About Me

2012/07/05

வருடும் நினைவு!


மயிலிறகாய் மெல்ல மெல்ல..........
அவன் நினைவுகளுனைக் கிள்ளக் கிள்ள

பஞ்சனையுன் மேனியில்.......
காதலின் ஸ்பரிசங்கள் மெலிதாய் வீழ்ந்திடற

மனசோ இதமாய்.......
பனித்துளிகளுடன் மோதித் தவிக்க

இந்த இரவின் வெப்பத்திலும்......
ஏக்கங்களுனைத் துகிலுரிக்க

கனவுகளின் முகப்பாய்
முகம் பார்த்துச் செல்லும்............

அவனேயுன் கவிதை யினி.....
 
ஜன்ஸி கபூர் 


மனசு




பொழுதின் புலர்வினில்
இருள் துடைக்கும் சூரியனாய் நீ!

தனி வழிப்பயணத்தில் - என்
கரந்தொடுக்கும் வழித்துணையாய் நீ!

படிக்க அமர்கையில் - வந்தமரும்
மனப்பாட வரிகளாய் நீ !

என் கைபேசி அழைப்பினில்
ஒலிக்கும் குரலாய் நீ !

கண்ணாடி முன்னின்றால்
கண்ணடிக்கும் விம்பமாய் நீ!

இப்போதெல்லாம் நான்
உன் விதி வழி நகர்வில் தான்!

இத்தனைக்கும் நீ.........
என் மனசு !


ஜன்ஸி கபூர் 

















2012/07/02

சிறகறுந்து !


நள்ளிரவின் நிசப்தத்தில்
ஊரே மௌனித்துக் கிடக்க 

என்னுள் மட்டும் ஏதோவொன்று
உயிர் பிசைகின்றது!

நெஞ்சுக்குள் அருட்டும் அருவமாய்
கண் வழியிறங்கியது பார்வை பிடுங்க..

ஐயகோ 

சிறகுடைந்து வீழ்கின்றேன் அனலில்
உனையிழந்த வெறுமையில்!

அன்றோர் நாள் 
எனக்காய் முகிழ்த்த - உன்

ரகஸியக் கவிதை மட்டும்
என்னுள் வீழ்ந்து கிடக்க 
நீயோ 
தொலைதூரம் போகின்றாய்
என்னுள் வலி தந்தபடி!


விழியிறுக்கின்றேன் உனை மறக்க
நீயோ
வீம்பாய் முறைக்கின்றாய் என்னுள்!

உன் மௌன யுத்த உரப்பில்
என் மனம் எரிந்து போக 

வெற்றிடபூமிக்குள் சுவாச மறுத்து
சிறகுடைந்து போகின்றேன்!

எங்கே சுற்றினாலும்
உள்ளம் பற்றும் காதலில்

ஊமைவலி கண்டு 
உயிரறுந்து போகின்றேன் !

உன் வேரறுப்பில் 
உலகம் வெறுத்தே நானும் 

பயணிக்கின்றேன் மயானம் தேடி
இனியுன் காலடிசேராமலே!

என் சமாதியில் வீழ்ந்து கிடக்கும் 
உனக்கான கவிதைகளை மட்டும்

நட்டிவிடுவுன் தேசத்தில் 
நாளை என் கவிதைகளாவது உயிர்க்கட்டும்!


ஜன்ஸி கபூர் 







2012/07/01

அட...செல்லமே!




ஏந்திழையே!

நமக்குள் முகிழ்த்தது நட்பென்று
என்னுள் வீறாப்புத்  தொட்டாலும் .................
ஏனோ......
உயிரோர வேலிகளில்
எட்டிப் பார்க்கின்றாய் வாஞ்சையுடன்
நீயென் காதலியாய்!

சகியே.!
சல்லடை போட்டுத் தேடுகின்றேன்
உன்னை......!
மயிலிறகின் ஸ்பரிசமாய்
என்னுள் வீழ்ந்துகிடக்குமுன்னுள்
என்னுயிர் நாட்டிட!

வெட்ட வெளியில் மோகம் பிழிந்து
எட்டிப் பார்க்கும் நிலாவாய் நீ காத்திருக்க..........
மொட்டைமாடிக் குளிரில்
லாப்டொப்பின் நரம்புகளாய்
நான் புடைத்திருக்க......
பயணிக்கின்றேன் உனைக் கோர்த்தவாறே!

