2021/04/25
2021/04/24
சுவைப்போமா – மா அடை
ஒரு சமூகத்தின் அடையாளம் கலாசாரம். ஒரு சில அடையாளங்களுடன் பண்பாடுகள் பின்னிப் பிணைந்துள்ளன. அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களுக்கென சில பலகாரங்கள் தனித்துவம் வாய்ந்தவை. அதிலும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் விசேடமான உணவுகளில் ஒன்றுதான் மா அடை.
மா அடை எவ்வாறு சுடுவதென பார்ப்போம்
தேவையான பொருட்கள்
- 500 கிராம் சீனி
- 250 கிராம் அரிசி மா
- 250 கிராம் ரவை
- 100 கிராம் பயறு
- 3 கோப்பை தேங்காய்ப்பால் (2 தேங்காய்)
- 6 முட்டை
- அரை தே.க பேக்கிங் பவுடர்
- தேவையான அளவு கஜூ, பிளம்ஸ், உப்பு
செய்முறை
- அரிசி மாவை வறுத்தெடுக்க வேண்டும்.
- வறுத்த அரிசி மாவில் சீனியைச் சேர்த்த பின்னர் மூன்று கோப்பை பாலையும் நுரை வர கலக்க வேண்டும்.
- வறுத்து குற்றி அரைத்த பயறினை இதனுடன் சேர்த்தல் வேண்டும்.
- பின்னர் இக்கலவையுடன் போதியளவு உப்பு, துண்டாக்கப்பட்ட கஜூ, பிளம்ஸ், பேக்கிங் பவுடர்சேர்த்து, நன்கு கலந்து, கரைக்க வேண்டும்.
- மா தடிப்பான பருவமானதும், எண்ணெய் பூசிய தாச்சியில் ஊற்றி, சுட்டு எடுக்க வேண்டும்.
💗💗💗 அடடா அடை ரெடியாச்சு.....வாங்க சாப்பிடலாம்.
ஜன்ஸி கபூர் - 24.04.2021
இயலாமை
இயலாமை என்பது தோற்றுப் போகின்ற வாழ்விற்கான அடையாளம்தான். நம்மிடையே காணப்படுகின்ற பலகீனங்களை கண்டறிந்து, அவற்றை பலமாக்க முயற்சி செய்யாதவரை இயலாமையும் நம்மை மோப்பம் பிடித்துக் கொண்டே இருக்கும்.
இயலும் எனும் மந்திரச் சொல்லால் போராட்ட வாழ்வில்கூட, மகிழ்வின் வாசம் வீசிக் கொண்டேயிருக்கும். நமது பாதையில் குறுக்காகிக் காணப்படுகின்ற தடைகளைப் பார்த்து தயங்கி நிற்கின்ற இயலாமையை கசக்கி வீசியெறிந்து விட்டு தடைகளைத் தகர்க்கின்ற வழிகளைக் கண்டறிதல் வெற்றியின் பக்கத்தில் நம்மை நிறுத்தும்.
ஜன்ஸி கபூர் - 24.04.2021



