About Me

2013/03/08

உன்னில் தொலைந்த நான்

பனிச் சலசலப்பில்
பாதையோரம் உதிர்கின்றன - உன்
நினைவுச் சருகுகள்!

என் அகவெளிப் பட்சிகள்
கொட்டிச் செல்கின்றன - உன்
இராச்சியத்தின் தூதோலைகளை!

நீ நடந்து வந்த திக்கெல்லாம்
நீவி நிற்கும் முட்களெல்லாம்
வாந்தியெடுக்கின்றன - உன்னுள்
குந்திக் கொண்டிருக்கும் கோபங்களை!

நினைக்கவேயில்லை - உன்
கனவு வேர்களை
வெட்டிச் சாய்க்கும் கோடாரி நானென!

உன் ரசிப்புக்களால் சிலிர்த்த கவிதைகள்
இன்று
எங்கோ வெறிக்கின்றன
மங்களத்தை தொலைத்தபடி!


   - Jancy Caffoor-
         08.03.2013

எங்கிருக்கின்றாய்........



எங்கிருக்கின்றாய்

எகிறிக் குதிக்கும் காற்றிடம்
செல்லமாய் முணங்கினேன்!
பதுங்கிக் கொள்கின்றது - என்
மூச்சோரம்!

எங்கிருக்கின்றாய்

வெட்கமின்றி சொற்களிடம்
கேட்கின்றேன்
சுட்டிக் காட்டுகின்றன - என்
வார்த்தைகளை உடைத்துப் பாரென்று!

எங்கிருக்கின்றாய்

மனசிடம் மன்றாடிக் கேட்கின்றேன்
மெல்ல வருடுகின்றதென்னை
உன்னுள் திறந்து பாரென்று!

எங்கிருக்கின்றாய்

என்னுள்தானா
நான் நீயாகும் போது
நமக்குளேது பிரிவு!


   - Jancy Caffoor-
         08.03.2013











நீதான்

கண்களால் எனைச்
சீண்டினாய்!

கண்மணியாய் விளித்தே
என் விழியுறக்கமும்
அறுத்தாய்!

கன்னம் வைத்து மனசுள் நுழைந்து
கன்னத்தை நொறுக்கினா யுன்
முத்தச் சத்தங்களால்!

கண் முன்னே யுன்னைப் பரப்பி
நிதமும் - என்
கல்பினுள் நிறைந்தாய்
தனிமை விரட்டி!

எனைக் கவியாக்கி
ரசித்தாய் என்னை
என்னுள் உனை வீழ்த்தி
சிரித்தாய் மெய் மறந்து!

கருத்தினுள் எனை நிறைத்து
கருவும் சுமந்தாய்
அருமையான வுன் சிசுவை!

கற்பனையைப் பிய்த்தெடுத் துன்
வாலிபங்களை ஜாலியாய் முலாமிட்டே
தாலியும் தந்தாய் மனையாளாய்

கனவுகள் மெய்ப்படும் வேளை
மற்றோர் நம்மில் கடுப்பாக
மறுப்பிலும் வெறுப்பிலும்
பெற்றோர் சம்மதம் காதல் பெற்றிட

அடடா

கனக்க கேட்கவில்லை
காரும் பங்களாவும் வேண்டுமென்றாய்
நம் பிள்ளைகள் சொகுசாய் வாழ்ந்திட!

சில பவுண்களும்
சில லட்சங்களும்
வரதட்சணை தந்துவிடு- இப்
பரந்த பூமியில் நம்மவர் பேர்
அடுத்தவர் சொல்லிட வென்றாய்

கோலமிட்டவுன் சீதன ஆசையால்
அலங்கோலமாகின
அழகான நம் காதல்
சில நொடிகள்!

நீயுரைக்க
நானும் முறைக்க
கனவுகள் எனை அறைந்தே சென்றது
"சீ" இவனெல்லாம் ஒரு..................


   - Jancy Caffoor-
         08.03.2013







வேண்டாமினி

சூரியனை இன்னும் கீழ்வான்
விரட்டவேயில்லை
இருந்தும்
விடியல் மறுக்கப்பட்ட- மரணக்
கைதிகள் இவர்கள்!

கனவுகள் தரிசிக்கும்
வாழ்க்கைக் கூடாரங்கள்
செல்கள் அரிக்கப்பட்டு
சொல்லாமலே காணாமற் போயின!

இவர்கள் பூமியில் விதைக்கப்படாத
மனிதாபிமானங்கள்
விட்டுச் செல்கின்றன
அரக்கர்கள் எழுதிச் செல்லும்
இறப்புக்களை!

உறக்கத்திற்காகத் தாழிடப்படும்
விழிகளினி
திறக்கவே போவதில்லை
கண்ணிமைகளை வருடியபடி!

ஆயுத விளைச்சல்களின் ஏறுமுகங்கள்
ஊற்றிச் செல்லும்
இரத்த ஊற்றுக்களில்
இரக்கங்கள் அழிக்கப்பட்டுச் செல்கின்றன
தாராளமாய்!

வேண்டாமினி
மூடிவிடுங்கள் யுத்தக் குழிகளை!
பிணங்களால்
ரணமாகாமலிருக்கட்டும் நம் பூமி!

   - Jancy Caffoor-
         08.03.2013