About Me

2012/08/05

இதயம் நுழைந்து



ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு.......இன்று  (05.08.2012) !

உலக அரங்கினிலே தன் அன்பான கரங்களை அசைத்து வருகின்றது உலக நட்பு தினம்.

1935 ம் ஆண்டுப் பொழுதொன்றில், கொல்லப்பட்ட தன் நண்பனுக்காக மறுநாள் தற்கொலை செய்து கொண்ட நண்பர்களின் உயிர்த்தியாகமே இன்று உலக நட்பு தினமாக அமெரிக்க அரசின் அங்கீகாரம் பெற்று நம்மையும் அணைத்து நிற்கின்றது.

இங்கு நான் பேசப் போகின்ற நட்பு உண்மையான நட்பைப் பற்றியே!

ஏனெனில் சுயநலம் அதிகரித்த நிலையில் தம் தேவைகளை நிறைவேற்றும் குறுகிய நோக்கோடு நட்பு வேடமிடும் வேடதாரிகள் இன்று சமூகத்தில் தாராளமாக உலவுகின்றார்கள். அவ்வாறான  நட்பை மாசுபடுத்தும் கொடுங்கோலர்களை   புறந்தள்ளியவளாகவும், பஞ்சமா பாதகங்களுடன் கூடிய , காமம், இனவாதம், வன்முறை, போதைப் பொருள் பாவனை போன்ற தீமைகளின் ஒன்றுகூடலுக்காக தீய நட்பைக் கூடி சமூகத்தையும், தனி மனிதரையும் சீரழிக்கும் தீய நட்பினரின் வேரை அடியோடு கத்தரித்து விடத் தயங்கக் கூடாது எனும் சிந்தனையோடும் என் கரங்கள் இணைய வலைப்பூவை உயிர்ப்பிக்கின்றன இப்போது !.

மனித உணர்வுகளிலேயே உன்னதமான உணர்வே நட்பு. இங்கு இதயங்கள் தம் வேறுபாடுகளைக் களைந்தெறிந்தே பேசுகின்றன..இன்பத்தில் சிரித்தும், துன்பத்தில் கண்ணீர் விட்டும் அழக்கூடிய உன்னதமான  உயிரின் நெருடலே நட்பாகும்!

நம் வாழ்வுப் பயணத்தில் நம்மோடு பயணிக்கக்கூடிய ஒத்த மனவெண்ணமுள்ளவரே நமக்குள் நண்பராக முகங் காட்டுகின்றார்கள். நமது சிந்தனைகளை வழிப்படுத்தக் கூடிய ஆற்றல் இந்த நட்புமுகங்களுக்கே உள்ளது. ஏனெனில் இரத்த உறவுகளுக்கிடையே ஊடுருவும் பாச அதிர்வுகளையும் விட, எவ்வித எதிர்பார்ப்புமில்லாத இந்த நட்பினரின் நேச அதிர்வுகளின் வலிமை அதிகமானதுதான். நம்மை நாமே உணர்ந்து கொள்ள முகங் காட்டும் கண்ணாடியே இந்த நட்பினர்.....நம் வாழ்க்கைப் போக்கைத் தீர்மானிக்கும் விதிக் கரங்களாக இந் நட்பினர் திகழ்கின்றனர்...

நட்பினருக்கிடையே பேதமைகள் பெரிதாக முளைவிடாது, முளைவிடவும் கூடாது. சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் எட்டிப்பார்த்தாலும் கூட  அவை உடனடியாக அகற்றப்பட்டு தம் அன்பை மென்மேலும் விசாலப்படுத்துவதாகவே அமையும். ஒழுக்கம், விழுமியம், கலாசாரம் என்பவற்றினை உயர்ந்த மட்டத்தில் வழங்குபவராக இந் நண்பர் விளங்கும் போது அது நம்மில் நிரந்தரப் பதிவாகி நம் ஆளுமையிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது..

