல்ல முதல் பல தடவைகள் "பொயிட்டு வாரேன்  மிஸ் " என்பான்.... ஆனால் போகாமல்  என்னையே சுற்றிச் சுற்றி வலம் வருவான்.

அவனது தாய் கூறிய பின்னரே, அவனுக்கு என்னை அதிகம் பிடிக்கும் என்பதை நான் அறிந்தேன்..........

"எப்ப பார்த்தாலும் மிஸ் உங்களைப் பற்றியே கதைப்பான் "

அவன் தாய்  என்னைச் சந்திக்கும் போதெல்லாம் இதனைக் கூறிச் சிரிப்பார்.

அவன் சற்று முரட்டு மாணவன்...அந்த முரட்டுத் தன்மையை என் அன்பு நெகிழ வைத்ததில் எனக்கும் சந்தோஷமே!

"உன் மனசுல ஏதோ பிரச்சினை  இருக்கு, சொல்லுடா ராஜா........"

ஒருநாள் என் துலாவுகைக்குள் அவன் பிடிபடவேயில்லை.....ஒரு வார என் முயற்சி பலனளிக்காமல் போகவே, என் வேலைப் பளுவில் அவனை நான் மறந்தே போனேன்...

நேற்று......

எல்லா மாணவர்களும், வகுப்பறையை விட்டு வெளியேறிய பின்னர் என்னிடம் வந்தான்... தன் மனதிலுள்ள விடயத்தை சொல்வதற்கு துடிப்பதை உணர்ந்தேன்...சொல்லும்படி தூண்டினேன்....

"யாருக்கும் சொல்லாதீங்க, மிஸ்"

அவன் பீடிகை என்னுள் ஓரளவு விடயத்தை ஊகிக்க வைத்தது. இருந்தும் அவன் வாயால் அதைக் கேட்க நினைத்து அமைதியானேன்..........

என்னிடம் பெற்ற சத்தியத்தின் வலிமையால் தன் மௌனம் உடைத்தான்......

நாணம் கலந்த புன்னகை அவனுள் இறுகிக் கிடந்தது........

"மிஸ்.......நான் ஒரு ஆள லவ் பண்ணுறன்"

அப்பாடா.....போட்டுடைத்தான் தன் மனதைக் குடைந்திருக்கும் காதல் ரகஸியத்தை!

அவள்................அவன் வயதுக்காரிதான்...........பெயர் சொன்னான்....

அவளுக்கும் நான் பாடம் எடுக்கிறேன்...நல்ல பிள்ளை....எப்போதும் அவள் மொழி புன்னகைதான்.....என்னை அவளுக்கும் ரொம்பப் பிடிக்கும்...

"அட................அப்ப டீப்பான லவ்வுதான்..எப்ப இருந்துடா"

நான் ஆச்சரியத்தை வெளிப்படுத்தாமல் கேட்ட போது, முகத்தில் பிரகாசம் குன்றாமல் 3 வருஷம் என்றான் பட்டென்று!

"அப்போ சின்ன வயதுக் காதலோ..........ஆமா, அவளும் உன்னை லவ் பண்றாளா" அப்பாவித்தனமாய், நான் அறியாதவளாய் கேட்ட போது, சிரித்த அவன் முகம் சற்று வாடியது......மீண்டும் மௌனித்தான்...........

"இல்ல மிஸ், இன்னும் நான் என் விசயத்தச் சொல்லல, ஆனா அவள 9ம் வகுப்பு பெடியனும் லவ் பண்ணுறான் " என்றவாறு அந்தப் பையனின் பெயரை அவசரமாக வெளிப்படுத்த, அருகில் நின்ற அவன் நண்பன் மேலும் ஒரு ரகஸியத்தை என் காதில் போட்டுடைத்தான்...

"மிஸ்.நேற்று, அவனுக்கும், இவனுக்கும் பெரிய பைட் போச்சு, இவன்தான் நல்லா அடி வாங்கினான்"

"ஓ.........இவ்வளவு நடந்திருக்கா..ஏன்டா அவன் உன்ன அடிச்சான்"
நானும் விடவில்லை.

"இல்ல மிஸ், அவனும் அவளக் காதலிக்கிறானாம், விட்டுக் கொடுடா என்று அடிச்சான். நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்"

"ம்ம்.....சினிமாவ பார்த்து ரொம்பத்தான் கெட்டாச்சு.........இல்லையா!"

நான் சற்று அழுத்திக் கேட்ட போது அழுதே விட்டான் அவன்,  "அவள எனக்கு ரொம்பப் பிடிக்கும் , இங்க பாருங்க மிஸ், 3 நாளா இத அவளக்குக்  கொடுக்க ட்ரை பண்ணுறன்.....தனிய போகாமல் ப்ரெண்ட்ஸோடத்தான் சேர்ந்து போறாள்..."

என்றவாறு தன் காற்சட்டைப் பைக்குள்ளிருந்து சில டொபி, கன்டோஸ், 2 பேனாக்களை வெளியே எடுத்தான்...

" ஏதடா காசு இதுக்கு"

நானும் விடவில்லை........

"மிஸ்.......நான் வீட்டில ஆசையா வளர்த்த மீன்கள எல்லாம் அவளுக்காக வித்துட்டேன்.அந்த காசிலதான் இத வாங்கினேன்"

அவன் காதல் ஆழம் புரிந்தது.. ஆனாலும் அது ஒரு தலைக் காதல்..அந்தப் பெண்பிள்ளை சற்று வசதியான பிள்ளை....இவன் காதலுக்கு முதல் தடையாக அந்தஸ்தே வாய் பிளந்து நிற்பதை அவன் உணரவில்லை,

"நான் ஒன்னு சொல்லட்டுமா.....அவள் பணக்காரிடா"

"பரவால மிஸ், எனக்கு அவள்ர காசு வாணாம்....அன்பு போதும்...அன்பா  ரெண்டு வார்த்தை பேசினாப் போதும்.........."

அவனும் அவளை விட்டுக் கொடுப்பதாக இல்லை.

"சரிடா................பர்ஸ்ட், அவள்ர போய் உன் காதலைச் சொல்லு..........சரின்னா நீ கனவ வளர்க்கலாம், ஆனால் இந்தக் காதல் அவஸ்தையில நீ படிக்காம விட்டா, அப்புறம் என் கூடப் போசக் கூடாது சரியா"

"ம்ம்"

தலையாட்டினான்... அன்றைய தினமே அவளுக்காக காத்திருந்தான் தன் காதல் சொல்ல!

மாணவர்களுக்கான இலவச புத்தக விநியோக வேலைப் பளுவில் நான் அவன் காதலை மறந்து போக, மீண்டும் இன்று என் பின்னால் சுற்றினான்..........

"மிஸ்...மிஸ்"

"என்னடா........."

