About Me

2014/09/21

தங்கமீன்கள்

தங்கமீன்கள் - விமர்சனம்
-----------------------------------------


நீண்டநாட்களின் பின்னர் நல்ல திரைப்படமொன்றை பார்த்த திருப்தி, மனநிறைவு...இது அப்பா, மகளுக்கிடையே உள்ள பாசப் போராட்டத்தை விளக்கும் படம்.
.
 தன் பாசமிகு மகளை அருகிலிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே உள்ளூரில் கிடைத்த ஈயம் பூசும் வேலையை குறைவான சம்பளத்துக்குப் பார்க்கும் அப்பா கல்யாணி (ராம்), தன்மீது பாசம் வைத்திருக்கும்  தந்தையின் பணப் பிரச்சினைகளுக்கு தானே காரணம் எனப் புரிந்து குளத்தில் மூழ்கி இறந்து தங்கமீனாய்ப் போகவும் தயாராகும் மகள் செல்லம்மா...

இந்த இருவரின் வாழ்க்கைச் சம்பவங்கள்தான் தங்க மீன்கள்.

தந்தையின் அளவற்ற பாசம், தனியார் பள்ளியின் கொடுமை, பொருளாதார நெருக்கடி எனும் பின்புலத்தில் நகர்கின்றது தங்கமீன்கள்.

மகளின் பள்ளிக் கட்டணம் கட்ட எவரெவரிடமோ கையேந்தி அவமானப்படும் ராம், வசதியான சொந்தத் தந்தை தரும் பணத்தை வாங்க மறுக்கின்றார். சுயகௌரவம் இங்கே ஆழமாக முக்காடிடுகின்றது. தந்தையுடன் அப்படி என்னதான் ஈகோவோ?

 'கல்யாணி, அதான் உன் பெண்ணுக்குத்தான் ஒரு அம்மா இருக்காளேடா.. நீ வேற எதுக்கு இன்னொரு அம்மா மாதிரி உன் பொண்ணு பின்னாலயே சுத்தற... போய் வேல வெட்டி பார்த்து நாலு காசு சம்பாதிச்சு எல்லோரும் மதிக்கிற மாதிரி நடந்துக்க,"

என ராமின் அப்பா திட்டும்போது  ஏற்பட்ட பிரச்சனையில் தனது மனைவி, மகளை விட்டுவிட்டு கொச்சிக்கு செல்லும் ராம், அங்கேயே வேலை பார்க்கின்றார். அவருடைய மகளோ அவரிடத்தில் வோடபோன் நாய் குட்டி வேண்டும் என்று கேட்கிறார்.  அதன் விலை 25000 ரூபாய் . ஆனால் அவரிடம் அதை வாங்குமளவிற்குப் பணமில்லை. அந்த நாய்க்குட்டியை வாங்கப் போராடுகின்றார்.

ஆனால் மகளோ  தனது அப்பா, வோடபோன் நாய் குட்டியை வாங்கி வர மாட்டார் என்று நினைத்து, குளத்தில் குதித்து இறந்து தங்க மீனாகிவிடலாம் என்று  முடிவு செய்கிறாள்.



தெருக்களில் குழந்தைகளை தனியாக அனுப்ப யோசனை செய்யும் இக்காலத்தில்,  தமது பாச மகளை  ராமும் அவர் குடும்பமும் அவள் இஷ்டத்துக்கு வீதியில் திரிய விடுகிறார்கள். அதனால் அவளோ தங்க மீன்களைப் பார்ப்பதற்காக அடிக்கடி ஆபத்தான குளத்தில் இறங்குவதும் வீட்டார் செல்லம்மாவைக் காணவில்லை எனத் தேடுவதும் க்ளைக்மாக்ஸ் வரை தொடர்கின்றது.

அவள் தங்க மீனாக ஆனாளா அல்லது ராம் அவளை மீட்டு வந்தாரா என்பதுதான் கிளைமாக்ஸ்.

சிறு குழந்தைகளின் மனதில் பதிக்கப்படும் எண்ணங்கள் அவர்களின் செயல்களுக்கு காரணமாகின்றன என்பது கதையின் கிளைமாக்ஸின் உயிர்நாடி........

