மரணம் எனும் எல்லை வரை தொடரக்கூடிய இம்மனித வாழ்வில் பாவங்களை அகற்றி இறைவனுடன் ஆன்மீகத் தொடர்புகளை ஏற்படுத்த பிரார்த்தனைகள் அவசியமாகின்றன. நம் வாழ்வில் ஏற்படும் சகல பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் இப்பிரார்த்தனைகள் மூலமாகவே இலகுவில் நம்மை வந்தடைகின்றன..
ஹஜ்ஜின்போது புனித அரபாவௌியில் கேட்கும் பிரார்த்தனைகள், ரமழானில் கடைசிப் பத்து இராக்களில் கேட்கப்படும் பிரார்த்தனைகள், தஹஜ்ஜத் தொழுகையின்போது கேட்கப்படும் பிரார்த்தனைகள்
போன்ற சகல பிரார்த்தனைகளும் இறைவனிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமானால், நாம் நம்மைப் படைத்தவன் விரும்பும் வகையில் நமது வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டும். அப்போதே நமது துஆக்களின் பெறுமானம் மிகச் சிறந்ததாக இருக்கும்.
பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமாயின் முதலில் நமக்கும் அல்லாஹ்வுக்குமிடையிலான தொடர்பு மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதே நமது மனமுறுகல் இறைவனிடத்தில் கசிந்து கிடக்கும். மாறாக பாவங்கள், ஷரீ அத்துக்கு முரணான செயற்பாடுகளிலீடுபடும்போது தீமைகளின் செல்வாக்கில் நன்மைகள் தடுக்கப்பட்டு விடுகின்றன. இப் பாவக்கறைகள்தான் பிரார்த்தனைகளின் வலுக்களைக் குறைத்து விடுகின்றன.
இதனை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றார்கள்
"நீங்கள் நன்மையை ஏவ வேண்டும். தீமையைத் தடுக்க வேண்டும். நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்ற மார்க்கக் கடமையைப் புறக்கணிக்கின்றபோது அல்லாஹ் தீயவர்களை உங்கள் மீது சாட்டி விடுகின்றான். பின்னர் உங்களுக்கு மத்தியில் இருக்கின்ற நல்ல மனிதர்கள் துஆ செய்வார்கள். ஆனால் அந்த துஆவுக்கு பதில் கிடைக்காது"
எனவே நமது மனதைச் சுத்திகரித்து, அச்சுத்தத்தின் பிரதிபலிப்பை நாம் வாழும் சூழலிலும் பரவவிட்டு வாழும்போது பாவம், குற்றமற்ற செயல்களைப் புரியாதவர்களுடன் அல்லாஹ் இறுக்கமான தொடர்பைப் பேணி பிரார்த்தனைகளை ஏற்கின்றான்.
.
"ஈமான் கொண்டவர்களே ! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். உங்களது பாதங்களை ஸ்திரப்படுத்துவான்"
எனவே இங்கு உதவி செய்வதென்பது அவனது கட்டளைகளுக்குப் பணிந்து வாழ்தலைக் குறிப்பதால், துஆ அங்கீகாரமென்பது இறைவனால் மிக விரும்பப்படும் மனிதருக்குக் கிடைக்கும் அருட்கொடை எனலாம்.
அல்லாஹூவுடனான தொடர்பை இறுக்கமாக, நேர்த்தியாகப் பேண முதல் நம்முளம் தூய்மையுள்ளதாக இருக்க வேண்டும்.
"யா அல்லாஹ்! நீதான் அகிலத்தின் அதிபதி, நான் உன தடிமை"
எனும் மனப்பாங்கு நம்மிடத்தில் இருக்கும்போதுதான் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அவனுக்குரிய செயல்களாக இருக்கும்.
நாம் அல்லாஹ்வின் அடிமைகள், அவன் எங்கள் ரப்பு எனும் நம்பிக்கையான வார்த்தைகள் அடி மனதிலிருந்து எழும்போதுதான் நாமும் நமது உளத்தை ஆரோக்கியமாகப் பேணி, இறைவனுடனான தொடர்பைப் பேணுவோம். இது பிரார்த்தனை ஏற்றலின் ஆரம்பநிலை.
