About Me

2012/07/23

மரபணு சிகிச்சை- டெங்கு


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.பழமொழிகள் யாவும் அன்றாட வாழ்வியலின் அனுபவங்களை அடியொற்றுபவை.......நோய் வந்த பின்னரே அது தொடர்பான சிந்தனையில் நம் காலத்தை விரட்டுவது பொதுப்படையான உண்மையாகும்.

இன்று மக்கள் எதிர்நோக்கும் பயங்கரமான தாக்குதலில் டெங்கு நோயும் ஒன்றாகும். ஏனெனில் இது ஓர் ஆட்கொல்லி நோயாகும். "எடிஸ் எஜிப்டே" எனப்படும் பெண் நுளம்பால் டெங்கு நோய் பரவுகின்றது.

இந்நோயைக் கட்டுப்படுத்த பலமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. "கப்பிஸ் " மீன் வளர்ப்பு மூலம் நுளம்புக் குடம்பிகளைக் கட்டுப்படுத்தல்,  நோய்க்காவிகளின் கட்டுப்பாடு, வைரசுக்கான தடுப்பு மருந்து, வைரசுக்கெதிரான தடுப்பு மருந்து என ஆராய்ச்சிகளும் , நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னுமொரு புதிய முறையாக டெங்குக்கான மரபணுச்சிகிச்சையைக் கருதலாம்.

இம்முறையின் கீழ் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண்நுளம்பின் மூலம் பெண் நுளம்புகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து அவற்றின் உற்பத்தி குறைக்கப்படுகின்றது. இது இந்நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் புதிய முறையாகும்.

நுளம்பின் "டி.என்.ஏ" யிலுள்ள ஜீனைக் கண்டறிந்து அவற்றின் மரபு மாற்றப்படுகின்றது. இதனால் பெண் நுளம்பு இடும் முட்டைகள் வலிமைகுறைந்ததாக மாறுகின்றது. இதனால் நுளம்பின் சந்ததி ஆரோக்கியமற்றதாக மாறுகின்றது. இம்முறைக் கட்டுப்பாட்டில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் நாடாக தற்போது மலேசியா விளங்குகின்றது.

இந்த டெங்கு நுளம்பின் வரலாறு தொடர்பான சில தகவல்கள்
----------------------------------------------------------------------------------------
இந் நோயின் ஆரம்பமாக சீனா விளங்குகிறது. (265- 420 கி.பி).அப்பொழுது இந்நோய் பறக்கும் பூச்சிகளுடன் தொடர்புடைய நீர் நச்சுமையால் ஏற்பட்டதாகக் கருதினார்கள்.

அதன் பிறகு பரந்த தொற்றின் தாக்குதலுக்கு 1635 ல் மேற்கிந்திய தீவுகள் உள்ளானது.

1779- 1780 ஆண்டுப் பகுதியில் தான் முதலாவது தொற்று நிகழ்வு ஆசியா, ஆபிரிக்கா, வடஅமெரிக்கா போன்ற பகுதிகளில் ஓரே நேரத்தில் நிகழ்ந்தது. இந்நோயை "எலும்பு முறிப்பு நோய்" என்றனர்.

1820 ன் முற்பகுதியில் கிழக்கு ஆபிரிக்காவில் இந்நோய் கண்டறியப்பட்டது.இதனை "கெட்ட  ஆவியால் திடீரென உண்டாகும் நோய்" என சுவாகிலி மொழியில் அழைத்தனர்.

1827- 28 ஆண்டளவில் கரிபியனில் இத் தொற்று ஏற்பட்டது. ஸ்பானியா கரிபியர்கள் இதனை "டெங்கு" என அழைத்தனர்.

1906 ம் ஆண்டு "ஏடிசு " நுளம்பால் இந்நோய் ஏற்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

டெங்கின் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழப்புக்கள் பலஅதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில்  அந் நோய் தொடர்பான தகவல்களை தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து பெற்று இத்துடன் இணைக்கின்றேன்.

நோயின் அறிகுறிகள்
-----------------------------

நோயின் பருவங்களை மூன்றாகப் பிரிக்கலாம்: அவையாவன:
காய்ச்சல்
கடுமையான பருவம்
மீள்நிலைப் பருவம்

 நோயரும்பு காலப் பகுதியை அடுத்து, முக்கிய அறிகுறியான காய்ச்சல் உடனே தோன்றி மிகையாகும். உடல் வெப்பநிலை 40 °C (104 °F)க்கு மேற்செல்லும், இதனுடன் கடுமையான தலைவலி, குறிப்பாக கண்களின் பிற்புறத்தே வலி தோன்றும். 

