நள்ளிரவின் நிசப்தத்தில் என் அறைக் கதவு பலமாக தட்டப்படுகின்றது. அப்பாதான் பெயர் சொல்லி அழைத்தார். வெளியே வந்த போது அவரது கைகளால் மார்பினைப் பொத்தியவாறு வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.
"நெஞ்சுக் குத்துது மக........ரெண்டாவது அட்டாக் வந்திட்டுது போல"
அவர் சிரமப்பட்டு சொன்னபோது, என் மனமும் இற்று துடிக்கத் தொடங்கியது.
"உங்களுக்கு ஒன்னும் ஆகாதுப்பா"
அப்பாவைத் தைரியப்படுத்தினாலும் கூட, மனசு அப்பாக்கு ஏதும் நடந்திடுமோ என்று பயந்தது..
அந்த நடுநிசி நேரத்தில் எங்கள் வீட்டில் மட்டும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, கொடுக்க வேண்டிய மருந்துப் பக்கெற்றுக்களை துலாவுகின்றேன்..
அப்பா தொடர்ச்சியாக மருந்து பாவிப்பதில்லை என்பதால், மருந்துகள் தீர்ந்திருந்த விடயம் கூட தெரிந்திருக்கவில்லை. வருத்தம் வந்தால் எப்போதாவது பாவிப்பார். எப்படியோ தேடி கண்டுபிடித்து இரண்டு அஸ்பிரின் சார் மருந்து வில்லைகளை குடிக்கச் செய்தேன். அப்பா நாளைக்கு வாங்கித் தாரேம்பா "
என் உறுதி மொழியில் அப்பாவும் சற்று வேதனை துறந்து சிரமப்பட்டு தூங்கிய போது கண்கள் பனித்தது.
"பிரிந்திருப்பதை விட பிரியப் போகின்றோம் என நினைக்கும் போது அதன் வலி அதிகம்."
நாளை கட்டாயம் அப்பாக்கு பாமஸில மருந்து எடுத்துக் கொடுக்கணும். மனசு பல தடவை மனப்பாடம் செய்ய உறங்கிப் போனேன்......
அதன் பின்னர் விரட்டி வந்த இரண்டு நாட்களும் மன அழுத்தங்களுடன் இறங்கிப் போனது. அந்த விடயத்தை மறந்தே போனேன்...
"மக மருந்து வாங்கினீங்களா"
அப்பா கேட்ட போது மனசுக்கு யாரோ சம்மட்டியால் அடித்த வலி...
"சொறிப்பா.........மறந்திட்டன், நாளைக்கு வாங்கித் தாரேன்"
நான் பதிலளித்த போது அப்பா எதுவுமே பேச வில்லை...
அந்த மௌனம் என் வலியை இன்னும் அதிகரிக்கச் செய்தது. இரண்டு ஏச்சு ஏசியிருந்தாலும் கூட அந்தக் கணத்துடன் கோபம் கரைந்திருக்கும் இப்படி மனசு வலித்திருக்காது...
அப்பா சாறீப்பா...........மனசு மீண்டும் எனக்குள் பல தடவைகள் மன்றாடியது.
அப்பா அந்த மௌனிப்புக்களுடனேயே உறங்கிப் போனார்...
நானோ குற்ற உணர்ச்சியில் உறக்கத்தை தொலைத்தவளாக அழ ஆரம்பித்து விட்டேன்..
"அப்பா........என்னை மன்னிச்சுடுங்கப்பா"
விடிந்ததும் அப்பாக்கான மருந்துகள் கைகளில்!