"அவள் எனக்கு வாணாம் மிஸ்"

" என்னடா திடீரென்று லைன் மாறிட்டே"

"நான் நேத்து அவள்ட என்ட லவ்வச் சொன்னேன்.  ஓவென்று அழுதிட்டாள்..சேரிட்டயும் என்ன மாட்டிட்டாள்" அந்த சேர் பெயர் சொன்னான்..

"ஓ......அந்த சேர் அடிச்சாரா"

"இனி அவள தொந்தரவு பண்ணாத என்று சொல்லிட்டார்.............அவளுக்குத்தான்  என்னைப் பிடிக்கலயே............."

சொல்லும் போது, அவனது கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் தெறித்தன.

. அவனாகவே தன் தவறை உணர்ந்தது எனக்கு மகிழ்வு தந்தது...

"அப்பாடா......................"

பெருமூச்சு விட்டேன்.............அந்தப் பெருமூச்சு உலர முதல் இன்னுமொரு குண்டைத் தூக்கிப் போட்டானே.............

"அவள் வாணாம் மிஸ்...அவளுக்கு வாங்கின டொபி, கண்டோஸ நானே தின்றுவிட்டேன்.........இப்ப நான் இவள லவ் பண்ணுறன்"

அவன் புதுக் காதலி பெயர் சொன்னான்.......!

அவள் 6ம் வகுப்பில் படிப்பவளாம்........நண்பன் வகுப்பைப் பற்றிச் சொன்னான்

இது காதல் இல்ல கண்ணா.......பருவக் கிளர்ச்சி...............

சொன்னேன். ஆனால் நிச்சயம் அதை அவன் உணரப் போவதில்லை. அவனுக்கு புத்தி சொன்னால் அதைக் கேட்கும் வயதில்லை அவனுக்கு. இவளும் சலிச்சுப் போய் விரைவில், அவனாகவே இன்னுமொருத்தியின் பெயர் சொல்வான்.......


2012/10/09

முயன்றோர் தோற்றதில்லை....



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக,


(08.10.2012ந் திகதியன்று பாடசாலைக் காலைக்கூட்டத்தில் சொற்பொழிவாற்றும் சந்தர்ப்பம் எனக்களிக்கப்பட்டது. நான் உரையாற்றிய விடயத்தின் பதிவிது )

வாழ்க்கை என்பது இறைவனால் மனிதனுக்களிக்கப்பட்ட மிகச் சிறந்த கொடையாகும். அவ் வாழ்வை நாம் வசப்படுத்துவதும்,  இழப்பதும் நம் கையில்தான் உள்ளது. நல்ல அனுபவங்களை நாம் தேடிப் பெற்றுக் கொள்வோமாயின், அவ் வாழ்வும் நம்மை பிறருக்குச் சிறந்தவர்களாக அடையாளப்படுத்திக் காட்டும்.

எனவே நாம் சிறப்பான வாழ்க்கை வாழவேண்டுமானால், நமது வாழ்க்கைப் பயணம் தேடல் மிகுந்ததாக இருக்க வேண்டும், இத் தேடல் தானாக வராது. நமது முயற்சியின் அளவுக்கேற்பவே தேடலும்  நம் வசப்படும். எனவே முயற்சி நமக்கவசியம். நம் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் முயற்சியின் வலிமையுடன் ஆரம்பிக்கப்படும் போது, வெற்றியும் இலகுவாக தன்னை நம்முள் விட்டுச் செல்கின்றது. "முயன்றார் ஒருபோதும் தோற்பதில்லை"
எனவே முயற்சி பற்றிய வார்த்தைகளை இங்கு சொல்வது பொருத்தமென்று நினைக்கின்றேன்.

ஒரு செயலைச் செய்ய முன்னர் அச்செயல் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நமது சிந்தனை சரியாக அமைந்து விட்டால், அதன் பின்னரே அதனுடன் தொடர்பான  செயலிலீடுபட வேண்டும். இச் செயலுக்கு அதிக ஊக்கம், முயற்சி, கவனம் கொடுக்கும் போது வெற்றியும், சிறப்பும் நம் செயலுக்குள் பொருந்திக் கொள்ளும்.

மாணவராகிய உங்கள் வாழ்க்கையின், வெற்றியின் ஆரம்பப் படிக்கற்களாக விளங்குவது கல்வி கற்றலேயாகும். கல்வியை உணர்ந்து கற்றல் வேண்டும். அப்போதுதான் அதன் பயனை மாணவர்களாகிய நீங்கள் முழுமையாக உங்கள் வாழ்நாளில் அடைய முடியும்.

முயற்சி என்றால் என்ன.......ஒரு விடயத்தை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக நம்மால் மேற்கொள்ளப்படும் அதிக பிரயத்தனம்..அல்லது செயற்பாடுகள் என்றும் கொள்ளலாம் .

இம்முயற்சியுடன் தெடர்புடையதாக, சிந்திக்கத்தக்க சிறு கதையொன்றைச் சொல்லப் போகின்றேன்.....

படிப்பில் ஆர்வமுள்ள மாணவனொருவன் சில நாட்களாக மனம் சோர்வுற்றிருந்தான். காரணம் அவன் படிக்கின்ற விடயங்கள் யாவும் அவனுக்கு சீக்கிரம் மறந்து விட்டன. இப்பிரச்சினையால் பரீட்சைகளிலும் அவன் குறைவாகவே புள்ளிகளையும் பெறத்தொடங்கினான்..எவ்வளவு நன்கு படித்தும் ஏன் மறக்கின்றன...சிந்தித்தும் அவனுக்கு விடை தெரியவில்லை.

ஒருநாள் இப் பிரச்சினைக்குப் பதில் தேடி அவனுக்குப் பிடித்தமான அவன் குருவாகிய ஓர் ஆசிரியரிடம் போனான். ஆனால் அன்று அவ்வாசிரியர் அவனைக் கண்டு கொள்ளவேயில்லை. வருத்தத்துடன் வீடு திரும்பியவன், மீண்டும் தன்னைப் பற்றிச் சிந்தித்தான். அவர் தன்னை இப்போது விரும்பாமைக்கான காரணங்களாக சில விடயங்களைத் தானே யோசித்து, அவற்றை தன்னிலிருந்து நீக்கியவனாக 

ஒரு மாதம் கழித்து மீண்டும் அவரைச் சந்திக்கப் போனான். ஆனால் அன்றும் அவ்வாசிரியர் அவனைப் பொருட்படுத்தவில்லை. அவர்  இம் முறையும் சந்திக்கவில்லையே. மனக்கவலை மாணவனுக்குள் அதிகமானது..

