About Me

2012/06/24

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் !


ஒவ்வொருவரும் அனுபவங்களை உள்வாங்குகின்றோம். அந்த அனுபவங்களை நம் உணர்வுகளால் மெருகூட்டத் துடிக்கும் போதே கவிஞன் பிறப்பெடுக்கின்றான். 

தன் வார்த்தை வருடல்களால் பிற மனங்களை வசியப்படுத்தும் போது இலக்கியவுலகின் சொந்தங்களும் நேசிப்புக்களும் தங்கள் இராச்சியத்துக்குள் இவர்களுக்கான செங்கம்பள விரிப்பை விரிக்கின்றனர்.வரவேற்கின்றனர்.

அந்த வகையில் கவிதைகளின் தேன் ஊற்று, காவியத் தாயின் இளைய மகனாய் பொன்முடி சூட்டிக் கொண்ட கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாளின்று (2012.06.24). தன் முகம் காட்டி நிற்கின்றது.

தமிழ்நாடு சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் திகதி சாத்தப்பனார், விசாலாட்சி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். இவர் இயற் பெயர் முத்தையா. உடன்பிறப்புக்கள் எண்மர். இருந்தும் குடும்பத்தின் பாச நீரோட்டம் இவரை நனைக்க முன்னரே ஏழாயிரம் ரூபா பணத்திற்கு தத்துப்பிள்ளையாகி வேறோர் பெற்றோர் வசம் போய்ச் சேர்ந்தார்.

"நாராயணன்" வளர்ப்புப் பெற்றோரிட்ட பெயர் . இவர் கல்வி எட்டாம் வகுப்புடன் தடைப்படவே பதினாறு வயதில் பணி புரியத் தொடங்கினார்..பொன்னம்மா, பார்வதி, வள்ளியம்மை எனும் மூன்று மனைவியர் மூலம் பதினான்கு வாரிசுகள்.இலர் இரத்த உரிமைகளாகின.

கவிஞர் கண்ணதாசன்.அவர்கள்....காலம் என்றும் உச்சரிக்கும் அற்புதமான கவிஞர்.இவரின் ஒவ்வொரு பாடல்களிலும் இழையோடிக் கிடக்கும் கவி வார்ப்பின் ஆழத்தினைக் காணும் போது நம்மனசுக்குள் வியப்பு சிறகடிக்கின்றது.


இவர் காலம் நமக்கு அடையாளம் காட்டிய அற்புத கவிஞர் . காதல், திருமணம், வாழ்க்கை, தொழில், ஏக்கம், சோகம், அன்பு, பாசம் எனும் பல உணர்வுக் கலவைகளில் சொற்சிலம்பாடிய உணர்ச்சிக் கவிஞர்.


நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளையும், ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களையும் மக்கள் மனங்களில் நிறைத்தவர் கண்ணதாசன் அவர்கள். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்த இவருக்கு அரசு தன் கௌரவப்படுத்தலை சாகித்ய அகாதமி விருதின் மூலம் வழங்கியது.


சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் போன்ற இதழ்கள் இவரின் மேற்பார்வையின் கீழ் பதிப்புரிமை பெற்ற இதழ்களாகும்.கம்பரும் பாரதியாரும் இவரின் மானசீக குருக்களாகும்.

இவர் இந்துமதத்தில் பிறந்தவராயினும் மதங்களுள் மதங் கொள்ளாமல் பிற மதங்களிலும் மனம் லயித்து இயேசுகாவியம் பாடினார்.

திரைப்படப்பாடல், அர்த்தமுள்ள இந்து மதம், மாங்கனி, இயேசு காவியம் இவரது படைப்புக்களாகும். அர்த்தமுள்ள இந்துமதம் பத்து பாகங்களாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தாய்ப்பாவை, கவிதாஞ்சலி, கண்ணதாசன் கவிதைகள் உள்ளிட்ட பத்து கவிதை நூல்கள் இவரின் சொந்தமாகின. கண்ணதாசன் கவிதைகள் ஆறு பாகங்களாக வெளியாகின.அவ்வாறே கடைசிப்பக்கம் உள்ளிட்ட பத்துக்குமேற்பட்ட கட்டுரைகளையும், விளக்கு மட்டுமா சிவப்பு உள்ளிட்ட இருபத்தொரு புதினங்களையும், வனவாசம் உள்ளிட்ட பத்து கட்டுரைகளையும் எழுதியுள்ளன அவரின் கரங்கள். ராஜ தண்டனை, அனார்கலி உள்ளிட்ட மூன்று நாடகங்களும், பகவத் கீதையுரை, அபிராமி அந்தாதியுரை என்பன அவர் நமக்கு விட்டுச் சென்ற இலக்கிய கலசங்களாகும்.

