எனது தந்தையார் - பெயர் முகம்மது அப்துல் கபூர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சாதாரண குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் தன் தாயாரை இழந்து, மறுமணம் புரிந்த தந்தையும் பிரிந்து, வாழ்ந்த வாப்பாவின் இளமைக்கால வாழ்க்கையின் சுவடுகள் கண்ணீர்த்துளிகளால் நிறைந்திருப்பதனை நான் பல தடவைகள் உணர்ந்துள்ளேன். தன் குடும்ப உறவுகளின் அணைப்பின்றி தனிமையில் வாழ்ந்த ஒவ்வொரு பொழுதுகளிலும் தன் துன்பத்திற்கு மத்தியிலும் தன் ஆற்றலை வளர்த்துள்ளார்.
தந்தை எனும் முகத்தினுள் நான் பல்வேறு விதமான ஆளுமைகளைக் கண்டு வியந்திருக்கின்றேன். மின்னியல் துறையாகட்டும், தையலாகட்டும், பொறியியல் துறையாகட்டும் அவர் பின்நிற்பதில்லை. எல்லா வேலைகளையும் தானே தனித்துச் செய்யும் ஆற்றலுடையவர்.
உலகத்திற்குள் தன் எழுத்துக்களை வெளிப்படுத்தாமல் வாழ்ந்த சிறந்த இலக்கியவாதி அவர். பல மேடை நாடகங்களையும் அரங்கேற்றியிருப்பதை என் தாயார் மூலமாக அறிந்து கொண்டேன். வாப்பாவின் எழுத்துக்களின் அழகும், வசீகரமும் என்னையும் கவர்ந்திழுத்ததனால் இன்று நானும் இலக்கிய வெளிக்குள் சஞ்சாரிக்கின்றேன். என் எழுத்துக்களை ரசித்த முதல் ரசிகர் அவரே. சில பாடல்கள் வானொலியில் ஒலிக்கும்போது சின்ன வயதில் வாப்பா பாடி என்னைத் தூங்க வைத்த நினைவும் எழுகின்றது.
இளமைக் காலத்தில் பொலிஸாகப் பணிபுரிந்தாலும்கூட, அவரின் அபார ஆங்கிலப் புலமை மற்றும் கற்ற கல்வியின் காரணமாக கல்லூரி முதல்வராகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
வாப்பா வரைந்திருந்த பல தத்துருவான ஓவியங்கள் யுத்த இடப்பெயர்வின்போது அழிந்தது இன்றும் வேதனையே.
வாப்பா எனக்கு கற்றுத் தந்த பல விடயங்களை முன்மாதிரியாகக் கொண்டு நானும் எனது தலைமைத்துவப் பணியினை மேற்கொண்டு வருகின்றேன். அவர் தான் காணும் பிறரின் தவறுகள், குறைகளை முகத்தின் முன்னால் சுட்டிக்காட்டுவதால், அவரைச் சிலர் கண்டிப்பானவர் என்பர். ஆனாலும் அக்கண்டிப்பினுள் ஒளிந்திருக்கின்ற அன்பையும், சிரிப்பையும் நான் அனுபவித்துள்ளேன்.
எனக்கு வழிகாட்டிய தந்தை இன்று என்னுடன் இல்லாவிட்டாலும்கூட, அவர் வாழ்த்திய இலக்கியத் துறையில் என் பெயருடனே பயணிக்கின்றார். வாப்பாமீது கொண்ட நேசம் என் ஆயுள்வரை நினைவுக்குள் நீண்டுகொண்டே இருக்கும்.
ஜன்ஸி கபூர் -8.12.2020