About Me

2012/07/28

கதீஜா முராத்

என் சகோதரி மகள்
---------------------------
இடம் - கட்டார் தோஹா







































2012/07/27

கவிதை எழுதலாமே

இது கவிதை எழுத ஆர்வப்படுவோர் மட்டுமே வாசிக்க வேண்டிய பதிவு.கவிஞர் அல்ல. ஏனெனில் என்னை விட கவிஞர்களுக்கு இன்னும் நன்றாகத் தெரியும். கவித்துறையில் நான் சிறு கிள்ளையே. என் அனுபவங்களை வைத்து பிண்ணப்பட்ட பதிவிது.

கவிதை என்பது உணர்வுகளின் வெளிப்பாட்டு வடிவம். அது அனுபவங்களை நாம் நேரடியாக உள்வாங்குவதாலோ அல்லது பிறரின் அனுபவத் தெறிப்புக்களால் நமக்குள் உள்வாங்கப்பட்ட படிப்பினையாகவோ இருக்கலாம்.

இன்று முகநூலில் உலா வரும் புதுவிதமான கவிதைகளின் சிறப்பு பிரமிக்கத்தக்கதாக உள்ளது. அவை சொந்தக் கவிதையாகட்டும் அல்லது பிறரின் கவிதைகளை கொப்பி பேஸ்ட் பண்ணியதாக இருக்கட்டும். அவை யாவும் மனித உணர்வுகளின் பிரதிபலிப்புக்களே!

கவிதை எழுதுவதென்பது சிறப்பானதோர் ஆற்றல். ஆவலால் தூண்டப்படக்கூடிய ஆற்றல். இந்த ஆற்றல், ஆவல் எல்லோருக்கும் இயல்பாகவே உள்ளது. ஆனால் அவர்கள் அதற்கு முயற்சிப்பதோ பயிற்சியெடுப்பதோ இல்லை. ஒருவரின் ஆக்கங்களை தன் ஆக்கம் போல் வெளியிடும் இலக்கிய திருட்டைச்  செய்வதை விட, தனது உணர்வுகளை தானே கிறுக்கி கிறுக்கல்களாக வெளியிடுவது எவ்வளவோ மேல்.
-----------------------------------------------------------------------------------------
கவிதையெழுதும் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தல் வேண்டும்
-----------------------------------------------------------------------------------------
1. நிறைய இலக்கியப் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அப்பொழுது நம்மால் பலவிதமான நிறைய சொற்களை அறிய முடியும். மொழிச் செம்மைக்கு இது உதவும். ஏனெனில் கவிதையின் உயிர்ப்போட்டத்திற்கு மொழி அவசியமாகின்றது.

2. எழுதும் மனதை வேறு சிந்தனைகள் குழப்பாமல் அமைதிப்படுத்த வேண்டும்

3.எழுதப் போகும் கருப்பொருள் எது என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அல்லது ஒரு படம் ஒன்றைத் தெரிவு செய்து அதற்கேற்ப எண்ணங்களை ஓட விட்டு எழுத முயற்சிக்கலாம்.

4.அந்தக் கருப்பொருளை மனதிலிறுத்தி அதற்கு வரக்கூடிய கவிதைகளை சந்தத்துடன் கவிதைப்பாணியில் நமக்குள் நாமே சொல்லிப் பார்க்க வேண்டும்.

5.வார்த்தைகள் வெளிப்பட வெளிப்பட அவ் வார்த்தைகளை ஒரு தாளில் குறித்துக் கொள்ள வேண்டும்.

6. மீண்டும் எழுதியவற்றை வாசித்துப் பார்க்கும் போது அதனைத் திருத்தம் செய்யத் தோன்றும். அவ்வாறு நினைப்பவற்றை திருத்தம் செய்யலாம். இவ்வாறு பல திருத்தங்களின் பின்னர் முழுமையான கவிதையொன்று பிறக்கின்றது.

6. கவிதை எழுதும் போது சில வார்த்தைகளை பிரித்தும், சிலவற்றை சேர்த்தும் எழுதும் போதுதான் கவிதை சிறப்பானதாக மாறுகின்றது

5. கவிதை எழுதும் போது எதுகை, மோனையையும் கவனித்தல் வேண்டும்.

