About Me

2021/05/01

புன்னை மரம்

 

அழகும் இதமாகின்றது புன்னையின் புன்னகைபோல்

அருமையின் அடையாளமாகவே உயிர்க்கின்றது தானாகவே

வறுமையும் வளமற்ற சூழல்ப் போராட்டமும்

நிறுத்துவதில்லை இயல்பான இயற்கை வளர்ச்சியை

இருந்தும் சூழ்கின்ற சிறைக்கரத்தின் வன்மத்தில்

கரைந்தே விடுகின்றது மென்மையான மனம்


அடுத்தவரால் மலினப்படுத்தப்படுகின்ற உணர்வுக் குவியலுக்குள்

புதைந்தே புகைகின்ற பெண்மைத் தடத்திலும்

எதிர்பார்ப்புக்களை ஏந்தியவாறே பூத்துக் குலுங்குகின்றன

அடக்கமான அமைதியான வாசனைப் பூக்கள்


ஊர்விழிகளால் மொய்க்கப்படாமல் மூடி மறைகின்ற

இயற்கை பராமரிக்கின்ற இதமான அழகும்

இதழ்களுக்குள் நசிகின்ற மென் புன்னகையும்

சிந்துகின்ற வாசம் மௌனத்திலேயே உறைகின்றது


அடுத்தவரோடு இசைந்து வாழ்கின்ற வாழ்விலும்

விரிக்கப்படுகின்ற சுதந்திரச் சிறகின் நீளுகை

முறிக்கப்படுகின்றது முற்றத்தில் தறித்து நிற்போரால்

நிழலாகின்ற கொடைக்குள்ளும் குறிவைக்கின்றது செந்தணல்


தன்னலம் களைந்து வாழ்கின்ற வாழ்விலும்

விண்ணைத் தொட முயற்சிக்கும் போதெல்லாம்

புண்ணாய்ச் சிதைக்கின்றனர் உணர்வினை உடைத்து

நாற் சுவருக்குள் நாடித்துடிப்பை அடக்கி

பெண்ணைப் போலவே புன்னையும் 

மொண்ணையாகவே மாற்றுகின்றனர் தரணிப் பரப்பிலே


ஜன்ஸி கபூர்

துளியும் கடலும்


தரையைத் தொட்டு மீளுகின்ற அலைகளாய்

தவிக்கின்ற உன் நெஞ்சம் புரிகிறது!

கரையினில் உடைகின்ற அலைகளாய் உன்னாசைகளும்

மனதினில் துடிப்பது எனக்கும் புரிகின்றது!

இருந்தும் புரியாதவனாய் நழுவுகின்றேன் அடிக்கடி!


வீசுகின்ற காற்றுக்குள் நிரப்புகின்றாய் சோகங்களை

மரத் துடிப்பினில் வீழ்கின்ற இலைகள்

நினைவூட்டுகின்றது உன்னை எனக்குள் எப்பொழுதும்

நானின்றி வெறும் சருகாய் உருமாறுகின்ற

உன்னைக் கண்டும்கூட கடந்துதானே செல்கின்றேன்.


