2013/04/10
புரிதலும் பிரிவும்
குதுகலங்களும் குறும்புகளும்
உன் வாழ்வியலின் விசிறிகள்
புரிய வைத்தாய் எனக்கு
புளாங்கிதமாய் விடிந்த விடியலை
இருளாக்கி!
இருந்தும் உன்
மெய்யின் அரங்கத்துக்குள்
எத்தனை பொய்கள்!
மறைத்தாயா
உன்னை எனக்கு மறைத்தாயா!
அலட்சியங்களும் அவமானங்களும்
வாழ்வோரத்தின் கற்களல்ல
அவை - என்
புதுப் பாதையின் தடங்கள்!
உன்னை நான் சபிக்க மாட்டேன்
என்னை எனக்கே
அடையாளப்படுத்திய ஆன்மா நீ!
நேற்றுதிர்ந்த உன் வார்த்தைகள்
இன்னும் ஈரம் துடைக்க முன்னர்.
நீயோ வெம்மைக்குள்
கருகிக் கிடக்கின்றாய்!
அழகும் காமமும்
வாலிபத்தின் நோட்டங்கள்!
தீர்ந்த பின்னர்தான் தேடலில் வீழும்
அன்பின் சிலிர்ப்புக்கள்!
இனி
உனக்காய் அழவே மாட்டேன்!
என் கண்ணீரைக் கூட - உனக்கான
புன்னகை வரமாய் விட்டுச் செல்வதால்!
என்னை ஓர் கணம் சிந்தி!
உன் வாலிபக் கடலின்
சஞ்சலங்களை கரையொதுக்கி
ஒரு கணம் சிந்தி!
கண்ணீரின் ஈரம் ஒரு துளியாவது
எனக்காய் சேரும்!
வரும் வரை
இருள் கடந்து சென்ற பின்னர் - நீ
இறங்கி வருவாய் என்று!
நிலவுக்காய் நீ
உன்னை விட்டுக் கொடுக்கலாம்
தவிப்பது நான்தானே!
ஆயிரம் அரவணைப்புக்கள்
மடி சேரலாம் இருந்தும்
என் உச்சம் தலை வருடும்
தாய்மையாய் நீ!
என்னுள் விட்டுச் சென்ற - உன்
கனவுகளுக்காகவேனும்
நான் வாழ்ந்தாக வேண்டும்
நீ வரும் வரை!
- Jancy Caffoor-
09.04.2013
என்னடா செய்தாய்
நடுநிசியை கதறச் செய்யும்
அன்பான இராட்சகா!
ஈரமுலர்த்தும் மேனிக்குள்
உன் வெம்மை உதறி
உருகும் விழிப் பார்வையில்
என்னுசிரை உரசி.!
என் மடித் தலையணையில் - உன்
தலை சாய்த்து
உன்னை வருடும் என் விரல்களில்
காதல் சேர்க்கும் அன்பிங்கே
உனக்காய் காத்திருக்க
அனலாய் கண்ணீருக்குள் அடைகாக்க
நீயோ
இரும்புச் சிறைக்குள் விலங்கிட்ட
கைதியாய்!
மச்சான்
போய் வாரேன்.!
குஷியாய் கூவிச் சென்ற நீ
பூட்ஸ் கால்களுதைக்க
தரைக்குள் சுருண்டு கிடக்கின்றாய்
குற்றுயிராய் சிறைவெளிக்குள்ளே!
உன்னிலை யறியாது
ஊர் முன்றலில் உனைக் குற்றவாளியாய்
அறிவிப்புச் செய்தே
புலம்பித் திரிந்தேனடா - உன்
கை விலங்கோசை கேளாது!
ஓரிரவுக்குள்
ஓராயிரச் துன்பச் சிலுவைகள்
உன் மீது இறங்கியிருக்க..!
நானோ குருதி பிழிந்து
குற்றுயிராய் வீழ்ந்து கிடக்கின்றேன் - எனைத்
துரத்தி வரும் உன் மௌனம் கண்டு!
என்னடா .செய்தாய் !
உனக்கும்
எனக்கும்!
- Jancy Caffoor-
09.04.2013
இனியுன்னை
விடியலின் விரல்கள் - என்
விழி தழுவிச் செல்கின்றன!
காற்றின் சில்மிசத்தில்
காணாமல் போயிருந்த என் உறக்கம்
மெல்ல மொட்டவிழ்கின்றன
உனை நோக்கி!
கால விரயத்தில்
காணாமல் போன நம்முறவுகள்
மீண்டும் தளிர் தொடும் பசுமைகளாய்!
உடைந்து போன கனவுகளை
மெல்லன ஏந்தி
கெஞ்சுகின்றன நம் காதல்
விதியிடம்!
இதோ.!
அன்பின் சிறகடிப்பில்
ஆரத்த தழுவும் உன் ஆன்மா
மெல்லக் கிள்ளுகின்றன - என்
கன்னம் சிவக்க
"இனியுன்னைப் பிரியேனடி"
Subscribe to:
Posts (Atom)