About Me

2013/03/08

மார்கழிப் பூவே


மார்கழிப் பூவே!
சமூக அழுத்தங்களால்
எரிமலை படர்கையில்
படர்ந்தாய்
பனி மலையாய்!

மூச்சுக் காற்றுக்குள் துரோகங்கள்
சயனைட்
நிரப்புகையில்
உறிஞ்சியெடுத்தாய் விடத்தை
உரிமையுடன் நட்பாகி!

ப்ரியமே!
நம்
ப்ரிய நேசத்தின் ஆயுளுக்கு
நாள் குறித்ததும் யாரோ!

என் விழியன்னலை
உற்றுப்பார்
தெரிகின்றதா
கண்ணீரில் நனைந்திருக்கும்
உன்னுருவம்!

கூடல்
ஊடல்

அன்பின் பரிமாணங்களே!
பற்றிக் கொள்ள விரல் தா
சுற்றி எரிக்கும் துன்பம் துடைக்க!

Jancy Caffoor
08.03.2013





கனவு தேவதை


நட்சத்திர கீறல்கள்
வீழ்ந்தன புன்னகையாய்!

புல் நுனி கழுவும்  பனியோ
தள்ளாடி வீழ்ந்தன  கன்னவோரம்!

வியர்வையின் ஈர வீரியம் கண்டு
அயர்ந்தன மேனி யிதழ்கள் துவண்டு!

வானவில்லின் சாயம் கரைந்து
வழிந்தது இடை நெருக்கும் மெல்லாடையாய்  !

நறுமணம் பூசும் தென்றல் கெஞ்சும்
சுவாசம் கொஞ்சிப் பேச!

இமையோரம் வெட்கிக் குனியும்
விழியின் சிறகடிப்பின் மோகம் கண்டு!

விரல் வருடும் ரேகை கழன்று
வரிகள் வரையும் உனை நினைந்து!

காதல் தேவதை யுனக்காய் என் தேசம்
காத்திருக்கும் ஏக்கங்கள் பல சூடி!

Jancy Caffoor
08.03.2013






உன்னால்

நட்சத்திரம் விழித்திருக்கும்
பால்வெளியில்
விழிகளைத் தாக்கும்
ஒளி வருடலாய் நீ!

பனி படர்ந்த போர்வையில்
முத்தென.
முத்துமிட்டுச் செல்லும் வியர்வைத்துளிகளாய்
உன் நினைவுகள்!

இப்பொழுதெல்லாம்
அடிக்கடி
உன் ஞாபக வரிகளை
வாசிக்கும் போது 
காயமாகின்றன என் விழிகள்!

என் விரல்களைப் பார்.
உனக்கு கடிதங்கள் எழுதி எழுதியே
ரேகைகள்
காணாமற் போயின!

உன் நினைவுப் பேரலையில்
வீழ்ந்து தவிக்கையில்
சுவாசம் கரைக்கின்றேன் - என்
வாசத்தை விற்றவளாய்!

கொல்லாதே- எனை
அணுவணுவாய் கொல்லாதே!
எஞ்சிய காலத்திலாவது
கொஞ்சம் வாழ வரம் கொடு!

உன்னை இப்பொழுதெல்லாம்
யாசிக்கின்றேன்
அனுமதிப்பாயா
அவசரமாய் உன் ஞாபகங்களை
பெயர்த்தெடுக்க!

   -Jancy Caffoor-

         08.03.2013






கொஞ்சம் பொறு


கொஞ்சம் பொறு
உன்
சிரிப்பை பெயர்த்து
சலங்கையாக்கப் போகின்றேன்!

கொஞ்சம் பொறு
உன்
பார்வையைத் திண்மமாக்கி
பனிக்கட்டியாத்
தூவுகின்றேன்!

கொஞ்சம் பொறு
உன் குரலலையின்
அதிர்வை
காற்றினில் கோர்க்கின்றேன்
மெல்லிசையாய்!

கொஞ்சம் பொறு
உன் நிறத்தைப்
பிரதியெடுத்து
நிலாவை முலாமிடப் போகின்றேன்!

கொஞ்சம் பொறு
சிப்பிகள் சினக்கின்றன- தம்
முத்துக்கள்
உன் னுதட்டினில்
சிறை வைக்கப்பட்டிருப்பதாய்!

சொல்லி விட்டுப் போ
உன் சுவாசத்திலும்
பூவாசம் - நீ
பூவை என்பதாலா!

   - Jancy Caffoor-

         08.03.2013