சூரிய தீப்பந்தமொன்று
மெதுவாய் அணைந்த பிரமை
எனக்குள்!
வெட்ட வெளிகளின் பசுமையில்......
ஒட்டிக்கொண்டது வெம்மையின்
பிசுபிசுப்பொன்று!
என் பேனாக்கள்
பயணித்த வரம்போரங்களெல்லாம்.........
முள்வேலியாய்
ஈரம்சொட்டுதுங்கள் மௌன யாகம் !
வண்ணச்சிட்டுக்களுக்காய்
பா விசைத்து ...........
களிப்பால் பறக்க வைத்த வுங்கள்
சிறகுகளில் யாரிட்டது மரணச்சிலுவை !
எழுத்தணியில்
அழுத்தமாய் முற்போக்கு நுழைத்து.........
இலக்கிய வேள்விக்குள்
இரசனையோடு யதார்த்தம் நுழைத்த
நீங்களின்று..............
இரகஸியமாய் சுவாசமறுத்தே
மீளாத்துயிலுக்குள் நிரம்பிக் கொண்டீர்கள்!
வெள்ளிச்சிறகடித்த வுங்கள்
வெண்புறாவோ..............
இன்று
சுதந்திரமாய் தேசம் தொடுகையில்.........
தொலைதூரத்தி லும் வுரு துறந்து
ஏதுமறியாத குழந்தையாய் நீங்கள்!
தினகரன்
புதுப்புனலில் தடம் நெய்து - எனை
புதுவுலகில் நிலைநாட்டிய
உங்கள் ........
பேனாக்களின் ஈரலிப்பினை
உலர்த்தியது யாரோ!
எனை வார்த்த வுங்கள்
இலக்கியச்சாளரம்
சாய்ந்துதான் போனாலும் - என்
விழிச்சாரளத்தின்
விம்ப வெளியெங்கும்..........
உலா வருகின்றதே - உங்கள்
ஆசிபெற்றவென்
இலக்கிய நீரோடையின்று !
உதிர்ந்து விட்ட பல வருடங்கள்
இன்னும் நேற்றுப் போல்...................
நெஞ்சிலாணி யறைந்தே செல்கின்றது
உங்கள் ஞாபகங்களை
இலக்கியங்களாய்ப் பரப்பி!
உங்கள்.........
மரணத் தூரிகையின் வடு
இன்னும் என்னுள்
உலராத மேடுகளாய் வலிப்புடன்
விட்டுச் செல்கின்றது வெடிப்புக்களை!
மீள வரமாட்டீர்கள்!
புரிகிறது - இருந்துமென்
பதிவுகளின் ஸ்பரிசிப்பெல்லாம்.........
குருதாட்சணையாய்
உங்கள் ஞாபகத்தில் தொக்கி நிற்கும்
நல்ல மாணவராய்!
- Ms.A.C.Jancy -
(காலம் சென்ற எழுத்தாளர் ஸம்ஸ் சேர்..............அவர்கள்!
முன்னர் தினகரன் பத்திரிகையில் (சனிக்கிழமையில் )பிரசுரிக்கப்பட்ட புதுப்புனல் இலக்கிய சோலையில் என்னையும் உட்பதித்தவர்....அன்று துணிச்சலாக அவர் ஏற்றுக்கொண்ட என் கதைகளும், கவிதைகளும் தான் இன்று எனக்குள் ஓர் அடையாளத்தைப்பதித்து சர்வதேசத்தில் என்னையும் உலாவ , எழுத வைக்கின்றது!)