About Me

2012/06/10

ஏக்கம்



அம்மா !

என் கண்ணீர் பட்டு
இன்னும் உலராமல்தான் இருக்கின்றீர்கள்
அந்த வார்த்தையில் !

என்  
மன டயறியைப் புரட்டுகின்றேன்
நீங்கள் 
விட்டுச் சென்ற பக்கங்கள்
இன்னும் புரட்டப்படாமல்தான் இருக்கின்றது!

எத்தனை யுகம் கடந்தாலும்
உங்கள் வெற்றிடம் நிரப்பப்படாமலே
நான் வேரூன்றிக் கிடப்பேன் 
வெறுமை பூமிக்குள்!

வாருங்கள் 
நமக்குள் மறு ஜென்மம் ஏதுமில்லை!
இருந்திருந்தால் 
பிறந்திடுவேன் உங்கள் மூச்சுக்காற்றாய்
மறுபடியும்!

ஜன்ஸி கபூர் 

என் தாயே !



அந்த 
வேரறுந்த தளிரின் காயம்
எனக்குள்ளும் இரத்தக் கசிவாய்
கசிந்து கிடக்கும்!

தாய்மையின் நிழல் தேடித் தேடியே 
தடம் பதித்த சுவடுகளில்
கண்ணீர்க் கசிவு
கதை பேசும் ஈரலிப்பாய் !

ஒவ்வொரு நொடி ஆகர்சிப்பிலும்
அன்னை முகம் தேடித் தேடியே 
சந்தோஷம் ஆவியாகிப் போகும்!

இன்முகம் காட்ட 
கிளை விட்ட பல உறவுகளிலிருந்தும்
மனமேனோ 
தொலைவாகிப் போன அன்னைக்காய்
ஆர்ப்பரிக்கும்!

நாளை 
தந்தையின் வாலிபம்
வரவேற்கும் இன்னோர் அன்னையை!
உறவுகளும் பூக்கும்
வாழ்வும் விசாலிக்கும்!

இருந்தும் 
அந்த அன்னைக்காய் - என்
ஆத்மா மட்டும் வெம்பித் துடிக்கும்!

ஜன்ஸி கபூர் 

புதிர்




உதட்டோடு உரசி நிற்கும்
முத்தங்களின் ஸ்பரிசத்தில்
உயிர் உறைந்து கிடக்கின்றது !

கனவுக்குள் பாய் விரிக்கும் - உந்தன்
நினைப்பால்......
மூச்சோரங்கள் வியர்த்துக் கிடக்கின்றது!

சூரியன் தொட்டு விட்ட- அந்த
நடு சாம புலர்வில் கூட
என் மேனி
வியர்வைக் குளியலில் உருகித் தவிக்குது!

நம் 
சந்திப்பின் வீரியத்தில்
புது உறவொன்று அன்பால்
கனிந்து காமுறுகிறது!

காதலா ....பாசமா 
இரண்டின் கலவையாய் புதிரொன்று
நம்முள் மோகித்துக் கிடக்குது

ஜன்ஸி கபூர் 



முற்றுப் பெறாத பயணம்!



தொலைத்துவிட்ட வாழ்வைத் தேடி
தொலை தூர பயணம்!
தொல்லையற்ற உன் தேசத்தின்
எல்லைச்சுவர் நானாக!

இருண்ட வான் கண்ணீரில்
நீராடும் என் வரண்ட தேகம் 
மிரண்டோடுது
விரக்திக் காடுகளைத் தேடி!

உறுமி விரட்டும் காற்றுக் கூட- என்
உயிரைப் பிழிந்து 
விரல் பதிக்கின்றது தேகத்தில்
முட்களை மெதுவாய் நட்டபடி!

இறந்த காலத்தின் இரைப்பைக்குள்
முறிந்து விழுந்த என் கனாக்கள் - மீள
தரிக்கத் துடிக்கின்றன
நிகழ்காலத்தின் வலிகளாய்!

பாதம் பதிக்கும் சுவடு கூட- என்
பயணத்தின் சொந்தமில்லை!
அயர்ந்து விழும் நிழலில் கூட
உன் ஆறுதல் ஏதுமில்லை!

வெளுத்த பகலோரங்களில்
வெம்பித்திரியும் உன் நினைவுகள் 
களவாய் குளிர் காயும் இரவினிலே
கண் விரித்துக் கிடக்கும் நீளமாய்!

தோளில் மிதக்கும் சுமையாய்
தாங்கிப்பிடியென்னை அன்பே...!
நாளை 
ஏக்கத்தின் இருளிலே முறிந்து கிடக்கும்
என் வாலிபத்தையாவது நிமிர்த்த!

வலிகளின் மூச்சிரைப்பில் - நாளை
என் நிஜங்கள் கூட இற்றுப் போகலாம்!
நீயோ 
என் ஞாபகப் பிண்டங்களின்
ஆக்ரோஷத்தில் வெந்தும் மடியலாம்!

இருந்தும் !
என் விடிகாலைப் பொழுதினில்
நீரூற்றும் உன்னால்
வேரூன்றும் அழகிய கனாக்கள்
எந் நாளும் உறவாகலாம் - அவை
நம் சொந்தமாகலாம்!

ஜன்ஸி கபூர்