பரிசுத்தமான மனதானது பரிசுத்தமான உடலின் ஓர் பாகமாகும். எனவே இறைவனிடத்தில் துஆக்களைக் கேட்டு எமது கரங்கள் உயரும்போது தூய்மையான உள்ளத்துடன் உடல், ஆடைகளும் தூய்மையாகி நம்மைப் போர்த்திக் கொண்டிருக்க வேண்டும். எனவே ஹராம் கறைகளை அகற்றியதாகவும், ஹலாலை நோக்கியதாகவும் எமது தேடல்களும் . செயல்களும் இருக்க வேண்டும். அப்போதே நமது துஆக்களும் இறைவனால் அங்கீகரிக்கப்படும்.
மேலும் இஸ்லாம் எனும் வாழ்க்கைநெறியின் அடித்தளம் ஈமானாகும். அந்நம்பிக்கை இறைவணக்கத்தின் ஆணிவேராகும். எனவே அல்லாஹூ தஆலா எனது பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வான் என மனதிலிருத்தி நம்பிக்கையுடன் நாம் அவனிடம் உதவி கேட்கும்போது, நமது துஆக்கள் வலுவுள்ளதாக மாற்றப்படுகின்றன. அதுமாத்திரமல்ல பிரார்த்தனைகள் வெறும் நாவினால் மாத்திரம் உச்சரிக்கப்படாமல், அது மனதின் ஒலியாக வௌிப்படும்போதுதான் இறைவனும் நம் குரலுக்குச் செவிசாய்க்கின்றான்.
பிரார்த்தனைகள் துன்பம் தீர்க்கும் வழியல்ல..இன்பத்திலும் இறைவனிடம் சென்றடைய வேண்டிய பாதை. எனவேதான் இன்பமோ, துன்பமோ நாம் செய்த பாவங்களை மனதால் ஏற்றுக் கொண்ட நிலையில், ஒவ்வொரு துஆவையும் குறைந்தபட்சம் மூன்று தடவையாவது மீட்டி, கிப்லாவை முன்னோக்கி அமர்ந்த நிலையில் கேட்க வேண்டும். அப்போது எங்கள் தொனி அமைதியானதாகவும், தாழ்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.
இவ்வுலகில் நாம் ஜனனிக்க பெற்றோர் அவசியம். தன்னைப் பெற்றோரை இகழ்வோனின் துஆ ஒருபோதும் அங்கீகரிக்கப்படுவதில்லை. தாயின் காலடியில் சுவனத்தை வைத்த எம் மார்க்கம் அத்தாய்மைக்கு கருணை காட்ட வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றது. பெற்றோருக்காக கேட்கப்படும் துஆக்கள் நிச்சயமாக ஏற்கப்படுவதைப் போன்றே, நோயாளி கேட்கும் துஆக்களும், நோன்பு திறக்கும்போது கேட்கும் துஆக்களும் ஏற்கப்படுகின்றன. பிரார்த்தனைகள் நமது துன்பம், கவலைகளை மறக்கச் செய்கின்ற ஆயுதமாகும்.
கஷ்டம், துன்பம், மன வேதனை, கவலைகள் நீங்குவதற்கும் பிரார்த்தனை எனும் ஆயுதத்தை கையிலேடுக்குமாறு நபியவர்கள் பணித்திருக்கிறார்கள்.
இப்பிரார்த்தனைகளில் நாம் கேட்கின்ற "லா இலாஹ இல்லா அன்த" எனும் சொல்லை முன்மொழிவதன் மூலமாக இறைவனின் ஏகத்துவத்தை ஏற்று அவனிடம் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கும்போது அவனும் அத் துஆவை ஏற்றுக் கொள்கின்றான்.
எனவே மேற்கூறிய மனநிலையில் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவைகளுக்குமான நிறைவேற்றலுக்காக நாம் படைத்தவனிடம் கையேந்தும்போது அது நிறைவேற்றப்படுகின்றது. எமது முயற்சியும் அதனோடிணைந்த பிரார்த்தனைகளும் நம்மை வழிப்படுத்துகின்ற மேன்மைப்படுத்துகின்ற, பாதுகாக்கின்ற கேடயங்களாக இருப்பதால் அவை நமக்கான, நம் துன்பம் கலைக்கின்ற ஓர் ஆயுதமாகவும் நம்முடன் கூடப் பயணிக்கின்றன. எனவே உளத்தூய்மையுடன் மொழியப்படுகின்ற பிரார்த்தனைகள் வீண்போவதில்லை.......அவை நம் வாழ்வை வளப்படுத்தும் ஓர் இறை வணக்கமுமாகும்.
பிரார்த்தனை எனும் இபாதத்
நம் வாழ்வின் வெற்றிகளைக் குவிக்கும் ஆயுதம்!
-Jancy Caffoor -
.