About Me

2012/07/24

சிறுவர் உரிமைகள்



The Rights of the children
--------------------------
சிறுவர்கள் மென்மையானவர்கள். அவர்களின் உள்ளத்தில் தீய பழக்கங்களின் வேரூன்றல்கள் காணப்படுவதில்லை. எனினும் சமூகமும், குடும்பமும், நண்பர்களும் அவர்களின் நடத்தையைத் தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். அவர்கள் வெண்களியைப் போன்றவர்கள். உரிய விதத்தில் அணுகுவதன் மூலம் அவர்களைப் பதப்படுத்தலாம்...அவர்கள் தமது சொல், செயல் என்பவற்றை சமூகத்திலிருந்து பெற்று திரும்ப அவற்றை சமுகத்திற்கே மீளளிக்கின்றனர்....

நாளைய பலமிக்க சமுதாயத்தின் தூண்களான இச் சிறார்களின் பாதுகாப்பு இன்றையவுலகின் வினாவாகத் தொக்கி நிற்கின்றது என்பதும் வேதனையான மறுபக்கமாகும்.

மனிதாபிமானத்தை தொலைத்து விட்டு மனமுரண்பாடுகளுடன் உலவும் மன விகாரம் படைத்தோரால் சிதைக்கப்படும் இச் சிறார்களின் வருங்காலம் கண்ணீரில் நனைந்து கிடக்கின்றது. 

குற்றங்களும், சிறைக்கூடங்களும், சீர்திருத்தப்பள்ளிகளும் ஏறுமுகமாக காணப்படும் அவலம் நம் உயிரை வருத்திச் செல்கின்றது.

சிறுவர்கள் கண்ணாடிப் பொருட்கள் போன்று கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்...

அண்மையில் நான் கேள்விப்பட்ட சம்பவமொன்றை மனம் ஞாபகப்படுத்திய நிலையிலேயே இப்பதிவையிடுகின்றேன்.

அவள் ஐந்து வயது நிரம்பிய பால் மணம் மாறாத சிறுமி. அவள் பெற்றோரால் "மாமா" என அறிமுகப்படுத்தப்பட்ட அந்த இளைஞனுக்கு இருபதை தொட்டு நிற்கும் வயது. தினம் தோறும் அவள் வீட்டுக்குச் செல்லும் அவன் சாக்லேட் வழங்குவதில் மறப்பதில்லை. சிறுமியும் அந்த மாமா மீது கொள்ளைப் பிரியம் வைத்திருந்தாள். அவனுடன் விளையாடுவது அவளுக்கு ஆசையான காரியம். பெற்றோரும் அந்த நண்பனை தாராளமாக தங்கள் பிள்ளை மீது பழக அனுமதியளித்தனர்..

அந்தப் பிள்ளை முதலாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தது.....ஒருநாள் பாடசாலை முடிந்தும் பிள்ளை வீடு திரும்பாததால் கவலையுற்ற பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் குற்றவாளி கண்டு பிடிக்கப்பட்டான்.

அவன்....................!

அந்தப் பிள்ளை அன்புடன் பழகிய மாமா..அவன் கொடுத்த வாக்குமூலத்தில் தானும் இன்னும் நான்கு இளைஞர்களும் இணைந்து அப் பிள்ளையை நாசம் செய்ததாகவும், பிள்ளை தன்னை அடையாளம் காட்டி விடுமென்ற அச்சத்தில் அப்பிள்ளையை கொலை செய்து ஆற்றோரம் வீசி விட்டதாகவும் இரக்கமின்றி கொலையாளி கூறினான்...அந்த மொட்டு பூக்க முன்னரே பறிக்கப்பட்டது.....


இவ்வாறான சம்பவங்கள் சாதாரண செய்திகளாக வெளிவரும் புவியிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மனித உருவிலுள்ள மிருகங்களை கண்டறியாத அப்பாவிகளாக நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றோம்..

இந்நிலையில் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுத்து அவர்களைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாட்டு சமவாயம் (UNICEF) பட்டயமொன்றை 1989 ல் உருவாக்கியது. இச் சமவாயத்தில் 52 உறுப்புரைகள் காணப்படுகின்றன.