ஆண்- ஆண், பெண்- பெண் எனும் ஒருபால் நட்பானது கலாசாரத்தின் சிறந்த பேணலாக எப்பொழுதும் விளங்கினாலும் கூட, இன்று உலகமானது நவீனத்தின் பால் நகர்ந்து கொண்டிருப்பதாலும், உலகத்தின் செயற்பாடுகள் தகவல் தொழினுட்பத்தினூடு  விரைவுபடுத்தப்பட்டிருப்பதாலும் ,ஆண்- பெண்  நட்பானது சாதாரண விடயமாகவே  இவ்வுலகத்தில் உலா வருகின்றது.ஆண்- பெண் நட்பானது கண்ணாடியில் பயணிக்கும் பயணத்திற்கு ஒப்பானது. ஏனெனில் நட்பில் காட்டப்படும் அதிக நெருக்கமானது காதலாக மாறக்கூடிய அதிக சந்தர்ப்பங்களுண்டு. ஆனால் இப்பொழுதெல்லாம் பெரும்பாலான காதலின் இதயங்கள் இளைப்பாறத் துடிப்பது காமத்தின் மடிதனிலேயே! இக் காமத்தின் முதல் தொடுகையாக இருப்பதென்னவோ முத்தப்பரிமாற்றமே!இந்த நெருக்கம் சற்று இடறினால் சேதமடைவது பெண்கள் வாழ்க்கையே......!
இருந்தும் இன்று ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் பழகக் கூடிய தூய்மையான பல ஆண்- பெண் நட்புக்கள் தம பெயரை ஆரோக்கியமாக காலத்தின் சுவற்றில் பதித்து வருவது மனநிம்மதி தரக்கூடியதே!

நம் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் பல நண்பர்கள் முகங் காட்டியிருப்பார்கள்.
பால்ய பருவத்தில் ஆண் பெண் பேதமில்லாத, விளையாட்டிலும் கல்வியிலும் அக்கறை செலுத்தும் சிறு வயது நண்பர்  கூட்டங்கள்...

கல்லூரியில் கற்கின்ற காலத்தில், வாழ்க்கையைப்  ஓரளவு புரிந்து அதற்கேற்ப நாம் இலட்சியங்கள் வகுத்து நடைபயில முயற்சிக்கையில் அதற்கு  ஊக்குவிப்பும், ஒத்துழைப்பும், நேசமும் ,அறிவுத் தேடலில் பங்களிப்பும் தருவதுடன், நமக்குள் முகிழ்க்கும் கனவுகளை அரங்கேற்ற அழகான மடி தரும் வாலிப வயதைச் சார்ந்த நட்பினர்...

கல்வி கற்று முடிந்து தொழில் தேடும் தருணத்தில் வாழ்வில் நாம் பல பொழுதுபோக்கு அம்சங்களில் இணைந்து கொள்வதுடன் , நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு ஆறுதலும், தீர்வும் தரக் கூடிய நம் தேவைகளை இனங்கண்டு உதவக்கூடிய வாலிப வயது நட்பினர்............

தொழில் வாழ்வில் இணையும் போது அத் தொழில் உலகோடும், புற வாழ்வின் இயல்பான போக்கோடும் ஒத்துப் போகக்கூடிய, ஆலோசனை தரக்கூடிய, அனுபவங்களோடு நட்பையும் திரட்டக்கூடிய இள வயது நட்பினர்...

முதுமை வாழ்விலோ தம் கடந்த காலத்தில் உதிர்க்கப்பட்ட  இளமையான ஞாபகங்களையும், தம் குடும்ப உறவுகளின் செழிப்புக்களையும் , வாழ்க்கை கண்டெடுத்த வெற்றி , தோல்விகளை மீட்டும் மனநிலையை பகிரக்கூடிய, வாழ்வின் இறுதிநாட்களை நகர்த்துகின்ற முதுமைப் பருவ நட்புக் கூட்டத்தினர்.........

இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் நாம் மறக்க முடியாத ஒவ்வொரு முகங்கள்...நம்மைப் பிண்ணிப்பிணைந்து கொண்டுதான் வருகின்றன.

நம் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத போது, அங்கு எட்டிப்பார்ப்பவை ஏமாற்றங்கள் மட்டுமல்ல பிரச்சினைகளும் தான். பிரச்சினைகள் நம் வாழ்வைத் தொட்டுப்பார்க்கும் போதெல்லாம் தேவைகள் நம்மால் நிறைவேற்றப்பட முடியாமற் போகின்றன. எனவே பிரச்சினையெனும் இந்தச் சிக்கலை அவிழ்க்கும் ஆலோசகர்களாக நம் முன்னே வருபவர்களும், நாம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்திருப்பவர்களும் நமது நண்பர்களே! ஏனெனில் வாழ்க்கையானது பிரச்சினைக்குள் அமிழ்ந்து விடும் போது நாம் மனஅழுத்தங்களோடு போராடுபவர்களாகவே இருக்கின்றோம். அத் துயரத்தைத் தூசாக்கும் கரங்களாக நம்மை அரவணைப்பவை இந் நட்பினர் கரங்களும், அவர்களது ஆறுதலான வார்த்தைகளும் தான்!