6. கவிதைகளில் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதிலும் பார்க்க வெகு சிலருக்கு மட்டுமே புரியக்கூடிய  வார்த்தைகளைப் பயன்படுத்தும் போதே அக் கவிதை எழுதுவோர் பிறரின் கவனிப்புக்குள்ளாகின்றார். கவிதையும் சிறப்படைகின்றது. (உதாரணம் - மௌவல் - மல்லிகை)

7.கவிதை பிறக்க நேரகாலம் சொல்லமுடியாது. எப்பொழுது எழுத வேண்டுமென மனம் நினைக்குதோ, அப்பொழுதே அக் கவிவரிகளை குறித்தல் வேண்டும்.

8. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவற்றை சம்பந்தப்படுத்தி , வார்த்தைகளை கவியில் புகுத்தும் போதுதான் அக் கவிதை பிறரின் பாராட்டைப் பெறுகின்றது

9.பிறரின் கவிதைகளை வாசித்து அனுபவியுங்கள்.  நமக்குள்ளும் அவ்வாறு எழுதவேண்டுமென்ற தாக்கம் ஏற்படும்

10.தொடர்ந்த முயற்சி, பயிற்சி, பாராட்டு, ஊக்கம் காரணமாக நமது கற்பனை ஆழம், சொல் வார்ப்பு என்பவற்றில் முன்னேற்றமும், அழகும் ஏற்பட்டு கவிதை உயிரோட்டமுள்ளதாக மாறும்.

11.தொடர்ந்து ஒரே கருப்பொருளில் எழுதாமல் வித்தியாசமான அன்றாட வாழ்வோடு தொடர்புபடக்கூடிய விடயங்களுடன் பொருந்தக்கூடிய எண்ணங்களை சற்று கற்பனையும் கலந்து பதிவிட வேண்டும்.

12.நாம் கற்பனையில் கிறுக்கிய கிறுக்கல்கள் பிற மனங்களில் நிஜமெனும் மனத் தாக்கத்தை, நெருடலை ஏற்படுத்துமேயானால் நிச்சயம் அக்கவிதை உயிர்ப்புத்தன்மை வாய்ந்ததாகும்.

12.நல்ல கவிதையொன்றை எழுதி பிறர் அதனைப் பாராட்டும் போது கிடைக்கும் மனதிருப்தியை வார்த்தைகளால் அளவிடமுடியாது.

ஒவ்வொருவர் பாணியும் வித்தியாசமானது. ஒருவரைப் போல் மற்றவர் எழுத முடியாது. கண்ணதாசனும், வைரமுத்துவும், வாலியும், அப்துர் ரஹ்மானும் எழுதும் பாணி வேறுபடக்கூடியது. நாம் நிச்சயமாக அவர்களைப் போல் வரமுடியாது. 

இருந்தும்..........

நம் ஆற்றலை நாம் ரசிக்கலாம்!
வளர்க்கலாம்!
நமக்கென ஒரு பாணியைக் கடைப்பிடிக்கலாம்!
கர்வமில்லாத நல்ல ரசிகனால் நல்ல கவிஞனாக மாறலாம்!

கவிஞராக மாற வாழ்த்துக்கள்.

பாட்டி எங்கே போறியள்



மதியம் 12 மணி...........

சுட்டெரிக்கும் வெயில் அன்றேனோ எட்டிப் பார்க்கவில்லை. லேசான சிணுங்கலுடன் கூடிய மழைச் சிவிறல்களில் வவுனியா பஸ் நிலையமும் நனையத் தொடங்கியது. என் வகுப்பு முடிந்ததும் அவசர அவசர ஆட்டோ பிடித்து ...........................பஸ்ஸூக்குள்  தாவி ஏறினேன்......ஓரிரு இருக்கைகளே என்னைப் பார்த்து கையசைக்க யன்னலோரம் அமர்ந்து கொண்டேன். மழைப் புழுக்கம் தேகத்தை வேறு வறுத்திக் கொண்டிருந்தது. பின்சீட்டில் பாட்டியொருவர் அமர்ந்திருந்தார். பெரிய நெற்றி பொட்டும் சிவப்புக்கல் மூக்குத்தியும் அவர் அடையாளங்களாக.............

