About Me

2014/10/09

மனசின் வரிகள்


-----



காலம் ஒரு கண்ணாடி........
ஏனெனில் பொய்மைகளைத் தானாகவே காட்டித் தந்துவிடும்! பொய்யானவர்களுக்கு உண்மையாக இருக்கப் போராடுவதை விட, உண்மையானவர்களுக்கு உணர்வாக இருப்பது அக்காலத்தின் சத்தியமாக இருக்கின்றது. அப்பொழுதுதான் பொய்மையின் பலகீனம், மெய்யின் பலத்தில் கரைந்து போய்விடுகின்றது!


இலஞ்சம் வீட்டிலிருந்துதான் ஆரம்பமாகின்றது..
இது இலட்சங்களல்ல.......
அழும் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கித் தருவதிலிருந்து!

-  Jancy Caffoor -

உலக தபால் தினம்- 2014


தொலைத்தொடர்பு இலத்திரனியல் ஊடகங்களின் வருகையால் சவாலுக்குள்ளாகியுள்ள அஞ்சல் சேவையை மக்கள் புறக்கணித்து விடாத நிலையில் ஒக்டோபர்  9 ந் திகதி உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகின்றது.

இந்த வருடத்திற்கான தொனிப் பொருள்

 "மக்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட தபால்"

என்பதாகும். இதன்மூலம் இளைஞர்கள் மறந்துவிட்ட தபால்சேவையின் முக்கியத்துவம் மேலும் உணர்த்தப்படுகின்றது.

1969ம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் பெறப்பட்ட முடிவின்படி ஒக்டோபர் 9ந் திகதி உலக அஞ்சல்தினமாகக் கொண்டாடப்படுகின்றது. உலக தபால் அமைப்பில் 150 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. சுவிற்சலாந்தின் பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல்தினமாகக் கொள்ளப்படுகின்றது.

1712ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் முதலாவது தபால் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே தபால் துரித வளர்ச்சியேற்பட்டது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனியினரின் தகவல் வளர்ச்சிக்காக ஒழுங்கமைக்கப்படாத தபால் சேவையொன்று கெப்டன் எ கென்னடியினால் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், தபால்துறையின் தலைமைப் பொறுப்பதிகாரி ஈ பிளாட்டமன் அவர்கள் 1815 ல் கொழும்பு, காலி, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற இடங்களில் ஆறு அஞ்சல் நிலையங்களைத் திறந்தார்..

1832ல் ஆசியாவில் முதற்தடவையாக குதிரை வண்டித் தபால்சேவை கொழும்புக்கும் கண்டிக்குமிடையில் நிகழ்த்தப்பட்டது.

1857ல் (ஏப்ரல்1) முதல் வௌியிடப்பட்ட தபால் தலையில் விக்டோரியா மகாராணியின் உருவம் பொறிக்கப்பட்டது.

1865ல் முதற் தடவையாக கொழும்புக்கும் அம்பேஸ்ஸவுக்குமிடையிலான தபால் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1867ல் முதன்முறையாக தனியார் தபால் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

1872 ஓகஸ்டில் முதல் தபால் அட்டை வௌியிடப்பட்டது.

இன்று இலங்கையில் 609 மேற்பட்ட தபால் நிலையங்கள் சேவையாற்றுகின்றது. ஆனால் உலகிலே அதிகளவான தபால் நிலையங்களைக் கொண்ட நாடாக இந்தியா காணப்படுகின்றது. இங்கு ஒரு இலட் 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

நவீன தொழினுட்ப வளர்ச்சியின் சவாலை சந்திக்க அஞ்சல்துறை பல்வேறு புதிய திட்டங்களை வழங்கும் என நம்பலாம்...

2014/10/06

தேவதையுடன்


விரல்களின் விருந்தோம்பலில்
கணனித் தட்டச்சு திணறிக் கொண்டிருக்க..
கண்களைக் திரையில் பொறிக்கின்றேன்!
கன்னம் சிவக்க சிரிக்கு முன் முகம்
காணவில்லை
சில நாட்களாய்!

நெஞ்சக்கூட்டைக் குதறிக் கடிக்கும்
உன் நினைவுகளைக் கிள்ளிப் பார்க்கின்றேன் - நீ
தொலைந்து போன ஈரத்தை
இன்னும் பரத்திக் கொண்டுதான்
இருக்கின்றன
உன்னை உலர விடாமல் தடுக்க!

