About Me

2015/02/14

கோபம்



சாலையோரத்தில் காற்றோடுரசும் ரோசாவை
வாஞ்சை யோடணைத்தேன் கைகளில்
சிரித்தது முள்
ரணம் தருவதை மறைத்து
...................................................................................

கோபம்!
மனக் கஷ்டம்
பண நஷ்டம்
சில காலங்களாக எனக்குள் வலை பிண்ணிக் கொண்டிருக்கும் இக் கோபம் இனி வராதிருக்கட்டும்


- Ms. Jancy Caffoor -
   14.02.2015

காதலர் தினம்



வருடா வருடம் 
சிவப்பு ரோசாக்களும் சிவக்கின்றன
பெப்ரவரியில் பன்னீர்த்துளிகள் வீழ்கையில்
வெட்கம் தொட்ட காதல்
மனசெங்கும் ஏங்கி
நிலாவௌியில் அன்பைக் களவாய் வாசிக்க!

அடடா

ஊர் செவி விரித்து சங்கதி கேட்குதோ!
காதலின் குணம் நுகர்ந்து
கேலியும் கிண்டலும் மாலையும் சில சேர
சிலவோ 
விமர்சனம் கண்டு அரிவாளும் அழுகையுமாய்
சமாதியில் வீழ
எங்கும் காதல் எதிலும் காதல்!
பேதங்களுக்கு அப்பால் பேசப்படும் மொழியாய் 

ஓ     இன்று காதலர் தினம்!

காற்றுவாக்கில் காதில் அதிர்ந்து
காத்து நிற்கின்றது நமக்கும் தன் வரலாற்றின் ஞாபகங்களை
மெல்லச் சொல்லிப் போக!

முத்தங்களும் பரிசுகளுமாய் பரிமாறு மின்று....
அன்றைய தியாகமொன்றும்
மீண்டும் உயிர்க்கின்றது சுயமாய்!

நீங்கள் அறிந்தவைதான்
இருந்தும் 
செவி கொடுங்கள் மீண்டுமொரு முறை!

அரசன் கிளாடிஸ் மிமி கிளர்ந்தெழுந்தான் 
ரோமாபுரியில் திருமணம் செய்பவர்கள்
சிரம் சிதைத்துக் கொல்லப்படுவார்களென!

உத்தரவின் அகோரத்தில் திருமண நிச்சயதார்த்தங்களும்
காதல் ஒப்பந்தங்களும் ரத்தாகும் வேள்வியில்...

பாதிரியார் வாலண்டைன்
பசுமை வார்க்கும் நெஞ்சினனாய்
ரகஸியமாய்
இல்லறமிணைக்கின்றார் காதலர்களை!

அறிந்தான் அரசன்
அவன் ஆக்ரோசத்தில் வாலன்ரைன்!.
சிறையில்
இரும்புக் கம்பிகளையும் துளைத்துச் செல்கின்றது
சிறைக்காலவர் தலைவனின் பார்வையிழந்த பூமகளின்
அன்பு!

அவள் அஸ்டோரியசு

சிரமிழக்கப் போகும் தன்னவனுக்காய்
துவண்டாள் பேதை
போராடினாள்   விளைவு
வீட்டுக்காவலில் வேராகினாள்!

கட்டுப்பாடுகள்
காதலின் சக்தி முன் வெறும் காற்றலைகளோ..

காவலை மீறினார் வாலன்டைன்
காகித அட்டை துளைத்தெழுதிய - அவர்
காதல் வாழ்த் தவள் கரம் சேரும் நேரம்!

சித்திரவதைக்கூடம் அவருயிர் பிரித்து
சத்தமின்றி கலைக்கின்றது
சத்தியக் காதலை!

அது
முதல் காதலர் வாழ்த்து!

270 வது வருடம் பிப்ரவரி 14 !
கண்ணீரில் கசிந்த காதலின் ஈரம்
இன்றும் காதலர் தினமாய்
காலத்தின் ஞாபகங்களில்


- Jancy Caffoor-
  14.02.2015


காதல் வாழ்க



பஸ்ல பயணம் செய்கிற ஒவ்வொருவரும் அப்பஸ்ஸ தவறவிடுற ஒவ்வொரு செக்கனுக்கும் பல நிமிட தாமதங்களப் பெற வேண்டும் எனும் உண்மையை மறுப்பதில்லை.

நானும் அவசரமாகப் பாய்ந்து பஸ்ஸேறி ஜன்னலோர இருக்கையில அமர்ந்தபோதுதான் நீண்ட பெருமூச்சொன்று என்னுள் எட்டிப் பார்த்தது........

