About Me

2012/08/03

இறைவனிடம் கையேந்துவோம்


புகழ் அனைத்தும் அவன் ஒருவனுக்கே!

மனித இனத்தை அற்புதமாகப் படைத்து அருள் பரிபாலிப்பவன் இறைவன் ஒருவனே. எமக்குரிய அழகிய வாழ்க்கையை , வாழ்வின் ஒழுக்க நெறிகளை அழகாக கற்றுத் தந்தவனும், கற்றுத் தருபவனும் அவனே!

நம்மைப் படைத்து நமது செயல்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் அவனே, நம் எண்ணங்களை அளந்தும், அடையாளமிட்டும் அதற்கேற்ற கூலியைத் தருபவனாக இருக்கின்றான்.

இம்மை, மறுமையின் விளைநிலம். எனவே நாம் செய்கின்ற செயல்கள் இவ்வுலகத்துடன் முற்றுப் பெறாமல், மறுமைக்கான நிகழ்வுகளின் அடித்தளமாகவும் இருக்கின்றது. மறுமை நமது நிம்மதி கூடமாக இருக்க வேண்டுமானால் இம்மையில் நாம் செய்யும் நமது செயல்கள் யாவும் இறைவனின் அருளைப் பெற்றுத் தருபவையாக இருக்க வேண்டும். அந்த வகையில் இறைவனுடன் நாம் நேரடியாகப் பேசவும், அருளையும், இறை மன்னிப்பையும் பெற்றுத் தரக்கூடியதுமான  மாதமாக ரமழான் மாதமிருக்கின்றது.

இம் மாதத்தில் ஒருவர் நோன்பிருப்பது இறைவனுக்காகவே. அந்த நோன்பினூடாகவே இறைவன் தன் அடியார்களுடன் நெருக்கமாகின்றான் .நமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இறைவன் நோன்பை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளான்.

அல்லாஹ் முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக நபி (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள்.

"ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும், நடுப்பத்து நாட்கள்  மக்ஃ  பிரத் எனும் பாவ மன்னிப்புக்குரியதாகவும், கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக்க;டியதாகவும் உள்ளது "

என நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக  நூல் இப்னு குஜைமா வை ஆதாரப்படுத்தி ஸஹ்ல் ரளியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நாம் நமது வாழ்வில் பல நல்ல செயல்களைச் செய்யவே முயற்சிக்கின்றோம். ஊக்கப்படுத்தப்படுகின்றோம்.  எனினும் நமது தேவைகளை நிறைவேற்ற நாம் முற்படும் போது நம்மையுமறியாமல் பலஹீன நுழைவாயினுள் தள்ளப்படுகின்றோம். சுயநலம் என்பதும் ஓர் பலஹீனமான உணர்வே. ஏனெனில் சுயநலத்தின் பொருட்டு நமது உளம் உறுதியற்று தளம்பலடைந்து பிறருடன் முரண்படக்கூடிய, பாவம் தரக்கூடிய செயல்களிலும் ஈடுபட்டு விடுகின்றது. நாம் ஒருபுறம் இறையருளை நாடி நற்செயல்களிலீடுபட்டுக் கொண்டிருக்க மறுபுறம் நம்மையமறியாமல் சில பாவங்களையும் தொட்டு விடுகின்றோம். பொய் பேசுதல், புறங் கூறுதல், விரோதம் கொள்ளுதல், பொறாமைப்படல், களவெடுத்தல் போன்ற உணர்வுகள் கூட பாவத்திற்கான சமிக்ஞ ஆகும்.

எனவே எம்மை நாம் உணர்ந்து, எமது செயல்களை அடையாளப்படுத்தி அவற்றில் அதிகமதிகமான நன்மைகளைச் சேர்க்கவும்,  அறியாமற் செய்த தவறுகளை மானசீகமான உணர்ந்து, இறையோனிடத்தில் மன்றாடி பாவ மன்னிப்புக் கோரவும்  நமது சிந்தனையை வழிப்படுத்த வேண்டும். எனவே இந்த மாதம் அல்லாஹ்வுடன் நம்மை அதிகம் நெருங்க வைப்பதால் நமது சிந்தனையை அவன் பால் பொருத்தி அதிக சிரத்தையுடன் நம்மை வழிப்படுத்த முயலவேண்டும்.