பாட்டி.......

சூழ்நிலையைச் சமாளிக்கிற அளவுக்கு கொஞ்சம் சிங்களத்தை நுனி நாக்கில வைத்திருந்தார்..

"மணிக்கூட்டு கோபுரம் பக்கத்தில இருக்கிற ஆமி காம்ப் பக்கத்தில இறக்குங்க"

தன் அருகிலிருந்த எல்லோரிடமும் சிங்களத்தில் கூறிக் கொண்டே இருந்தார்..
பஸ்ஸின் பயணப்பாதையில் அவர் கூறும் அந்த இடம் இல்லாததால் எல்லோரும் குழம்பி ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தனர்..ஆனால் பாட்டி விடுவதாக இல்லை. தனது வார்த்தைகளை திருப்பித் திருப்பிச் சொல்லி எல்லோரையும் குழப்பிக் கொண்டிருந்தார். அப் பாட்டிக்கு காது வேறு கேட்காத நிலை.....உரத்து பதில் ​சொல்லுவதால் பஸ்ஸில் இருந்த எல்லோரின் பார்வையும் பாட்டி மீது நிலைப்பட்டுக் கிடந்தது...

" பாட்டி .......நீங்க போக வேண்டிய இடத்தைச் சொல்லுங்கோ"

ஒரு இளைஞன் கேட்டதற்கு தெரியாது என்று தலையாட்டினார்..

"ஏன் அம்மா.......வயசான காலத்தில இப்படி அட்ரஸ் தெரியாம அலைகிறிங்க...காலம் கெட்டுக்கிடக்கு"

அருகிலிருந்த பெரியவர் சற்று சினத்தார்.

அருகிலிருந்த பெரும்பான்மையைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் சொன்னார்

" அவ சிங்களம் கதைத்தாலும் கூட தமிழ்தான்........எங்கட ஆட்கள் மூக்குத்தி போட மாட்டார்கள்....நீ அவகிட்ட தமிழில பேசு "

என்னை உசுப்பி விட, நானும் பாட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். நான் தமிழில் பேசியதைக் கண்டு பாட்டிக்கு சரியான மகிழ்ச்சி.......
இறங்க வேண்டிய இடத்தின் அடையாளம் சொன்னார்...அவரை நான் தைரியப்படுத்தினேன்.

"பிள்ள......இறங்க வேண்டிய இறக்கம் வந்தால் சொல்லும் என்ன"

பாட்டியின் வேண்டுகோளை நான் ஏற்றுக்கொண்டதில் அவர் மகிழ்ச்சி இரட்டிப்பானது...

அவருக்கு பக்கத்தில இருந்த எனது பாடசாலை மாணவன் அவர் கூறும் இடத்தை ஊகித்தவனாக,

"பாட்டி பயப்படாதிங்க...அநுராதபுரத்தில இறங்கினதும் நான் ஆட்டோ பிடிச்சு தாரேன்.............நீங்க சொல்ற இடத்துக்கு போகலாம்"

இப்பொழுது பாட்டி மனதில் நிம்மதி ............................அது சொற்ப நேரமே ...........!
மீண்டும் புறுபுறுக்கத் தொடங்கினார்.

"உது என்ன இடம் பிள்ள"

பஸ் தரிப்பையெல்லாம் காணும் போது என் உயிரை வாங்கத் தொடங்கினா.....நானும் அவர் மேல் அனுதாபப்பட்டு இடத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டே வந்தேன்.......

" ஈரப்பெரியகுளம்...............பூனாவ..........மதவாச்சி"

ஐயோ......ஏன் பஸ் இந்த றோட்டால போவுது?  ஏன் இவ்வளவு நேரம் எடுக்குது...

பாட்டியின் புறுபுறுப்பு கேட்டு பலர் எரிச்சலுடன் முகம் சுளிக்க, சிலர் அனுதாபத்துக்குள் நனைத்தனர்..

மதவாச்சி.......

சற்று பெரிய ஊர்..பாட்டி அத்தரிப்பிடத்தில அவசரமாக இறங்கப் போக, நாங்கள் வலுக்கட்டாயமாக அவரை பஸ் இருக்கையில் உட்கார வைத்தோம்..

