About Me

2013/03/09

தாயே


தாயே.........

அச்சேற்றிக் கொண்டிருக்கின்றேன்
புதுமைப் பெண்களை
உங்கள் கண்ணீரை மறைத்தபடி!

ரோசாவின் வாசத்தால்
சுவாசம் நிறைக்கின்றேன்
உங்கள் முட்களை மறந்தபடி!

பாசவேலியிடப்பட்டுள்ள உங்கள்
கருவறையை
கல்லறையாக்குவோரோடு
உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்றேன்
உறவுகளைச் சிதைக்காமல்!

நீங்கள் சிரித்திருப்பீர்களா
ஒரு துளியேனும் தேடிக் கொண்டிருக்கின்றேன்
என் ஞாபகங்களைக் குலைத்தபடி!

தாயே
காலக் கலண்டரில் நாள் குறித்து
தரணியே புகழ் பாடுகின்றது
நீங்கள்
அறையப்பட்டிருக்கும் சிலுவைகளை
அகற்றாமலே!

- Jancy Caffoor-
    09.03.2013
















2013/03/08

ஞாபகம் வருதே

என் ஞாபகச் சிறையிலிருந்து
விடுதலை பெறாத தோழா
உன் சரிதத்தின் சில துளிகள்!

துள்ளி நனைந்த வுன் பள்ளிக் குறும்புகள்
இன்னும் இளமையாய்
கண்சிமிட்டுகின்றன அழகாய்!

கற்றல் காலமெல்லாம்
சொற் தேடி நீ அலையாமல்
வெட்டியாய் மதிலேறி - உன்
காலம் கழித்த வில்லத்தனம்
இன்னும் பசுமையாய்!

உன் குறும்பும்
அடுத்தாரைச் சீண்டும் புனைப் பெயரும்
ஆசானின் பிரம்படிச் சோகமும்
விடலைப் பருவ காதல் ஏக்கங்களும்

இன்னும்..இன்னும் நீளமாய்
ஞாபகப் பெட்டகத்தை நிரப்புகின்றன
ரசித்தபடி!

தோல்விக்குள் நீ வீழ்கையில்
கண்ணீர் தொட்ட சோகங்களும்
ஏழ்மையிலும் எழில் குன்றா புன்னகையும்
உன் சொத்தாகி
இன்னும் இன்னும் மனதை ஆள்கின்றது
அழகாய்!

பல பொழுதுகளில் தலைநீட்டும்
பனிப்போர்கள்
பாச நெகிழ்வில் முகம் கண்டு விலக

அடடா
ஒவ்வொரு பௌர்ணமியும்
எழுதிச் செல்கின்றது நம் நட்பை
ரம்மியத்துடன்!

பிரியா வரமென்றே
பெருமிதத்துடன் நானிருக்க
ப்ரியமே!
பிரிந்தே சென்றாய்
விதியின் கோட்டைக்குள்!


- Jancy Caffoor-
    08.03.2013



யாரோ எவரோ



ஓர் பொழுதின் முகநூலில்
ரோஜா வாசம்
நுகர்ந்தேன் சட்டென
புன்னகைகள் நகர்ந்தன!

முகமறியா நட்பென்றெ
பட்டியலிட நானும்
விட்டெறிந்தான் முகவரியை
அன்போடு இறுக்கிப் பிடித்து!

முறுக்கு மீசையும்
முறுவலிக்கும் கண்களும்
பாரதியின் உருக் கொண்டான்
சிகரந் தந்தான் கலையிலகில்!

இலக்கணங்களின் தலைக்கணங்கள்
இலக்காகி வீழ்ந்தன- அவன்
வாள் வீச்சு பேச்சினிலே

சொற்களில் இலக்கியம் நயந்து
கற்கண்டாய் ரசித்துக் கிடப்பான் காதலை!
தன் குண்டுக் கன்னத்தில் சிரிப்பை நனைத்து
சீண்டலில் வம்பெடுப்பான் வீம்பாய்!

விடியலில் வலை விரித்து
சூரியனை எட்டியும் பிடிப்பான்!
நிலவொளியில் களவாய் காதல் நெய்து
இலஞ்சமாய் தூதனுப்புவான் இயற்கையை!

அவன் திமிர் கண்டு - என்
உயிர் மிரண்டோடும் !
வாஞ்சையோடு கட்டியிழுத்து
கனவிலும் கவி கொட்டும் காரியக் காரனிவன்!

இவன் யாரோ..............எவரோ!

- Jancy Caffoor-
    08.03.2013



இயற்கை மகள்

உன் நட்சத்திர விழிகள்
மொழி பேசின காதலை!

நிலவுன் முகங் கண்டு
மெல்ல விழி திறந்தது!

வானவில் புருவங்கள்
என் சப்தமறிந்து சிலிர்த்தது!

கார்மேகக் கூந்தல்
காற்றில் கலைந்து வரவேற்றது ஆர்வமாய்!

உன் பிறையுதட்டில் - என்
பெயர்கள் ஒட்டிக் கொண்டன அழகாய்!

உன் மேக மேனி சிலிர்த்து
என் வெம்மை தேடி!

இருந்தும் 

அருகில் வந்ததும் சிலிர்க்கின்றாய்
வெட்கத்தை உறிஞ்சியபடி!

- Jancy Caffoor-
    08.03.2013