காலம் மறக்காத இந்த ஒப்பற்ற கவிஞர் 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் திகதி அமெரிக்கா சிகாகோ நகர் மருத்துவ மனையில் தன்னுயிர்த்துடிப்பை நிரந்தரமாக அடக்கினார்.மதுபோதையின் நட்புக்கு பலியாகிய இந்தக் கவிஞன் மறைந்தாலும் இன்னும் கவிதைகளாலும், பாடல்களாலும் நம்மிடையே உயிர்த்துக் கொண்டுதானிருக்கின்றார்.

இவரது ஞாபகங்கள் இன்றும் கூட சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணதாசன் மணிமண்டபம் மூலம் மீட்டப்படுகின்றது. அங்கு அவரது நூல்கள் உள்ளிட்ட பல நூல்கள் வைக்கப்பட்டுள்ள நூலகமும், அவரது வாழ்க்கை வரலாற்றின் எச்சங்களாகப் பரிணமிக்கும் புகைப்படங்களின் தொகுப்புக் கண்காட்சியும் நடைபெறுகின்றது. 

அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது மார்பளவுச் சிலையும் அவர் விட்டுச் சென்ற கனச்செறிவான கவிதைகளின் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன இன்றும் என்றால் மிகையில்லை

கண்ணதாசன் அவர்களின் மணக்கோல நிகழ்வைக் காட்டும் அபூர்வ புகைப்படமிது

ஒற்றையாய் !


நிசப்தக் காற்றின் சீண்டலில்
மூச்சு வியர்த்துக் கிடக்கும்
மெலிதாய் எனைச் சீண்டியபடி!

வெளி வானில் உடைந்திருக்கும்
வட்ட நிலா மௌனத்தில் - ஏனோ
கனவுகள் மூச்சையற்றுக் கிடக்கும்!

தன் முகம் தேடியலையும்
காற்றின் மூர்க்கத்தன வேட்டையில் 
இருள் கசங்கிக் கிடக்கும்!

வெட்கம் துறந்த வண்ணப்பூக்கள்- தம்
ஆடை களைந்து வீழ்ந்து கிடக்கும்
இரவுச் சயனத்தில்!

அண்டவெளியில் விரல் தொடும்
நம் மௌனம் மட்டும் - அழகாய் 

ஏறுமுகம் காட்டிக்கிடக்கும்!

இந்த இரவோ 
இன்னும் தேடிக்கொண்டிருக்கும்
தொலைந்து போன என்னுறக்கத்தை!

ஒற்றையாய் உடைந்து கிடக்கும்
நம் நட்பு மட்டும்- விழியோரத்தில்
கண்ணீருக்குள் அடைக்கலமாகிக் கிடக்க 

நாமோ 
வறட்டுப் பிடிவாதத்தால்- நம்
கவிக்காதலை நசுக்கியபடி 

பயணிக்கின்றோம் நம்மை மறைத்தபடி!


ஜன்ஸி கபூர் 

2012/06/23

மனசெல்லாம் !


மனசெல்லாம் நீயே உருகிறேன் என்னுயிரே!

என் நெஞ்சில் படர்ந்த துடிப்பொலியே 
என் ஞாபகத் தேசத்தின் பொன்முடியே
உருகிறேன் என்னுள் நானே மருகிறேன்
கரைகிறேன் மெழுகாய் நானும் உறைகிறேன்
சிலிர்க்கிறேன் மெல்ல உன்னில் நனைகிறேன்

வெயிலில் கரைந்த பனித்துளியானோம்
வானவில் பிழிந்த ஞாபகங்களானோம்
விரல் பேசும் வீணைகளானோம்
என்னுயிரே என்னுயிரே

என் விழியில் உனை நட்டிப் போகின்றாய்
காதலில் உயிர் நனைத்துக் கொல்கின்றாய்
நாணத்தில் ஒவியமும் வரைகின்றாய்
என்னுயிரே என்னுயிரே 
என் மனசெங்கும் உந்தன் வாசமே
என்னிழலெங்கும் உந்தன் பூவாசமே