உன்னிதழில் எனைப் பிழிந்து
விழியுறக்கம் தனைக் கலைத்து- நம்
நெஞ்சுக்குள் சாரல் துளைக்குமந்த
நெருடலே "காதலாய்" மொழி பேச............

கைபேசியினில் உரசிடும்  வார்த்தைகளில்
சித்தம் கரைந்து கிடக்கின்றேன்- உன்னுள்
என் முத்தத்தை நனைத்தவாறே!

என் வெம்மையை உடைத்தெறிந்தே............
உன்னுள் எனைப் பத்திரப்படுத்தும்
உன் ஆன்மாவுக்குள்
நானே நிரந்தரமாகின்றேன்
இப்போதெல்லாம்!

என் கவித் தேசத்தின் உலாவுகை
இப்பொழுதெல்லாம் - உன்
விரல் பற்றியே எழுதுகின்றது
உன் காதலை என்னுள்
வார்த்தபடி!

மேகம் பிழிந்தோடும்
தூறல்கள் நீயாக !


உன்னுடன் சயனிக்கையில்
நீயே என் கவிதைகளாய்
களமிறங்குகின்றாய் 

உன் செவ்விதழ் வடிக்கும்
குறும்புகளில் நசிந்தும்............
என் விரல் ரேகைக்குள் 
தடம் பதித்தும்.............
கூத்தடிக்குமுன்னை
பிரியேன் ஓர் பொழுதும்!

அடச்....செல்லமே!

அறிவாயா..இப்பொழுதெல்லாம்............
ஊடலுக்குள் உனை வீழ்த்தி
கூடிக் களிக்குமென் னாசைகள்
காதல் அவஸ்தைகளாய்
அறுத்தெறிகின்றதுன் மௌனத்தையும்
உயிரை வருடியபடி!




ஜன்ஸி கபூர் 



2012/06/30

முத்து !



வாழ்க்கையென்பது மிக நீண்ட பயணம்.............

இப் பயணத்தில் நம்மை நிலைப்படுத்த உறவு, நட்பு, அறிந்தவர் எனும் தரிப்பிடங்கள் நம் வெட்டுமுகங்களாகின்றன. சில நட்புக்கள் காலவோட்டத்தில் கரைந்து போக, சிலவோ ஞாபகப் பரப்பிலிருந்தும் அழியாத உணர்வுப் பதிவாகிக் கிடக்கின்றன.

பாரதம் தந்த பாசக்கிளி. 

"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"

இந்தத் தாரக மந்திரத்தால் தன் உள்ளத்தை உரப்பேற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லிதயம்..............

முத்து .......!


அன்று...


என் முகநூல் ஆரம்பப் பயணத்தில் நண்பராக என்னுள் இறங்கி, இன்று அன்புத் தம்பியாக என் வாழ்க்கைப் பூமியில் நிலையூன்றியிருக்கும் உறவுத் துடுப்பிவர். பெயரில் முத்து இருந்தாலும் அவர் எண்ணங்கள் யாவும் வைரத்தை விட பெறுமதியானவை!

அன்பான உள்ளம் அவருக்கு இறைவன் கொடுத்த அருட்கொடை. நிறையப் படித்தும் கூட துளியளவு கூட கர்வம் கிடையாதவர். நட்புக்கு இன்முகமும் நேசமும் காட்டி மனசுக்குள் மானசீகமாய் பரவிக் கிடப்பவர்.

மதம் மனிதங்களை மலினப்படுத்தும். ஆனால் முத்தோ மதத்தில் "மதம்" கொள்ளாமல், பிற மதத்தவரின் உணர்வுகளைக் கொல்லாமல் தன் மதமாய் பிற மதங்களையும் நேசிக்கும் மானிடப்பண்புள்ள நல்ல இளைஞர்.

பல சோதனை ஆர்ப்பாட்டத்திலும் அமைதி காக்கும் இந்த இளைஞர். தன்னம்பிக்கையுடன் வாழ்வை ஜெயிக்கும் செயல்வீரர்.

என் முகநூலின் பல பக்கங்களின் விடியல் அவர் காலை வணக்கத்துடனேயே விடிந்திருக்கின்றது.

