About Me

2012/06/10

தாய்மை


கருக் கொண்டாள் என் அன்னை
யார் உருவில் நான் - இருந்தும்
இருட்டறைக்குள் என்னிருப்பு
உறுதிப்படுத்தப்படுகிறது மகிழ்வோடு!

எட்டிப் பார்க்கும் ஒவ்வொரு நிலாவிலும்
அன்னையவள் ஒதுங்கிக் கொள்கின்றாள்
'கிளினிக்' வாசலில்!

அவள் எடை கூடலில்
பூரிக்கின்ற உறவுகள் 
விழி திறந்தே காத்துக் கிடக்கின்றனர்
என் வரவுக்காய் பல மாதங்களாய்!

காற்றில் பரபரக்கும் நாட்காட்டி
காதலோடு ஸ்பரிக்கும் அவர் விரலை 
மோதியெழும் தலைச்சுற்றலும் வாந்தியும்
சுருதி சேர்க்கும் தாய்மைக்குள்!

எட்டி நானும் உதைக்கையில்
சினமின்றி பதைத்திடும் தொப்புள் நாண் 
ரசிக்கும் ரகஸியமாய் என்னதிர்வை
நெஞ்சில் வண்ணக் கனா புதைத்தே!

ஜன்ஸி கபூர் 


முதியோர் இல்ல முகவரிகள்



தோற்றுப் போன பாசங்களின்
ஒன்றுகூடல்களிங்கே 
ஒத்திகை பார்க்கின்றன
குற்றுயிராய் வீழ்ந்து கிடந்து!

முதுமை சுரண்டப்பட்ட வாழ்வின்
முற்றுப் பெறாத பக்கங்களாய்
இவர்கள் 
வேராகின்றனர்!
வெட்ட வெளிக்குள் அடிக்கடி!

பழசாய் போன மனசிலும்
சீழ் வடியும் விரக்தித் துளிகள்
சீண்டி விளையாடுது அடிக்கடி
அட்டகாஷமாய்!

காவோலைகளின் உணர்வறுக்கும்
குருத்தோலைகள் 
கனவுகளை உருத்துலக்கியே
மறக்கின்றனர் மனிதங்களை!

தொலைவாகிப் போன உறவுகளால்
துக்கியெறிக்கப்பட்ட இவர்கள் 
தரிசு நிலத்தின்
பதர் விதைகள்!

இந்த 
முதியோர் இல்ல முகவரிகள்
சேர்க்கப்படாத கடிதங்கள்!

ஜன்ஸி கபூர் 

சுனாமி


புவி நரம்புகளை அடிக்கடி
அறுத்தெறிபவர்கள் யார்!

நிலத்தட்டுக்களின் முணுமுணுப்புக்களால்
அலையும் அலைகள்
வீழ்ந்து மடிகின்றன கரையில்
பெரும் வீச்சத்தோடிங்கே!

புவியைக் கழுவிவிடுமிந்த
கடற்கோளின் நீர்ப்பாய்ச்சல்
மிடுக்கோடு தரைக்குள் சமாதியாக்கும்
தடுக்கி வீழ்ந்த உடல்களைத் தானமாய்!

சாகரங்களின் சாகஸங் கண்டு
சரித்திரம் எழுதுகோல் ஏந்தும்!
இற்றுப் போன மனிதங்களை அவை
பக்குவமாய் பறை சாற்றும்!

வேலியில்லாக் கடலலைகள்- ஊரை
வேவு பார்க்க தலை நீட்டும்!
மாடங்களும் கோபுரங்களும்
விஷ நகையில் வீழ்ந்து மடியும்!

விஞ்ஞானத்தின் முன்னெச்சரிக்கைகள்
அபாய மணியாய் அலறிக் கிடக்கும்!
மூச்சடங்கும் தேசத்துள் -முழுச்
சுவாசமும் அறுந்து போகும்!

இயற்கையின் சீற்றம் கண்டு
விஞ்ஞானம் வீணே அதிர்வதுண்டு!
மறை தளந்ந்த மக்கள் கூட
இறை தஞ்சம் தேடுவதுண்டு!


- Jancy Caffoor-

மின்னல்


இருள் உடையும் - மனதோ
மருண்டு கதறும் !

செவி பிளக்கும் அதிர்வினில்
இதயம் வெடித்துச் சிதறும் !

வெட்ட வெளியைத் தழுவும் வேர்கள்
தொட்டு விடத் துடிக்கும் நிலவை!

முகிலேற்றங்களின் மோதுகை
திகிலோட்டத்துள் நம்மைத் திணிக்கும்!

கந்தகப்பூக்களின் வாசத்துள்
சந்து பொந்துகள் மூச்சுத் திணறும்!

நிலாச்சாறின் உறிஞ்சலை- வானம்
களவாய் வாந்தியெடுக்கும் !

அச்சத்தில் உறைந்து கிடக்கின்றோம்
ஆரடிக்கும் ஷெல்லிது!


- Jancy Caffoor-