இயக்குனர் ராம் அப்பாவாக, கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோருக்கு வெகு இயல்பான வேடம். மகளாக நடித்திருக்கும் சிறுமி சாதனாவின் நடிப்பு மெச்சும்படியாக இருந்தது. பாடல்கள், யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை எல்லாமே ரசிக்க வைக்கின்றன

தனது மகளிடம் இருக்கும் குறைகளை யெல்லாம்  நிறையாக எண்ணி, தனது மகளுக்காக ஒவ்வொரு இடத்திலும்  போராடும்  ராம், பிள்ளைகளுக்காக உருகும் அப்பாக்களுக்காக இப்படத்தை சமர்ப்பித்திருக்கின்றார். ஆனால் மறுபுறம் ஒரு தந்தை தன் மகளை எப்படி வளர்க்கக் கூடாது என்பதும் வலியுறுத்தப்படுகின்றது மறைமுகமாக..........


பல இடங்களில் நெகிழ்வான இயல்பான கதையோட்டம். ஒரு குடும்பத்தை அருகிலிருந்து தரிசித்த உணர்வு...

தங்கமீன்கள் நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய திரைப்படம்...


சைவம்



சைவம் - திரைவிமர்சனம்
-----------------------------------------
வெறும் பொழுதுபோக்குக்குத்தான் சினிமா எனும் பாணியில் செல்லும் தற்போதைய சினிமாக்களில் இடைக்கிடையே குடும்பத்தினருடன் சேர்ந்து பார்க்கக்கூடிய நல்ல படங்களும் வருகின்றன. 

அந்தவகையில் சைவம்...........
.
குடும்ப உறவுகளைப் பேணி நிற்கும் நல்லதொரு திரைக்கதை!
.
இன்று இயந்திரமயமான குடும்ப வாழ்க்கைப் போக்கில் கூட்டுக்குடும்பம் தன் செல்வாக்கினையிழந்து நின்றாலும், சில வீடுகளில் அது தன் செல்வாக்கினைப் பேணி நிற்கின்றது.
.
 செட்டிநாடு அன்பு, பாசம், உறவுகளின் அருமை ஆகியவற்றைப் பெரிதாக நினைப்பதும், உறவுகளுக்காக நிறைய விட்டுக் கொடுப்பதுமான மண் வாசனையை இழந்து விடவில்லை. அந்த மண் வாசனையுடன் வந்திருக்கும் படம்தான் இயக்குநர் விஜய்யின் சைவம்.
.
செட்டிநாட்டின் ஒரு பகுதியான கோட்டையூரில் வசித்துவரும் கதிரேசன் (நாசர்) என்ற பெரியவரின் குடும்பத்தினர் பல இடங்களில் பிரிந்து வாழ்ந்தாலும் விடுமுறைக்காக சொந்த ஊரில் ஒன்று கூடி மகிழ்வை வௌிப்படுத்துவார்கள்..அவர்களின் சந்தோச நாட்களிடையே திடீரென ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை, சாமிக்கு செய்யாமல் விடப்பட்ட நேர்த்திக்கடன்தான் பிரச்சினைகளுக்குக் காரணம் என நம்பி , சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலைத் திருவிழாவில் பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அது குழந்தை தமிழ், ஆசையாக வளர்த்துவரும் சேவல்.
.
ஆனால் பலி கொடுக்கப்பட வேண்டிய அந்தச் சேவல் தொலைந்துபோகிறது. சேவல் கிடைத்தால்தான் குடும்பத்தின் மகிழ்ச்சி திரும்பும் என்ற சூழ்நிலையில் அந்தச் சேவலைத் தேடுகின்றார்கள்.
.
அந்தச் சேவல் கிடைத்ததா? அதனை யார் ஔித்து வைத்தார்கள்? சாமிக்கு பலி கொடுக்கப்பட்டதா? அமைதியிழந்து தவித்த உறவுகள் இறுதியில் என்ன செய்தார்கள்? ஒவ்வொருவரின் பிரச்சினைகளும் தீர்ந்ததா?
.
இதுதான் கதையின் இறுதிநகர்வு.