18 வயதிற்குட்பட்டோரை சிறுவர்களாகக் கருதி அவர்களுக்காக பின்வரும் விடயங்கள் அவர்களுக்கான உரிமைகளாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன..
-----------------------------------------------------------------------------------------------

பின்வரும் விடயங்களில் சிறுவர்களை ஈடுபடுத்தும் பெரியவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்

1. சிறுவர் தொடர்பான ஆபாச படங்களை எடுத்தல் அத் தகவல் தெரிந்தும் பொலிஸாருக்கு தெரிவிக்காமல் மறைத்தல்.

2. பிச்சை எடுக்கப் பயன்படுத்தல்

3. பாலியல் தொடர்புகளுக்குப் பயன்படுத்தல்

4. போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுத்தல்

5. சிறுவர்களை வதைத்தல்

6. வீட்டுவேலைக்காரர்களாக பயன்படுத்தல்

7. 12 வயதிற்குட்பட்டோரை பெற்றார் பராமரிக்காமை

8. கல்வியைப் பெற்றுக் கொடுக்காமை

9. சிறுவரை மிரட்டல், அச்சுறுத்தல், மரண பயம் விளைவித்தல்

10. அடிமைப்படுத்தல் , ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தல்

11. சிறார்களின் எண்ணங்களை மழுங்கடித்தல், விரும்பிய மதம், நட்பு பின்பற்றத் தடை விதித்தல்

12. அடிப்படை சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொடுக்காமை

13. அவர்களின் தனிப்பட்ட வாழ்வுக்கு இடையூறு விளைவித்தல்

இவையெல்லாம் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு கவசங்கள்

பிள்ளைகளை மனித மிருகங்கள் அண்டாமல் கண்காணித்து அன்பு செலுத்துங்கள்.அவர்களின் வருங்காலம் அவர்களுக்கான வெகுமதி !
அதை வழங்க வேண்டியது நமது கடமையாகும்



ஐ.நா. சபையின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாய உறுப்புரைகளின் தலைப்புக்கள் சில பின்வருமாறு :
----------------------------------------------------------

