About Me

2012/12/13

காதல் வந்தால்


பருவம் வந்ததில்
கருப்பொருளாய் காதல்.........!

ஆத்மாவின் சரீரங்களில்
அழகான அவஸ்தை!

முட்களின் படுக்கையிலும்
ஆட்கொள்ளும் பஞ்சணைகள்!

காதல்...........
மகிழ்வின் கைத்தடி!

கனவுக்குள் எதிர்பார்ப்புக்களை
ஏற்றி வைக்கும் ஏணி!

உதடுகளின் உல்லாசம்.........
உற்பத்தியாகும் மின்சாரமாய்!

இறக்கைகள் சுமக்கும் சிலுவையாய்
உருமாறும் இதயங்கள் !

செல்லின் சிணுங்கல்களில்- உயிர்
செல்கள் செல்லமாய் முறைக்கும்!

காத்திருப்புக்களில்.........
வியர்த்திருக்கும் கடிகார முட்கள்!

விடியலை இருளாக்கி
இருளை விடியலாக்கும் மந்திரம்!

சுனாமியின் சுழற்சி போல்
தடுமாறும்  மனசு!

கிறுக்கல்கள் கவிதையாகும்
புலம்பல்கள் காவியமாகும்!

நிலவும் விண்ணும்
களவாய் அடிக்கடி கால் தொடும்!

நினைவுகளின் நெருடல்களெல்லாம்.........
கனத்துக் கிடக்கும் போதையில்!

விழித் தேடலில் எப்பொழுதும்
வீழ்ந்து கிடக்கும் ஓர் உருவம்!

நெஞ்சக் கூட்டுக்குள் பத்திரமாகும்- சிதறிய
கொஞ்சல்களும் வருடல்களும்!

அட........இதுதாங்க காதல்!





அவள்


தொலைந்து போன வசந்தங்களுக்காய்
யாகமிருக்கும்
சராசரிப் பெண்!

வறுமைக் கற்பழிப்பால்
வசந்தங்களைத் தொலைத்த 
(அப்) பாவியிவள்!

கண்ணாடிச் சிதறல்களின்
சாம்ராஜ்ஜியத்தில் 
முடி சூட்டிக் கொண்ட ராணியிவள்!

காற்றின் காமத்தில்
மூச்சுத் திணறும் குப்பி விளக்கில் 
எரிந்து கொண்டிருக்கின்றது
அவள் ஆசைகள்!

அவள் மனச் சிதைவுகளின் விம்பங்கள்
 தெறிக்கின்றன 
விரக்தியாய்!

இதழ் சிதைக்கப்பட்ட
ரோசாத் துண்ட மவள் 
வீழ்ந்து கிடக்கின்றாள் அடுக்களையில்!

புகையுறிஞ்சித் தோற்றுப் போன
சுவாசம் 
சுகம் தேடி அலைந்து கொண்டிருக்கின்றது!

துரத்திச் சென்ற நாட்களெல்லாம்
உணர்வறுத்து 
கண்ணீருக்குள் அவிந்து போனதில்

விரல்களில் விழுந்து கிடந்த
மருதாணிச் சாறு.கூட 
மூச்சையற்று வெளிறித்தான் கிடக்கின்றன!

உதரக் குழி விட்டுச் செல்லும்
பசி 
அடிக்கடி
அலைந்து கொண்டிருக்கின்றது அனாதையாய்!

கிழிசல்களால்
இளைப்பாறிக் கொண்டிருக்கும் மேனியோ 
பருவத்தைக்  கரைத்துக் கொண்டிருக்கின்றது
காலாவதியாகி !

யார் யாரோ நினைவுக்குள்
எட்டிப் பார்த்துச் செல்கின்றனர் 
அனுமதியின்றி!

சிரிக்கின்றாள் மெதுவாய் 
பூச்சியங்களைத் தொடாதவர்களின்
ராச்சியங்கள் கூட அவள் வசமில்லை!

ஏனெனில் 
அவள்
ஏழ்மை எழுதிச் செல்லும்
புதுக் கவிதை!

ஜன்ஸி கபூர் 

2012/12/12

மாயன் கலண்டர்


(இந்தப் பதிவை வாசிப்பவர்கள் கவனத்திற்கு, மாயன் கலண்டர் பற்றியே தற்போது பேசப்படுவதால், அது தொடர்பான பார்வையே இது. எல்லாவற்றி்ற்கும் மேலாக, படைத்த இறைவனை மீறி உலகை அழிக்கும் சக்தி ஏதுமில்லை எனும் நிலைப்பாட்டுடனேயே இப்பதிவை வெளியிடுகின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ்!