றமழான் மாதத்தில் அதிகமாக "லாஇலாஹா இல்லல்லாஹ் "என்ற திருக்கலீமா ஓதுவதும், குர் ஆனுடன் அதிக தொடர்பு கொள்வதும், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்பதும், அல்லாஹ்விடம் சொர்க்கம் தரும்படி கேட்பதும், நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவதும் நாம் இம் மாதத்தில் செய்ய வேண்டிய முக்கிய விடயங்களாக உள்ளது. இவை அல்லாஹ்வுடனான நெருக்கத்தை மேலும் பலப்படுத்தும். இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் செய்கின்ற எந்த நன்மைகளும் பர்ளுக்கான அந்தஸ்தைப் பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்காகும்.

எனவே முதல் பத்து நோன்பிருந்து அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக் கொண்ட நாம், தற்போது அடுத்த பத்திற்குள் உள்ளடங்கும் நோன்பிலிருக்கின்றோம். இரண்டாவது பத்து நோன்பு நமக்கு பாவமன்னிப்பு பெற்றுத் தருகின்ற நாட்களாகும். எனவே இந் நாட்களில் நாம் இறைஞ்சுகின்ற பாவமன்னிப்புக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக எம் பெருமானார் (ஸல் ) அவர்கள் கூறுகின்றார்கள்.

"நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி, இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன்"

எனக் கூறுகின்றார்கள். (ஆதாரம் - நூல் புகாரி )

இந்த மாதத்தில் அல்லாஹ்விடம் நாம் உதவிகோரி கையேந்தும் போது அவன் தன் அருளினாலும், நோன்பின் பரகத்தினாலும் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். ஷிர்க்கைத் தவிர நாம் செய்த தவறுகளையும் மன்னித்து தனது கருணையால் நமக்குள் ஈடேற்றம் தருகின்றான்.

இறைவன் கூறியதை நபிகள் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:-

"ரமளானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்"

(நூல் - புகாரி)

ஒரு நோன்பாளி, இறைவன் தன்னை எந்நேரமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றான் எனும் சிந்தனை மேலீட்டால் , கடந்த காலத்தில் தான் செய்த பாவங்களை நினைத்துப் பார்ப்பான். அப்பொழுது அப்பாவ நினைவுகள் அவன் மனதை வருத்தும். அப் பாவங்களை மீண்டும் செய்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமன்ற எண்ண மேலீட்டால், மீண்டும் அப்பாவங்களின் பால் தான் செல்லக்கூடாதென உறுதியெடுத்தவனாக, மனமுறுகி முறையாக பாவ மன்னிப்புக் கேட்கும் போது, அவனது நோன்பின் பரகத்தால் அல்லாஹ்வும் பாவ மன்னிப்பைத் தருபவனாக இருக்கின்றான். ஒவ்வொரு தொழுகையின் பின்பும் , தஹஜ்ஜத் தொழுகையின் பின்னும் பாவ மன்னிப்பு நாம் கோர வேண்டும்.

நம்மை இறைவன் எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். அதனால் நமது நல்ல செயல்களுக்கு நன்மையும், தீய செயலுக்கு தீமையும் நிச்சயம் வழங்குபவனாகவும் இருக்கின்றான் எனும் எண்ணத்தை உள் வாங்கி
நோன்பிருப்போமானால், அந் நோன்பு நிச்சயம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ரஹ்மத் எனும் கருணையை நமக்குப் பெற்றுத் தரும். அது மாத்திரமின்றி இறை மன்னிப்பால் நரக நெருப்பில் வீழாமல், ஈடேற்றம் பெற்று சுவர்க்கத்தில் நுழையும் பாக்கியவாதிகளாக மாறுவோம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்-

"சொர்க்கத்தில் "ரய்யான்" என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும்
அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும்"

(அறிவிப்பவர் :- ஸஹ்ல் ரளியல்லாஹூ அன்ஹூ , நூல் - புஹாரி )

நமது குற்றங் குறைகளின் கறை போக்கிடவே, அல்லாஹ் த ஆலா விடம் பாவமன்னிப்பைப் பெற்று ஈடேற்றம் காண எமது நோன்பும், துஆ ப் பிரார்த்தனைகளும் வழி தரட்டும்........மனதில் ஈமானிய பசுமைகள் பூக்கட்டும்!

வஸ்ஸலாம்



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!