உறுப்புரை 1 - சிறுவர் பற்றிய வரைவிலக்கணம்

உறுப்புரை 2 - பாகுபாடு காட்டாமை

உறுப்புரை  3 - சிறாரின் உயரிய நலன்கள்

உறுப்புரை  4 -சமவாயத்தை நடைமுறைப்படுத்தல்

உறுப்புரை  5 - பெற்றோரின் வழி நடத்தலும் குழந்தையின் வளர்ச்சியும்

உறுப்புரை  6 - உய்வும் மேம்பாடும்

உறுப்புரை  7 - பெயரும் நாட்டினமும்

உறுப்புரை  8 - தனித்துவம் பேணல்




உறுப்புரை  9 - பெற்றோரை பிரிதல்

உறுப்புரை 10 -குடும்பம் மீளச் சேர்தல்

உறுப்புரை 11 - சட்ட விரோத இடமாற்றமும் மீளாமையும்

உறுப்புரை 12 - சிறுவரின் கருத்து

உறுப்புரை 13 - கருத்துச் சுதந்திரம்

உறுப்புரை 14 - சிந்தனை, மனசாட்சி, மதச் சுதந்திரம்

உறுப்புரை 16 - அந்தரத்தைக் காத்தல்

உறுப்புரை 17 - தகுந்த தகவல் கிடைக்க வழி செய்தல்

உறுப்புரை 18 - பெற்றோர் பொறுப்பு

உறுப்புரை 19 - இம்சை, புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு

உறுப்புரை 20 - குடும்பப் பிணைப்பற்ற பிள்ளையைப் பாதுகாத்தல்

உறுப்புரை 21 - சுவீகாரம்

உறுப்புரை 22 - அகதிச் சிறுவர்கள்

உறுப்புரை 23 - ஊனமுற்ற சிறுவர்கள்

உறுப்புரை 24 - சுகாதாரமும் சுகாதார வேசைகளும்

உறுப்புரை 25 - தாபரிப்பிடத்தை அவ்வவ்போது கண்காணித்தல்

உறுப்புரை 27 - வாழ்க்கைத் தரம்

உறுப்புரை 28 - கல்வி

உறுப்புரை 29 - கல்வியின் நோக்கம்

உறுப்புரை 30 - சிறுபான்மை மக்களின் பிள்ளைகள்








உறுப்புரை 31 - ஓய்வு, பொழுதுபோக்க, கலாசார நடவடிக்கைகள்

உறுப்புரை 32 - பால்ய ஊழியம்

உறுப்புரை 33 - போதைப் பொருட் துஷ்பிரயோகம்

உறுப்புரை 34 - பாலியல் இம்சை

உறுப்புரை 35 - விற்பனை, பரிவர்த்தனை, கடத்தல்

உறுப்புரை 36 - ஏனைய இம்சைகள்

உறுப்புரை 37 - சித்திரவதை, சுதந்திரத்தை மறுத்தல்

உறுப்புரை 38 - ஆயுதப் பிணக்குகள்

உறுப்புரை 39 - புனர்வாழ்வு , பராமரிப்பு

உறுப்புரை 40 - பால் நீதிபரிபாலனம்

உறுப்புரை 41 - நடைமுறையிலுள்ள நியமங்களை மதித்தல்

உறுப்புரை 42 - அமுலாக்கல்

சிறுவர் தொடர்பான இவ்வளவு பாதுகாப்பரண்கள் இருந்தும் கூட சில துஷ்டர்கள் அவற்றுள் நுழைந்து சேதப்படுத்துகின்றனர். இவர்களை சட்டம் தண்டிப்பதிலும் பார்க்க, இவர்கள் மனசாட்சியே இவர்களைத் தண்டிக்க வேண்டும்.....தண்டிக்குமா............?

காலச் செவியில் இவ் வினா கூட பயனற்றுக் கிடக்கின்றது !

இவ்விடயங்கள் யாவும் அகிலமுழுதும் எதிரொலிக்க வேண்டும். அப்பொழுதே மேற்கூறப்பட்ட நோக்கங்களும் சிந்தனைகளும் வலுப்பெறும்.

1. Support For Child Rights
2. Help Homeless Child
3. Help a child in need
4. Know Child Rights
5. Stop Child Labor
6. Free Education to Poor  Children


இவை வெறும் ஆணைகளல்ல.....நாம் சிந்திக்க வேண்டிய அம்சங்கள் !



கண்ணேறு (Eyil Eye)



கண்ணேறு என்பதை கண்ணூறு, நாகூறு,  திருஷ்டி என்றெல்லாம் அழைப்பார்..ஒருவர் இன்னுமொருவரை அல்லது அவர் பொருளை ஏக்கத்துடன் அல்லது பொறாமையுடன் பார்க்கும் போது உரிய பொருளுக்கு அல்லது ஆளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பலரும் கூறுவதை அவ்வவ்போது கேள்விப்படுகின்றோம்.

உண்மையில் கண்ணேறு உள்ளதா?

இஸ்லாம் இதற்கு அனுமதியளித்துள்ளதா?

இவ்வாறாக என்னுள் தேங்கிய வினாவுக்கு விடை தேடினேன்...என் தேடலுக்கு கிடைத்த ஆதாரங்கள் இவைதான்.......

"கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்"

அறிவிப்பவர் - அபுஹூரைரா (ரலி)  , நூல் : புஹாரி முஸ்லிம்

"நபி (ஸல்) அவர்கள் கண்ணேறுவின் (தீய விளைவி) லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள் "

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள்

ஆதாரம் - புஹாரி

கண்ணேறு ஏற்படும் சந்தர்ப்பத்தில் பின்வரும் துஆ வை ஓதிக்கொள்ளும்படி நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் ...

"அவூது பிகலிமாத்தில்லாஹித் தாமத்தி மின்குல்லி ஷைத்தானின் வஹாமத்தின் வமின் குலவி அய்னின் லாம்மத்தின்"

பொருள்-
----------------
அல்லாஹ்வின் நிறைவான வார்த்தைகள் மூலம் ஒவ்வொரு சைத்தானை விட்டும். விஷ ஜந்துக்களை விட்டும், கெட்ட கண்திருஷ்டியை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகின்றேன் )        ஆதாரம் - முஸ்லிம்

எனவே ஒவ்வாத நிலைமைகளில் நமக்கேற்படும் கண்திருஷ்டிகளை நாமும் தவிர்ப்போமாக

2012/07/23

யாழ்ப்பாணக் கோட்டை


யாழ்ப்பாணம்..............!

பனை வளங்களால் முடி சூடப்படும் அழகான ஊர்!
வட மாகாணத்தின் இதயம் ...........
கடல்களும், செழிப்பான வயலோரங்களும்  சுவைமிகு பயி ருற்பத்திகளும், பல வரலாற்று ஆவணங்களின் சேமிப்பும் அதன் முக்கியத்துவத்தை மேலும் ஒருபடி கூட்டுவன!

