About Me

2012/07/22

நினைவகம்


தொண்ணூறின் விடியலொன்றில்- எம்
தேசம் தொலைந்துதான் போனது!

கற்பாதைச் சுவடுகளை
முத்தமிடும் முட்பாதணிகள்
வலியோடு வழி கேட்க...........!

பனையோலைச் சரசரப்பும்
கறுத்தக் கொழும்பான் வாசனையும்
மூச்சுக்காற்றுக்குள் விறைப்பைத் தர!

கேரதீவு நீர்ப் பரப்பில்
சோகங்கள் தலைப்புச் செய்தியாய்.................
முகங் காட்டிய அப் பொழுதுகளால்
விழியோரம் நீர் தாரை வார்க்க!

பொம்பரின் சாகஸமும்
சீ பிளேனின் தந்திரமும்
தும்பியின் வட்டமடிப்பும்- எம்
நெஞ்சத் தசையின் உளுக்கெடுக்க!

ஓடித் திரிந்த தெருக்களெல்லாம்
ஒப்பாரியில் கிடந்து தவிக்க...........!

தேசம் தொலைத்துப் போனோம் !
எம் தாயகம் துறந்து வாடுகின்றோம்!

ரெண்டு மணி நேர
கெடு வைப்பில் - எம்
தாயகக் கனவுகளை கருவறுத்தாரன்று..........
இன்றோ...............
தரணியிலிடமின்றி
தரித்து நிற்கின்றோம் அகதியாய்!

வெள்ளைக் கடற்கரையில்
சோகி பொறுக்கி பதித்த தடம்
கல்வெட்டாய் நெஞ்சிலின்னும் கனக்க........

பல மைல் தொலைவு நோக்கி
பொல்லாத பயணம் தான் கண்டோம் !

எம் உயிரணுக்களிங்கே
வெம்மைக்குள் புழுங்கி மடிய.........
நிழல் தந்த மனைகளோ
சூரியக் குளியலில் அங்கே  மோகித்துக் கிடக்க

நேசம் துறந்து போனோம்.........
தேசம் தொலைத்துப் போனோம்!

சேறாகிப் போன வாழ்வில்
சோற்றுக்கும் வேரூன்ற............
அகதியாகிப் போனதில்
அவலம்தான் சேமிப்பாச்சு!

உடமையிழந்து
உறவும் தொலைத்து
வேறிடம் முளைத்ததில்
வெறுமையும் உடன்பிறப்பாயிற்று!

அமில ஆக்கிரமிப்புக்களின்
தேசமாய் எம்முணர்வுகள் படிய...............
ஈர் தசாப்தங்கள் முகம் மாறின.......
இன்னும் விடியல் எட்டா வெளியில்!



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!