தடக்கி விழுந்த போதெல்லாம்
என்னை நிமிர்த்திய வுன் கரங்கள்....
அழுதபோதெல்லாம் அணைத்த வுன்
கரங்கள்
கவலைகள் துடைத்த வுன் வார்த்தைகள்
இப்போதெல்லாம்
அவள் பெயரை ஸ்பரித்தே
என்னை மறந்து போனது!

அன்று
நீ
அன்போடு எழுதிய என் சரிதத்தை
அவசர  அவசரமாய் முடித்து வைத்தபோது
உன்
அவசரத்தின் அவசியத்திற்காய்
வழி விட்டு நிற்கின்றேன்
மௌன வௌிக்குள்!

என் ஆழ்நிலைச் சுவாசம் பிடுங்கி - நீ
தினமும் உயிர்ப்பூட்டும் அவளுக்காய்
உனக்காய்
இறந்துமுன்னை நேசிக்கின்றேன்!

என் கல்லறைச் சுவர்களாவது
உன்னுடனான என் னன்பை
புரியவைக்குமென்ற நெகிழ்வுடன்
விடைபெறுகின்றேன்

நீயாவது வாழ்ந்துவிடு
உன் தேவதையுடன்!

- Jancy Caffoor-
 

மனமே மனமே




தியாகம், விட்டுக் கொடுப்பு , இறையன்பு போன்ற தத்துவங்களால் ஆளப்படுகின்ற இன்றைய ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது ஈதுல் அல்ஹா ஈத் முபாரக்!
----------------------------------------------------------------

இன்று (ஒக்டோபர் 06) இலங்கையில் சர்வதேச ஆசிரியர் தினம்    கொண்டாடப்படுகின்றது. ஆசிரியர்தின வாழ்த்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள். அத்துடன் எனக்கும் கல்வியூட்டிய என்னுடன் பணியாற்றும் சகல ஆசிரிய நட்புக்களுக்கும் இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்......! 


--------------------------------------------------------------------------

நீ மறந்து போன..
மறுத்துப் போன ஒவ்வொன்றும் - என்
ஞாபகங்களாய்!
தொலைத்தாய் என்னை - பல
எல்லைகளுக்கு அப்பால்!

-----------------------------------------------------------------


மழைத்துளிகள் மெல்ல கரம் தருகின்றன
கன்னம் கரைக்கும் கண்ணீரை
யாரு மறியாது துடைப்பதற்கு!
---------------------------------------------------------------------------


தேடல்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை! அதனால்தான் திருப்தியடையாத மனமும் தினமும் தேவைகளை விரித்துக் கொண்டே செல்கின்றது. ஒன்றின் நிறைவில்தான் புதிய தொன்றுக்கான ஆசைமனதில்  வித்திடப்படுவதனால் , கிடைத்த தொன்றினை ரசிக்க ஆரம்பிக்க முன்னர், கிடைக்காத ஒன்றுக்கான எதிர்பார்ப்பில் மனம் அலைந்து ஏக்கம் சுமந்து அந்த ரசனையையும் கவலைக்குள்ளாக்கி விடுகின்றது பலரிடம்...!
.
நிலையற்ற மனித மனமே... நீ
கவலைகளின் சொப்பனம் இதனாலோ!
----------------------------------------------------------------------------------------


உறவுகள், நட்புக்களின்
சுயநலங்கள்......
அன்பைப் பொசுக்கும்போது....
அனாதை விடுதிகளும், முதியோர் இல்லங்களும்
அடையாளங்களாகின்றன
புது உறவைக் கொடுத்து!
.
தொலை சென்ற உறவுகள் தேடா
முள்வேலிக்குள் முகவரி காட்டும்
கலைக்கூடத்திலும்
நல்ல உள்ளங்களின் அன்பும் கிடைப்பதுண்டு!

-----------------------------------------------------------------------------

வேடிக்கையான வாழ்க்கைக்குள்
விடியல் தேடும் மானுடர்கள்.....
நேற்றிருந்தோர் இன்றில்லை
இன்றிருந்தோர் நாளை நம்கூட வரப் போவதில்லை.....
சுயநல ஆதிக்கமும்....
விதியின் கோரத்தனமும்....
மாற்றங்களோடு!

இதுதான் வாழ்வின்
யதார்த்தமா!