About Me

2012/07/22

இயற்கை உன் வசம்


பிரமாண்ட அண்டம்
பிரபஞ்சம் பிளக்கும் அணு.......
தோற்றுப் போகும் - உன்
அன்பின் வலிமையில்!

உன் நெற்றிப் பிறையின்
நேச வாசிப்புக்களில்............
கிறங்கிய கருங் கீற்றுக்கள்
ரேகையாய் படிந்திருக்கும்!

என் நெஞ்ச பிரமிட்டுக்களின்
நினைவகம் 
நிரம்பி வழியும்
உன் நேசத் திரட்டுக்களால்!

உன் சிரிப்பொலி கேட்டால் 
பாதாளச் செடியில் பூக்கள்
மெல்ல எட்டிப் பார்க்கும்!

நீ நடக்கையில் 
புவியோட்டின் முகப்பேட்டில்
"ஸ்பரிசம்"
வெட்கித்துக் கிடக்கும்!

உன் கன்னச் சிவப்பில்
நொருங்கிப் போகும் - என்
நெஞ்சத்து கருமச்சம் !

உன் கரம் தொடுகையில்
பூமேனி முறையிடும் - தன்னுடமை
உன் வசமிருப்பதாய்!

தீ நாக்கொளி
முறைத்துக் கொள்ளும் - உன்
மேனியழகில் பொறாமை கொண்டு!

உன் வியர்வையில்
மேனி சிலிர்க்கையில் 
முகில் கைக்குட்டைகள்
உன் முத்துக்களை முத்தமிடும்
மிருதுவாய்!

இயற்கையின் காதலில் - உன்
இதயம் சுருளுகையில் 
விண்வெளி அறிவிப்புச் செய்யும்
இன்னொரு நிலா நீயென!

ஜன்ஸி கபூர் 

ஒற்றை மழைத்துளி!



சாம விழிகளின் துயிலுக்குள் - என்
கனவுகள் அமிழ்ந்து கொண்டிருக்கும்!

முகவரியில்லாக் காற்றில் - என்
ஆன்மாவின் சிதறல்கள்
அலைந்து கொண்டிருக்கும் !

கவலை நுரைக்குள்
கரைந்து போன என் ஜீவன்
ஜீவிதத்தை தேடிக் கொண்டிருக்கும் !

நிதமும் என் சுவாசிப்பை
பொசுக்கும் வெம்மை
பெருமுச்சில் ஆவியாகத் துடிக்கும்!

வறுமை வலைக்குள் சுருண்ட
என் வாலிபம்
வெறுமையைத் தேடிக் கொண்டிருக்கும்!

சிரிக்க எனக்கும் ஆசைதான் 
யதார்த்தப் பயமுறுத்தல்களில்
புன்னகை வேர்கள்
மரணித்துக் கொண்டிருக்கும்!

ஓ 
இன்னும் பிரமிப்பு அகலவேயில்லை!
ப்ரிய நேசங்களின் சேமிப்பில்
இத்தனை துரோகங்களா!

இத்தனை வலிக்குள்ளும்
ஒற்றை மழைத்துளியாய் - நான்
தனிமைச் சிறைக்குள்
நனைகின்றேன் 
விதியை நொந்தபடி!

ஜன்ஸி கபூர் 

நினைவகம்


தொண்ணூறின் விடியலொன்றில்- எம்
தேசம் தொலைந்துதான் போனது!

கற்பாதைச் சுவடுகளை
முத்தமிடும் முட்பாதணிகள்
வலியோடு வழி கேட்க...........!

பனையோலைச் சரசரப்பும்
கறுத்தக் கொழும்பான் வாசனையும்
மூச்சுக்காற்றுக்குள் விறைப்பைத் தர!

கேரதீவு நீர்ப் பரப்பில்
சோகங்கள் தலைப்புச் செய்தியாய்.................
முகங் காட்டிய அப் பொழுதுகளால்
விழியோரம் நீர் தாரை வார்க்க!

பொம்பரின் சாகஸமும்
சீ பிளேனின் தந்திரமும்
தும்பியின் வட்டமடிப்பும்- எம்
நெஞ்சத் தசையின் உளுக்கெடுக்க!

ஓடித் திரிந்த தெருக்களெல்லாம்
ஒப்பாரியில் கிடந்து தவிக்க...........!

தேசம் தொலைத்துப் போனோம் !
எம் தாயகம் துறந்து வாடுகின்றோம்!

ரெண்டு மணி நேர
கெடு வைப்பில் - எம்
தாயகக் கனவுகளை கருவறுத்தாரன்று..........
இன்றோ...............
தரணியிலிடமின்றி
தரித்து நிற்கின்றோம் அகதியாய்!

வெள்ளைக் கடற்கரையில்
சோகி பொறுக்கி பதித்த தடம்
கல்வெட்டாய் நெஞ்சிலின்னும் கனக்க........

பல மைல் தொலைவு நோக்கி
பொல்லாத பயணம் தான் கண்டோம் !

எம் உயிரணுக்களிங்கே
வெம்மைக்குள் புழுங்கி மடிய.........
நிழல் தந்த மனைகளோ
சூரியக் குளியலில் அங்கே  மோகித்துக் கிடக்க

நேசம் துறந்து போனோம்.........
தேசம் தொலைத்துப் போனோம்!

சேறாகிப் போன வாழ்வில்
சோற்றுக்கும் வேரூன்ற............
அகதியாகிப் போனதில்
அவலம்தான் சேமிப்பாச்சு!

உடமையிழந்து
உறவும் தொலைத்து
வேறிடம் முளைத்ததில்
வெறுமையும் உடன்பிறப்பாயிற்று!

அமில ஆக்கிரமிப்புக்களின்
தேசமாய் எம்முணர்வுகள் படிய...............
ஈர் தசாப்தங்கள் முகம் மாறின.......
இன்னும் விடியல் எட்டா வெளியில்!



தன்னம்பிக்கை


என்  
நிழலில் விசிறப்படும்
நெருப்புத்துண்டங்களிலும்
சுவடு பதிப்பேன் சுதந்திரமாய்

என் 
சறுக்கலின் ஒவ்வொரு நகர்வும்
படிகளாய் மாறும் 
முன்னேற்ற முகடுகளில்
முத்திரை பதிக்க!

என் 
கண்ணாடி மனசுக்குள்
கல்லெறிவோர்
புல்லரித்துக் கிடப்பார் - என்
வெற்றி முகம் கண்டு!

என் 
முயற்சி வேர்களின்
மூச்சுக் காற்றில் விசம் தடவுவோர்
மூச்சிறைத்து கிடப்பாரென்
வளர்ச்சி கண்டு!

தன்னம்பிக்கை 
பல தடைகளைத் தகர்த்தெறிய
வெற்றியின் அறைகூவலுக்குள்
சங்கமித்துக் கிடப்பேன்
என்னாளும்!

ஜன்ஸி கபூர்