"உன் நண்பனைக் காட்டு, உன்னைப் பற்றிக் கூறுகின்றேன்"

இது ஓர் அனுபவ மொழி....!

உண்மையில் நம் நண்பர்களின் நடை, உடை, பாவனை நம்மில் செல்வாக்குச் செலுத்தக்கூடியது..அதுமட்டுமல்ல நாம் அறிவைத் தேடக் கூடிய, கண்டெடுத்த விடயங்களைப் பரிமாறக்கூடிய நம் அந்தரங்கங்களைக் கூட நம்பிக்கையோடு பகிரக்கூடிய இடம்தான் நண்பர்களின் மனம்!

உண்மை நட்பின் நேச ஆழம் சமுத்திரங்களை விட ஆழமானவை..இந்தப் பிரபஞ்சத்தை விட பரந்தது..அதனை அளவிடமுடியாது. உணர்வுகளால் மட்டுமே பசுமைப்படுத்தவே முடியும்.இவ்வுலக வாழ்வின் போக்கு செல்வத்தால் தீர்மானிக்கப்படக்கூடியதாக இருந்தாலும் கூட, அவற்றையெல்லாம் ஓரந் தள்ளிவிட்டு இந் நட்புச் செல்வம் நம் மனங்களை மங்களகரமாக முடிசூட்டிக் கொள்ளும் என்பது மறுக்கமுடியாத உண்மை!

மதம், மொழி, நாடு, இனம், வயது , அந்தஸ்து போன்ற அனைத்து வேறுபாடுகளும் களையப்பட்டு, மனங்களால் ஒன்றிணைந்து மகிழ்வோடு நாம் நடமாடும் உலகமே இந்த நட்புலகம். நம் பரஸ்பர நட்பின் இதமான பரிமாற்றம் உயிர், உணர்வுகளை ஊடுருவக்கூடியதென்பதால்தான்  நம் பழைய சிந்தனைகள் களையப்பட்டு ஒவ்வொரு கணங்களும் நட்பால் மீளப் புதுப்பிக்கப்படுகின்றோம்.

தத்தமது விருப்பு வெறுப்புக்களை மறந்து, மறுத்து பொதுப்படையான ஒருமித்த எண்ணத்துடன் பயணிக்கும் இந்த  நட்பின் ஆரோக்கியம், ஆயுள் அழகான கவிதையாய் வார்க்கப்படுகின்றது. நட்பின் மகத்துவத்தை வெறும் வார்த்தைகளால் நாம் வடிக்க முடியாது. ஒவ்வொரு நெஞ்சுக்குள்ளும் பிடித்தமான நட்பின் ஞாபகங்கள் அவர்கள் மனதை சிறைப்பிடித்து ரசித்துக் கொண்டுதானிருக்கின்றது..உண்மை நட்பால் அன்பைத் தவிர வேறெந்த பலனையும் எதிர்பார்க்கமுடியாது.

"உயிர் காப்பான் தோழன்"

எனும் இந்த வாக்கியமே அதன் ஆழச்சிறப்புக்குப் பொருத்தமான முகப்பாகும். இரு மனங்கள் வரைந்திடும் இந்த நேசச் சாதனம் நாள்தோறும் பொலிவிழக்காது வளர்பிறையாய் வளரக்கூடியது. வாழ்க்கையில் முகம் காட்டிச் செல்லும் நட்பினரின் பாசமும், முகங் காட்டாத முகநூல் நட்பினரின் நேசமும் நம்முள் தந்து நிற்கும் அழகிய நினைவுகளை ஆழ் மனதிலிருந்து மீட்டும் தருணமிது.

நாம் நேசிப்பவர்களை கைகுலுக்கி, வாழ்த்துக்களைப் பரிமாறும் ஆனந்த நாளின்று! நாம் இன்றைய நாளில் நம் எண்ணங்களில் நறுமணம் பூசி நம் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை வார்த்தைகளாகவோ அன்றி செய்திகளாகவோ பரிமாறும் போது அந்த நட்பின் பெருமை இன்னும் பல படிகள் மேலே உயர்த்தப்படுகின்றது..அன்பின் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்படுமிந்த நட்பை மதங்களும் , நூல்களும் , காவியங்களும் போற்றத் தவறவில்லை.