ஆனால் அவன் சோரவில்லை. அவரைச் சந்திக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் மாற்றவில்லை." மீண்டும் தன்னிடம் காணப்படக்கூடிய குறைகளை நன்கு சிந்தித்து, அவற்றையெல்லாம் முழு மனதுடன் நீக்கியவனாக . அவ்வாசிரியரை மீண்டும் சந்திக்க முயன்றான். இவ்வாறு பல தடவைகள் முயன்று தோற்ற பின்னர், ஒரு நாள் அவனாசை நிறைவேறியது.

அவரைப் பணிந்து தான் வந்த நோக்கத்தை அவருக்கு கூறமுற்படும்போது, ஆசிரியர் திடீரென் பறக்கும் வண்ணாத்துப்பூச்சியொன்றை தன் கைகளுக்குள் பொத்தினார். பின்னர் அவனைப் பார்த்து,

"என் கைகளுக்குள் உள்ள வண்ணாத்திப்பூச்சி உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா, இதற்கு பதில் சொல்லிய பிறகு, உன் பிரச்சினையை எனக்குச் சொல்லலாம்" என்றார்.

மாணவனுக்குள் தடுமாற்றம் ஏற்பட்டது. இறந்துவிட்டது எனக் கூறினால், உயிருடன் பறக்க விடுவார், உயிருடன் இறக்கின்றதென்று கூறினால், கைகளால் நசிக்கு சாகடித்து விடுவார்........என்ன பதிலைச் சொல்வது...
சிறிது நேரம் யோசித்த பின்னர், மாணவன் கூறினான்

"வண்ணாத்துப் பூச்சியின் உயிர் உங்கள் கைகளிலேயே உள்ளது குருஜி" என்றான்.

மாணவனின் பதிலைக் கேட்ட ஆசிரியர் அகமகிழ்ந்து, அவனைப் பாராட்டினார்.."

நீ திடீரென பதில் சொல்லாமல் நன்கு யோசித்தே பதில் சொன்னாய். உன் சிந்தனையின் வெளிப்பாடு முயற்சியின் பின்னரே வெளிவந்துள்ளது. உன் பிரச்சினை எனக்குப் புரிகிறது......

நீ கற்கும் நேரத்தில் வேறு திசையில் உன் கவனத்தைத் திருப்பத் தொடங்கியதால்  கல்வி உன்னை விட்டு மெல்ல போகத் தொடங்கியது. இப்போதெல்லாம் அதிக முயற்சியுடன் நீ படிப்பதுமில்லை. படிக்கின்ற விடயங்களைப் பற்றிச் சிந்திப்பதுமில்லை. நீ வேறொரு உலகத்தில் சஞ்சரித்ததால் கல்வியுமுன்னை விட்டுப் போகத் தொடங்கியது. கற்ற விடயங்கள் உன் ஆழ் மனதைத் தொடாததால்  ஞாபகமறதியும் உனக்குள் தோழமையாகி, உன்னை வழிகெடுக்கப் பார்த்தது. ஆனால் இப்பொழுதுதான் நீ உன்னை உணர்கின்றாய்....உன் மீதுள்ள தவறுகள், குறைகளைக் கண்டறிய முயற்சிக்கின்றாய்..இந்த முயற்சியெனும் ஆற்றல் உன்னுள் சேரத் தொடங்கிவிட்டது..இம் முயற்சியின் துடிப்பால் இப்போது உன்னால் படிக்கின்ற விடயங்களை ஞாபகப்படுத்த முடியும். நீ கற்றலில் முதலிடம் பெறுவாய்"

எனக் குருஜி அவனுக்குள்ளேற்பட்ட குழப்பத்தை தெளிவுபடுத்தினார்.

மாணவர்களே........இக் கதையில் வரும் மாணவனாக உங்களை நினையுங்கள். உங்களுக்கும் இப்பிரச்சினை வரலாம்......வரும்.....பிரச்சினைகள் வரும்போதே தீர்வுகளும் வரத் துடிக்கின்றன..படிக்கின்ற விடயங்களை மறந்து போவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் உங்களுக்குள்ளும் உள்ளது..

ஞாபக மறதி ஏன் ஏற்படுகின்றது?

படிக்கின்ற விடயங்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட  மனதில் ஆழமாகப் பதியாமையே இதற்குக் காரணமாகும். அவசர அவசரமாகப் படிக்கின்ற மாணவர்கள், தாம் கற்கும் விடயங்களை தெளிவாக உணர்ந்து படிக்க முயற்சிப்பதில்லை. இதனால் படிக்கின்ற விடயங்கள் மறந்து போகின்றன. தினமும் நாம் உட்புகுத்தும் விடயங்களை நினைத்துப் பாருங்கள்..உங்கள் பெற்றோர், உடன் பிறந்தோர் முகங்கள்....நெருங்கிய நண்பர்கள், நமது வீடு....
இவை யாவும் நம்மால் மறக்க முடியாதவை. எனவே ஒரு விடயத்தை திரும்பத் திரும்பக் கற்க வேண்டும். அப்போதே மறதியேற்படாது. ஞாபகம் நிலைக்கும்.

அவ்வாறே நீங்கள் கற்கும் போது, சில விளங்கிக் கொள்ள முடியாத விடயங்களை சுயமாக விளங்கிக் கொள்ள முயற்சிப்பதில்லை. பக்கத்திலுள்ளவர்களிடம் கொப்பியடித்து சரி வாங்க வேண்டுமென்ற ஆர்வம் , அவ்விடயத்தை நீங்களாகவே விளங்கிக் கொண்டு, உங்கள்  மனதில் ஆழமாகப் பதிக்க முயற்சிப்பதில்லை.

நமது செயல்களை முயற்சிக்காமல் சோர்வுடன் உதாசீனப்படுத்தும் பழக்கத்தால், நாம்  நல்ல பல வாய்ப்புக்களை இழக்கின்றோம். "செய்வன திருந்தச் செய்ய" முயற்சிக்க வேண்டும். அவ்வாறு நாம் முயற்சிப்போமானால் நமக்கான வெற்றிக்கான சக்தியும் திரட்டப்படுகின்றது. அறிவுபூர்வமான நம் முயற்சித் தேடலின் விளைவாக எதிர்காலமெனும் அழகிய வாழ்விடம் உங்களைத் தேடி நடைபயின்று, நீங்கள் ஆர்வப்பட்டிருந்த இலட்சியங்களையும் உங்கள் சொத்தாக்கிச் செல்லும்.

மாணவர்களே...எனவே முயற்சியின் கரங்களுக்குள் உங்களை வலுவாகப் பிணைத்து உங்கள் கல்வியுலகைச் சிறப்பாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் கண்டெடுத்த தனித்திறமைகளால்  தலைநிமிர்ந்து நில்லுங்கள். அவ்வாறான நிலையில் நீங்கள் வாழும் போதே வாழ்த்தப்படுவீர்கள். காலத்தின் சுவர்களில் உங்கள் பெயரும் பொறிக்கப்பட இறையாசியுடன் முயற்சியுங்கள்!