தவறு செய்பவர்கள் தம் தவறுக்கு மன்னிப்பு கேட்கும் விதம் நெகிழ்வின் நெருடல்...சேவலைத் தேடும்போது ஏற்படும் பரபரப்பு........சேவலைத் தேடும் போது வரும் சண்டைகள் ..........சேவலைப் பலிகொடுக்கப் பூசாரி கத்தியை ஓங்கும்போது ஒவ்வொருவராய் தமது தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கும் விதம்...நாசர் மகன் லுத்ஃபுதீன் பாஷாவின் துரு துரு நடிப்பு..

படத்தின் மையப் பாத்திரமாக நடித்துள்ள குழந்தை சாராவின் நடிப்பு..
.
காதல், சண்டை, குட்டீஸ் அட்டகாசம், பாசம் என திரைக்கதை ஒவ்வொரு வடிவங்களிலும் இயல்பாக நடமாடுகின்றது. ரசிக்கும்படி இருக்கின்றன. சகல கதாபாத்திரங்களையும் விஜய்  அவரவர் இயல்பில் நடமாட விட்டிருக்கிறார். நாசர் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.  இசை, பாடல்கள் பின்னணி இசை ரசிக்கும்படி உள்ளது.

ஆனால்..........
.
இது குடும்ப உறவுகளை, உணர்வுகளை வலியுறுத்தும் படம். படத்தின் பெயரை ஏன் சைவம் என வைத்தார்கள்? புரியவில்லை.


அன்பு


தாயிடமிருந்து கிடைக்கும் அன்பை இவ்வுலகில் யாரிடமுமிருந்தும் நாம் பெற முடியாது..அந்தத் தாய்மையின் ஸ்பரிசம் நமக்குக் கற்றுத் தந்த இவ்வன்பை , நம் மனதின் முகவரியாக்கினால் பண்பான வாழ்க்கை நமக்குச் சொந்தமாகும்....

அன்பு பற்றியதான சில ஹதீஸ்கள்..
--------------------------------------------------------
‘மனிதர்களுக்கு அன்பு காட்டாதவருக்கு அல்லாஹ் அன்பு காட்டமாட்டான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம்).
-------------------------------------------------------------------------------------------------------
"இரு முஸ்லிம்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் (அன்புடன்) கை குலுக்கிக் கொள்வார்களானால், அவர்கள் இருவரும் பிரிந்து செல்வதற்கு முன் அந்த இருவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்"  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

(அறிவிப்பவர்: பராஃ (ரலி) அவர்கள், அபூதாவூத்).

2014/09/20

Football Team - Zahira Maha vid

அகில இலங்கை ரீதியிலான 15 வயதிற்கு கீழ்ப்பட்ட கால்ப்பந்தாட்டப் போட்டிக்கு அநுராதரம் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான போட்டிகள் எதிர்வரும் 23/24/25.09.2014 திகதிகளில் கொழும்பில் நடைபெறும்


இவர்களை நாமும் வாழ்த்துவோம்!

கால்ப்பந்தாட்டக்குழுவில் இடம்பெறும் மாணவர்கள்

1.   N.M. Sasan   (C)
2.   R. M. Abdullah  (K)
3.   K.R.M. Suhail
4.   M.N.M.Asjath
5.   M.M. Ilham
6.   I. Saiful
7.   A.S.Shahan
8.   N.M. Sakeer
9.   A.S.Sabri
10. K.Waseem Akram
11. B.Gavaskar
12. M.M.M.Mubasir
13. A.A.Aqeel
14. S.M.Saheel
15. A.Al Askhaf

பயிற்றுவிப்பாளர்கள் - 
Mr. P.T.Rifas
Mr. Thilina


 2014.09.19 திகதி காலைக்கூட்டத்தில் வைத்து இம்மாணவர்களுக்கான Jercy ஆடைகள் அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை அதிபர் மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்..இதனை Mr. Mohamed Atheek (London) வழங்கியிருந்தார்.