வருடா வருடம்
சிவப்பு ரோசாக்களும் சிவக்கின்றன
பெப்ரவரியில் பன்னீர்த்துளிகள் வீழ்கையில்
வெட்கம் தொட்ட காதல்
மனசெங்கும் ஏங்கி
நிலாவௌியில் அன்பைக் களவாய் வாசிக்க!
அடடா
ஊர் செவி விரித்து சங்கதி கேட்குதோ!
காதலின் குணம் நுகர்ந்து
கேலியும் கிண்டலும் மாலையும் சில சேர
சிலவோ
விமர்சனம் கண்டு அரிவாளும் அழுகையுமாய்
சமாதியில் வீழ
எங்கும் காதல் எதிலும் காதல்!
பேதங்களுக்கு அப்பால் பேசப்படும் மொழியாய்
ஓ இன்று காதலர் தினம்!
காற்றுவாக்கில் காதில் அதிர்ந்து
காத்து நிற்கின்றது நமக்கும் தன் வரலாற்றின் ஞாபகங்களை
மெல்லச் சொல்லிப் போக!
முத்தங்களும் பரிசுகளுமாய் பரிமாறு மின்று....
அன்றைய தியாகமொன்றும்
மீண்டும் உயிர்க்கின்றது சுயமாய்!
நீங்கள் அறிந்தவைதான்
இருந்தும்
செவி கொடுங்கள் மீண்டுமொரு முறை!
அரசன் கிளாடிஸ் மிமி கிளர்ந்தெழுந்தான்
ரோமாபுரியில் திருமணம் செய்பவர்கள்
சிரம் சிதைத்துக் கொல்லப்படுவார்களென!
உத்தரவின் அகோரத்தில் திருமண நிச்சயதார்த்தங்களும்
காதல் ஒப்பந்தங்களும் ரத்தாகும் வேள்வியில்...
பாதிரியார் வாலண்டைன்
பசுமை வார்க்கும் நெஞ்சினனாய்
ரகஸியமாய்
இல்லறமிணைக்கின்றார் காதலர்களை!
அறிந்தான் அரசன்
அவன் ஆக்ரோசத்தில் வாலன்ரைன்!.
சிறையில்
இரும்புக் கம்பிகளையும் துளைத்துச் செல்கின்றது
சிறைக்காலவர் தலைவனின் பார்வையிழந்த பூமகளின்
அன்பு!
அவள் அஸ்டோரியசு
சிரமிழக்கப் போகும் தன்னவனுக்காய்
துவண்டாள் பேதை
போராடினாள் விளைவு
வீட்டுக்காவலில் வேராகினாள்!
கட்டுப்பாடுகள்
காதலின் சக்தி முன் வெறும் காற்றலைகளோ..
காவலை மீறினார் வாலன்டைன்
காகித அட்டை துளைத்தெழுதிய - அவர்
காதல் வாழ்த் தவள் கரம் சேரும் நேரம்!
சித்திரவதைக்கூடம் அவருயிர் பிரித்து
சத்தமின்றி கலைக்கின்றது
சத்தியக் காதலை!
அது
முதல் காதலர் வாழ்த்து!
270 வது வருடம் பிப்ரவரி 14 !
கண்ணீரில் கசிந்த காதலின் ஈரம்
இன்றும் காதலர் தினமாய்
காலத்தின் ஞாபகங்களில்
- Jancy Caffoor-
14.02.2015