2012 டிசம்பர் 21....................!

உலகம் பரபரப்புடன் விழி வைத்துக் காத்திருக்கின்றது. உலக அழிவு என்ற ஒன்று இருப்பதை சகல சமயங்களும் ஏற்றுக் கொண்டாலும், அந்த தினம் நிச்சயமாக 2012 டிசம்பர் 21 ஆக இருக்காது என அடித்துக் கூறுகின்றது.

உலக அழிவு தொடர்பாக புனித குர் ஆனில் பல அறிகுறிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சில தஜ்ஜால் வருகை, கடும் புகை, ஈஸா நபி மீள் பிறப்பு ஆகும்.

கிறிஸ்தவ சமயமும் பின்வருமாறு கூறுகின்றது-

உலக அழிவு என்பது இறுதித் தீர்ப்பு நாள், அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். நல்லவர்களாக மரணிக்க வேண்டும் என்கின்றது.

பௌத்தம் பின்வருமாறு கூறுகின்றது.

உலகம் உடையக் கூடியது. அதர்மம் செய்பவர்கள் அதிகரிக்கும் போது உலகம் தானாக உடைந்து விடும் என்கின்றது.

விஞ்ஞானிகளோ, மனிதனின் செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் இயற்கைச் சீற்றமே உலகை நசுக்கி விடக் கூடியது என்கின்றனர்.

ஆக மொத்தத்தில் உலகம் அழியாது என நாசாவும், விஞ்ஞானிகளும், சமயங்களும் உறுதியாகக் கூறும் போது மாயன் கலண்டர் மட்டும் அழியும் எனச் சுட்டி நிற்கின்றது. இவ்வாறான பரபரப்பினால் உலகம் அழியுதோ இல்லையோ மாயன் நாட்காட்டி தொடர்பான விபரம் பலருக்கு தெரிந்திருக்கின்றது.

மாயன் நாட்காட்டி  அல்லது கலண்டர் என்றால் என்ன எனும் தேடலில் நானும் ஈடுபடத் தொடங்கிய போது கிடைத்த தகவல்களை இங்கு பகிர்கின்றேன்.

உலக நாகரிக வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட எகிப்திய நாகரிகம் நிலவிய காலத்தில், கி்மு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னமேரிக்காவில் உள்ள மெக்சிக்கோ, குவாதிமாலா, ஹூந்திராஸ் போன்ற இடங்களில் வாழ்ந்த உயர் நாகரிகத்தை உடைய மக்கள் கூட்டமே மாயன் கூட்டமாகும். கி்மு 2600 வருடங்களுக்கு முன்னர் இவர்களின் மாயன் கலாசாரம் உருவாக்கப்பட்டது. கி.மு 150 வருடமளவில் இவர்களின் மாயன் கலாசாரம் உச்சநிலையை அடைந்தது.

3500 வருடங்களுக்கான வாழ்க்கைக் காலத்தைக் கொண்ட  இவர்கள் கடந்த 15ம் நூற்றாண்டில் அழிந்து போனார்கள். மாயன் இனத்தவர்கள் கட்டிடக்கலை. வான் சாஸ்திரம், கணித சூத்திரம், ஜோதிடம், எழுத்து போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கினர். 20 அடிமான எண் முறையைப் பயன்படுத்தினர். அவர்களின் பூஜ்ஜிய பயன்பாட்டு முறை மிகச் சிறப்பானதொன்று.

மாயன்கள் இரும்பு போன்று உலோகங்களைப் பயன்படுத்தாமலே, உறுதிவாய்ந்த மிகப் பெரிய பிரமிட்டுக்களையும் கட்டினர்.

சூரியன், சந்திரன் சுழற்சி பற்றி நுட்பமாக அறிந்து வைத்திருந்தனர். ட்ரெடெக்ஸ் என்பது மாயன் பஞ்சாங்கக் கலண்டராகும்.

உண்மையில் இவர்கள் விஞ்ஞானிகளை விடவும் புத்திசாலிகளாக இருந்தனர்.

கி.மு 350 - 400 ஆண்டுகளில் வாழ்ந்த மாயன் மன்னனின் கல்லறை கண்டுபிடிக்கப்ட்ட போது, அதில் பல சித்திர வேலைப்பாடுகள் அவதானிக்கப்பட்டதாம். நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் மாயன் இன பூர்வீகக் கலாசாரமும் முற்றாக அழிக்கப்பட்டது. ஐரோப்பிய குடியேற்றம், விசித்திர மூடநம்பிக்கைகள், பங்காளிகளின் சண்டைகள் போன்ற பல்வேறு காரணங்களால் மாயன் இனம் அழிவடைந்தது.

