நிமிடங்கள் யுகங்களாய் மாற்றிய யுத்தம்
உன்னை..........
வாசித்துச் சென்றதில் வலிப்புடன்
வீழ்ந்து கிடக்கின்றாய் அகதியாய்!
சுகம் மறந்த சுவாசம்
விட்டுச் சென்ற சோகங்களின் வரலாறாய்.......
விரல் பிடிக்கின்றாய் - உன்
வெற்றுடல்களில் பீதியை நிரப்பியவாறு!
யுத்த டயறிக்குள் வரிகளான - உன்
வாழ்வின் தொடக்கத்தில்.....
கழுகுகளும் காட்டேறிகளும் காவல் காக்கின்றன
உன் னிரத்தத்தை உறிஞ்சியவாறு!
வாழ்வை இன்னும் நீ
தொடங்கவேயில்லை
ஆனால்..........
முடிவுரைகளின் விண்ணப்பங்கள்
குவிகின்றன உன்னிடம்!
இன்னும் நீ பூக்கவேயில்லை
முட்கள் குதறுகின்றன - உன்
அழகான மேனியை
சாம்பர் மேட்டில் புதைக்க!
உன் பிள்ளைச் சரிதத்தில்
கறைகளாக்கப்பட்ட அகதி வாழ்வில்
வேரறுக்கப்பட்ட வசந்தங்களின் வலியே
உன் பேச்சொலியாய் உருளுது உலகில்!
மகளே............
உன் பிஞ்சு விழிக் கனாக்களில்
விசம் தடவுமிந்த சாத்தன்கள்
இருந்தென்ன ..இறந்தென்ன
அழிந்தே போகட்டும் ஓர் நாள்!
இந்தப் பிரபஞ்சம்
ஓர் நாள் வாய் திறக்கும் அகோரமாய்.......
இவர் மெய்யேந்திய குண்டுகளும் சன்னங்களும்
தீக்குளிக்கு மிவர்கள் பாவங்களை!
ஓடு மகளே ஓடு
மண்டைகளால் பதிய மிடப்படுமிந்த
பூமிக்குள்..........
நாளை விடியலொன்று எட்டிப் பார்த்திட
நீயும் முகவுரையெழுதிட
ஓடு மகளே ஓடு!