இத்தகைய யாழ்ப்பாணம் ஒரு சில தசாப்த யுத்தக் கூக்குரலால் சிதைந்தது. எம் நேசபூமியான முஸ்லிம் பிரதேசங்களோ அடையாளம் தெரியாதபடி சில வன்முறையாளர்களால் (இராணுவத்தினர் அல்ல) சிதைக்கப்பட்டன.,
இச்சிதைவுகளின் கண்ணீரை மெல்ல மெல்ல காலம் துடைக்கத் தொடங்கியதால் யாழ்  மக்களின் இயல்பு வாழ்வும் தற்போது மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகின்றது.

யாழ் பூமியில் சேமிக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பதிவுகளிலொன்றுதான் யாழ்ப்பாணக் கோட்டை !

யுத்த காலத்தில் இக்கோட்டைக்குள் சிறைப்படுத்தப்பட்டிருந்த இராணுவத்தினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான தொடர்ச்சியான போராட்டத்தால் எம் உயிரைக் கையிலேந்தி பரிதவித்துக் கிடந்த ஞாபகங்கள் இன்னும் நெஞ்சக்குழியில் வீழ்ந்துதான் கிடக்கின்றன.

அன்று.... 

கோட்டையை முற்றுகையிட விடுதலைப் புலிகள் நடுநிசியில் அவ்வவ்போது நடத்திய தாக்குதல்களும், பதிலுக்கு இராணுவத்தினரின் ஷெல் வீச்சுக்களும், இராணுவத்தினருக் குதவியாக நடத்தப்பட்ட விமான, ஹெலி தாக்குதல்களும் எமது சாமப் பொழுதின் உறக்கத்தை உறிஞ்சி பீதிக்குள் எம்மைத் தள்ளிய கணங்கள்! அவை மறக்கப்பட முடியாத இதிகாசங்கள்!

விண்ணென தலைக்கு மேலே பாய்ந்து சென்று ஷெல்களும், குண்டுகளும் அண்மைப் பகுதியில் மோதி வெடித்து உயிர்களையும், எம் சந்தோஷங்களையும் காவு கொண்ட அந்தக் கணங்கள் மறக்கப்படாத பொழுதுகள் !

யாழ்ப்பாணக் கோட்டைக்கும் எமது முஸ்லிம் பகுதிக்குமிடையில் பாரிய தூர இடைவெளி இல்லாமையால் எமது முஸ்லிம் தெருக்களே பெரும்பாலும் ஷெல் வீச்சுக்கு இலக்காகி அவலப்பட்டன.............

அந்த அவலம் இன்னும் என் மனக்கண்ணை விட்டு அகலாத நிலையில் இப்பதிவிடுகின்றேன்.............

அந்த வயதிலேற்பட்ட ஞாபகங்களின் அனல் பல வருடங்கள் கழிந்த நிலையிலும் எட்டித்தான் பார்க்கின்றன...........

கோட்டைக்கு அருகிலுள்ள பண்ணைக் கடலும், பண்ணைப் பாலத்தை ஊடுறுவிச் செல்லும் அல்லைப்பிட்டிக்குச் செல்லும் பாதையும் எமது மண்கும்பான் பள்ளிவாசல் தரிசனப் பயணங்களுக்கு அவசியப்பட்டதால் நாம் அடிக்கடி விடுமுறை காலங்களில் மண்கும்பான் பள்ளிவாசலுக்கு செல்வது வழமை. அப்பொழுதெல்லாம் கோட்டையைக் கடந்தே செல்வதால், யாழ்ப்பாணக் கோட்டை எம் நினைவகத்தில் ஆழப்பதிந்து கிடக்கின்றது.....
பல வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் !

யாழ்ப்பாணக் கோட்டை.............!

கருங்கல்லாலும் பாறைகளாலும் மதிலிடப்பட்டுள்ள மிக உயரமான சுவர்களும், சுவர்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஆழமான அகழியையும் கொண்டுள்ளது. அவற்றின் நிர்மாணம் வியப்பை அள்ளிக் கொட்டக் கூடியது.

ஒருசமயம் யாழ்ப்பாணம் முழுதும் விடுதலைப் புலிகள் வசமிருந்த போதும் (1984 தொடக்கம் 1987 வரை) கோட்டை மட்டும் இராணுவத்தினரின் பாதுகாப்பு அரணாக விளங்கியது. இதற்குக் காரணம் குண்டுகளால் துளைக்க முடியாத இறுக்கமான மதில்கள்தான்!