பொய்யா மொழிப்புலவராம் வள்ளுவர் தன் திருக்குறளில் நட்பின் சிறப்பை மேன்மைப்படுத்தியுள்ளார். "நட்பு" , "நட்பாராய்தல்". "பழைமை", "தீ நட்பு", "கூடா நட்பு" எனும் ஐந்து அதிகாரங்களில் நட்பின் பண்பு சொல்லப்பட்டுள்ளது. வெறும் முக பாவத்திலல்ல உள்ளத்தின் மேற்பரப்பிலிருந்து இந் நட்பு எழ வேண்டுமென்பதே வள்ளுவரின் ஆதங்கம் என்பதனை இக் குறள் துல்லியமாக நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு" (குறள் 786)

எம் பெருமானார் நபி (ஸல்) அவர்களின் தோழர்களும், மகாபாரத்தில் செஞ்சோற்றுக் கடன் செலுத்தும் கன்னனும், இராமாயணத்தில் ராமன் உயிர் காக்கும் சடாயுவும், அனுமானும் இன்னும் பலரும் நட்பின் இதிகாசங்களாய் நம் ஞாபகப் பரப்பில் வந்து போகின்றனர்.

"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே நண்பனே" என உயர்ந்தவர்களில் நடிகர் திலகமும், மேஜர் சுந்தரராஜனும் நம்மை நெகிழ்வித்தனர். நட்பின் பிணைப்பைப் பற்றி பல சினிமாப் பாடல்கள் அன்றாடம் வந்து கொண்டுதானிருக்கின்றன.

உன்னதமான  இந் நட்பைப் பகிர்ந்து கொண்ட நாம், இன்றைய தினம் மட்டுமல்ல என்றும் அந் நட்பைக் கௌரவப்படுத்தி அதனை நம்முடன் அணைத்துக் கொள்வோமாக

என் நட்பினர் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்..

ப்ரியத்துடன்-

       -----ஜன்ஸி கபூர் -------











2012/08/04

மயக்கம்


தொலைவின்................
நிசப்த நெருடலில் - தன்
ஒளி விரல்களால் எனை வருடும்
நிலாக்கசிவில்.........
அலைந்து கொண்டிருக்கின்றது
மங்கலாய் உன் முகம்!

அன்றுன்னால்............
அழுகிப் போன - என்
கருவளையங்களின் மூச்சிரைப்பில்
மீண்டுமுன்............
ஆத்மாவின் முனகல்
ரகஸியம் பேசுகின்றது!

எல்லாமே நேற்றுப் போலிருக்கின்றது
உன்னிடம் தோற்றுப் போன
என் அன்பும்...........
கரைந்து போன கன்னமும்.........
கனவாகிப் போன நிஜங்களும்.........
எல்லாமே தோற்றுப் போய் !

எதுவுமேயில்லை என்னிடம்
இப்போது............!
நீ தந்த சோகங்களும்
காயங்களும்
அவமானங்களும் தவிர!

என் உயிரணுக்களைப் பிழிந்து
நீயிட்ட தீ..........
இன்னும் வெம்மைக் கசிவோடு
நசிந்து கொண்டுதானிருக்கின்றது
இன்னொரு ஆதவனாய்!

உன் மனதோரத்தில்
மரித்துக்கிடந்த என் ஞாபகங்கள்
மீண்டும் உயிர்த்தனவோ
உன்னுள்!
மெல்லக் கதவைத் தட்டுகின்றாய்
என்னுள் - ஆனால்
நான் மரணித்ததையறியாமலே!

அன்றுன் சுயத்திற்காய்- என்
சுயவரக் கனவுகளில்
முட்கீரீடம் வார்த்தவுன்
கரங்கள்...........
மீண்டுமென் திசைநோக்கி
அணைக்கத் துடிக்கின்றன
அப்பாவித்தனமாய்!

உன்னால்
எனக்குச் சொந்தமாகிப் போன
சமுத்திரமும்...........
பாலை நிலங்களும்
எனைப் பரிதாபமாய் பார்க்க
நீயோ
புறப்பட்டுவிட்டாய்- என்
சாலைகளில் உலா வர!

ஜன்ஸி கபூர் 










2012/08/03

என்றும் நேசத்துடன்


முகநூலில் நான் கலைப் பயணம் மேற் கொள்ள, நீங்களும் தடமாகியுள்ளீர்கள் என்பதை நன்றியுடன் நினைவுகூறுகின்றேன். என் பதிவுகளுக்கு விருப்புக்களும், பின்னூட்டங்களும் தந்துள்ள உங்களுக்கு என் நன்றி.......என்றும்


முத்து சதீஷ் குமார்


மலீக்  Sfn ***



சீனா ஷரீப் ***



உதயதர்சினி குமார் ***




பிரதீபன் ஸ்ரீனிவாசன் ***



செல்வ குமாரன் ***




Rasna Sajith



Selvi Maran



MJ Rita Raj ***





Fazaan Abdul ***



Siman  Tg




Jaffna Menan ***


Shiyam Sahana ***
Sree Dhandapani
 Mohamed Gani






இறைவனிடம் கையேந்துவோம்


புகழ் அனைத்தும் அவன் ஒருவனுக்கே!