2012/10/06

மரண அவஸ்தை


(வழமைய விட சற்று வித்தியாசமா உங்க கூட கதைக்கணும் என்ற ஆசை.....அதுதான் இந்தப் பேச்சுப்பாணி போஸ்ட்........)

ஹாய்.......................!

நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்க வந்து உங்ககிட்ட பேசுறன்......சிரிச்சுகிட்டு பதில் சொல்ல மாட்டீங்களா........

சின்னதா ஒரு சிரிப்புத்தானே............
அதுக்கேன் இப்படி மூஞ்சிய உர்ர்ர்ர் னு வைச்சிட்டு............

புரியுது புரியுது வந்த விசயத்த சொல்லிடுறன்!

வாழ்க்கை ரொம்ப அழகானதுங்க........ரொம்ப ரொம்ப இனிமையானதும் கூட (காதக் குடுங்க.....அது கனவு வாழ்க்கைங்க)

ஆனால் வாழ்க்கைல நாம நினைக்கிறது, எதிர்பார்க்கிறது நடக்கலைன்னா........இந்த அழகான வாழ்க்கை மரணத்தையும் நினைக்கத் தோணும். நான் கூட நெறைய தடவை சாவப் பற்றி யோசித்திருக்கிறன்.. நான் ரொம்ப நேசிக்கிறவங்க என்ன விட்டுப் போகக் கூடாது.......என்னால அந்த வேதனைய தாங்கிக் கொள்ள முடியாது. ஆனால்............நான் அவங்கள விட்டு சட்டென்று கண்ண மூடிடணும்........

(இது சுயநலமா.......)

இன்னும் இந்த ஆச ஏனோ நெறைவேறவே  இல்லை...இந்த உலகத்தில நானெல்லாம் வாழ்ந்து அப்படி என்னதான் ரொம்ப சாதிக்கப்போறன்.......ஒன்னுமேயில்ல....பூமிக்கும், மனுஷனுக்கும் பாரமா வாழ்றதுல அப்படி என்னதான் இருக்கு!

மரணம் என்று சொன்னதும், உங்க ஹார்ட் ரொம்ப பயத்தோட துடிக்குதுங்க. அந்த சத்தம்.........சத்தியமா.......எனக்கு கேட்குதுங்க....அப்படித்தான் சொல்ல ஆச...ஆனால் கேட்க நீங்க பக்கத்தில இல்லையே.....

எனக்கு வந்த மரண அழைப்புக்கள கொஞ்சம் உங்ககிட்ட சொல்லத்தான் வேணும்.......ஏன்னா.......ப்ரென்ஸ்கிட்ட எதுவுமே ஒழிக்கக்கூடாதுன்னு நானே எனக்கு சொல்லியிருக்கேன்.

ஒரு பத்து வருஷத்துக்கு முந்தி, வீட்டு வளவு கூட்டிக்கொண்டிருக்கும் போது தென்னை மரத்திலிருந்து பெரிய தேங்காய் ஒன்னு நெத்தில வந்து விழுந்தது.
பட்.................

என் நெத்தில தெறித்து விழுந்த போது பக்கத்தில நின்ன என் தங்கச்சிமார் அப்படியெ விறைச்சுப் போய் பேயறைஞ்சு நின்னாங்க வேதனைல......இன்னும் 2 சென்ரி மீற்றர் போனால் கண்ணு குளோஸ்.........அப்புறம் நடு மண்டைல விழுந்தா ஆளே குளேஸ்தான்........

அப்புறம் ஒரு மூணு வருஷத்துக்கு முதல் பஸ்ஸூல ஏறும் போது பஸ் ரைவர் நான் ஏற முதல் பஸ்ஸ ஸ்டார்ட் ஆக்க.....

ஒரு கால் றோட்ல, மறு கால பஸ்ல....

.ஏற முயற்சித்த நானோ வீசப்பட்டு கீழ விழ...............அடடா...........நான் விழுந்த இடம் எதுன்னு தெரியுமா........

பஸ்ஸூக்குள்ள........ரெண்டு பின் சில்லு விளிம்போரம் என் கழுத்த தொட்டுக் கொண்டு நின்றது........றோட்ல நின்ன ஆக்கள் இதப் பாத்துட்டு கத்த,  சத்தத்தில பஸ்காரன் பேயறைஞ்சு போய் பஸ்ஸ நிப்பாட்டிட்டான்.....பாருங்கோ.....அவன் கையும் ஓடல, காலும் ஓடல, அதனால பஸ் சில்லும் உருளல........பின்னஞ்சில்லு உருண்டா.........என் கழுத்தெலும்பு  ........"நறுக்" தான்.

அப்புறம் ஒரு வருஷத்துக்கு முன்னாடி சின்னதா ஒரு மோட்டார் சைக்கிள் விபத்து....மழை நேரம் பள்ளத்துக்குள்ள தண்ணி நின்று மறைக்க, நான் இது தெரியமா பைக்க அதுக்குள்ள விட................

அப்புறம்................

நான் கீழே விழுந்திட்டன்..........சின்னதா ஒரு காயம்......பெரிசா இல்லீங்க.......மஞ்சள் நிற என்  மழை அங்கி சிவப்பு நிறமாக மாறுற அளவுக்கு. அப்புறம் இன்னும் 1 சென்ரீ மீற்றர் என்றால் பைக் கண்ணுக்குள்ள குத்தியிருந்த கண்ணு அம்பேல்தான்........

இப்படி எத்தனையோ விபத்துக்கள் வந்தாலும் படைச்சவன் காப்பாத்தினான். ஏன்னா................

நீங்க எல்லாம் என் ப்ரெண்ட்ஸா இருக்கணும் தானே அதுக்குதான்..........

அப்புறம்..................தூக்கம் வருது குட்நைட் சொல்லட்டுமா!

2012/09/29

விரல் தொடும் ஸ்பரிசங்கள்



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

நம்மை விட்டுக் கடந்து சென்றவை ஏதோவொரு பொழுதினில் ஞாபகப்படுத்தப்படும்போது மனசெங்கும் மகிழ்ச்சி நிரப்பப்படுகின்றது. அந்த வகையில் நான் கடந்து சென்ற பாதையில், விட்டுச்சென்ற சில தடங்களை அதாவது கணினி தொடர்பான நினைவுகளைப் பகிரப்போகின்றேன்......

அறியாமையையை அறியாமலிருப்பதுதான் அறியாமை!