உன் சாய்விற்கு என் தோள்கள்

உன் ஆசைகள் என்னைத் துரத்துகின்றன

நான் முற்றும் துறந்தவனா இல்லையே

உன் அன்பு புரிந்தும் ஊமையாகின்றேன்

யாருக்காகவோ உன்னைத் தனிமைப்படுத்துவதாகவே நினைக்கிறேன்


இசை எனக்குப் பிடிக்கும் இசைப்பேன்

மூங்கில் துளைகளை அருட்டுகையில் விழுகின்றது

பொங்கும் உணர்வுகளுடன் போராடும் உன்னினைவு

இருந்தும் தயங்குகின்றேன் உன்னைத் தாங்கிட

உன் அருகாமை என்னை உடைத்திடுமோ


காதல் உணர்வல்ல வாழும் வாழ்க்கை

காதலை நான் கற்கும் வரைக்கும்

நமது விம்பங்கள் மோதுவதை விரும்பவில்லை

நம்மை நாம் புரிந்து கொள்ளும்வரை

தள்ளியே நிற்கின்றேன் உறுதி மனதில்தான்

சந்திப்பு வேண்டாம் உறுதியுரைக்கு என்னாச்சு

உன் உருவைக் கண்டதும் உராய்கின்றது

உந்தன் விழியோரம் செருகியிருக்கும் நீர்

எந்தன் மனசுக்குள் பாய்கின்றது தாராளமாக


நாம் பேசியிருக்கிறோம் நிறைய ரசித்திருக்கிறோம்

காதல் சாயமில்லா நட்புத்தானே அது

அப்படித்தானே நினைத்துப் பழகினேன் உன்னோடு

அருகிலிருந்தால் உந்தன் அமைதியை ரசிக்கிறேன்

உரு மறைந்தால் உறுத்துகிறதே இதயமும்

இருவரின் பேச்சிலும் வாழ்வியல்தானே நிறைந்திருக்கின்றது

இருந்தும் நமது தோழமைக்குள் காதலா

கண்டுபிடிக்க காத்திருக்க வேண்டும் நாம்தான்


உனது நீட்சிக்குள் நானென்ற எல்லையை

எனது மனம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது

உன் துயரங்களுக்கு காது கொடுக்கிறேன்

விழி நீரையும் துடைக்கிறேன் தாயாகி

இன்பத்திலும் துன்பத்திலும் ஒருங்கிசைகின்றோம் நேர்கோட்டில்

இருந்தும் சேமிக்கின்றாய் துடிப்புக்களை என்னுள்ளே


நான் வாசிக்கையில் வீழ்கின்றாய் வரிகளாக

உன் ஆதங்கத்தைப் புரிந்து கொள்கிறேன்

நம் அன்பின் எல்லையை உணரும்வரை

தள்ளியே நிற்கிறேன் முல்லைக் கொடியே


நீயும் விடுவதாக இல்லை தொடர்கிறாய்

உந்தன் சோகங்களை என்னிடம் கொட்டுகையில்

கண்களின் வேதனையைப் படிக்கின்றேன்

கன்னக் கதுப்பில் உறைந்திடும் உனதீரத்தில்

உள்ளம் நனைந்து விடுகின்றது தானாய்

உந்தன் இமையோரம் வடியும் நீர்த்துளிகள்

எனக்குள் அல்லவா கடலாகப் பெருகின்றது.

காரணம் புரியாமல் நானும் தவிக்கிறேன்


உன் அண்மையை ரசிக்கிறேன் எப்பொழுதும்

உனக்காகப் பிரார்த்திக்கிறேன் சோகங்களைப் பிடுங்க

உந்தன் கரங்களைப் பற்றிக் கொஞ்சிட

உள்ளத்தில் மெல்ல ஆவல் முளைக்கிறது

விலகலே நலன் என்கிறது மனசு

விலகினாலும் இணையத் துடிக்கின்றது அன்பு


என் விலகலில் நீ மௌனிக்கிறாய்

அப்பொழுதெல்லாம் அனலாகின்ற தவிப்பும் கடலாகின்றது

நீ உதிர்க்கின்ற கண்ணீர்த் துளிகளை

சேமிக்கின்ற மனதுக்குள் எப்பொழுதும் சுனாமிதானே

பொங்குகின்ற கடலை ஏக்கம் தகர்க்கின்றது

உந்தன் உருவுக்குள்ளே ஒன்றிக்கிடக்கும் என்னைப்

பத்திரப்படுத்து வந்திடுவேன் நானும் உன்னிடத்தில்


ஜன்ஸி கபூர்

நிழல்

 


நிழல் உண்மையை உணர்த்துகின்றது

ஒளியின் சத்தியத்தில் உயிர்க்கிறது

இருளெனும் பொய்மையை மறைக்கிறது


மனசாட்சிக்கும் மதிப்பளிப்பதனால்

அது மனிதனுடனேயே எப்போதும் தொடர்கிறது


வண்ண பேதங்கள் இல்லையதற்கு

எப்போதும் கருமைதான்

சமத்துவத்தைக் கற்றுத் தருகின்றது


சூழ்நிலைக்கேற்ப மாறுகின்றன அதன் அளவுகள்

மாறுகின்ற மனிதர்களின் மனங்களைப் போல


உச்சி வெயிலில் பாதணிகளாகவும்

சுருங்கிக் கொள்கின்றன எமக்குள்

சந்தர்ப்பங்களைக் கற்றுத்தருவதைப் போல


பல உருக்கள் அமைத்து

வித்தைகள் செய்கின்ற விரல்களும்

முதலீட்டு வணிகப் பொருள்தான்


இருளையும் ஒளியையும்

தொடர்புபடுத்தும் நிழல்

இன்பமும் துன்பமும் ஒன்றித்து வருகின்ற

வாழ்க்கையை நினைவூட்டுகிறது


பௌர்ணமி  அமாவாசைகள் கூட

நிழலின் உணர்ச்சி நிலைகள்தான்

மனிதனுக்கும் தத்துவமாகின்றன


வறுமை நிலையில் பயமுறுத்தும்

உயர்ந்து செல்லும் விலைவாசிபோல்

சிறு பொருட்களையும் உருப் பெருத்துக்காட்டுகின்றது

நிழல்


பொய்கள் மெய்யாகலாம்

மெய்யென்ற மாய நிலைக்குள்

பொய்யும் கலக்கலாம்


நிழலும் நம்மை நேசிப்பதனாலேயே

கூட வருகின்றது உயிர்போல


ஜன்ஸி கபூர்

யாழ்ப்பாணம்

சில காதல்கள்

 

