About Me

2012/06/24

ஒற்றையாய் !


நிசப்தக் காற்றின் சீண்டலில்
மூச்சு வியர்த்துக் கிடக்கும்
மெலிதாய் எனைச் சீண்டியபடி!

வெளி வானில் உடைந்திருக்கும்
வட்ட நிலா மௌனத்தில் - ஏனோ
கனவுகள் மூச்சையற்றுக் கிடக்கும்!

தன் முகம் தேடியலையும்
காற்றின் மூர்க்கத்தன வேட்டையில் 
இருள் கசங்கிக் கிடக்கும்!

வெட்கம் துறந்த வண்ணப்பூக்கள்- தம்
ஆடை களைந்து வீழ்ந்து கிடக்கும்
இரவுச் சயனத்தில்!

அண்டவெளியில் விரல் தொடும்
நம் மௌனம் மட்டும் - அழகாய் 

ஏறுமுகம் காட்டிக்கிடக்கும்!

இந்த இரவோ 
இன்னும் தேடிக்கொண்டிருக்கும்
தொலைந்து போன என்னுறக்கத்தை!

ஒற்றையாய் உடைந்து கிடக்கும்
நம் நட்பு மட்டும்- விழியோரத்தில்
கண்ணீருக்குள் அடைக்கலமாகிக் கிடக்க 

நாமோ 
வறட்டுப் பிடிவாதத்தால்- நம்
கவிக்காதலை நசுக்கியபடி 

பயணிக்கின்றோம் நம்மை மறைத்தபடி!


ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!