காலம் - 16.12.12
இடம் - வவுனியா, தனியார் பஸ் நிலைய அருகிலுள்ள சைவ உணவகம்
கடிகாரம் 8.30 இனை தொட்டு நின்றதும், வியர்வைத்துளிகள் உடலை நனைத்தன. 9 மணிக்கு B,Ed வகுப்பு.....அதுக்குள்ள சாப்பிட்டுட்டு, ஆட்டோ பிடிச்சு பூந்தோட்ட கல்விக் கல்லூரிக்குப் பறக்கணும்...
வேகத்தை விரைவுபடுத்தி, சைவ உணவகத்தையடைகின்றேன்.விடுமுறை நாளென்பதால் உணவகம் முழுதும் தலைகள் நிறைந்திருந்தன. இருக்கை தேடிய போது, தனித்திருந்த யுவதியொருத்தியின் மேசை அகப்பட்டது. அருகே சென்றேன்..
"யாராவது இருக்கிறாங்களா"
சிங்களத்தில் கேட்டேன்........இல்லையென முறுவலித்தார். அமர்ந்தேன்....சொற்ப நொடிகளில் சினேகப் பார்வைகளும் புன்னகைகளும் இடமாறின. ஆடர் கொடுத்துவிட்டு உணவுக்காக காத்திருந்தோம்.
எங்கள் மௌனத்தை நானே உடைத்தேன் மெதுவாக.........
"இங்கதான் வர்க் பண்றீங்களா" - நான்
"நான் ஆமி, கிளிநொச்சி காம்ல இருக்கிறேன், லீவுக்கு குருணாகல் வீட்டுக்கு போறேன்" - என்றார் புன்னகையைச் சற்றும் குறைக்காதவாறு.........
நானும் என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது எமக்கான உணவுகளும் மேசைக்கு வந்தன....
இரண்டு தோசைகளை பீங்கானிலிட்டு சாப்பிடத் தொடங்கினார். நானும் இடியப்பத்தை காலி பண்ணத் தொடங்கினேன்....
"காம்ல எப்பவும் சோறுதான், இப்பதான் இத சாப்பிடுறேன்" என்றார் அந்தச் சிங்கள சகோதரி...
"ம்ம்......வடையும் சாப்பிடுங்கள்......ருசியா இருக்கும்" - நான்,
"ம்ம்....ரஸயி , இந்த "பொல் சம்பல்" கிரைண்டர்ல அரைக்கிறதா " மீண்டும் மலர்ந்தார்.
இவ்வாறு தொடர்ந்த சம்பாஷணை, எங்கள் உணவுத்தட்டு நிறைவடையும் போது முடிவுக்கு வந்தது.
அந்த இராணுவப் பெண், கைகளை கழுவதற்காக எழுந்த போது, பக்கத்தில் காலியாக இருந்த மேசையை நிரப்ப நான்கு வாலிபர்கள் வந்தார்கள். அவர்களின் பார்வையும் இந்தப் பெண்ணின் மீதுதான் மொய்த்துக்கிடந்தது. அவர்களும் இராணுவத்தினர்தான். விடுமுறைக்காக ஊர் செல்ல பஸ்ஸிற்கு வந்தவர்களாக இருக்க வேண்டும்.
அந்தப் பெண் தங்களைப் பார்க்கட்டுமென்ற நப்பாசையில் கிசுகிசுத்தார்கள். ஆனால் அவளோ அவர்களைத் திரும்பிப் பார்க்கவில்லை. என்னிடம் விடைபெற்றுச் சென்றார்............
அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த, அவர்களில் ஒருவன் மெதுவாகச் சொன்னான்
"டேய்.....அவள் ஆமிடா"
அவளைப் பற்றி எதுவுமோ தெரியாத நிலையில், அந்த இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெற்ற அவள் உடலமைப்பைக் கொண்டு அவளைச் சரியாக "ஆமி"யாக இனங்கண்டது ஆச்சரியமாக இருந்தது. தன் தொழிலை இனத்தை சரியாக இனங்கண்ட திருப்தி அவர்கள் முகத்தில்.........
"ரீச்சர்............"
கையில் பில்லுடன் நின்று கொண்டிருக்கும் சர்வரைக் கண்டதும், மனதுக்குள் சிரித்தேன்....
"தோற்றத்தைக் கொண்டு தொழிலை எடைபோடும் நம்மவர்கள் புத்திசாலிகள் தான்"
பணத்தைக் கட்டுவதற்காக வெளியேறினேன்!