நான் படிக்கின்ற காலத்தில் கணனி எங்கள் பாடசாலைக்குள் அறிமுகப்படுத்தப்பட்டது. விஞ்ஞான ரீச்சர் அவற்றைப் பாடத்திற்காக இயக்க, நாம் அவற்றை ஆச்சரியத்துடன் பார்த்து விழிபிதுக்குவோம். ஆனால் அதனை இயக்கவேண்டுமென்ற ஆசை, நிறைவேறாத அழுத்தங்களாக நெஞ்சில் படிந்து கிடந்தது..

அது யுத்தகாலம்...பொம்பரும், ஹெலியும், ஆட்லறியும் மனதில் பீதியை விதைத்துக்கொண்டிருந்ததால் கணனி கற்கை பற்றிய கனவும் காய்ந்துதான் போனது......

நாலைந்து வருடங்களின் பின்னர் க.பொ.த  உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று, உயர்படிப்புக்கோ தொழிலுக்கோ தயாராகிக் கொண்டிருந்த காலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கணனி கற்கைநெறிக்காக விண்ணப்பிக்கும்படி அறிவித்தலை வெளிவிட்டுக்கொண்டிருக்க, மீண்டும் மனதில் ஆசை தளிர்த்தது...ஆனால் அன்றைய காலத்தில் கணனி பற்றிய பெரிய எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் பெற்றவர்களிடம் இருக்கவில்லை. அத்துடன்  யுத்தச் சூழ்நிலை வேறு......சற்று தொலை நோக்கி படிக்க அனுமதி கேட்டால் நிச்சயம் வீட்டில் ஏச்சு விழும் என்ற காரணத்தால் சொல்லாமல் மறைக்கவும், யுத்தம் தீவிரமாகி நாம் இடம்பெயரவும் காலம் சரியாகிக் கிடந்தது..

இடம்பெயர்ந்தோம்......எதிர்பாராத சூழ்நிலையில்...!

புதிய இடம், புதிய சூழல், புதிய மொழி .......வாழ்வையே திசை மாற்ற, மனதில் கருக்கட்டப்பட்டிருந்த கனவுகளும், ஆசைகளும் மறைந்து போயின.

இருந்தும் ஓரிரு வருடங்களில் பத்திரிகையில் காணப்பட்ட விளம்பரமொன்று மீண்டும் கணனி தொடர்பான ஆசைத்தணலை என்னுள் உசுப்பேற்ற.. போராட்டத்துடன் வலியை உணர்ந்து, பெற்றவர்களிடம் முறையிட்டேன் நானும் கணனி கற்கவேண்டுமென!..

அது.டெக் ஸ்ரீலங்காவின் கணனிக்கற்கை பற்றிய விளம்பரம்.. நுண்மதி தெரிவுப்பரீட்சை நடத்தப்பட்டு, அதன் மூலமாகப் புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டன. அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு இலவசமாகவும், இன்னும் தொகுதியினருக்கு கால்வாசிக் கொடுப்பனவிலும், அடுத்த தொகுதியினருக்கு அரைவாசிக் கொடுப்பனவிலும் புலமைப்பரிசில் வழங்கப்படுமெனவும், தெரிவு செய்யப்படாதவர்கள் முழுக்கட்டணம் செலுத்தி கற்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டது.   எனினும் நாடுமுழுவதும் ஆயிரம் பேர் மாத்திரமே தெரிவுசெய்யப்படுவார்களென்ற கட்டுப்பாடும் வரையறையும் இவ்விளம்பரத்தை அழுத்தின.

நானும் என் இருசகோதரிகளும் அப்பரீட்சைக்கு முகங் கொடுத்து எழுதினோம். ஆயிரக்கணக்கானோர் பரீட்சை மண்டபங்களை நிறைத்திருந்தனர். பரீட்சை முடிவுகள் வெளிவந்தபோது என் சின்னத்தங்கைக்கு (தற்போது டாக்டராக உள்ளார்) மாத்திரம் இலவச புலமைப்பரிசிலும், எனக்கும் மற்ற தங்கைக்கு கால்வாசிக் கட்டணமாக 3 ஆயிரம் மாத்திரம் செலுத்தி 6 மாதக் கற்கையைத் தொடரும்படியும் கூறப்பட்டது. அப்பொழுது கணனிக் கட்டணமாக 12 ஆயிரம் அறவிடப்பட்ட காலம்....

3 ஆயிரம்................!

அகதியாக நாம் இடம்பெயர்ந்த நிலையில் மூவாயிரம் என்பது நினைத்தும் பார்க்க முடியாத பிரமிப்பான ஒரு தொகை.  மறுபுறம் சிங்கள மொழியிலான அக்கற்கையை மேற்கொள்ள முடியாதளவு மொழிப்பிரச்சினையும் தடைகளாக இருந்தன. அக்கற்கைக்கான அனுமதிக் கடிதம் இன்னும் என் பைலை (கோவையை) நிரப்புகின்றது. மீண்டும் என் கணனிக் கனவுகள் உடைந்ததால்  கருக்கட்டப்பட்டிருந்த  அவ்வாசைகளும்  காணாமல் போயின. 

அதைத்தொடர்ந்து வந்த காலத்தில் எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைக்கவே, அக் கடமைகளில் தீவிரமாக நானும் மூழ்கி கணனியையே மறந்து போனேன். அவ்வாறான ஓர் காலத்திலேயே எமது பாடசாலைக்கும் நலன்விரும்பியொருவர் கணனியொன்றை அன்பளிப்புச் செய்திருந்தார். அக் காலத்தில் கணனிப்பயிற்சி பெற்றோர் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே!

அப்போது எம் பாடசாலையில்  அதிபராக இலக்கியவாதியும் கலாபூஷணமுமாகிய அன்பு ஜவஹர்ஷா சேர் கடமையாற்றிக் கொண்டிருந்தார். எனது சிறப்பான கடமைகளின் நிமித்தம், பாடசாலை முகாமைத்துவக் கடமைகளும் எனக்கு பங்கிடப்பட்டிருந்தன. என் கையெழுத்துக்கள் அழகாக இருக்கும். எனவே பாடசாலை முகாமைத்துவம் சார்பான கடிதங்கள், அறிக்கைகள் எல்லாமே என் எழுத்துக்களால் நிரம்பிக் கொண்டிருந்தன.

ஒரு நாள்........................!

அதிபர் ஜவஹர்ஷா சேர், என்னை அழைத்து, மர்ஹூம் வஹாப் சேர் கொடுத்திருந்த ஒரு மீலாத்விழா தொடர்பான கடிதத்தைக் கொடுத்து அதனைத் கணனியில் அதுவும் தமிழில் தட்டச்சு செய்து தரும்படி கூறினார்.

மிரண்டேன்......கணனியிலா........!

