மெல்லிய சிறகு சுமக்கும்
மலரிதழ்!
தன் குறும்புகளால்
காற்றையும் பூட்டி வைக்கும்
சாகஸக்காரி!
இவள் மொழி வார்ப்பில்
மழலை இலக்கியம்
அழகான சரிதமாகின்றது!
கடல் பூக்கள்
நுரையைச் சிந்தியே
சரந் தொடுக்கின்றன புன்னகைகளை!
மெல்ல விழி சுருக்கி
கண்சிமிட்டும் அவள் பார்வையில்
விண்மொட்டுக்கள்
கண்ணயர்கின்றன மெய் மறந்து!
சிற்பமொன்று வெப்பமுறிஞ்சி
சொற்களை அள்ளி வீசி
கவி புனைந்து பண் பாடும்
இவளருகினில் மெல்ல வந்தால்
இவள் சாலையில்
விட்டுச் செல்லும் நிழல்களெல்லாம்
குடையாய் முளைத்து நடை பயிலும்
நம் புவி காக்கும் படைகளாய்!
முப்பத்தாறு மாதங்கள் முகிழ்த்த
முழு நிலவுக்காரி யிவள்
முழு நிலவையும் தன்னுள் ஏந்தும்
மயில் கொண்டைக்காரி!
இத்தனைக்கு மிவள்
அற்புதக் குழந்தையல்ல
அன்பால்
இயற்கையை நேசிக்கும் அன்புக் குழந்தை!
- Jancy Caffoor-
08.03.2013