About Me

2013/06/19

உனக்காய் நீ


உன் பாதையில் நானில்லை
புரிந்தும் காத்திருக்கின்றாய்
என் தடமோரம் பாசத்துடன்!

வலிக்கின்றது
தினம் என்னைத் தேடும்
உன் பாசத்தின் செறிவும்
என்னைப் பற்றிய நம்பிக்கைகளும்!

அன்றென்னை தொலைத்துவிட்டு
இன்றல்லா தேடுகின்றாய்
சந்து பொந்துகளில்!

மழையில் நனைந்தவாறே- எனக்கு
குடை பிடிக்க நினைக்கும் உன்னிடம்
கேட்கின்றேன் - நீ
நல்லவனா வில்லனா!

முட்களை முகமாக்கி நிற்கும் உன்னிடம்
சத்தமில்லா ஓசையாய் விம்மலொன்று
வெடித்தெழுகின்றது இப்பொழுதெல்லாம்!

அழுகின்றாயா
எனக்காக அழுகின்றாயா
ரணங்களை மட்டும் உனக்காக்கும் எனக்காக
தினம் அழுகின்றாயா!

புய லுனக்குள்ளும்
பூத்திருக்கும் பூவுக்குள்
மறைந்திருக்கும் மகரந்தங்களாய்
என் நினைவுகளை மட்டும் விட்டுச் செல்கின்றேன்
உன்னிடம்!

நீ வாழ வேண்டும்
உனக்காய்
உனக்குள் நீயாய்!


- Jancy Caffoor-
      19.06.2013

நீரோடை








எப்பொழுது அன்பு மனதினை நிரப்ப ஆரம்பிக்கின்றதோ, அன்றிலிருந்து சந்தோஷங்களும் நம்மைப் பின்தொடரும் நிழல்களாய் மாறி விடுகின்றன.....
----------------------------------------------------------------------------------------------------------

அன்பும் ஓர் போதைதான்...........
அதனாற்றான் அன்பு கொண்டோரை விட்டுப் பிரிய மறுக்கும் மனசு, ஆழ் அன்பில் மோகித்துக் கிடக்கின்றது! 
--------------------------------------------------------------------------------------------------------

காதலானது....... 
வயது, அழகு, பணம் , அந்தஸ்து நோக்கியே தேடி ஓடும் .......
ஆனால்
உண்மை நட்பும் , உறவுகளும்  தூய அன்பை மாத்திரமே நாடியே வரும்!

அதனால்தான் உள்ளத்தில் ஒன்றை வைத்து வேறொன்றைப் புறம் பேசும் காதலை விட,  நட்பே என்றும் சிறந்தது. அழகானது, ...........
---------------------------------------------------------------------------------------------------



பெறுமதி குறைந்த நாணயங்கள்தான் சத்தமெழுப்பும்
பெறுமதி மிக்க ரூபா நோட்டுக்களோ மௌனித்துக் கிடக்கும்!
வார்த்தைகளை சுருக்குவது ஒழுக்கப் பண்பின் வெளிப்பாடு..
----------------------------------------------------------------------------------------------------

யதார்த்தம்


அருகிலிருக்கும் போது  புன்னகைக்கும் உதடுகளை விட
பிரிவினில் கலங்கி நிற்கும் கண்கள் தான் அன்பை அதிகம் சொல்லி நிற்கும்!
------------------------------------------------------------------------------------------------------


நேற்றைய தவறுகள் இன்றைய பலகீனம்.....
இன்றைய பலகீனத்திற்காக நாளைய பலத்தை இழப்பது அறியாமை!
------------------------------------------------------------------------------------------------------

யாரை அதிகமாக நேசிக்கின்றோமோ, அவர்களின் மௌனமே, நம் சந்தோஷத்திற்கும் விரைவில்  நாள் குறித்து விடுகின்றது!
-------------------------------------------------------------------------------------------------------



வலித்தது - உன்
வார்த்தையல்ல!
நீ எனக்குள் விட்டுச் சென்ற
உன் மௌனம்!
--------------------------------------------------------------------------------------------------------

விளக்கொளி தேடி சிறகறுக்கும் விட்டிலாய்....
உன் விதி வழி நசிந்து
இறக்கின்றேன் நானும்.....
அணுஅணுவாய்!
--------------------------------------------------------------------------------------------------------


காதலின் கற்பு வாழ்க்கையிலில்லை
வார்த்தைகளில்!
ஏனெனில் வார்த்தைகள் மகிழ்வைக் கரைத்து
காதல் வாழ்க்கையைச் சிதைக்கக்கூடியவை!
--------------------------------------------------------------------------------------------------------

நம்மைக் கடந்து போன நினைவுகளை
நாம் எப்பொழுது மறக்கின்றோமோ....
அன்றே.............
மனிதரெனும் அந்தஸ்தும் நம்மை விட்டுப் போய்விடும்!
--------------------------------------------------------------------------------------------------------



கடிக்கின்ற நுளம்புகளை
அடிக்கின்றேன்................
துடித்தே இறக்கின்றன அவை- நாமும்
படிக்கின்ற பாடம் " தீயோர் வாழார்"


- Ms. Jancy Caffoor -

2013/05/22

மரணத்திலாவது


அன்பு தேடியலைந்தேன்
பாசம் தொலைத்த வெற்றுடல்களில்
சுயநலங்கள் சால்வை போர்த்திக்கிடந்தன!

நானும் விடுவதாயில்லை
என் யாக்கைக்குள் சிறு பருக்கையாவது
அன்பு கிடைக்காமலா  போகும்!

நடந்தேன் தொலைநோக்கி நடந்தேன்
தூரத்தே சிறு சமிக்ஞை
கரங்கள் அசைந்து அழைத்தன என்னை!

அன்பு கிடைத்ததென்ற போதையில்
கற்களும் முற்களும் கால்களைப் பதம் பார்க்க
புதுப் பிறவியெடுத்தோடுகின்றேன் அங்கே!

அங்கே..................

புகைந்து கொண்டிருக்கின்றன மனித உடல்கள்!
மயானத்தின் சமாதிகளுக்கிடையே ஆத்மாக்கள்
அழைத்துக் கொண்டிருந்தன என்னை!

மெல்ல புன்னகைத்தேன்
தேடியலைந்த அன்பு கிடைத்த மமதையில்!

மெல்ல மெல்ல கண்கள் சொருகுகின்றன
அட
நானும்  மரணிக்கின்றேனா!

என்னைச் சூழ்ந்திருப்போர் கதறும் ஓசை
காற்றினில் இழைந்து கரைய!
அட அன்பு கிடைத்துவிட்டது
மரணத்திலாவது!!


- Jancy Caffoor-
     22.05.2013