About Me

2013/03/08

கொஞ்சம் பொறு


கொஞ்சம் பொறு
உன்
சிரிப்பை பெயர்த்து
சலங்கையாக்கப் போகின்றேன்!

கொஞ்சம் பொறு
உன்
பார்வையைத் திண்மமாக்கி
பனிக்கட்டியாத்
தூவுகின்றேன்!

கொஞ்சம் பொறு
உன் குரலலையின்
அதிர்வை
காற்றினில் கோர்க்கின்றேன்
மெல்லிசையாய்!

கொஞ்சம் பொறு
உன் நிறத்தைப்
பிரதியெடுத்து
நிலாவை முலாமிடப் போகின்றேன்!

கொஞ்சம் பொறு
சிப்பிகள் சினக்கின்றன- தம்
முத்துக்கள்
உன் னுதட்டினில்
சிறை வைக்கப்பட்டிருப்பதாய்!

சொல்லி விட்டுப் போ
உன் சுவாசத்திலும்
பூவாசம் - நீ
பூவை என்பதாலா!

   - Jancy Caffoor-

         08.03.2013

திருமணம்



வாழ்க்கைப் பாதைக்காக
தீர்மானிக்கப்பட்ட பயணம்!

கருவறைத் தரிப்புக்களுக்காய்
வழங்கப்பட்ட அனுமதி!

தனிமைச் சாளரம் தாழ்பாளிட
ஈர் மனந் திறக்கும் மங்களச் சாவி!

சரீரம் வருடி சாரீரம் தொடும்
இன்னிசை!

தாலியால் வேலியிடப்படும்
உறவுச்சாலை!

சம்பிரதாயங்களின் முகவுரையோடு
எழுதப்படும் காவியம்!

ரொக்கத்தின் கனத்தில்
இருவரிணையும் சங்கமம்!

வழித்தோன்றலின் வழிவிடலுக்காய்
வாழ்த்துத் தூவும் பூமாலை!

ஆயுள் மன்றத்தில் ஓர்முறையே
அரங்கேற்றப்படும் ஈர் மனக் கவிதை

கண்ணீரும் வெந்நீரும் பன்னீரும்
வழிந்தோடும் நீரோடை!

வாலிப வித்தைகளைக்
கட்டிப் போடும் கடிவாளம்!

கனவுச் சிறகறுத்து மனசை
நனவுக்குள் வீழ்த்தும் தேர்வுமையம்!

நான் நீயாகி........நீ நானாகும்
மனசின் மந்திரப் பிரகடனம்


Jancy Caffoor
         08.03.2013



இதோ


இருளின் ரகஸியத்தில் இப்போதெல்லாம்
வீழ்ந்து கிடக்கின்றது நம் பனிப்போர்!

நினைவுச் சாவி திறந்துன்னை.........
களவாய்  ரசிக்கையில்
கன்னம் வைக்கின்றாய் மெல்ல - என்
கன்னம் சிவக்க!

அரிதாரம் பூசப்படும்  கனவுகளுக்காய்
கர்ப்பம் தரிக்கும் நம் காதல்.......
இப்போதெல்லாம் - சில
பிடிவாதங்களின் ஆளுகைக்குள்
பிரவேசிக்கின்றது
ஊடலைத் தெறித்தபடி!

அடுத்தவருக்காய் என்னை நீ
விட்டுக் கொடுக்கப் போவதுமில்லை.........
என்னிடம்  தோற்கப் போவதுமில்லை!......

காத்திரு ...............
கணப்பொழுதில்
தாவி வருகின்றேனுன்னைத் தழுவி நிற்க!

Jancy Caffoor


நீயாகி


என் விடியல்கள்
முகங் கழுவிக் கொள்கின்றன
தினமும்
உன் நினைவுகளில்!

இருளின் இம்சைக்குள்
தொலைய மறுத்த உறக்கமேனோ
உன் விழிக்குள் பார்வையாய்
உறங்கத் துடிக்கின்றது!

அறிவாயா
நீ யென்னைக் கடந்து செல்லும்
ஒவ்வொரு கணங்களும்
இறக்கை நெய்கின்றேன் காற்றோரம்
சுவாசமாய் உன்னுள் வீழ!



   - Jancy Caffoor-

         08.03.2013