சேர்......எனக்கு கம்பியூட்டர் தெரியாது......விழிகள் கலங்க, மனம் பீதியுடன் வார்த்தைகளை உதிர்த்தபோதும், அவர் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

"உங்களுக்கு இது பெரிய விசயமில்ல மகள்.   கெதியில தெரிஞ்சுக்கலாம்"

நம்பிக்கையை எனக்குள் விதைத்து, கணனியையும் இயக்கித் தந்தார். தமிழ் எழுத்துக்களை அடையாளம் காணக்கூடிய குறிப்புக்களையும் தந்தார்.

மகள்....! (அப்படித்தான் அவர் சின்னவர்களை அழைப்பார்)

இதப் பார்த்து டைப் பண்ணித்தாங்க...........மற்றதெல்லாம் நான் செய்கின்றேன்"
.
வேறு வழியின்றி பயத்துடன் ரைப் செய்தேன். ரொம்ப ரொம்ப அவதானமாக என் விரல்கள் விசைப்பலகைகளை அழுத்தி முடிக்க அதிக நேரமெடுத்தது. அன்று ஒரு கடிதத்திற்காக நான் செலவழித்த நேரம் ஒரு மணித்தியாலம்.

(முதன் முதலாக கணனியில் எனது பெயரையும், என் குடும்பத்தார் பெயரையும் திகதியிட்டுத் தட்டச்சுச் செய்தேன். இன்றும் அப்பதிவைப்
பத்திரப்படுத்தியுள்ளேன்.)

எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நான் நிறைவேற்றி அவரிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அவர் அக்கடிதத்தை மெருகூட்டினார். அவர் மெருகூட்டும் போது கடைப்பிடித்த விடயங்களை அவதானித்து உள்வாங்கினேன். இவ்வாறாக பல தடவைகள் நிகழ்ந்தன. என்னைச் சுற்றி வந்த  பார்வை, கேட்டல் ஞானத்தினூடாக ஒரு சில கணனி அடிப்படை விடயங்களைக் கற்றுக் கொண்டேன்.

அதன் பின்னர்  அதிபர் ஜவஹர்ஷா சேர் அவர்கள் தனது லாப்டொப்பை எனது வீட்டில் தானாகவே கொண்டு வந்து தந்தார். நான் ஏற்கனவே கற்றுக் கொண்ட விடயங்களின் அடிப்படையில்,  சுயமாக அவரது லாப்டொப்பில் ஒரு வாரம் முயற்சித்து  சில விடயங்களைக் கற்றுக் கொண்டேன். எனது முயற்சி, ஆர்வத்தைப் பார்த்த என் வாப்பாவும் கணனி தொடர்பான சஞ்சிகைகள், புத்தகங்கள் வாங்கித்தருவதில் ஆர்வங் காட்ட,  சுயமாக வேர்ட், பவர் பொயின்ட், எக்ஸல் என்பவற்றையும் புத்தகம் மற்றும் தேடல் மூலமாகக் கற்றுக்கொண்டேன்.

அதனைத் தொடர்ந்து வந்த வருடங்களில், சுயமாக நான் கற்றுக் கொண்ட கணனி பற்றிய அதிகமான விடயங்களைப் பரீட்சித்துப்பார்க்கும் தளமாக பாடசாலைக் கணனி எனக்கு கைகொடுத்தது. கல்வியமைச்சால் பாடசாலைக்கு 20 கணனிகள் வழங்கப்பட்டபோது அதற்கென கணனி கூடமும் தயாரிக்கப்பட்டது, அக்கணனி கூடம் (Computer Lab) என் பொறுப்பிலே விடப்பட்டது. க.பொ. த (உ/த) வகுப்பிற்கும் GIT படிப்பிக்கும் ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். இதன் பொருட்டு கல்வியமைச்சு இசுருபாயாவிலும், அநுராதபுர கணனிக் கற்கை வளநிலையத்திலும் எனக்கு சில கணனிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. பயத்துடன் ஆரம்பிக்கப்பட்ட என் கணனிப் பயணம் என் முயற்சியால் சிறப்பாக நடைபயின்றது. மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டுமென்பதற்காக நான் இன்னும் பல கணனி தொடர்பான விடயங்களைத் தேடிக் கற்றுக்கொண்டேன்.

காலம் வேகமாக ஓடிக்கொண்டிருக்க, பாடசாலை முகாமைத்துவச் செயற்பாடுகளின் கணனி வழங்கும் வேலைகள் யாவும் என்னால் மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக நிறைவேற்றிக் கொடுக்குமளவிற்கு என்னை வளர்த்துக் கொண்டேன்.

 இவ்வாறாக என் தேடலை வளர்த்தும், விருத்தி செய்தும் கொண்ட போதுதான் எங்கள் வீட்டிலும் தந்தையும் கணனியொன்றை வாங்கியிருந்தார்.

அது தந்தையின் கணனி..தேவைக்கு மாத்திரமே நான் பயன்படுத்தினேன். பிறர் பொருட்களை நான் அதிகம் அனாவசியமாகப் பயன்படுத்துவதில்லை.....
என்னுழைப்பில் கணனியொன்றை வாங்க வேண்டுமென்ற ஆசையொன்றும் மெல்ல முகிழ்த்தது. அக்காலத்தின் வருகைக்காக காத்திருந்தேன்.

அப்பொழுது இலங்கையில் வேலையற்ற பட்டதாரிகள் பலருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி பயிற்சியளிக்கப்பட்டது. அவர்களுக்கு கணனியும் பயிற்சியளிக்கப்பட்டது. நானும் கணனிப்பயிற்சியளிக்கும் வளவாளராகத் தெரிவு செய்யப்பட்டேன். வவுனியா நைட்டா நிறுவனத்தில் மூன்று மாதம் கணனிப் பயிற்சியளித்தேன். இது எனக்கு வித்தியாசமான அனுபவம்.

முறைப்படி பயிற்சியேதுமின்றி தைரியமாகவும், நம்பிக்கையுடனும் கணனியுலகில் வலம் வந்த என்னை கல்வியமைச்சு ICDL பயிற்சியளிக்க தெரிவு செய்தது. அநுராதபுரம் IDM நிறுவனமே இப்பயிற்சியளித்தது. எமக்கான கட்டணங்களை அரசு செலவளித்தது. பல போட்டிக்கு மத்தியில் இந்தப் புலமைப்பரிசில் கிடைத்தது எனக்குரிய அதிஷ்டமே என்றுதான் சொல்ல வேண்டும். இது விடுமுறை தினங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வருடப்பயிற்சியாகும். நான் சுயமாக கற்றுக்கொள்ளாத  MS ACCESS  ஐ இங்குதான் கற்றுக் கொண்டதுடன், ஏற்கனவே அறிந்து வைத்துள்ள ஏனைய விடயங்களை மேலும் மெருகேற்றிக் கொண்டேன். இப்பயிற்சியில் மொடியூல்கள் வழங்கப்பட்டன. ஆனாலும் இப் பயிற்சியில் Internet ஓரம்சமாக இருந்தாலும் கூட அந்த விடயங்கள் சரிவரப் பயிற்சியளிக்கப்படவில்லை. ஆக மொத்தத்தில் இணையம் சார்பான செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய துறைகள் என்னுள் மேலும் மெருகூட்டப்பட்டன.

