About Me

2012/06/10

என்னால் முடியும் !

என்
மனத் தரை வேரூன்றலில்
தழுவிக் கிடக்கிறது
முயற்சி விழுதுகள்!

சூரிய வெம்மையின்
இம்சை அராஜகத்திலும்
துவண்டிடா மேனி. 
தடம் பதிக்கத் துடிக்கின்றது
உழைப்பின் நல்லறுவடைக்காய்!

துரோக முட்களால்
குரல்வளை நசிப்போரின்
துவம்சத்திலும் என் வாழ்வு
தளிர் விட துடிக்கும் !

என்னால் முடியும் 
தன்னம்பிக்கையின் விசிறலுக்குள்
தடையின்றி நனைந்தே தான்
வாழ்வைச் செதுக்க முடியும்
வனப்பில் நனைந்தே - என்றும்
வானம் தொடவும் முடியும்!

ஜன்ஸி கபூர் 

பிரிவலை




என் சுவாசக் காற்றின் மூச்சிரைப்பில்
உன் 
மௌனத்தின் அதிர்வுகள்
பலமாய் அலைகின்றது!

காலச்சுனாமியின் காவால்
காணாமல் போனது - நம்
கனவுகளா உயிர்த்துடிப்பா!

இருந்தும் 

நம்முள் முகிழ்க்கும் நேசம் கூட
தீப்பிழம்பின் ரேகைக்குள்
புது யுகம் படைக்கின்றது!

ஜன்ஸி கபூர் 

புயலாக மாறும் பூவை


சயனைட் தேடுகின்றேன்
என்னுயிர் அறுக்கவல்ல.........
அக்கிரமங்களால் தீ வார்க்கும்- அந்தக்
கயவர்களைக் கருக்கிடவே!

நேசத்தை வார்க்கும் நெஞ்சில்
நெருஞ்சியைப் பதியமிடுவர் வஞ்சகர்!
கேடியாய் பிறர் கோடி பிடுங்கி
நாடியுமறுப்பர் உயிர் வதைக்க !

ஓர் குற்றம் செய்யவில்லை
பாச உடன்படிக்கை மீறவில்லை
வார்த்தைக் கணை தொடுக்கவில்லை
இருந்தும் 
அவலச் சிறைக்குள் அடைக்கின்றனர்
குற்றவாளியென சிதைக்கின்றனர்!

இடியோசைகளின் பயிற்சிக் களம்
என் மனமாம் 
மேகங்களின் தேரோட்டம் என் விழியாம் 
அஞ்சாத சமுத்திரம் என் வாழ்வாம் 
சூரியப் புயல் என் சொல்லாம் 
பிரகடனம் செய்கின்றேனென்னை
எதிராளி எட்டடி தள்ளி நிற்க!

மண்ணிலென் இருப்பறுக்க
பண்பற்றோர் வேரறுக்கையில் 
புயலாக மாறும் பூவையென் - ரவைகள்
ரகஸியமாய் வெளிநடப்புச் செய்கின்றன!


நீயே என் உயிராகி !


உணர்வுகளால் நெய்யப்பட்ட - என்
மனப்பாறையில்
உருகிக் கொண்டிருக்கின்றது
உன் முகம்!

சுகம் நனைக்கும் - உன்
விழி நெருடலில்
மயங்கிக் கிடக்கின்றது
என் ஆத்மா!

உன் வசீகரப் புன்னகையின்
சிதறல்களில் 
பொறுக்கியெடுக்கின்றேன் - என்
சந்தோஷத் தேடலை!

நண்பா- நீயேயென்
ஞாபகத் தெருக்களில்
காவலனாய்
பல கணங்களில் !

ஜன்ஸி கபூர்