About Me

2012/06/11

அன்னைக்கு விண்ணப்பம்!


தொப்புள் நாண் இணைப்பேற்றி
கருத்தோப்புக்குள் நிழலிட்ட அன்னையே!
புண்ணாகி மென்னெஞ்சும் வலிக்குதம்மா
பிரிவனலில் மழலை மனம் துடிக்குதம்மா!

கடல் கடந்து உறவும் மறந்து- நீங்கள்
உழைக்கத்தான் சென்றீர்கள் - இருந்தும்
என் உணர்வுக்குள்ளும் ஊனம் நுழைத்து
ஊமையாகிச் சென்றீர்கள்!

காலடிச் சுவர்க்கம் நானும் காண - உங்கள்
காலடி தேடித் தவிக்கின்றேன் !
பல திங்கள் தான் கரைந்தும்- நீங்கள்
சிலையாகிக் கிடக்கின்றீர் எனை மறந்து!

கருவிலே எனையழித்தால் - இந்த
இடரேதும் இல்லையம்மா - எனை
விடமான வாழ்வுக்குள் விட்டுச் சென்றீர்
நானும் அனாதை தானம்மா!

சம்பிரதாயங்கள் நீங்கள் மறந்ததால்
சரித்திரமானேன் நானும் சகதியில்.....
என் மழலை கூடத் தொல்லையோ
 மன்றாடுகின்றேன் தாயே உங்களிடம்!

ஜன்ஸி கபூர் 



பெப்ரவரி 14


இதழ்கள் விரிக்கும் சப்தத்தில்
சிலிர்த்துக் கிடக்கும்
மொத்த அன்பும்!

உறக்கம் சுமந்த
கனவுச் சேமிப்பில் 
கல்யாணக் கனாக்கள்
அப்பிக் கிடக்கும்!

குறும்புச் சிமிட்டல்களும்
சில்மிஷச் சண்டைகளும்
கலையாகி
கவிபாடும்
காதல் கீதங்களாய்!

புன்னகை தேசத்தின் நெருடலில்
இடமாறும்
சிவப்பு ரோஜாக்கள் 
நாணிக் கிடக்கும்!

காதலர் தின முடிவுரையாய்
ஈர் மனங்களும்
சிறகடிக்கும் தம்
ஏக்கவெளியில் நிசப்தமாய்!

ஜன்ஸி கபூர் 

காதலும் அவஸ்தையும் !


காதலித்துப் பார் !

உன் போனில் சார்ஜ் குறையும்
ரீலோட் பண்ணிப் பண்ணியே
மணிபர்ஸ் எடை குறையும்!
காதலித்துப் பார் !

காதலித்துப்பார் 
புவிக்கும் விண்ணுக்குமிடையில்
சிறகின்றியே - அடிக்கடி நீ
பறப்பாய் அந்தரத்தில் !

உன்னவள் விரல் நிறைக்கவே
உன் சுண்டு விரல் மோதிரம் கூட
பறக்கும் அடகுக் கடைக்குள்!
அடிக்கடி காதலித்துப் பார்!

நீ சொல்லும் பொய்களெல்லாம்- உன்
இருதயத்துள் இறங்கும் பீரங்கியாய்!
பிள்ளை மட்டுமல்ல புல்லுக்கூடக்
காறித்துப்பும் 
காதலித்துப்பார்!

அவளுக்காய் நீ பிடிக்கும் காக்காக்கள் 
 தெருவோரமெங்கும் உன்னை மிரட்டும்!
உன் வருமானம் இறங்குமுகமாகும்
காதலித்துப்பார்!

பெண் தேவதைகளுக்காக புன்னகைக்கும்
உன் உதடுகள் சீல் வைக்கப்படும்!
பிறரை ரசிக்கும் உன் பார்வைகளால்
உன் கண் விழி கூட நோண்டப்படும் 
காதலித்துப்பார் !

உன் வார்த்தைக் கெல்லாம் அகராதி
தேடுவாள்- உன்
அன்பின் எடை குறைந்தாலோ
அட்டகாஷமாய் முறைத்துச் சிணுங்குவாள் 
காதலித்துப் பார்!

ஆண்களே .!
காதல் தேசம் அழகானது!!
அவஸ்தையானது !!!
அந்த அன்பின் அழகுக்குள்
தொலைந்து போகும் வாழ்வில்
மறப்பீர்கள் உம்மை 

 காதலித்துப் பாரும் !
கனவுலக அழகில் வீழ்ந்து கிடக்க!

ஜன்ஸி கபூர் 

ஏட்டுக்கல்வி



கல்விச் சாலையிலும்
கறையான் சேஷ்டைகளா 

அக்கினி வேள்விக்குள்
அவதாரமெடுக்கும் இளம் பிறைகள் 
கண்ணீரால் தினம்
தாகம் தணிக்கின்றனர்!

புத்தகங்களில் மட்டும் வாழ்வைத்
தொலைக்கும் - வெறும்
புத்தகப் புழுக்களாய் நெளிவோரின்
புளாங்கிதம்
அனலுக்குள் சாம்பராகும்
ஏமாற்றங்களே!

மனப்பாடங்களை ஒப்புவித்து
அனுபவங்களை நசுக்கும் - இவர்கள்
வாழ்வின் தோல்விகளை மட்டுமே
சேகரிக்கத் துடிக்கும் சீர்திருத்தவாதிகள்!

தம் கனவுகளைத் தொலைத்துவிட்டு
கானலுக்குள் மெய் தேடுமிந்த
இளசுகளின் விமர்சனத்தில் 
கற்றலின் கற்பும் வெந்து போகும்
அடிக்கடி!



ஓ !
யாரைக் குற்றம் சொல்வது 
கற்பவனையா !
கற்பிப்பவனையா!

ஜன்ஸி கபூர்