வஹமல்கொல்லாவ....இக்கிரிகொல்லாவ......ரம்பாவ....சாலியபுர..அநுராதபுரம்

ஊர்கள் கடந்தன. அடுத்து அநுராதபுரம் பழைய பஸ் நிலையம்...............

பஸ் கன்ரக்டரின் கூவலைத் தொடர்ந்து பாட்டி இறங்கப் போனார்....

"இல்ல பாட்டி.....இது தூரம்........என்னோட  புதிய நகரத்தில இறங்குங்கோ"

மீண்டும் நம்பிக்கையூட்டினேன்...நான் சொன்ன பேச்சு அவர் காதில் விழவில்லை...என்னிடம் விடை பெற்றார்...நானும் பொறுமையிழந்து மௌனித்தேன்...

பாட்டியின் செயலால் பஸ்ஸிலிருந்த அனைவர் கவனமும் பாட்டியின் மீதுதான்...

"இந்த வயசான காலத்தில உது தேவையோ"

இன்னுமொருவர் முணுமுணுத்தார்...பாட்டி தன்னிருக்கையை விட்டெழுந்து சற்று முன்னே நடந்தவர் திடீரென இன்னுமொரு இருக்கையிலிருந்தவரிடம்
சிங்களத்தில் ,

'உதுல இறங்கினா எனக்குப் போகலாம் தானே"

பாட்டி.........தன் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்கி ஆளுக்காள் அபிப்பிராயம் கேட்டுக் கொண்டிருந்தா.....வயசானாலே பிடிவாதமும் சந்தேகமும் தான்................... என்  மனது அலுத்தது..

அம் மனிதர் பாட்டியை உற்றுப் பார்த்தவாறு தன் புருவங்களைச் சற்று உயர்த்தினார்.......

" அக்கா...நீங்க நொச்சியாகம யில இருந்தனீங்கள் தானே....மாணிக்கத்திட பெண்சாதியே நீங்க.......உங்கட வீட்டுக்கு ஒருக்கா நான் வந்திருக்கிறன்...நான் செல்வராசன்..........மறந்திட்டியள் போல...மாணிக்கம் அண்ணா சுகமே"

பாட்டி சற்று நேரம் யோசிக்கத் தொடங்கும் போதே பஸ் மீண்டும் தன் இலக்கு நோக்கி புறப்படத் தொடங்கியது..

"ஓமடா......செல்வா.........ஞாபகம் வருது...........பக்கத்தில இருக்கிறவ உன்ர மனிசியே........பார்த்து கனநாளாகுது உன்ன"

அவர்கள் பேச்சு தொடர்ந்தது....

"அக்கா.......கணேசன்ர வீட்டுக்கே போறியள்..........அவன் திசாவையில இருக்கிறான்...அவன்ர பக்கத்து வீட்டிலதான் நாங்க இருக்கிறோம்... எங்களோட வாங்கோ"

அவர்களின் உறுதிமொழியை பாட்டிக் ஏற்றுக் கொண்டே ஆகணும். உரிய இறக்கம் வந்ததும் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு அவர்களுடன் பாட்டி இறங்கினார்....

"வயதான காலத்தில் தெரியாத இடத்திற்கு பயணிப்பது எவ்வளவு பிழையான விடயம்" எனக்கு நானே கூறிக் கொண்டேன்...!




நண்பர்


ஒக்டோபர் 01 ....... 

என் வாழ்வில் மறக்க முடியாத நாள். அன்றுதான் நான் ஆசிரியர்த் தொழிலுக்குள் உள்வாங்கப்பட்ட நாள். பல வருடங்களின் பின்னர் 2010 அதே தினத்தில் தான் முகநூல் பக்கத்துக்குள்ளும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன் . அந்த நுழைவு கூட எதிர்பாராமல் கிடைத்தவொன்று !

முகநூலின் ஏற்ற இறக்கங்கள், சாதக பாதகங்கள் எதுவுமே அறிந்திராத, அனுபவமில்லாத நுழைவு என்பதால் இணைக்கப்பட்ட நண்பர்கள் மானசீகமாக என்னைத் தொட்டார்கள். அவர்களின் பதிவுகளை ஆச்சரியத்தோடு விழி பருகினேன்.