இப்பருவத்திலே தோன்றும் ஏனைய அறிகுறிகள் ஆவன:
--------------------------------------------------------------------------------------------------
  • தலைவலி
  • கண் பின்புற வலி
  • பொதுவான உடல் வலி (தசை வலி, மூட்டு வலி)
  • குமட்டலும் வாந்தியும்
  • வயிற்றுக்கடுப்பு
  • தோல் சினைப்பு: அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்
  • களைப்பு
  • சுவை மாற்றம்
  • பசியின்மை
  • தொண்டைப்புண்
  • மிதமான குருதிப்போக்கு 
  • வெண்குருதி சிறுதுணிக்கை, குருதிச்சிறுதட்டுக்கள் குறையும் . 
Outline of a human torso with arrows indicating the organs affected in the various stages of dengue fever
டெங்கு நோயின் உணர், அறிகுறிகள்






















காய்ச்சல் தொடங்கியுள்ள காலப்பகுதியில் தோல் நமைச்சல், சினைப்பு தோன்றக்கூடும்.
தோலின் சில பகுதிகள் சிவப்பு நிறமாக மாறும். அடுத்த 4-7 நாட்களில் சின்னமுத்து நோயில் உண்டாகும் சினைப்பைப் போன்று சிறிய சிறிய சிவப்பாலான புள்ளிகள் போன்ற தோற்றம் பெறும்.
முதலில் உடலிலும் பின்னர் முகத்தில் நமைச்சல் தோன்றும். இந்நிலையில் குருதிமயிர்க்குழாயில் கசிவு ஏற்பட்டு அதனால் வாய், மூக்கு போன்ற பகுதிகளில் குருதிப்போக்கு உண்டாகலாம். கடுமையான நிலையில் சுவாசச் சிக்கல், வயிறு புடைத்தல், கடும் குருதிப்போக்கு , வாந்தி, வயிற்றுவலி, அமைதியின்மை போன்றவை ஏற்படும்.

மெதுவாக நிகழும் மீள்நிலைப்பருவத்தில் தாழ் இதயத்துடிப்பு , வலிப்பு, சுயநினைப்பிழத்தல் என்பன ஏற்படலாம். கல்லீரல் பாதிக்கப்படும் போது இது டெங்கு கல்லீரல் அழற்சி எனப்படும்.

இந்நோயை உடனடியாகக் கண்டறிய குருதியடக்குவடப் பரிசோதனை பயன்படுகின்றது. இப்பரிசோதனையின் கீழ் குருதியழுத்தமானியின் குருதியடக்குவடத்தை 100 மில்லி மீட்டர் இரசம் அழுத்தத்தில் 5 நிமிடங்கள் வைத்து உடனே சிவப்புப் புள்ளிகள் தோன்றுகின்றனவா என்பதை அவதானிக்கப்படுகின்றது...

எமது இலங்கை நாட்டைப் பொறுத்தவரை இந்நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு செயற்றிட்டங்களும், சூழல் அசுத்தம் பேணுவோருக்கு சட்டத்தின் தண்டனைகளும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன..

மரண அச்சுறுத்தல் தரும் இந்நோயைக்கட்டுப்படுத்த நுளம்புகளை அழிப்பது இன்றியமையாத கடமையாகும்.







உன்னில் நான் !


வேடிக்கையான நம் வார்த்தைகள்
வேள்வியானதில்.........
முக்காடிட்ட மனசோ
மூச்சு மறந்து போனது!

உன் எண்ணப்பதிவுகள் - என்
முகப்பேட்டில்
வெறுமையாய் முறைத்துக் கிடக்க...........
மனமோ..........
கண்ணீர்ச்சுனாமியில்
காவு கொள்ளப்பட்டது!

உன் திசை தேடித் தேடியே
உருக்குலைந்த என் நிழற்சுவடுகள்........
இளைப்பாற மனமின்றி
இன்னும் தவமிருக்கின்றது
உனக்காக!

அறிவாயா............
நீயில்லாப் பொழுதுகளில்
மெளனித்துக் கிடக்கும் என்
வார்த்தைகள்............
தத்தெடுத்துக் கிடக்கின்றன
வெறுமையை ............மானசீகமாய்!

என் ஞாபகச் செண்டில்
முடிந்து வைத்தவுன்னை...........
மடி சுமந்து காக்கின்றேன்
உன் தோழியாய் உருமாறி!

எனக்கான உன் கவிவிரிப்புக்கள்
தஞ்சமாய் என்னுள் சுருண்டிட...........
கண்டு கொண்டேன் - உன்
குறும்புவிழியில் என்னையே!