ஜன்னலோரம்

மதிய நேர உக்கிர காற்றின் மோதலோடு சுவாசமும் சிக்கிக் கொண்டபோதுதான் சுகமும் அவஸ்தையும் கலந்த கலவையொன்றை அனுபவித்தேன். கண்களை மூடிக் கொண்டேன். காற்றின் தாலாட்டு இதமாய் வசீகரித்தது.

அது மூன்று பேருக்கான இருக்கை!

அருகில் இளஞ்ஜோடியொன்று அமர்ந்தது

அவள்

இன்னும் இருபதைத் தொடாதவள் முகமெங்கும் வழியும் பருக்கள் அவள் இளமையின் சுவடுகளாய். அவனும் அவளுக்கருகில் நெருக்கமாக அமர்ந்தான். இருவரும் கொழும்புக்கு பயணிக்கிறார்கள் போல். உணர்ந்து கொண்டேன் அவர்கள் காதலை!

அவர்களின் நெருக்கம் சங்கடம் தரவே பார்வையை வீதியோரம் திசை திருப்பினேன். இருந்தும் அத்திசை திருப்பலையும் மீறி

அவர்களின் அன்பின் ஈரம் என் பார்வையில் கசிந்தது. அவன் தன் கரத்தால் அவள் கரங்ளையும் பிணைத்து அவள் தோளில் சாய்ந்து ஒருவருக்கொருவர் குழந்தையாய் மாறி கண்மூடி காற்றில் தம் சந்தோசங்களை கலந்து கொண்டிருந்தனர். இக்காதலின் அன்பும் வசீகரமும் மகிழ்ச்சியின் ரேகையாய் அவர்களுள் ஒன்றித்திருந்தது. காதல் என்பது வெறும் அன்பை மட்டுமல்ல பாதுகாப்பு, அக்கறை, உரிமை, வாழ்க்கையின் பிடிப்பு, எதிர்கால நம்பிக்கை, ஆசைகள், கனவுகள் என அத்தனை அம்சங்ளோட  ஜீவநாடி என்பதை அவர்களும் உணர்த்திக் கொண்டே வந்தார்கள் அந்த ஒன்றரை மணி நேரமாய்.

ஆனாலும் 

எனக்குள்ள ஒரு டவுட்டும் இருக்கத்தான் செய்யுது. இந்த அன்பும் நெருக்கமும் ரசிப்பும் கல்யாணத்திற்கு அப்புறமும் எல்லோர்கிட்டயும் தொடருமான்னுதான்.

ஏன்னா 

பெரும்பாலான காதல். வாழ்க்கையின் யதார்த்தத்தில் நசுங்கி சீரழிஞ்சு போயிருக்கு. எதுவா இருந்தாலும் காமத்தை மாத்திரம் தேடாத ஆனால் அன்பை மட்டும் வாசிக்கும் எந்தக் காதலுக்கு நாம சல்யூட் அடிக்கத்தான் வேணும்!

அடடா 

இன்னைக்கு பெப்ரவரி 14 ஆச்சே!

உண்மையா நேசிக்கிற  எல்லோருக்கும் ஹாப்பி  வலன்ரைன் வாழ்த்துக்கள்!!

- Jancy Caffoor-
  14.02.2015



நேசிப்பதும் நேசிக்கப்படுதலும்


நாம நேசிக்கிறதும், நேசிக்கப்படுவதும்கூட சுகமான உணர்வுதான். இந்த அன்பு மட்டும் உலகத்தில இல்லையென்றால் பூபாளம்கூட பாதாளமாகி விடும்.

உண்மைதாங்க இந்த அன்போட வாசம் மனசுக்கு ரொம்பப் பிடிச்சுப் போனா, அதன் ஆயுளும்கூட  தடைகளையும் பிரிவுளையும் மீறி  ரொம்ப நாளா உயிர் வாழும்......!

"என்ன "மொனா"   நான் சொல்லுறது உண்மைதானே!......"

வெயிட்...........

நான் ஏன் அதை மொனாகிட்ட கேக்கிறேன் என்றுதானே யோசிக்கிறீங்க....?

ம்ம்..................!

அந்த அன்பு தாற செல்லச் சண்டைகளும், அப்புறம் ஈகோ பார்க்காம ஒருத்தர ஒருத்தர் விட்டுக்கொடுத்துப் போறதும், வாழ்க்கையில கஷ்டம் வாறப்போ ஆறுதலா ஒருத்தருக்கொருத்தர் தூணாகி சாய்ஞ்சு கிடக்கிறதும் இன்னும் எவ்வளவோ!

இது எங்க மனசோட  குரல்கள்!


- Ms. Jancy Caffoor -