ஈராண்டு காலம் கழிந்தது..... ICDL  பயிற்சியை முடித்தவர்களுக்கு கல்வியமைச்சு  IPICDL பயிற்சியை வழங்கியது. என் பெயரிலேயே பயிற்சிக்கான கடிதம் வந்ததால், புதிய அதிபரும் என்னை பயிற்சிக்காக அனுப்பி வைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார்.. இதுவும் விடுமுறை தினங்களில் கற்றுக் கொண்ட மூன்றுமாத பயிற்சியாகும். .மூன்று மாதமும் இணையமே ஆன்லைன் மூலம் கற்பிக்கப்பட்டது.

என் வாழ்வின் போக்குகளை மாற்றித் தந்தது இப் பயிற்சிநெறியே ஆகும்.. ஒவ்வொருவருக்கும் காலை 9 மணி தொடக்கம் மாலை நான்கு மணி வரை கணனியில் இணையத்தைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யவேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. ஏனெனில் பாடசாலைகளுக்கிடையில் வலைப்பின்னல்களை உருவாக்கி. அப் பாடசாலைக் கல்வி வழங்கலை ஆசிரியர்கள் தமக்குள் பரிமாறி, மாணவர்களின் கல்வி வழங்கலை அதிக வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடனேயே இப்பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சி 2010 ஒக்டோபர் 1 ல் ஆரம்பிக்கப்பட்டது. அன்றுதான் என் முகநூல் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. எனது இப்பயணத்தின் வயது 2 வருடமேயாகும். ஆனால் நானிங்கு கற்றுக் கொண்ட விடயங்களும் அனுபவங்களும் அதிகம்.

பயிற்சிக்காக கட்டாயம் மின்னஞ்சல் தயாரித்த போதுதான் பயிற்சியில் கலந்து கொண்ட  நட்புள்ளங்கள் முகநூல் பற்றிக் கூறி, என்னையும் ஆரம்பிக்கும்படி வற்புறுத்தினார்கள். அவர்களிடம் ஏற்கனவே முகநூல் பக்கங்கள் இருந்ததால் பயிற்சி தொடர்பான விடயங்களை சட் மூலம் பரிமாற அறிவுறுத்தப்பட்டபோது, எனக்கு முகநூல் பக்கம் அவசியப்பட்டது. ஆனால் முகநூல் பக்கத்தை எப்படி ஆரம்பிப்பது.................. தெரியவில்லை எனக்கு!

 அச்சூழலில் பயிற்சியில் கலந்து கொண்ட சிங்கள மொழி பேசும் நண்பனே (எரிக் ) என் முகநூல்பக்கத்தை உருவாக்கி சில அடிப்படை விடயங்களையும் சொல்லித் தந்தான்.. அவ்வாறே இன்னுமொரு சிங்கள நண்பன் (அஜித்) வலைப்பூ பக்கமொன்றை எனக்குள் அறிமுகப்படுத்தி அதனையும் உருவாக்கித் தந்தான். இணையத்தில்  பதிவுகளை தமிழில் வெளியிடவே ஆர்வப்பட்ட நிலையில் Tamil Font ஒன்றும் எனக்குத் தேவைப்படவே, எங்களுக்குப் பயிற்சியளித்த சிங்கள சகோதரியிடம் எனது தேவையைக் கூறினேன். அவர் தாம் சேமித்து வைத்திருந்த Tamil Font  ஐ எனக்குத் தந்துதவ, எனது இணையப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது.  ஆக மொத்தத்தில் இன்று நான் இணையத்தில் தமிழில் வலம் வரக் காரணமாகவிருந்தோர் சிங்களமொழி பேசும் எனது சகோதரர்களே!

அதன்பிறகே கணனியொன்றை வாங்கி, நானாக மேலும் பலவிடயங்களைக் கற்றுக் கொண்டேன். தினமும் பார்வை, கேட்டல் ஞானங்களுடன் எனது அறிவினைப் புதுப்பிப்பதில் நான் சற்றும் தயங்கவதில்லை.

ஒரு சில மாதங்களில் நிறைய விடயங்களை கணனிப் பயிற்சி மூலமாகக் கற்றுக் கொள்வதிலும் பார்க்க, பல வருடங்கள் நானாகவே முயன்று தேடி சிறுகச் சிறுகக் கற்றுக் கொண்டது, கொள்வது எனக்கு சாதனையாகத்தான் இருக்கின்றது.

இந்தக் கணனிப்பயணத்தில் நான் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் இன்னும் நிறையவுள்ளது. அவற்றைக் கற்றுக்கொள்ள  தயார்படுத்தியபடியே  ஆர்வம், தன்னம்பிக்கை, முயற்சியுடன் அவற்றைத் தேடிப் பயணிக்கின்றேன்........ !

நட்புள்ளங்களே.........

என் இச்சுய கற்றலின் முன்னேற்றத்தை அளப்போரும், விமர்சிப்போரும் நீங்களே........என் வழிப்பயணத்தின் துணையாக உங்கள் நட்பும் வாழ்த்தும் ஊக்குவிப்பும் தொடர்ந்துவர வேண்டுமென்பதே என் அவா!......................
.இன்ஷா அல்லாஹ்..!

2012/09/21

நட்பும் குழந்தைத்தனமும்


நம் வாழ்க்கை முழுமை பெற்று , நாம் மரணிப்பதற்குள் பல பருவங்களைக் கடந்து விடுகின்றோம். ஒவ்வொரு பருவங்களும் பல அநுபவங்களால் சூழப்பட்டு , வாழ்வினை வளப்படுத்த முயற்சிக்கின்றன. உறவினர், நண்பர், சமுகத்தினர், அயலார், யாரோ ஒருவர் இவ்வனுபவத்தைத் தருபவராக இருக்கலாம். நல்ல அனுபவங்கள் மனதைக் குளிர்ச்சிப்படுத்தும் அதே நேரம், தீயவை அல்லது எதிர்பாராதவை மனதை சங்கடப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன!

அனுபவங்களைத் தருவோர் பட்டியலில் முதன்மைப்படுத்தப்பட வேண்டியவர்கள் யாரென்று நினைக்கின்றீர்கள் ? நான் நினைக்கின்றேன் நண்பர்களென .......!

(சரியா.....நண்பனென்ற வார்த்தை ஆண்பாலுக்குரியதாக இருப்பினும், நான் நண்பிகளையும் இதற்குள் இணைத்தே "நண்பரெனறு ' இங்கு கதைக்கின்றேன்.