நீர்க்குமிழி வாழ்வுக்குள்ளும்
பெரும் வேராய் பற்றிக்கொண்டாய்.........
உன் வார்த்தைகளில் காதல் பூசி
நெஞ்சுக்குள்ளும் குந்திக்கொண்டாய்!

என் இரசச்சுவர் பிம்பமதில்
உன்னையே வார்த்து நின்றாய்..........
என் புன்னகை தேசத்திலும்
நீயே அரணும் அமைத்துக் கொண்டாய்!

சேகரித்துக் கிடக்குமுன் ஞாபகங்கள்
என் தெருக்களில்- உன்
முகந்தேடி அலைவதிலேயே
இப்பொழுதெல்லாம்
காலம் கழிக்கின்றது!

உன் நினைவுப்படுக்கையில்
புரளும் என் மனசோரம்.............
சீண்டலின் முழுவுருவாய்
முகந் தந்தேதான்
தொலைவாகிப் போனாய்!

உன் வார்த்தைகளெல்லாம்
அதிர்வுகளாகி என்னுள் பேரம் பேச.........
நீ மட்டும் ஏனடா
தனித்துப் போனாய்!

நீயுன்றி மயானமாகும்
என் தேசம் மெய்ப்பட...............
உன் நேசம் தா..............
உனக்காக நான் வாழ
என்னுள் நீ வாழ!


2012/07/22

நிஜங்களின் வலி!


காற்றின் கிசுகிசுப்புக்களால்
காணாமல் போன கனாக்கள் 
மனப்பாறைக்குள்
ஏக்கமாய் விக்கலெடுக்கும்!

விழி முடிச்சுக்களில் 
விழாமல் நழுவும் உறக்கத்திற்காய் 
நடுசாமம் இன்னும்
காத்துக்கிடக்கும்!

உன் நினைவுகளின்
எதிரொலிப்பால் - என்
சுவாசிப்பினுள்ளுமுன் முகம்
சுவடு பதிக்கும்!

பாலைவன நீரூற்றாய் 
பாசம் தருமுன் னருகாமைக்காய்
என் ஆத்மாவும்
காத்துக்கிடக்கும்!

என் கிராம விழுதுகளில் 
பதிவான
உன் பெயரை உச்சரிக்க
வார்த்தைகள் தவம் கிடக்கும்!

பெருமூச்சின்
அகாராதிக்குள் அப்பிக்கிடக்கும்
உன்
பிரிவின் ரணக்கூடலில்
நிமிஷங்கள்
வெந்து மடியும்!

நிலாக்கசிவின் சிதறல்களில்
உன் சிரிப்பின் சிந்தல் 
வேராகி - என்
ஞாபகப்பூமியைப் பற்றிப்பிடிக்கும்!

தொலைந்து போன
வசந்தங்களின் விசாரிப்புக்களாய் 
நாட்பூக்கள் நாடி தளர்ந்து
காத்திருக்கும் சுமையுடன்!

என் விசாரிப்புக்களால்- உன்
உயிர்ப்பூக்களில்
மருதாணிச்சாறு நிரம்பிக்
கிடக்கும் வாஞ்சையோடு!

இத்தனைக்கும் நீயோ 
யதார்த்தங்களின் நச்சரிப்பால் 
வேற்றவனாய் என்னை வேவு பார்க்க
நானோ 
நாடியறுத்து கிடக்கின்றேன்
சோக வயலோரங்களில்!



விடியல் பொழுதில்



சூரியச்சிறகுகளில்
கரி தடவி...........
மௌனித்துப் போன வானம்
சேவலின் ஸ்பரிசத்தில்
சிவந்து போகின்றது!

காற்றின் சீண்டலில்
வெட்கித்துப் போன பூக்கள்..........
மயக்கத்தோடு
மௌனித்துக்கிடக்கின்றது!

சிட்டுக்களின் குரற் சலங்கையில்
சுருதி கோர்க்கும் மொட்டுக்கள் - தாம்
மெட்டமைத்த கிறக்கத்தில்
வண்டுகளின் முத்தத்தை
மொத்தமாய் உள்வாங்கத்துடிக்கின்றன!

பறவைகளின் சலசலப்பில்
உறக்கம் மறக்கும் விழிகள்!
ஊமையாகிப் போன ஊரும்
ஊசலாட்டம் காட்டுகின்றன!

இயற்கையின் தரிசனத்தில்
நேற்றைய சோகம் தொலைத்து - என்
நெஞ்சும்............
புது விடியலில் நாணிக் கொள்கின்றன
நயமாக!



-Jancy Caffoor -