சில காதல்கள் தீ போன்றன

முதலில் இதமான பார்வைகள் வீசுகின்றன

பின்னர் இதயத்தில் உணர்வுகள் பொங்குகின்றன

அடுத்து உடலெங்கும் மின்சாரம் பாய்கிறது

சந்திப்புக்களில் மெல்லிய காமம் பூக்கிறது

பிறகு அதுவும் அடங்கி விடுகிறது

நீ யாரோ நான் யாரோவென்று

நம் மனங்களையும் முறித்து விடுகின்றன


சில காதல்கள் கனவுகளில் வாழ்கின்றன

கற்பனைகளில் மாத்திரம் கவிதைகளைச் சுமக்கின்றன

நிஜ வாழ்க்கைக்கு ஏனோ பயப்படுகின்றன

அடி மனதில் ஆசை துடித்தாலும்

எல்லாவற்றையும் மறந்ததாக நாமும் நடிக்கிறோம்

விருப்பமின்றி வேறு வழியில் பயணிக்கிறோம்

நம்மிடம் எஞ்சுகின்றன வடுக்கள் மாத்திரமே


சில காதல்கள் காதலர்தினத்தில் பொங்குகின்றன

நாகரிக உலகத்தில் வாழ அலைகின்றன

வாழத் தெரியாத காதல்கள்தானே இவை

அருகிருந்தால் அணைக்கின்றன தொலைவென்றாலோ மறக்கின்றன

ஆனாலும் உண்மை அன்பைக் கடக்கின்றோம்

அடுத்தவர் பாவத்தையும் நாம்தான் சுமக்கின்றோம்


காதலுக்குள்ளும் அகம் புறக் கண்களுண்டு

நம் உலகம் சுருங்கிக் கிடக்கின்றன

கனவு நிலைக்குள் நாம் தள்ளப்படுகிறோம்

பிறர் புறக்கண்கள் நம்மிடம் நீளுகின்றபோதெல்லாம்

மாயை உலகின் விமர்சனங்களைக் கடக்கின்றோம்.


சில காதல்கள் பேருந்துகள் போன்றவை

இலக்கின்றி இதயத்தில் ஏற்றி இறக்குகின்றன

கொஞ்ச நினைவுகளே நமக்குள் எஞ்சுகின்றன.

கடைசியில் காதலின் புனிதத்தை இழக்கின்றோம்


சில காதல்கள் மலர்களைப் போன்றன

உதிர்ந்து எருவாகின்ற பூக்களாய் மாறுகின்றன

இறந்தாலும் உயிர் வாழ்கின்றன நமக்குள்

அவை ஒருபோதும் நினைவுகளை மறப்பதில்லை


சில காதல்கள் பாதணிகள் போன்றன

எம்மை அருகிலிருந்து அன்போடு பாதுகாக்கின்றன

நாமாக உதறித் தள்ளும் வரை

நம்முடனே இணைந்து வருகின்றன தினமும்

அந்த அன்புடனே நாமும் அலைகின்றோம்


சில பிஞ்சுக் காதல்களும் வாழ்கின்றன

இலக்கணம் அறிந்திருக்காத புதுமைக் காதல்கள்

மற்றோரைப் போல நாமும் காதலிக்கின்றோம்

எல்லா உணர்வுகளும் அதில் இருக்கின்றன

ஆனாலும் முதிர்ச்சிக்கு முன்னரே தோற்கிறோம்

வலி மாத்திரம் எஞ்சுகின்றது நமக்குள்


சில காதல்கள் நமக்கு ஏணிகள் போன்றன

நம்முடன் நினைவில் நடந்து முன்னேற்றுகின்றன

தொலைவிலிருந்து ரசிக்கும் இந்த அன்பை

நினைவுகளில் மாத்திரமே நாமும் சுமக்கிறோம்


காதல்கள் சூழ்நிலைக்கேற்ப பண்புகளை மாற்றுகின்றன

கற்பனைகள் வலிகள் ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள்

எல்லாம் வந்துதான் போகின்றன அழகாக.

சிதையாத உண்மைக் காதல் வாழ்கின்றது

நாம் சுமக்கின்ற அன்புடனதுவும் வளர்கின்றது


ஜன்ஸி கபூர்

யாழ்ப்பாணம்