இதழில் மின்னலைத் தைத்தவனே
காற்றை கூந்தலில் முடித்தவனே
தேகத்தில் தங்கம் எடுத்தவனே
என்னுயிரே என்னுயிரே
என் மனசெங்கும் உன்தன் வாசம் கோர்க்கிறேன்
என் நெஞ்சில் உன் பாசம் சேர்க்கிறேன்
என்னுயிரே என்னுயிரே

என்னை வார்த்தையால் செதுக்கும் சிற்பியே
என்தன் நிழலுள் வீழ்ந்திட்ட சொப்பனமே
பனிக்குள்ளே உறைந்திட்ட தென்றலே
பறக்கின்றேன் உன்தன் விரல் நனைத்தே
விண் மொட்டில் கோலம் போடத் துடிக்கிறேன்
துடிக்கிறேன் என் தேகம் வேர்த்தே
சிரிக்கிறேன் நானும் சிலிர்க்கிறேன்!

உன் வெள்ளிக் கொலுசின் நாதங்களாய்
என்றும் நாமும் சிரித்திடலாம்
உறையும் பனிக்குள் பதுங்கி நாம்
காதல் தேகம் சிலிர்த்திடலாம்
என்னுயிரே என்னுயிரே
உன்தன நிழலாய் நானும் படர்வேன்
அருகில் வாவா எந்தன் ஜீவனே

விண்ணில் பறக்கலாம் இறக்கை கட்டி
அந்த நிலவை உடைத்தும் வாழ்ந்திடலாம்
மண்ணில் மின்னலை நட்டிடலாம்
என் பொன்னுலடலில் பூவைக் கோர்த்திடலாம்
என்னுயிரே என்னுயிரே
உன்தன் மனம் எங்கும் உந்தன் வாசமே

வெயிலில் கரையும் தங்கச் சிட்டே
கார்க்கூந்தலில் மறையும் வண்ணநிலவே
என்னுயிரே என்னுயிரே
நீயின்றி வாழ்வதும் சாத்தியமோ
உன்னுள் உறைந்திட்ட பாறையும் நானே
என்னுள் வீழ்ந்திட்ட பார்வையும் நீயே
என்னை பிரிப்பதும் சாத்தியமோ
என்னுயிரே என்னுயிரே
என் மனசெங்கும் உந்தன் வாசமே

காதலில் வீழ்ந்தோம் சரித்திரமாய்
இரவிலே அமிழ்ந்தோம் கனவுகளாய்
அடைக்கலமுமானோம் ஆத்மாவினில்
என்னுயிரே என்னுயிரே
என் விழியில் உனை நட்டிப் போகின்றாய்
மனசெங்கும் தென்றலை விட்டுப் போகின்றாய்
என்னுயிரே என்னுயிரே
உன்னை மறப்பதும் சாத்தியமோ
என்னுயிரே என்னுயிரே

ஜன்ஸி கபூர் 


மாற்றம்




என்னுள் தினசரி இறக்கை விரிக்கும்
உன் கனவுகளை 
கத்தரித்தது நீதான்!

முக்காட்டுக்குள் மறைந்திருந்த
என்னுயிருள் 
அமிலம் வார்த்தாய் இன்றேனோ!

அன்றோ 
கல்புல் விரல் தொட்டு
கனவுள் உரு தந்து
காட்சிப் பிழம்பில் நிழல் கலந்து
நெஞ்சில் வளர்ந்தாய் நெடுமரமாய்!

இன்றோ 
அன்பில் கல்லெறிந்து - நீ
காணாமல் போன போது 
இடறி வீழ்ந்த சோகங்களை
உறிஞ்சியெடுத்தேன் கண்ணீருக்குள்!
நாளை 
என் கண்கள் மீண்டுமுன்னிடம்
ஏமாறாமலிருக்க!

புவிச்சுழற்சி வீச்சைப் போல்
என்னுள் வீழ்ந்து கிடந்தவுன்னை
அவிழ்த்து விட்டேனின்று 
பறந்து விடு
உன் சுதந்திர பூமி தேடி!

உன் வாசலில் வீழ்ந்து கிடந்த
என் காலடித் தடங்களை
பெயர்த்து விடு!
நாளை அவை
சாட்சி சொல்லக் கூடும்
நம்மை
உன்னவளிடம்!

ஜன்ஸி கபூர்