About Me

2012/06/11

பயணம் !



இயந்திர .......
ஆர்முடுகலின் கிசுகிசுப்பில்
புகை மூட்டங்கள்
பகையாகிப் போகின்றன - எம்
சுவாசத்துள்!

சாலை மலர்களை நசுக்கி
உரப்போடு.........
உரசி நிற்கிறது
எமதூர் பேரூந்து!

கடிகார அலைவுகளில்
அலைக்கழியும் எம் அவஸ்தை.......
இறக்கத்தின்
இடைத்தூரத்தில்
கருத்தூன்றிக் கிடக்கின்றது!

தரிசன குசலிப்புக்களில்
சில............
மனித உறவுகள்
புன்னகைகளை மௌனமாக
பரிமாற்றுகின்றனர் !

கர்ப்பிணிகள்.....
முதியோர்........
கரிசனத்தில் இளசுகள்- தம்
இருக்கைகளை
இடமாற்றும் தியாகிகளாய்
புதுமுகம் காட்டுகின்றனர்!

இறக்கங்களின் குதூகலத்தில் கூட
கிறங்காத - பல
மனிதச் சுமைகள்
மந்திரிக்கப்பட்டு..........
நிரம்பி வழிகின்றன
பேரூந்தின் உள்ளீட்டில்!

சில்லறை பொறுக்கிகள்
இச்சை ஸ்பரிசத்திற்காய் .........
வெட்கமிழந்து
உரசத் துடிக்கின்றன
பெண்மை நிழல்களோடு!

வியர்வைச் சலவையில்
துயராகும் தேகம்.....
விடுதலைக்காய்
புறுபுறுப்போடு
ஏங்கிக் கிடக்கின்றன!

இத்தனை சீரழிவின் மத்தியில்.....
எம் பொழுதின் பல கணங்கள்
பொய்மை அரிதாரங்களில்
பொசுங்கிக் கிடக்கின்றது!

இருந்தும் - எம்
மன இருப்பின் எண்ணங்களோ
சுதந்திரம் தேடி.........
வெளிறிக் கிடக்கின்றது
கையேந்தும் பிச்சைக்காரனாய் !



தேசத்தின் மகுடம்



தேசத்தின் மகுடம்........
நெருஞ்சியின் சகவாசம் !

பயணக்கைதிகளாய் பல மணி- நாம்
பாதையோரம் வேரூன்றிக் கிடக்க.........
கண்காட்சி இன்பங்கள் யாவும்
கானலாய் வடிந்தோடும்!

வாகன நெரிசல்களால்..........
கோர தாண்டவமாடும் தெருக்கள்
பரவசப்படும் மக்கள் அவலம் கண்டு!

மகுடம் சூடும் புனித தேசம்
நள்ளிரவில் புன்னகைக்கும்
மக்களை மாக்களாக்கி!

வீதியோரக் காவலர்களென
தற்காலிக நியமனத்தில் நாம்
அங்கலாயிப்போம் நள்ளிரவில்!

பிரமிப்பூட்டும் மனித உழைப்புக்கள்
நிசப்த பொழுதுகளில்...........
வீணாகிக் கிடக்கும் வீதியின் விதியால்!

நாயின் குறட்டையில்........
மனித உறக்கம் தொலைந்து போகும்!
சேயின் பசி மயக்கத்தில்
தாய்மை பதறிக் கொள்ளும்!

கண்காட்சி அற்புதங்கள் - சில
அற்பர்களால்..........
நடுவீதியில் ஆவியாகிப் போக
அவலங்களின் முகத்தோடு நள்ளிரவு விடியும்!

மனித முணுமுணுப்புக்களும்....
சில சத்தியப்பிரமாணங்களும்..........
'சீல்' வைக்கும் மீள்பாராசையை!

'தயட்ட கிருள' இன்பம்...........
சன நெரிசலில் நசிந்து போக
நெஞ்சினில் வந்தமரும் அவலம்
மெல்ல உசிரை நசித்துக் கொல்லும்!



முதிர்கன்னி


வாழ்க்கை கலண்டரின் 
கிழிக்கப்பட்ட பக்கங்களாய் - எம்
இளமை எடை குறைந்திருக்கும்!

ரோஜாவின் வாசத்தில்
விசுவாசங் கண்ட தேகம்
இப்போ 
முட்களின் நிழலைத் தொட்டுச் செல்லும்!

பட்ட மரங்களின் மொட்டுக்களாய் 
வெட்ட வெளிகளை மட்டும்
எட்டிப் பார்க்கும் 
வாடாத காகிதப் பூக்கள் நாங்கள் !

இப் பிரபஞ்ச மாக்களின்
விமர்சன தாக்கம் கண்டு - எம்
கண்ணாடி விம்பங்கள் கூட அழும்
இரசம் கரைந்தோட !

ஜன்ஸி கபூர் 

மலரே !


மலரே!

உன் தனிமைக்குள் விரல் நீட்டும் என்னோடு
சினக்காதே!
இன்ப வாசிப்புக்களை நானும் நுகர்ந்திட
வந்தேன் மெல்ல 
உன்னருகில்!

வா மலரே!
இயற்கை தூரிகை வரையும்
ஓவியத்துள் நாமும் 
வண்ணங்களாகக் கிறங்கிக் கிடக்கலாம்
மகிழ்வாக!

வா... வா !
உன் நறுமணத்தை வடித்தெத்தே 
நிரப்பிடலாம் என் எண்ணத்துள்!
என் முத்தங்களின் இதழ்களால்
ஒற்றிடலாம் உன் அமுதத்தை!

வா.....வா !
தென்றலை பிழிந்தெடுத்தே 
நனைக்கலாம் உன் மென்னிதழ்களை
மெதுவாக நாள்தோறும்!

ரம்மியங்களை என்னுள் செதுக்கவே 
வந்தேன் மெதுவாய் நானும் உன்னருகே 
வா வா மென் மலரே என்னருகே!
வசந்த நீரோட்டத்தில் நாமும் இணைந்திடவே!


ஜன்ஸி கபூர்