இவர்களால் உருவாக்கப்பட்ட நாட்காட்டியே மாயன் நாட்காட்டியாகும். இது கி.மு 313 ல் உருவாக்கப்பட்டு 2012 டிசம்பர் 21 உடன் ஓய்வடையப் போகின்றது.  நமது கலண்டருக்கும் முரண்படாத தன்மையைக்  கொண்டுள்ள
மாயன் கலண்டர்  உலகின் பல நிகழ்வுகளின் எதிர்வுகூறலாக விளங்கியதை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

பிரச்சினையே இனித்தான் ஏற்படப்போகின்றது!

இக்கலண்டரின் இறுதி நாளாக 2012.12.21 காலை 11:மணி 11 நிமிடம் 11 விநாடி எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால், இதுவே கடைசி நாளாக இருக்கலாம் எனும் யூகத்தில் மக்களால் உலக அழிவு தொடர்பான கதைகள் வெளியே கிளம்பியிருக்கின்றன. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நாம் பயன்படுத்தும் திகதி உள்ளிட்ட பல விடயங்களை உலகிற்கு முன்வைத்தவர்கள் இந்த மாயன் கூட்டத்தினர். இவர்கள் சூரியன் 2012 உடன் செயலற்றுப் போகும் என எதிர்வு கூறியுள்ளனர்.

சூரிய மண்டலத்திற்கு 7 நாள் என்பது பூமியைப் பொறுத்தவரை 25,662 வருடங்களாகும். இதனை மாயன் கலண்டர் 5 பிரிவுகளாக வகுத்துள்ளது.
ஒவ்வொரு பிரிவும் 5125 வருடங்களைக் கொண்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 21ந் திகதி 5 வது கட்டம் முடிவடைவதால் உலகம் அழியும் எனக் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

மாயன் கருத்துக்கணிப்பின்படி, கி.மு  3113 வருடங்களுக்கு முன்னர், பாரிய வெள்ளப்பெருக்கினால், நான்காவதாக வாழ்ந்த சமுதாயம் அழிந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் அன்றைய தினத்தில், சூரியன் எமது விண்மீன் மண்டலத்திற்கு நேரடியாகப் பயணிக்கின்றது. இந்நேரத்தில் விண்மீன் மையத்திலுள்ள சூப்பர்நோவா கருங்குழி, சூரியன் மற்றும் பூமி என்பன ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளன. அப்போது விண்மீன் மையத்தில் இருந்து வரும் காந்த அலைகளால் சூரியன், பூமி நன்கு பாதிக்கப்படவுள்ளது. இந்நேரத்தில் சூரியப்புயல்  ஏற்படும். இது 26,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என மாயன் கலண்டர் கூறுகின்றது.


 இச்செயற்பாட்டின் பின்னணியை நோக்கி, விஞ்ஞானம் தனது கருத்துக்களை இவ்வாறு அலசுகின்றது.சூரியனிலிருந்து வெளிப்படும் மிகப்பிரகாசமான  சுவாலையின் கதிர்த்தாக்கத்தினால் செய்மதிகள் பாதிக்கப்படும். வானொலி அலைகள் பாதிக்கப்படுவதனால், வானொலி, தொலைபேசிச் சேவைகள் பாதிக்கப்படும். வெளித்தள்ளப்படும் ஒளி வட்ட வெளித் தள்ளல்களால் மனித இனம் பாதிக்கப்படும். கதிரியக்க நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படும்.  இவை 5 நாட்களுக்குள் புவியை அடையும். மின்சாரம் கூடத் தடைப்படலாம். இது விஞ்ஞானிகளின் பார்வையாகும்.

மேலும் மாயன் கலண்டர் இது தொடர்பாக கூறுவதாவது,

இப்பாதிப்பினால் பூமியிலும் காந்தப்புலங்கள் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக துருவப் பகுதிகள் இடம்மாறும் என்றும், புவியின் துருவப்பகுதிகள் இடமாறுவதால், புவியில் பாரியளவில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமென்றும், அதனால் ஏற்படக்கூடிய பாரிய அளவிலானப் புகை மற்றும் எரிமலைக் குழம்புகள் போன்றவற்றால் ஏற்படும் புழுதி சூரியனை மறைக்குமென்றும், இதன் காரணமாக 40 வருடங்களுக்கு சூரியனைப் பார்க்க முடியாதென்று மாயன் சமுகத்தினர் எதிர்பார்ப்பை முன்வைத்தனர். 

