About Me

2013/04/10

என்னடா செய்தாய்


என் வெட்கத்தில் பாதி பிடுங்கி
நடுநிசியை கதறச் செய்யும்
அன்பான இராட்சகா!

ஈரமுலர்த்தும் மேனிக்குள்
உன் வெம்மை உதறி
உருகும் விழிப் பார்வையில்
என்னுசிரை உரசி.!

என் மடித் தலையணையில் - உன்
தலை சாய்த்து
உன்னை வருடும் என் விரல்களில்
காதல் சேர்க்கும் அன்பிங்கே
உனக்காய் காத்திருக்க

அனலாய் கண்ணீருக்குள் அடைகாக்க
நீயோ
இரும்புச் சிறைக்குள் விலங்கிட்ட
கைதியாய்!

மச்சான்
போய் வாரேன்.!

குஷியாய் கூவிச் சென்ற நீ
பூட்ஸ் கால்களுதைக்க
தரைக்குள் சுருண்டு கிடக்கின்றாய்
குற்றுயிராய் சிறைவெளிக்குள்ளே!

உன்னிலை யறியாது
ஊர் முன்றலில் உனைக் குற்றவாளியாய்
அறிவிப்புச் செய்தே
புலம்பித் திரிந்தேனடா - உன்
கை விலங்கோசை கேளாது!

ஓரிரவுக்குள்
ஓராயிரச் துன்பச் சிலுவைகள்
உன் மீது இறங்கியிருக்க..!

நானோ குருதி பிழிந்து
குற்றுயிராய் வீழ்ந்து கிடக்கின்றேன் - எனைத்
துரத்தி வரும் உன் மௌனம் கண்டு!

என்னடா .செய்தாய் !
உனக்கும்
எனக்கும்!


- Jancy Caffoor-
    09.04.2013


இனியுன்னை


விடியலின் விரல்கள் - என்
விழி தழுவிச் செல்கின்றன!

காற்றின் சில்மிசத்தில்
காணாமல் போயிருந்த என் உறக்கம்
மெல்ல மொட்டவிழ்கின்றன
உனை நோக்கி!

கால விரயத்தில்
காணாமல் போன நம்முறவுகள்
மீண்டும் தளிர் தொடும் பசுமைகளாய்!

உடைந்து போன கனவுகளை
மெல்லன ஏந்தி
கெஞ்சுகின்றன நம் காதல்
விதியிடம்!

இதோ.!

அன்பின் சிறகடிப்பில்
ஆரத்த தழுவும் உன் ஆன்மா
மெல்லக் கிள்ளுகின்றன - என்
கன்னம் சிவக்க
"இனியுன்னைப் பிரியேனடி"




மாயை

அற்ககோல்
சொற்ப வாழ்வையும் கரைக்கும்
விஷ நீர்!

வாலிப மயக்கங்களுக்காக
போர்த்தப்படும் மேலாடை!

தரை தொட்ட வியர்வை உலர முன்னர்
உடல் உருக்குலைக்கும் அக்கினி!

வெறும் வயிறை வேக வைத்து
உயிருக்குள் விசம் தடவும் போதை!

உறவுகள் அறுந்து போக- சோக
வரவுகளை ஆட்சேர்க்கும் ஒப்பந்தம்!

ஒவ்வொரு நிச்சயமற்ற விடியலுக்குள்ளும்
தள்ளி விடும் மரண ஒத்திகை!

வாழ்வை மயானமாக்க
இதோ சொகுசுப் பயணம்!


- Jancy Caffoor-
    09.04.2013





இழப்பு




வாழ்க்கை ஓர் ஜெயில் போல்தான். நாம் வரைந்திருக்கும் ஒருசில கட்டங்களை விட்டும் நகர முடியாது. ஆனாலும் நம்மையுமீறி ஒவ்வொரு நிமிடங்களிலும் ஏதோ ஒன்று நடந்து கொண்டுதானிருக்கின்றது. துன்பங்களும் இன்பங்களும் இழப்புக்களும்..........கோபங்களும்!

இந்த உணர்ச்சிகளை கொஞ்சம் ஆற விட்டு மறுநாள் யோசித்துப் பார்த்தோமானால், நேற்றிருந்த கொந்தளிப்பான மனநிலை இன்றைக்கு இருப்பதில்லை. இதுதான் நம் மனதின் போக்கு. அற்பமான இந்த வாழ்க்கையில யாரும் யாருக்கும் எதிரியில்லை. தவறுகளை மறந்து மன்னித்து வாழுவோம்.

ஒவ்வொரு இழப்பும் இன்னுமொரு வெகுமதிக்கான முன்னறிவிப்பு.......! நேற்றைய இழப்பு தந்த மன வைராக்கியத்தில், இன்று எதிர்பாராத வெகுமதி நிச்சயம் கிடைக்கும். ஆனால் நாம்தான் காத்திருப்பதில்லை.

அதனால நாம் வேதனைப்படுகின்றோம். யோசித்து பார்த்தால் இந்த வேதனை கூட முட்டாள்தனம்தான். நமக்கு சரியானது அடுத்தவருக்கு பிழையாக இருக்கலாம். நமக்கு பிடித்தது இன்னுமொருவருக்கு பிடிக்காமலும் போகலாம். வாழ்க்கை எனும் சநநிதியில் யார் யாருடனோ.............எல்லாம் இறை நாட்டமே!