About Me

2013/04/10

மார்கரெட் ஹில்டா தாட்சர்


வாழ்க்கை எனும் மைப்புள்ளியை நோக்கி பயணிக்கும் நம் வாழ்வினை பல எதிர்பார்ப்புக்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கை குறுகியதாய் இருந்தாலும் கூட, அவ்வாழ்வில் நாம் சாதிக்கும் சாதனைகள்தான் நம்மை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தும் அடையாளங்களாகிய நிற்கின்றன.
அந்தவகையில் இன்றைய தினம் என் சிந்தனையில்,  மறைந்த பிரிட்டிஷ் இரும்புப் பெண்மணி மார்க்கரெட் ஹில்டா தாட்சர்........எட்டிப்பார்க்கின்றார்.

அரசியல் மனிதனை வாழவும் வைக்கின்றது, விழவும் வைக்கின்றது. உலகப் புகழடைய மிகச் சிறந்த வழிமுறையாக அரசியல் விளங்குகின்றது. அந்த அரசியல் உட்பிரவேசமே தாட்சரையும் நமக்கு அடையாளப்படுத்தியுள்ளது எனலாம்.

இங்கிலாந்து திருச்சபை மதத்தைச் சேர்ந்த இவர் , 13.08.1925 ல் ஜனனமாகி 13.04.2013 ல் இவ்வுலகை விட்டும் நீங்கியுள்ளார்.

1959 ம் ஆண்டு  முதல் அரசியல் பிரவேசமாக இவருக்கு கை கொடுத்தது பின்ச்லே தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பதவியாகும். பின்னர் 1970ல் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.  1975 ல் பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரானார். பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியான இவர் 1979 முதல் 1990 வரை 3 தடவைகள் பிரதமர் பதவி வகித்துள்ளார்.

அன்னாரின் ஆம்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!


2013/03/11

தளிர் 2

சுதந்திரம்..............
அடக்குமுறையின் மொழி!

Photo: சுதந்திரம்..............
அடக்குமுறையின் மொழி!

ஒவ்வொரு வீழ்ச்சியிலும்
எழுதத் துடிக்கின்ற முகவரியது!
----------------------------------------------------------
ஒவ்வொரு தன்னம்பிக்கையாளனும்
வெற்றியாளனாக அறிவிக்கப்படுகின்றான்

Photo: ஒவ்வொரு தன்னம்பிக்கையாளனும் வெற்றியாளனாக பிரகடனப்படுத்தப்படுகின்றான்............
-----------------------------------------------------

பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட
மௌனத்தின் வலிமை அதிகம்!

Photo: அதிகமாகப் பேசி ஒருவரை எரிச்சலூட்டுவதை விட, மௌனத்திருப்பது மேல்!

ஏனெனில் ஆயிரம் பேசும் வார்த்தைகளை விட மௌனத்தின் பெறுமதி அதிகமானது
------------------------------------------------------------------
சுதந்திரம் மறுக்கப்படுகையில்
பேனா முனைகள் கூட சிந்தும் துளிகள்
கண்ணீரல்ல செந்நீர்!
செந்நீர் ஈரங் கண்டு
வேரறுக்கப்படும் விழுதுகள் கூட.......
உரமாகும் எழுச்சிகளை வாசித்தபடி!
















------------------------------------------------------
கொன்றலின் வெற்றி யறிவிப்பாய்
முன்றலில் எட்டிப் பார்க்கின்றது கருமை!
விண்ணைப் பிளந்து
மண்'ணில் முளைக்கும் வேர்
மின்னலோ................






தளிர்கள் - 3

தவறுகள் அறியாமையின் வரவுகள்!

நம்மை சிலர் தவறான எண்ணத்தில் விமர்சிக்கும் போது, நம்முள்ளம் எரிமலையாகி சுட்டெரிக்கின்றது. அவ்வாறான தருணங்களில் அமைதி காக்கும் பண்பு நம்மிடம் இருக்குமானால், காலம் மிக விரைவில் தவறிழைத்தவர்களுக்கு நம்மைப் பற்றிய உண்மையை உணர்த்தி நிற்கும்!


அன்றும் இன்றும்
-------------------------------------------------------------
தோற்ற காதலெல்லாம்
கல்லறை தேடியது அக்காலம்!
புது உறவுக்காய் மீண்டும் விண்ணப்பிப்பது
இக்காலம்

--------------------------------------------------------------
ஒவ்வொரு பூட்டும் செவி சாய்க்கும் தனக்குரிய திறப்புக்கு மாத்திரமே!

நம் மனம் அப்படித்தான்...........

நம் குணத்தை ஒத்தவர்களின் நட்புடன் மட்டுமே ஒத்துப் போகின்றது!

------------------------------------------------------
மெல்லன மூடின விழிகள்..........
மெல்லிசையாய் மொழிந்தன கனவுகள்
வள்ளியே.........உன்னன்பை
அள்ளித் தரும் வள்ளலே நீயெனக்கு!

-----------------------------------------------------

உனக்கான காத்திருப்புக்களால்
தினமும்
சிலையாகின என் விழிகள்!

பழி சொல்லுமோ காலமும் - உன்
அன்பில் மெய்யில்லையென்று!
அஞ்சுகின்றேன் அணுதினமும்!

--------------------------------------------------
எழுதப்படும் தீர்ப்புக்களையே மாற்றக்கூடிய மிகப் பெரிய ஆயுதம் தன்னம்பிக்கையே!

உள்ளம் தன்னம்பிக்கையில் நிறைந்திருக்கும் போது எத் தீமையும் அண்டுவதில்லை.

நல்லதையே நினைப்போம்!
நலமுடன் வாழ்வோம்!!



நீ

கிறீஸ் பிசாசே!
உன் தசை கிழிக்கும் புத்தியில்
இனவாதம் எட்டிப் பார்க்கின்றது!

தரித்திரத்தின் சரித்திரம் நீ
அரியாசனம் மிதிக்கின்றாய்
குருதியை உறிஞ்சியபடி!

நீ கருவறைக் கூடுகளைச் சிதைத்து
உயிரறுக்கும் காட்டேறி!

நீ முகமூடிச் சல்லாபத்தில்
முணங்கிக் கிடக்கும் சாத்தான்!

நீ
நகங்களில் ஆணி பூட்டி
நடுசாமங்களில் ஊர்ந்து செல்லும்
நாகம்!

நீ
துப்பாக்கி ரவைகளில்
அப்பாவிகளை நிரப்பும்
ஆட்கொல்லி!

நீ கற்றாளைப் பாலில் உணவூட்டி
கல்பை விஷமூட்டும்
பாதகன்!

நீ ஆறடிக்குள் ஆன்மா அடக்க
வருந்தாத பூதம்!

உன் மயான கிடங்குகளைத் தீ மூட்ட
வாய் பிளக்கின்றன
அக்கினி நட்சத்திரங்கள்!

உன் அதர்ம மூச்சடக்க
இதோ நாம்!
ஈமானிய உச்சரிப்புக்களுடன்!



- Jancy Caffoor-

     31.11.2013