பெரும்பாலும் ஒத்த குணத்தினரே, நம் நண்பராக இணைவார்கள்.......அவர்கள் தரும் அனுபவங்கள் விசாலமானவை. நம் துன்பத்தில் தாமும் கரைந்து , சந்தோஷங்களில் நம் சிரிப்புக்களுடன் இரண்டறக் கலந்து , சாதனைகள் புரியும் போது மானசீகமாக வாழ்த்தி, தவறுகளை நம் வாழ்வில் காணும் போது சுட்டிக்காட்டித் திருத்தி . நம் மனவோரங்களில் உயர் அன்பை வெளிப்படுத்த முனைகின்ற நல்ல நட்புக்கள் வாழ்வில் கிடைப்பது சந்தோஷமே!

ஆனால் சிலர் , நண்பராக பிறர் பார்வைக்கு செயல்பட்டுக் கொண்டே , நம் முன்னேற்றத்திற்கு குழி வெட்டுபவராக இருப்பார்கள். இவர்களிடம் அன்பை எதிர்பார்க்க முடியாது. நேரில் சிரித்துக் கொண்டு , புறமுதுகில் முரண்பாடுகளை எழுதுபவர்களாக இருப்பார்கள்.....)

இப்படியானவர்களையும் நான் நிறைய சந்தித்துள்ளேன். இவர்கள் துன்பம் தந்தாலும் கூட, என் வாழ்வின் வியத்தகு முன்னேற்றத்திற்கு தமது பொறாமையுணர்வை ஏணியாக்கித் தந்துள்ளனர்.

இன்னும் சிலரோ....நண்பர்கள் தான் .....எப்போதாவது கண்டால் முகமலர்ந்து கதைப்பார்கள். காணாமல் நாம் போகும் போது அதாவது நாம் சந்திக்காத போது எதுவுமே அலட்டிக் கொள்ள மாட்டார்கள். மீண்டும் எப்போதாவது நாம் சந்திக்கும் வரை , நம்மை ஞாபகப்படுத்தமாட்டார்கள்...

இந்த மூன்று வகைக்குள்ளும் என் நட்புக்கள் உள்ளடக்கப்ட்டு நிறைய அனுபவங்களைத் தந்துள்ளனர். சிறுவயது, கட்டிளமைப் பருவம், வாலிபம், நடுத்தரப் பருவம், முதுமைப்பருவம் எனும் பருவச் சுழற்சியில் ஒவ்வொரு விதமான நட்பினர் இணைவார்கள் . இணைய வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சுவாரஸியமாகவும், அர்த்தத்துடனும் விளங்கும். (என்ன நான் சொல்லுறது சரிதானே)

அவ்வாறாக என்னுள் ஆதிக்கம் செலுத்திய ஒரு சிலரைப் பதியப் போகின்றேன் இங்கு...

எங்கள் குடும்பத்தில் எனக்கு ஆண் சகோதரர்களில்லை. படித்ததோ கட்டுப்பாடுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் !

 என் பள்ளிப்பருவ நாட்களில் தனியார் கல்வி நிறுவனங்களின் (ரியூஷன்) வாசற்படியை நான் மிதிக்கவேயில்லை.  என் நட்புக்கூட்டங்கள் யாவரும் பெண் மாணவிகளே! அதுவும் யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி மாணவிகளே என்னுடன் பழகி, நட்பு முத்திரையைப் பதித்தவர்கள். இவர்களுடன் எங்கள் வீட்டுக்கருகிலுள்ள ஒரு சில என் வயதையொத்த பொம்பிளைப் பிள்ளைகளும் நண்பிகளாக இணைந்தனர். பாடசாலை முடிவடைந்து, மாலையில் நாங்கள் விளையாடும் விளையாட்டு பள்ளிக்கூடம்தான்...நான்தான் அதிபர்......எனும் ரீதியில் அவர்களுக்கு பள்ளிக்கூடம் நடத்துவேன். இது வயது பத்துக்குள்...எனக்குத் தெரிந்து நான் மண் சோறு , கறி ஆக்கிய ஞாபகமில்லை..மாலையில் நண்பிகளை "டபிள்" ஏத்தியவாறு சைக்கிளிலில் ஊரைக் கொஞ்சம் சுற்றுவேன்...(இதெல்லாம் சின்ன வயசில பண்ணிய குறும்பான அனுபவங்கள்)

எங்கள் வீட்டுக்கு முன்னால், எங்கள் உறவுக்காரக் குடும்பம் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு ஆண்மகன்...அவன் எனக்கு சகோதரன் முறை!

அம்மகன் மீது கொண்டுள்ள அதீத பற்றால், அவனது பெற்றோர் அவனை ரொம்பக் கண்டிப்புடன் அதே நேரம் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார்கள்.. அவன் வீதியில் இறங்கி நண்பர்களுடன் விளையாடியதென்பது அபூர்வமான விடயம். அவனுக்கு யாரும் நண்பர்களாக இல்லை. ஆனால் அவனது தந்தைக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவனை என்னுடன் மட்டும் விளையாட அனுமதிப்பார். எங்கள் வீட்டிலும் அவர்கள் வீட்டுக்குப் போகத் தடையிருக்கவில்லை. எனவே எனது நண்பன் அவனாகவும், அவனின் நண்பி நானாகவும் இருந்தோம். என் வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் நண்பன் அவன்தான்..

எப்போதாவது அவன் வீட்டுக்குப் போவேன்..அவன் என்னை கிரிக்கெற் விளையாடத்தான் அழைப்பான். நாங்கள் இருவரும் கிரிக்கெற், அல்லது கள்ளன்,  பொலிஸ் என ஓடி பிடித்து விளையாடுவோம். அல்லது "நொண்டிக் கோடு". "காடா வீடா" என ஏதோ விளையாட்டுக்களை உருவாக்கி விளையாடுவோம். அந்தப் பருவம் ரொம்பச் சுவையானதும், புதுமையானதுமாக இருந்தது.

என்னை விட அவன் ஒரு வயது சிறியவனாக இருந்தாலும், பெயர் சொல்லியே அழைப்பான். சில நேரம் சண்டை பிடித்தும், பல நேரம் சிரித்துப் பேசியும் எங்கள் சிறுவயது ஞாபகங்கள் புரண்டிருக்கின்றன. இன்று அவன் ரஷ்யாவில் மருத்துவனாக (ராக) பணிபுரிகின்றான்...

தொடர்ந்து வரும் நாட்களில் இப் பதிவில் எனது ஏனைய நண்பர்களும் இடம் பிடிப்பார்கள்...

சுவையான நண்பர்களின் அனுபவம் தொடரும் !