About Me

2021/04/13

வாசிப்பை நேசிப்போம்


 
மானிட வாழ்வின் அறியாமை எனும் இருளினை அகற்றிட கிடைக்கின்ற அற்புத ஒளிச்சுடரே வாசிப்பாகும். வாசிப்பின் மூலமாக நமது பகுத்தறிவும் ஆற்றலும் வளர்கின்றது. சிறந்த வாழ்வியலைக் கற்றுக் கொள்வதற்கான பாதைகளும் திறக்கின்றன. அறிவை வளர்ப்பதற்கான கட்டமைப்பாக கல்வி காணப்படுகின்றது. அதனாற்றான் "இளமையிற்கல்வி சிலையிலெழுத்து" என பழமொழி வாயிலாக அனுபவம் தொகுக்கப்பட்டுள்ளது.

"ஓதுவீராக" என்பது புனித அல்குர்ஆன் மூலம் இறக்கப்பட்ட முதல் வசனமாகக் காணப்படுகின்றது. "ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது" என்று பேரறிஞர் விக்டர் ஹியுகோ கூறியுள்ளார். "ஓதுவது ஒழியேல்' என்பது ஔவையின் வாக்கு.

நமக்குள் எழுகின்ற தேடலின் ஆர்வத்திற்கான ஊக்க மாத்திரையாக இவ்வாசிப்பு மிளிர்கின்றது. புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் என்பார்கள். ஒவ்வொரு புத்தகங்களின் வரிகளிலும் காணப்படும் நல்ல விடயங்களைக் கருத்தூன்றி வாசிக்கையில் நமது சிந்தனையில் ஏற்படுகின்ற மாற்றம் நடத்தைகளிலும் பிரதிபலிக்கச் செய்கின்றது.

உணர்வுகளின் வெளிப்பாடுகளாக வெளிச்சமிடுகின்ற கருத்துக்களின்பால் நாம் ஈர்க்கப்படுகையில் நமது செயல்களிலும் நல்ல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் தற்போது இணையத்தில் மூழ்கியுள்ளோம். பெரும்பாலும் இளைய தலைமுறையினர் நூல்களை வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குவதில்லை. பொழுதுகளை திட்டமிட்டுச் செலவளிப்பதில்லை. எனவேதான் அருகிவருகின்ற வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் துளிர்விடச் செய்கின்ற பொறுப்பு நம் எல்லோருக்கும் காணப்படுகின்றது.
நாம் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் வாசிப்பதற்கென ஒதுக்க வேண்டும். மனமொன்றி வாசிக்கும்போதுதான் நம் சிந்தனைக்குரிய ஆழ்மனம் தூண்டப்படுகின்றது. தினமும் வாசிக்கையில் நம்மை வசீகரிக்கின்ற வரிகளை குறிப்பெடுத்து வைக்கின்றபோது நம்மையுமறியாமல் நம் நினைவுப் புலத்தில் பல விடயங்கள் சேமிக்கப்படுகின்றன.
புத்தகங்களின்பால் ஆர்வம் ஏற்படுகின்றபோதே வாசிக்க முடிகின்றது. நம் இரசனைக்கேற்ப நூல்களைத் தெரிவு செய்ய முடிகிறது. அதிகமாக வாசிக்கின்றபோது சொற்களை சரியாக எழுதவும் கற்றுக் கொள்ள முடிகிறது. வாசிப்புப் பழக்கமானது அறிவைத் திரட்டவும் மகிழ்வோடு பொழுதுகளைக் கழிக்கவும் நம்மைச் சூழக் காணப்படுகின்ற புத்துலகோடு இசைந்து வாழவும் பயிற்றுவிக்கின்றது. சிறிய வயதிலிருந்தே வாசிப்பை நேசித்து நம் அறிவை விசாலிக்கச் செய்வோம்.

ஜன்ஸி கபூர்




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!