துருவங்களின் இடப்பெயர்ச்சியை  ஏற்றுக் கொண்ட  விஞ்ஞானம், அது 2012ம் ஆண்டுதான் என உறுதிப்படுத்தவில்லை.

மாயன்களின் விண்வெளி ஆய்வு தொடர்பான சில படங்கள் இதோ...

                                                                 ராக்கெட்


                                                       விண்வெளிக்கு பயண நிலை


                                                            விண்வெளிப் பயணம்




முற்றாக அழிந்த ஓர் இனம், உலக அழிவைப் பற்றிக் கூறியதால், மீண்டும் இன்றைய சந்ததியினரின் பார்வையில் தளிர்த்துள்ளது. ஓர் அழிந்த சந்ததியின் வரலாற்றை மீண்டும் வாசித்தறிவது புதுமையான அநுபவமே!

உண்மையில் உலகம் அழியும் என பல தீர்க்கதிசிகள் முன்னர் கூறிய  பல நாட்களெல்லாம் அமைதியுடன் எந்த ஆபத்துமின்றி கழிந்து விட்ட நிலையில் , மீண்டும் நாம் இப்போது  மாயன் கலண்டர் பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

 உண்மையில் சூரியனின் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்கள் திடீரென உலகம் ஒரேநாள் ஸ்தம்பிதமடையாது. இயற்கைச் சீற்றங்கள்  பல தன் கோர முகங்களைக் காட்ட வேண்டும். சமயங்கள் முன்வைக்கும் அறிகுறிகள் தென்பட வேண்டும். அப்பொழுதே இவ்வுலகின் சுவாசம் நிறுத்தப்படும். அது படிப்படியான நிகழ்வுகளே!

இயற்கையை விட அதனைப் படைத்த சக்தி வாய்ந்த அந்த இறைவன் அசைத்தாலன்றி, இந்த உலகம் எந்த மாற்றத்தையும் காட்டப் போவதில்லை.

இன்ஷா அல்லாஹ்........டிசம்பர் 22 நாம் மீண்டும் சந்திப்போம்! சந்திக்கலாம்! நம்மைச் சுற்றி இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டால், அந்த அனுபவத்தையும் பகிரலாம்.

வீடியோ

உலக அழிவு பற்றி திருமறையின் திருவசனத்திலொன்று
-------------------------------------------------------------------
"அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்;நீர் கூறும்:"அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கின்றது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது. அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும், அது உங்களிடம் வரும் அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கின்றார்கள், அதன் அறிவு நிச்சயம் அல்லாஹ்விடமே இருக்கின்றது. எனினும் மனிதர்களில் பெரும்பாலானோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக" (ஸூரதுல் அ ராப் - 187)

-Jancy Caffoor-


2012/12/10

அன்பென்ற மழையிலே


உடைந்து வீழ்ந்தது
விண் வைரமொன்று- அதில்
முகம் பதிக்கின்றேன் லேசாய் 
அழகாய்ச் சிரிக்கின்றா ரென் னன்னை!

தொலை தூர ஆகாயம்
களையிழந்து வெறிக்கின்றது - என்
அன்னையின் அன்பாழத்தில்
தான் தோற்றுப் போனதாய்!

மலரிதழ்களின் விளிம்போரம்
விரல் துடைக்கின்றேன் 
நினைவுகளாய்த் தெறிக்கின்றது - என்
அன்னையின் மென் கரங்கள்!

அமைதி வருடலால்
அடங்கிக் கிடக்கின்ற இரவுகளெல்லாம் 
முகிழ்க்கும் உறக்கம் பிளந்து
கனவாய் விழி திறப்பார் என் னன்னை!

நசியும் கடலலைகளில்
புரளும் நீர் மேனியாய் 
கரையும் மன அவஸ்தைகளை
அகற்றும் தேவதையாய் தினமும் என் னன்னை!

சோம்பலுற்று விடிகின்ற வென்
ஒவ்வொரு நொடிப் பொழுதையும் 
இயக்கும் கடிகாரமாய்
இன்முகம் காட்டுவதும் என் னன்னையே!

வெம்மையின் இம்சிப்புக்களால் என்னுள்
தளிர்க்கும் கண்ணீர்த் துளிகளை 
உலர்த்தும் தென்றலாய் - என்
உலகினை யாளும் மூச்சுக் காற்றும் அவரே!

ஜன்ஸி கபூர்