2012/07/10
சிப்பிக்குள் முத்து!
என்.........
வாழ்க்கைச் சாலையில்
அவன்............
பயணிப்பெல்லா மிப்போது
முகங்காட்டுகின்றன நேசச் சுவடுகளாய் !
விண் சுற்றும் மேகங்களில்............
பவ்வியமாய் தனையொளித்தே
எட்டிப் பார்ப்பவன்............
நனைந்தே கிடக்கின்றான்
மழைத்தூறல்களாய்.............
என் வீட்டுமுற்றங்களில்!
தோற்றுப் போகும் வாழ்விலும்
நேற்று முளைத்த காளானாய்- என்
மனப்பூமி வெம்மையெல்லாம்
உறிஞசியவனாய்...........
விட்டுச் செல்கின்றான் தன்
சரிதங்களை!
தரிசனங்கள் மறுக்கப்பட்ட
எம் பக்கங்களின்...................
முன்னுரையாய்
வீழ்ந்து கிடக்கின்றது
அவன் முகவரி!
அன்புத் துடிப்போடு...........
அலையு மெங்கள் நாட்காட்டியில்.........
வலைப்பின்னலின் வருடல்
தகவலாகின்றன தினமும் எங்கள்
வாசிப்புக்களைச் சுமந்த படி!
அவன் புன்னகைச் சாறைப்
பிழிந்தெடுத்தே.............
என் தோட்டத்துப் பூக்களெல்லாம்
சாயம் பூசிக் கொள்கின்றன
தம் மழகைப் பறைசாட்ட!
காற்றின் மௌனம்
தொலைக்கும் அவன் குரலலைகள்.......
நினைவகத்தின் நரம்புகளில்
நசிந்து கிடக்கின்றன
நினைவுகளாய் !
.
"அக்கா"வென்பான் அடிக்கடி.........
அவன் பெருமிதம் கண்டு
ஆகாயம் குடைபிடிக்க
சமுத்திரங்கள் தரைக்குள் ஒடுங்கி
பாசவேலிக்குள் தனை
முடிந்து கொள்ளும்!
கனவுகள் புல்லரித்துக் கிடக்க
விரல் தருகின்றான்- என்
கன்னப் பருக்களாய் வீழ்ந்து கிடக்கும்
கண்ணீர் கழற்றி
தன்னுள் ஒற்றிக்கொள்ளவே!
நம்பிக்கையிருக்கின்றது!
நாளை..............
என் மூச்சின் வேரறுக்கப்பட்டாலும்
கண்ணீரஞ்சலி தரும்
பாச விழிகளாய் அவன்................
ஊடுறுவிக் கிடப்பான் ஆத்ம சரீரத்துள்!
2012/07/06
கண்ணீர் பேசும் ஞாபகங்கள்!
வாழ்க்கை அழகானதுதான். ஆனால் அந்த அழகு, அந்தஸ்து, ஆரோக்கியம், அமைதி அனைத்துமே நிலையற்ற இவ்வுலகின் வெறும் ஞாபக எச்சங்களாகவே நம்முள் எட்டிப்பார்க்கின்றன..
புளாங்கித வருடலுடன் விடிந்திருக்கின்ற இன்றைய பொழுதின் ஒவ்வொரு கீறலிலும் கனத்த சுமையாய் சோகமொன்று மெலிதாய் தாக்க கண்கள் பனிக்கின்றன...
சில ஞாபகங்கள் சில்லறையாய் என்னுள் வீழ பொறுக்கியெடுக்கின்றேன் அவற்றை...அந்த ஞாபகப் பரப்புக்களின் எல்லைச் சுவர்களில் அந்த முகம் புன்னகைக் கசிவுகளுடன் என்னை எட்டிப் பார்க்கின்றது.........
ஏனோ என்னாலின்று இக்கட்டுரையை எழுதமுடியாதபடி மன அழுத்தம் இழுத்துப்பிடிக்க, அந்தத் தடையையும் மீறி அவருக்காக சில வரிகள் என் இணைய வலைப்பூவிலின்று கண்ணீருடன் பயணிக்கின்றது!
அது.........
அவர்.......
ஜனாப் . எச்.எம்.எம்.அப்துல் வஹாப் மௌலவி ஆசிரியர்
இருப்பிடம் - காத்தான்குடி
என்னுடன் கடமையாற்றிய சக ஆசிரியர், இனிய சகோதரன், தோழமைமிகு நண்பர், நலன்விரும்பி , என் தந்தையின் மதிப்பிற்குமுரிய குடும்ப நண்பர் என என்னுள் பன்முகம் காட்டிச் சென்றவர் இவர்..
நாங்கள் இருவரும் ஒரே காலத்தில் ஆசிரியப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்பதால் ஓரே ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டு எமது தொழில் ரீதியிலான விடயங்கள் பலவற்றை அடிக்கடி பகிர்ந்து கொண்டோம். இவர் என்னை விட பல வருடங்கள் வயதில் மூத்தவரென்றாலும் கூட, அந்த வேறுபாடுகளையெல்லாம் ஓரந் தள்ளி விட்டு நல்ல நண்பராக என்னுடன் பழகினார். அவர் அழகான புன்னகையே அவர் நட்பு தேசத்தின் முகவுரையாக எல்லோருக்கும் மனதைத் தொட்டுச் சென்றது...