முகநூல் புதிய அனுபவம். அழகான பயணம். இலக்கிய வார்ப்புக்களுக்கு தாராளமாய் மடி தரும் களம். பல முகங்கள் நட்பு பட்டியலை மானசீகமாய் நிறைத்து நிற்க, என் பதிவுகளுக்கான அவர்களின் எண்ணப்பரிமாற்றங்கள் உற்சாகமாக என்னுள் பரவி மனதை இதப்படுத்தியது! ரசித்தேன் என் பயணப்பாதையில் கிடந்த பசுமைகளை !

இருந்தும் மறுபுறம்................. 

மிக அவதானமாகவே ஒவ்வொரு நகர்வுகளையும் பதிக்க வேண்டுமென்ற எச்சரிக்கையுணர்வு என் பயணத்திற்கு வழிகாட்டியாய் நின்றது. எல்லோரும் நண்பர்களல்லர். நண்பர்கள் வடிவில் வம்பர்களும் உள் நுழையலாம் என்பதற்காக நண்பர்களை மிக அவதானமாகவே தெரிவுசெய்தேன்.

என் பதிவுகளுக்கு விருப்புக்களையும், பின்னூட்டங்களையும் தாராளமாக வழங்கி ஊக்குவித்த நல்ல நண்பர். வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டுமென்ற நினைப்பில் போராடும் இளைஞர். என்னை விட வயதில் இளையவர். இருந்தும் புற வேறுபாடுகளைக் களைந்தெறிந்து விட்டு தன்னகத்துள் நேசம் நிரப்பி என்னுள் நல்ல நண்பராக முகங்காட்டியவர் துன்பங்களைப் பகிர்ந்தோம். இன்பங்களை ரசித்தோம். பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி அலைந்தோம். மொத்தத்தில் அன்பு தவிர்ந்த வேறெந்த எதிர்பார்ப்புமில்லாத பிணைப்பு எமக்கு சொந்தமானது.

இன்ஷா அல்லாஹ்..................!

என் ஆரம்ப கால நகர்வுகளில் நட்புள்ளங்கள் என் பதிவுகளுக்கு தந்த ஊக்குவிப்புக்கள் தான் இன்றும் என்னை  சிந்தனைக்குள் குவியப்படுத்தி நிறைய எழுத வைத்துள்ளது. என்னாலும் எழுதமுடியும் எனும் நம்பிக்கையை என்னுள் வார்த்து நிற்கின்றது. ...இன்று முகநூலில் எனக்கென்றும் சிறு நட்பு வட்டங்களை உருவாக்க என் எழுத்துப் பிரவேசம் களம் தந்திருப்பதை நான் மறுப்பதற்கில்லை. நன்றியோடு என் நண்பர்களை நினைவுகூறுகின்றேன்

நம் வாழ்வில் நடைபெறும் எந்த முதல் சம்பவங்களும் மறக்கப்பட முடியாதவை. அவை நெஞ்சக்கல்வெட்டில் பதிக்கப்பட்டு நம் ஆயுள் முழுதும் நடமாடக்கூடியவை . அதனை அன்றுணர்ந்ததால் இன்றிந்தப் பதிவும் எனக்குச் சொந்தமாகிக் கிடக்கின்றது.........................

எல்லாம் நேற்று நடந்தது போல நாட்கள் எவ்வளவு விரைவாக நகர்கின்றன. இந்த நகர்வில் எத்தனை அனுபவங்களை உள்வாங்கி எம் நிதர்சன வாழ்வில் பதிக்கின்றோம். பல புதிய நண்பர்களின் சேர்க்கை. பழைய நட்புக்களின் பிரிதல், முரண்பாடுகள், சீண்டல்கள்,  நேசப்பகிர்வுகள், முகநூல் ராஜ்ஜியத்திலும் இவை தாராளமாக இருக்கின்றன. ஏனெனில் நாம் நடமாடிக் கொண்டிருப்பது உயிர்ப்புள்ள உலகம்.