நிலையற்ற வாழ்விலும் ஊசலாடுகின்றதே ஆசைகள்
கலைக்கின்றதே அமைதியை மனமோ கலக்கத்தில்
தினமும் படருகின்ற எதிர்பார்ப்பின் கவனமும்
திகைக்குதே வழி தெரியாப் பயணத்தில்
தேடலுள் தொலைகின்ற நாகரிகத் தாக்கம்
தேடுகின்றதே ஆபத்துக்களை வாட்டமும் சூழ்ந்திடவே
நாடுகின்ற தீமைகள் நகைக்கின்றதே அழிவிற்காக
நகையும் மறந்த கன்னங்களும் வலிக்கின்றதே
அன்பைத் துறக்கின்ற அவல வாழ்வும்
குவிக்கின்ற பிணக்கால் பிரிகின்றதே இணக்கமும்
வரவும் மறந்த செலவின் தாக்கம்
வடிக்கின்ற கண்ணீரும் வனப்பை அழிக்கின்றதே
நோயும் வறுமையும் துரத்துகின்ற வாழ்வில்
நோவும் வலியும் பிணைந்தே வருகின்றதே
முட்பாதைகளின் முகவரியில் முடிசூடுகின்ற காயங்கள்
தலைகாட்டுகின்ற வாழ்வினில் நிம்மதியும் தொலைகின்றதே
ஜன்ஸி கபூர் - 8.12.2020