About Me

2012/07/23

உன்னில் நான் !


வேடிக்கையான நம் வார்த்தைகள்
வேள்வியானதில்.........
முக்காடிட்ட மனசோ
மூச்சு மறந்து போனது!

உன் எண்ணப்பதிவுகள் - என்
முகப்பேட்டில்
வெறுமையாய் முறைத்துக் கிடக்க...........
மனமோ..........
கண்ணீர்ச்சுனாமியில்
காவு கொள்ளப்பட்டது!

உன் திசை தேடித் தேடியே
உருக்குலைந்த என் நிழற்சுவடுகள்........
இளைப்பாற மனமின்றி
இன்னும் தவமிருக்கின்றது
உனக்காக!

அறிவாயா............
நீயில்லாப் பொழுதுகளில்
மெளனித்துக் கிடக்கும் என்
வார்த்தைகள்............
தத்தெடுத்துக் கிடக்கின்றன
வெறுமையை ............மானசீகமாய்!

என் ஞாபகச் செண்டில்
முடிந்து வைத்தவுன்னை...........
மடி சுமந்து காக்கின்றேன்
உன் தோழியாய் உருமாறி!

எனக்கான உன் கவிவிரிப்புக்கள்
தஞ்சமாய் என்னுள் சுருண்டிட...........
கண்டு கொண்டேன் - உன்
குறும்புவிழியில் என்னையே!

நீர்க்குமிழி வாழ்வுக்குள்ளும்
பெரும் வேராய் பற்றிக்கொண்டாய்.........
உன் வார்த்தைகளில் காதல் பூசி
நெஞ்சுக்குள்ளும் குந்திக்கொண்டாய்!

என் இரசச்சுவர் பிம்பமதில்
உன்னையே வார்த்து நின்றாய்..........
என் புன்னகை தேசத்திலும்
நீயே அரணும் அமைத்துக் கொண்டாய்!

சேகரித்துக் கிடக்குமுன் ஞாபகங்கள்
என் தெருக்களில்- உன்
முகந்தேடி அலைவதிலேயே
இப்பொழுதெல்லாம்
காலம் கழிக்கின்றது!

உன் நினைவுப்படுக்கையில்
புரளும் என் மனசோரம்.............
சீண்டலின் முழுவுருவாய்
முகந் தந்தேதான்
தொலைவாகிப் போனாய்!

உன் வார்த்தைகளெல்லாம்
அதிர்வுகளாகி என்னுள் பேரம் பேச.........
நீ மட்டும் ஏனடா
தனித்துப் போனாய்!

நீயுன்றி மயானமாகும்
என் தேசம் மெய்ப்பட...............
உன் நேசம் தா..............
உனக்காக நான் வாழ
என்னுள் நீ வாழ!


2012/07/22

நிஜங்களின் வலி!


காற்றின் கிசுகிசுப்புக்களால்
காணாமல் போன கனாக்கள் 
மனப்பாறைக்குள்
ஏக்கமாய் விக்கலெடுக்கும்!

விழி முடிச்சுக்களில் 
விழாமல் நழுவும் உறக்கத்திற்காய் 
நடுசாமம் இன்னும்
காத்துக்கிடக்கும்!

உன் நினைவுகளின்
எதிரொலிப்பால் - என்
சுவாசிப்பினுள்ளுமுன் முகம்
சுவடு பதிக்கும்!

பாலைவன நீரூற்றாய் 
பாசம் தருமுன் னருகாமைக்காய்
என் ஆத்மாவும்
காத்துக்கிடக்கும்!

என் கிராம விழுதுகளில் 
பதிவான
உன் பெயரை உச்சரிக்க
வார்த்தைகள் தவம் கிடக்கும்!

பெருமூச்சின்
அகாராதிக்குள் அப்பிக்கிடக்கும்
உன்
பிரிவின் ரணக்கூடலில்
நிமிஷங்கள்
வெந்து மடியும்!