மனித இனத்தை அற்புதமாகப் படைத்து அருள் பரிபாலிப்பவன் இறைவன் ஒருவனே. எமக்குரிய அழகிய வாழ்க்கையை , வாழ்வின் ஒழுக்க நெறிகளை அழகாக கற்றுத் தந்தவனும், கற்றுத் தருபவனும் அவனே!

நம்மைப் படைத்து நமது செயல்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் அவனே, நம் எண்ணங்களை அளந்தும், அடையாளமிட்டும் அதற்கேற்ற கூலியைத் தருபவனாக இருக்கின்றான்.

இம்மை, மறுமையின் விளைநிலம். எனவே நாம் செய்கின்ற செயல்கள் இவ்வுலகத்துடன் முற்றுப் பெறாமல், மறுமைக்கான நிகழ்வுகளின் அடித்தளமாகவும் இருக்கின்றது. மறுமை நமது நிம்மதி கூடமாக இருக்க வேண்டுமானால் இம்மையில் நாம் செய்யும் நமது செயல்கள் யாவும் இறைவனின் அருளைப் பெற்றுத் தருபவையாக இருக்க வேண்டும். அந்த வகையில் இறைவனுடன் நாம் நேரடியாகப் பேசவும், அருளையும், இறை மன்னிப்பையும் பெற்றுத் தரக்கூடியதுமான  மாதமாக ரமழான் மாதமிருக்கின்றது.

இம் மாதத்தில் ஒருவர் நோன்பிருப்பது இறைவனுக்காகவே. அந்த நோன்பினூடாகவே இறைவன் தன் அடியார்களுடன் நெருக்கமாகின்றான் .நமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இறைவன் நோன்பை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளான்.

அல்லாஹ் முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக நபி (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள்.

"ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும், நடுப்பத்து நாட்கள்  மக்ஃ  பிரத் எனும் பாவ மன்னிப்புக்குரியதாகவும், கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக்க;டியதாகவும் உள்ளது "

என நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக  நூல் இப்னு குஜைமா வை ஆதாரப்படுத்தி ஸஹ்ல் ரளியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நாம் நமது வாழ்வில் பல நல்ல செயல்களைச் செய்யவே முயற்சிக்கின்றோம். ஊக்கப்படுத்தப்படுகின்றோம்.  எனினும் நமது தேவைகளை நிறைவேற்ற நாம் முற்படும் போது நம்மையுமறியாமல் பலஹீன நுழைவாயினுள் தள்ளப்படுகின்றோம். சுயநலம் என்பதும் ஓர் பலஹீனமான உணர்வே. ஏனெனில் சுயநலத்தின் பொருட்டு நமது உளம் உறுதியற்று தளம்பலடைந்து பிறருடன் முரண்படக்கூடிய, பாவம் தரக்கூடிய செயல்களிலும் ஈடுபட்டு விடுகின்றது. நாம் ஒருபுறம் இறையருளை நாடி நற்செயல்களிலீடுபட்டுக் கொண்டிருக்க மறுபுறம் நம்மையமறியாமல் சில பாவங்களையும் தொட்டு விடுகின்றோம். பொய் பேசுதல், புறங் கூறுதல், விரோதம் கொள்ளுதல், பொறாமைப்படல், களவெடுத்தல் போன்ற உணர்வுகள் கூட பாவத்திற்கான சமிக்ஞ ஆகும்.

எனவே எம்மை நாம் உணர்ந்து, எமது செயல்களை அடையாளப்படுத்தி அவற்றில் அதிகமதிகமான நன்மைகளைச் சேர்க்கவும்,  அறியாமற் செய்த தவறுகளை மானசீகமான உணர்ந்து, இறையோனிடத்தில் மன்றாடி பாவ மன்னிப்புக் கோரவும்  நமது சிந்தனையை வழிப்படுத்த வேண்டும். எனவே இந்த மாதம் அல்லாஹ்வுடன் நம்மை அதிகம் நெருங்க வைப்பதால் நமது சிந்தனையை அவன் பால் பொருத்தி அதிக சிரத்தையுடன் நம்மை வழிப்படுத்த முயலவேண்டும்.