ஆனால் இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையின் கீழ் இந்திய அமைதி காக்கும் படையினர் 1989 ம் வருடம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போது, யாழ்கோட்டை அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வெளியேற்றத்தை தொடர்ந்து மீண்டும் கோட்டையை விடுதலைப்புலிகள் கைப்பற்றி, கோட்டையின் பல கட்டிடங்களை தமது பாதுகாப்பு கருதி உடைத்தெறிந்தனர்.

மீண்டும் 1995 ம் ஆண்டுகள் இராணுவத்தினரால் யாழ்கோட்டை பெரும் யுத்தத்தின் பின்னர் மீண்டும் கைப்பற்றப்பட்டது.

யுத்தத்தின் பின்னர் இப்பொழுது அது மீண்டும் புனரமைக்கப்பட்டு பார்வையாளர் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.........

யாழ்ப்பாணக் கோட்டை.............!

1619 ல் யாழ்ப்பாண மன்னனின் ஆட்சிக்குள் போத்துக்கேயர் நுழைந்தனர். இதனால் நல்லூரிலிருந்த தலைநகரம் யாழ்ப்பாணத்துக்கு இடமாறியது. 1625 ம் ஆண்டு போத்துக்கேயர் யாழ் கோட்டையைக் கட்டும் பணியை ஆரம்பித்தனர்.

இக் கோட்டை கிட்டத்தட்ட சதுர வடிவானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன் ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்துள்ள அரண்களும் அமைந்திருந்தன. கோட்டைக்குள் கத்தோலிக்க தேவாலயமும். கப்டன் மேஜருக்கான வீடும், வைத்தியசாலை யொன்றும் மேலும் முக்கிய சில கட்டிடங்களும் இருந்தன. இருட்டறைக்குள் சிறைக்கூடமும் இருந்தது. போத்துக்கேயரின் நகரமான யாழ்ப்பாணம் கோட்டைக்கு வெளியே இருந்தது.


ஒல்லாந்தர் காலம்
-------------------------------
யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் திகதி கைப்பற்றிய அடுத்த நாள் ஜூன் மாதம் 23 1658இல், மேற்படி கோட்டையை அவர்கள்  இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள்.

 கோட்டையைப் பார்வையிடும் எங்கள் வீட்டுச் செல்லம்

      கோட்டை நுழைவாயில்


                                         மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இடம்
                                       அதன் அகழியைச் சூழ்ந்திருக்கும் மதில்

- Ms. Jancy Caffoor -


















உயிரறுந்து


மனசு வெள்ளைதான் !
இருந்தும் 
வாலிபச் சிறைக்குள்
என் னிருப்பு !

கூக்குரலிடும் மனிதவேலியின்
சுயநல முடிச்சில்
ஆக்கிரமிக்கப்படுகின்றன - என்
ஜீவிதம்!

வாழ்க்கையைத் தேடும் பயணத்தில்
முட்களின் சுவடுகளில் - என்
மூச்சோரம் இளைப்பாறுகின்றது!

சந்தர்ப்பவாதங்கள்
இதயமறுக்கையில் 
ஆத்மாவின் அவலம்
தீ வார்த்து வாழ்த்துகின்றது!

தேவைகளின் நெருடலில்
காலடி பிடுங்கும்
காரியவாதிகள் 
நெஞ்சு பிளந்து
நஞ்சு தடவுகின்றனர் !

கனாக்களின் கருக்கலைப்பால்
வெளுத்துப்போன நிஜம் 
வெம்மலின் ஆர்ப்பரிப்பில்
அடங்கிப் போகின்றது!

கண்ணீர்  மோதுகையில்
காயம் பட்ட கன்னம் 
கண்ணாடி முன்னாடி - அடிக்கடி
காணாமல் போகின்றது!

ஆணவத்தின் ஆணிவேரால்
உறிஞ்சப்படும் - பிறர்
வார்த்தைகள் 
வசந்தத்தை மறந்து
நேசத்தைத் துறக்கின்றன!

ஓ  
இத்தனை குணமாந்தரால்
இரவின் மடிதனில் 
உறக்கம் தொலைத்து காணாமல் போகின்றேன்
உயிரும் இறந்து போகின்றேன்!

ஜன்ஸி கபூர்