அன்பு தேடியலைந்தேன்
பாசம் தொலைத்த வெற்றுடல்களில்
சுயநலங்கள் சால்வை போர்த்திக்கிடந்தன!
நானும் விடுவதாயில்லை
என் யாக்கைக்குள் சிறு பருக்கையாவதுஅன்பு கிடைக்காமலா போகும்!
நடந்தேன் தொலைநோக்கி நடந்தேன்
தூரத்தே சிறு சமிக்ஞை
கரங்கள் அசைந்து அழைத்தன என்னை!
அன்பு கிடைத்ததென்ற போதையில்
கற்களும் முற்களும் கால்களைப் பதம் பார்க்க
புதுப் பிறவியெடுத்தோடுகின்றேன் அங்கே!
அங்கே..................
புகைந்து கொண்டிருக்கின்றன மனித உடல்கள்!
மயானத்தின் சமாதிகளுக்கிடையே ஆத்மாக்கள்
அழைத்துக் கொண்டிருந்தன என்னை!
மெல்ல புன்னகைத்தேன்
தேடியலைந்த அன்பு கிடைத்த மமதையில்!
மெல்ல மெல்ல கண்கள் சொருகுகின்றன
அட
நானும் மரணிக்கின்றேனா!
என்னைச் சூழ்ந்திருப்போர் கதறும் ஓசை
காற்றினில் இழைந்து கரைய!
அட அன்பு கிடைத்துவிட்டது
மரணத்திலாவது!!
- Jancy Caffoor-
22.05.2013