றமழான் மாதத்தில் அதிகமாக "லாஇலாஹா இல்லல்லாஹ் "என்ற திருக்கலீமா ஓதுவதும், குர் ஆனுடன் அதிக தொடர்பு கொள்வதும், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்பதும், அல்லாஹ்விடம் சொர்க்கம் தரும்படி கேட்பதும், நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவதும் நாம் இம் மாதத்தில் செய்ய வேண்டிய முக்கிய விடயங்களாக உள்ளது. இவை அல்லாஹ்வுடனான நெருக்கத்தை மேலும் பலப்படுத்தும். இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் செய்கின்ற எந்த நன்மைகளும் பர்ளுக்கான அந்தஸ்தைப் பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்காகும்.

எனவே முதல் பத்து நோன்பிருந்து அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக் கொண்ட நாம், தற்போது அடுத்த பத்திற்குள் உள்ளடங்கும் நோன்பிலிருக்கின்றோம். இரண்டாவது பத்து நோன்பு நமக்கு பாவமன்னிப்பு பெற்றுத் தருகின்ற நாட்களாகும். எனவே இந் நாட்களில் நாம் இறைஞ்சுகின்ற பாவமன்னிப்புக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக எம் பெருமானார் (ஸல் ) அவர்கள் கூறுகின்றார்கள்.

"நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி, இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன்"

எனக் கூறுகின்றார்கள். (ஆதாரம் - நூல் புகாரி )

இந்த மாதத்தில் அல்லாஹ்விடம் நாம் உதவிகோரி கையேந்தும் போது அவன் தன் அருளினாலும், நோன்பின் பரகத்தினாலும் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். ஷிர்க்கைத் தவிர நாம் செய்த தவறுகளையும் மன்னித்து தனது கருணையால் நமக்குள் ஈடேற்றம் தருகின்றான்.

இறைவன் கூறியதை நபிகள் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:-

"ரமளானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்"

(நூல் - புகாரி)

ஒரு நோன்பாளி, இறைவன் தன்னை எந்நேரமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றான் எனும் சிந்தனை மேலீட்டால் , கடந்த காலத்தில் தான் செய்த பாவங்களை நினைத்துப் பார்ப்பான். அப்பொழுது அப்பாவ நினைவுகள் அவன் மனதை வருத்தும். அப் பாவங்களை மீண்டும் செய்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமன்ற எண்ண மேலீட்டால், மீண்டும் அப்பாவங்களின் பால் தான் செல்லக்கூடாதென உறுதியெடுத்தவனாக, மனமுறுகி முறையாக பாவ மன்னிப்புக் கேட்கும் போது, அவனது நோன்பின் பரகத்தால் அல்லாஹ்வும் பாவ மன்னிப்பைத் தருபவனாக இருக்கின்றான். ஒவ்வொரு தொழுகையின் பின்பும் , தஹஜ்ஜத் தொழுகையின் பின்னும் பாவ மன்னிப்பு நாம் கோர வேண்டும்.

நம்மை இறைவன் எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். அதனால் நமது நல்ல செயல்களுக்கு நன்மையும், தீய செயலுக்கு தீமையும் நிச்சயம் வழங்குபவனாகவும் இருக்கின்றான் எனும் எண்ணத்தை உள் வாங்கி
நோன்பிருப்போமானால், அந் நோன்பு நிச்சயம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ரஹ்மத் எனும் கருணையை நமக்குப் பெற்றுத் தரும். அது மாத்திரமின்றி இறை மன்னிப்பால் நரக நெருப்பில் வீழாமல், ஈடேற்றம் பெற்று சுவர்க்கத்தில் நுழையும் பாக்கியவாதிகளாக மாறுவோம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்-

"சொர்க்கத்தில் "ரய்யான்" என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும்
அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும்"

(அறிவிப்பவர் :- ஸஹ்ல் ரளியல்லாஹூ அன்ஹூ , நூல் - புஹாரி )

நமது குற்றங் குறைகளின் கறை போக்கிடவே, அல்லாஹ் த ஆலா விடம் பாவமன்னிப்பைப் பெற்று ஈடேற்றம் காண எமது நோன்பும், துஆ ப் பிரார்த்தனைகளும் வழி தரட்டும்........மனதில் ஈமானிய பசுமைகள் பூக்கட்டும்!

வஸ்ஸலாம்