நிலாக்கசிவின் சிதறல்களில்
உன் சிரிப்பின் சிந்தல் 
வேராகி - என்
ஞாபகப்பூமியைப் பற்றிப்பிடிக்கும்!

தொலைந்து போன
வசந்தங்களின் விசாரிப்புக்களாய் 
நாட்பூக்கள் நாடி தளர்ந்து
காத்திருக்கும் சுமையுடன்!

என் விசாரிப்புக்களால்- உன்
உயிர்ப்பூக்களில்
மருதாணிச்சாறு நிரம்பிக்
கிடக்கும் வாஞ்சையோடு!

இத்தனைக்கும் நீயோ 
யதார்த்தங்களின் நச்சரிப்பால் 
வேற்றவனாய் என்னை வேவு பார்க்க
நானோ 
நாடியறுத்து கிடக்கின்றேன்
சோக வயலோரங்களில்!



விடியல் பொழுதில்



சூரியச்சிறகுகளில்
கரி தடவி...........
மௌனித்துப் போன வானம்
சேவலின் ஸ்பரிசத்தில்
சிவந்து போகின்றது!

காற்றின் சீண்டலில்
வெட்கித்துப் போன பூக்கள்..........
மயக்கத்தோடு
மௌனித்துக்கிடக்கின்றது!

சிட்டுக்களின் குரற் சலங்கையில்
சுருதி கோர்க்கும் மொட்டுக்கள் - தாம்
மெட்டமைத்த கிறக்கத்தில்
வண்டுகளின் முத்தத்தை
மொத்தமாய் உள்வாங்கத்துடிக்கின்றன!

பறவைகளின் சலசலப்பில்
உறக்கம் மறக்கும் விழிகள்!
ஊமையாகிப் போன ஊரும்
ஊசலாட்டம் காட்டுகின்றன!

இயற்கையின் தரிசனத்தில்
நேற்றைய சோகம் தொலைத்து - என்
நெஞ்சும்............
புது விடியலில் நாணிக் கொள்கின்றன
நயமாக!



-Jancy Caffoor -




இரவின் மடியில்



பனித்துளிகள் மோதும் இரவினை
ஊசியாய் துளைக்கும் காற்று!

நிலவொளியின் ஒளிக்கசிவில்
களவாய் விழித்திருக்கும் வானம்!

ஓசை தொலைத்த நிசப்தங்களின்
மெல்லிசையில் மயங்கும் நம் விழிகள்
அடிக்கடி
கனாக்களுக்கு மனுப்போட்டு
காத்துக் கிடக்கும்!

இருள் வயலில் விதைக்கப்பட்ட
வான் வைரங்கள்
வெட்கிக் கிடக்கும்
பூகோளத்தின் புன்னகை கண்டு!

அல்லிக் காகிதத்தின்
மையல் வரிகளில் - தன்
மொட்டவிழ்த்து - நறுமண
மெட்டுக்கட்டும் மல்லிகைகள்!

சூரியக்குமிழின்
நேசம் நிரப்பி
சந்து பொந்துகளில்- தம்
பெருமை பேசும் மின்விளக்குகள்!

பூமிப் பாறையின்
நங்கூரத்தில் - மனித
உயிர்கள் தரித்து நிற்கும்
உறக்கத்திற்காய்!

இரவுத்தூரிகையுன் ஓவியத்தில்
மௌனிப்புக்கள்
மனசையறுக்கும் மானசீகமாய்!

கலைந்தோடும் மேகங்கள்
கரித்தேசத்தினை
தத்தெடுக்கத் துடிக்கும்!

குளிர்ச்சீண்டலில்
விழி விளக்குகள் விறைத்துக்கிடக்க
இயக்கச் சாவி துறந்து
இளைப்பாறும் இவ்வுலகம்!

அழகின் சொப்பனத்தில்
வழுக்கிச் செல்லுமிந்த இரவின் மடியினில்
என் விழிகளோ ஏக்கம் நிறைத்து
காத்துக் கிடக்கும்- புது
விடியலொன்றிற்காய்!