புதிய புதிய இஸ்லாமிய கீதங்கள் புது வரவு காட்டுகையில் "புளூ டூத் " வழியாக அவர் பதிவுகள் என் கைபேசிக்குள் இடமாறும். இன்று அந்தப் பதிவுகளெல்லாம் என் கைபேசிக்குள் சேமிப்பாகி அவரை ஞாபகப்படுத்துகின்றது.
நாங்கள் இருவரும் வகுப்பாசிரியராக கடமையாற்றும் போது எங்கள் வகுப்புக்கள் பக்கத்திலேயே அமைந்திருக்கும். அவருக்கும் எனக்கும் பொதுப்படையான சில விடயங்களுண்டு. எங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்படும் வகுப்புக்களை இயன்றளவு அழகுபடுத்துவோம். 2005 ம் வருடம் எமது பாடசாலையில் "5S" பேணலுக்கான போட்டி நடைபெற்ற போது அவர் வகுப்பும் (தரம் 11A) , எனது வகுப்பும் (தரம் 11 B) வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது இன்றும் மறக்க முடியாத ஞாபகங்களே!
அவர் மௌலவி ஆசிரியராக இருந்ததால் பல மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வேன். அவ்வாறே அவரும் தொழிலுடன் தொடர்புபட்ட சந்தேகங்களை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். ஒருவருக்கொருவர் நல்ல நட்பு முகம் காட்டினோம்.
ஒழுக்கம் மிகு விழுமியக் கல்வியையூட்டும் இஸ்லாம் பாடத்தினை அழகாக , ஆழமாக அவர் மாணவர்களுக்கு கற்பிப்பார். ஆனால் மறுதலையாக கற்பித்தலில் பின்னடையும், நன்னெறிகளில் மூர்க்கத்தனம் காட்டும் மாணவர்களிடம் அவர் கடுமையான போக்கையே காட்டுவார். அவரின் இந்தக் கண்டிப்பான போக்கே பாடசாலையில் பல மாணவர்களின் குழப்படி நிலையை கட்டுப்படுத்தியிருந்தது..
" வஹாப் சேர்"
என்றதும் பயந்து நடுங்கும் பல முரட்டுத்தனமான மாணவர்களை நான் கண்டிருக்கின்றேன். பாட ஆசிரியர்களிடம் முரண்டுபிடிக்கும் மாணவர்கள் அவ்வாசிரியர்களால் இவரிடமே ஒப்படைக்கப்படுவார்கள். விசாரணையும் ஆலோசனையும் வழங்கும் நீதிமன்றமாக பல வருடங்கள் அவர் எம் பாடசாலையில் நிலையூன்றியிருந்தார்.
அவ்வாறே பல வருடங்கள் "மாணவ ஆலோசனையும் வழிகாட்டலும்" சேவையும் அவர் மூலம் பெருமிதமும் பயனுமாற்றியது. எமது பாடசாலை மாணவர்களின் கோலாட்டப் பயிற்சி அவருக்கிருந்த இலக்கிய ஈடுபாட்டின் சிறப்பான ஓரடையாளமாகும்!
எமது பாடசாலையின் பௌதிக வள வளர்ச்சியின் ஏறுமுகம் வஹாப் ஆசிரியரின் கரங்களிலேயே தங்கியிருந்தது. பல பிரமுகர்களைச் சந்தித்து பாடசாலையின் பல வளத் தேவைகளை நிறைவேற்றினார். பாடசாலைக் கட்டிட அலங்கரிப்பு வேலைகள், ஆரம்ப வகுப்பு மாணவர்களின் நூலகம், ஒலிபெருக்கிச் சாதனங்களின் செயற்படுத்துகை என்பன வஹாப் ஆசிரியரை ஞாபகமூட்டுவன.
அவர் பேச்சாற்றலைக் கண்டு நான் வியக்காத நாட்களில்லை. எந்த தலைப்பைக் கொடுத்தாலும் மார்க்க நெறியின் வழிப்படுத்தலுடன் கூடிய உரையை உடனே ஆற்றுவார். எமதூர் பள்ளிவாசலின் பல ஜூம்- ஆ குத்பா பிரசங்கங்கள் அவர் சொற்பொழிவுகளால் மன நிறைவடைந்துள்ளது.
தன் குடும்பத்தை விட தான் சார்ந்திருக்கும் தொழிலை, கடமையை, சமூகத்தை நேசித்தார் என்பது அவரைச் சூழ்ந்திருப்போர் கண்டறிந்த உண்மை.
அந்த நேசிப்புத் தந்த கௌரவமாய் எமது பிரதேசத்தில் நடைபெறும் பல அரச விழாவிற்கு அவர் கௌரவ மதப் பிரமுகராக அழைக்கப்பட்டிருந்தார்."அரேபி தேச" குடிமகனாய் அந்த ஆடையில் அழகு தரும் இவரைக் கண்டு நாமும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றோம்.
அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்ற வஹாப் சேர் இஸ்லாமிய மார்க்கத்தின் பால் தீவிர பற்றுள்ளவர். வருடந்தோறும் எமது பிரதேச மக்களின் ஹஜ் , உம்ரா பயணத்தின் போது வழிகாட்டியாக அவரே செயற்பட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
தன் இளமைக்காலத்தையெல்லாம் அநுராதபுர மண்ணில் கழித்து விட்டு, இவ்வருட ஜனவரி மாதம் தன்னூரான காத்தான்குடிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அவரின் சேவையைக் கௌரவப் படுத்தி எம் பிரதேசமே தம் வேறுபாடுகளை மறந்து அவருக்கு பெருவிழா எடுத்து கௌரவித்து வழியனுப்பி வைத்தது.....
அந்த நண்பரின் ஞாபகங்கள் எம்மை விட்டகலமுன்னரே........
கடந்த மாதம் அவர் திடீர் சுகவீனமுற்றுள்ளார் எனும் தகவல் நெஞ்சை அழுத்தியது. இத்தனை வருடங்களாக சுயநலம் பாராமல் சேவையாற்றிய அந் நல்லவரை "புற்றுநோய்" விட்டுவைக்கவில்லை என்பதை இந்திய மருத்துவனையொன்று நிரூபிக்க, புற்றுநோய் வேரூன்றலின் ஆழமான தாக்கத்தினால் "மஹரகம" வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளியானார். உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையிலும் அவர் தன் புன்னகையை, தன்னம்பிக்கையை இழக்கவில்லை...
மரணிப்பதற்கு சில நாட்களின் முன், அவர் மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது கைபேசியழைப்பெடுத்துப் பேசினேன். குரலில் தன் சோர்வை வெளிப்படுத்தாமலிருக்க அவர் முயன்றாலும், என்னால் வேதனையை தடுக்க முடியவில்லை..
சென்ற 2012.07.01 ந் திகதி வஹாப் மௌலவி அவர்கள் இவ்வுலக வாழ்விலிருந்து நீத்தார்.....
கண்முன்னால் நிறைந்திருக்கும் அந்த உருவம், ........
இனிமையான பேச்சுக்கள் , ..........
அந்தப் புன்னகை..............
அடிக்கடி சுகம் விசாரிக்கும் பண்பு..............
இவை இன்னும் என்னுள் ஆக்கிரமிக்க, அவர் பிரிவை மறைவை நம்ப முடியாதவளாய் நான் விக்கித்து நிற்கின்றேன் !
தன் தொழில் நிமித்தம் பல வருடங்களாக அவரைப் பிரிந்திருந்த அவர் மனைவி, பிள்ளைகள் மீண்டும் அவருடன் வாழ இணைகையில் மரணம் அவரைப் பிரித்தது துர்ப்பாக்கியமே!
எல்லோருக்கும் மரணமுண்டு மறுப்பதற்கில்லை. இருந்தும் இழப்புக்கள் தரும் வேதனையினை கட்டுப்படுத்தும் வல்லமையற்றவர்களாய் நாம் கண்ணீருக்குள் நம்மைத் தொலைத்து நிற்கின்றோம் என்பதே மறுக்க முடியாத உண்மை.
அவரின் இம்மை வாழ்வின் முற்றுப்புள்ளியைத் தொடர்ந்து, மறுமையின் வாசல்கள் திறந்திருக்கும் இந்நேரம்......
"இன்னாளில்லாஹி வஇன்னா இலஹிராஜிஊன்"
- Ms. Jancy Caffoor -
2012/07/05
வருடும் நினைவு!
மயிலிறகாய் மெல்ல மெல்ல..........
அவன் நினைவுகளுனைக் கிள்ளக் கிள்ள
பஞ்சனையுன் மேனியில்.......
காதலின் ஸ்பரிசங்கள் மெலிதாய் வீழ்ந்திடற
மனசோ இதமாய்.......
பனித்துளிகளுடன் மோதித் தவிக்க
இந்த இரவின் வெப்பத்திலும்......
ஏக்கங்களுனைத் துகிலுரிக்க
கனவுகளின் முகப்பாய்
முகம் பார்த்துச் செல்லும்............
அவனேயுன் கவிதை யினி.....
ஜன்ஸி கபூர்
மனசு

பொழுதின் புலர்வினில்
இருள் துடைக்கும் சூரியனாய் நீ!
தனி வழிப்பயணத்தில் - என்
கரந்தொடுக்கும் வழித்துணையாய் நீ!
படிக்க அமர்கையில் - வந்தமரும்
மனப்பாட வரிகளாய் நீ !
என் கைபேசி அழைப்பினில்
ஒலிக்கும் குரலாய் நீ !
கண்ணாடி முன்னின்றால்
கண்ணடிக்கும் விம்பமாய் நீ!
இப்போதெல்லாம் நான்
உன் விதி வழி நகர்வில் தான்!
இத்தனைக்கும் நீ.........
என் மனசு !
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Posts (Atom)