அன்பின் புன்னகையில்
அடங்கிக் கிடக்கின்ற தென்னுலகம்!
அறியாமைத் தீ யனல்கள்
அணைந்து போகத் துடிக்கின்றன!
இதயவெளிச் சுவரெங்கும் வருடி
முகாமிட்டு கொள்கின்றது காற்றும் தென்றலாய்!
ஈடேற்றத்தின் தலை வருடலால் வாழ்வொன்றும்
கண் முன்னால் விரிகின்றது விசாலமாய்!
உறவின் நறுமணங் கண்டு உருவாகும் மொழியொன்று
உதடு குவிகின்றது 'அம்மா' வென்றே!
ஊரின் திருஷ்டிக் கஞ்சி முகத்தை யன்னை கரம்
முந்தானைத் திரையிட்டு மறைத்துக் கொள்கின்றது!
எட்டுத் திக்கெங்கும் என் பெயரொளி வீச
ஏக்கம் சுமந்த உணர்வொன்று தாய்மையாய்
வருடுகின்ற திங்கே!
ஐயமகற்றும் கற்றலின் நிழலாய் கண் முன்
விரிகின்றது தாயின் அறிவகம் ஆழமாய்!
சூரிய தேசத்தின் வெம்மைக் குடை யெல்லாம் சரிந்து
திரையிட்டு கொள்கின்றன பசுமையைப் பூட்ட!
சிப்பிக்குள்ளிருந்த வெண்முத்தும் புன்னகைத்தே
முத்தமிட்டு கொள்கின்றது அன்னை விரல் பற்றி!
காற்றசைக்கா கருங்கல் மெல்ல
இளகிக் கிடக்கின்றன யவர் கருணைப் பார்வை கண்டு!
சுவர்க்கமொன்று சுரங்கம் தந்தே வழிவிடுகின்றது
சுகந்தம் மணக்கும் தாயின் பூவடிக்காய்!
இத்தனைக்கும்............
என் தாய்க்கீடேது இத் தரணியில்!
Jancy Caffoor