"அக்கா"

மலர்ச்சியில் பல வார்த்தைப்பனித்துளிகள் செய்திகளாய் பரவசப்பட்டுக் கொண்டிருக்கின்றன அவர் விடும் பாசத்தூதாய்!

அவர் முகநூல் பக்கங்களிலும் கூட காலை வணக்கம் வெறுமையாக அல்ல நல்ல படிப்பினையூட்டும் சிந்தனை தாங்கிய செய்தியுடன் கூடிய புகைப்படத்துடனேயே எப்பொழுதும் சிரிக்கின்றன....

முத்து............

கலாரசிகன்......கலைத்திறனில் பிடிப்புள்ள கலைஞன்.....!

அவர் சிந்தனைக்குள் வீழ்ந்து கிடப்பவை உயிர்ப்போட்டமுள்ள புகைப்படங்கள் தான்..அவரது புகைப்பட ஆல்பம்...கருத்துச் செறிவுள்ள சேமிப்பகம்!

 அந்தச் சேமிப்பிலிருந்து சில துளிகள் இப் பக்கத்தை நிறைக்கின்றன பெருமிதத்துடன்........


தான் ரசிக்கும் அழகான , அறிவுபூர்வமான, அற்புதமான, கருத்துச் செறிவுள்ள புகைப்படங்களை ரசிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அப் படம் பேசும் பின்னணியையும் அழகாகப் பதிப்பதில் அவருக்கு நிகர் அவரே!

இவரது புகைப்படங்கள் அழகு, வறுமை, அன்பு, இயற்கை, வாழ்க்கை,பொழுதுபோக்கு என பல வார்ப்புக்களிலும் தெறித்துக் கிடக்கின்றன முகநூல் பக்கங்களில்!

தான் கற்ற படிப்பினை, அறிவுத்துடிப்பாக்கி சாதனைகளின் பக்கம் சாய்ந்திருக்கத் துடிக்கும் இந்தச் சகோதரனின் வெற்றியின் கனம் நாளுக்கு நாள் ஏறுமுகம் காட்டியே நிற்கும் என்பதில் ஐயமில்லை.

நம் வாழ்வின் ஆயுட் பரப்புக்களின் எல்லைக்குள் நாம் சாதிக்கும் சாதனைகளே நம் பெயரை இப் புவியில் பதிக்கவல்லன. அந்த வகையில் முத்தின் நேசத்துக்குள் பொதிந்திருக்கும் பல உறவுகள் அவர் பெயரை அன்போடு வாசித்துக் கொண்டுதானிருக்கின்றன. எப்பொழுதும் வாசித்துக் கொண்டுதானிருக்கும்.

தொடர்பாடலே மனித உணர்வுகள் பகிரப்படும் வாசற்றலம்!


தொடர்பாடலின் போது மனமுரண்பாடுகளும் தாக்குவது இயற்கையே!


அவ்வாறான சந்தர்ப்பங்களில் சகிப்புத்தன்மையுடன், கண்ணீர்க்கசிவின் வெளிப்படுத்துகையை ரகஸியப்படுத்தி உள்ளத்துக்குள் போராடும் போராட்டமும், அதன் சுமையும் நானறிவேன். இருந்தும் அத்தகைய நிலையில் கூட வழுக்களை வெற்றிப்படுத்தும் ஆற்றலை நானும் கண்ணீரில் கரைந்து உணர்ந்திருக்கின்றேன்...

வாழ்க்கை எட்டாத தூரத்தில் விரிந்து கிடந்தாலும் அதனைத் தொட்டுவிடும் மனோபலத்தின் இருக்கை முத்துவிடம் அதிகமாக இருப்பதைக் காணும் போது மனம் மகிழ்வே.......!

இவற்றுக்கும் மேலாக நான் பதிவிடுபவற்றை உடனுக்குடன் ஆதரித்து விருப்புக்களையும், பின்னூட்டங்களையும் தரும் இந்த நேசக்கிளியின் பாசத்திற்கு எல்லை கட்டுவது சாத்தியமற்றதே!

முத்து ..........

உங்கள் வாழ்க்கைப் பயணம் சந்தோஷமாக விடியட்டும் !

என் வாழ்த்துக்களின் புன்னகை உங்கள் மனதை நிறைக்கட்டும்! 

- Ms. Jancy Caffoor -