About Me

2012/07/29

சர்வதேச தொலைத்தொடர்பு தினம்


மே 17
---------
விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி காரணமாக வியக்கத்தக்க முறையில் தொலைத் தொடர்பு சாதனத்துறையின்று வளர்ச்சியடைந்துள்ளது. உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் தொலைத்தொடர்புத் துறையும் ஒன்றாகும்.

ஆரம்ப காலத்தில் சைகை, பின்னர் புறா விடு தூது, முரசறைதல் போன்ற பல்வேறு முறைகளால் வெளிப்படுத்தப்பட்ட இத்தொடர்பாடல் கடிதம், தந்தி, மின்னஞ்சல் மூலமாகவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நவீன தொடர்பாடல் முறையானது 1450 களில் ஜோகன்ஸ் கட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த நிகழ்வுடன் ஆரம்பித்தது. பத்திரிகை வாயிலாக ஆரம்பிக்கப்பட்ட தொடர்பாடலை "கிரஹம்பெல்" தொலைபேசி அலைவரிசைக்குள் நகர்த்தினார். தந்தி முறையை மேம்படுத்த கிரஹம்பெல் மேற்கொண்ட முயற்சி தொலைபேசி  பயன்பாட்டுக்கு வித்திட்டது . தோமஸ் வாட்சன் தொலைபேசியை வடிவமைக்க ,கிரகம்பெல் மின்சாரம் மூலம் ஒலியைக் கடத்துவது தொடர்பான யோசனையை முன்வைத்தார். 1875 ஆம் ஆண்டு ஒரே சமயத்தில் 2 சமிக்ஞ தந்தி வயர் மூலம் தகவல் பரிமாற்றத்திற்கு அரசின் அனுமதி கிடைத்ததுடன் 1876 மார்ச் 6 ஆம் திகதி கிரகம்பெல் ஒலியை தந்தி வயர் மூலம் பரிமாறச் செய்து காட்டினார்.

கம்பியில்லாத் தந்தியறிமுகத்தைத் தொடர்ந்து வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி கையடக்க தொலைபேசி, 3G கைபேசி), டெலக்ஸ், மின்நகல், மின்னஞ்சல், இணையம் , செய்மதித் தொடர்புகள் என்பன நவீன தொலைத் தொடர்பு சேவைக்குள் உள்வாங்கப்பட்டன.

தொழினுட்ப வளர்ச்சிக்குள் இலத்திரனியல் நுட்பங்களைப் புகுத்தி தொலைபேசியை இலத்திரனியலுக்குள் வசப்படுத்தியவர்கள் ஜப்பானியராவார். இன்று மக்களிடையே செல்லிடத் தொலைபேசிப் பாவனை ஏறுமுகம் காட்டி நிற்கின்றது.

அதுமாத்திரமின்றி தொழினுட்பத் தொலைத்தொடர்பு வளர்ச்சியினால் ஏற்பட்ட அதி நவீன சாதனையாக இணையம் கருதப்படுகின்றது. நாமுட்புகுத்தும் தரவுகளை எமக்குத் தகவலாகச் சேமித்து மீளத் தரக்கூடிய கணனிப்பாவனை இணையச் சேவையில் தொடர்புபட்டுள்ளதால் வலைப்பின்னல்கள் மூலம் பல நாட்டு மக்கள் தமக்கிடையே தகவல் பரிமாற்றங்களை இலகுவாகவும், வினைத்திறனுடனும் , நட்புடனும் பேணி வருகின்றனர்.

ஆரம்பகாலத்தில் இந்த இணையச்சேவை ஆங்கில மொழியிலான வல்லரசின் இராணுவத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.  எனினும் பின்னர் உலகமயமாக்கலின் பன்முகப்படுத்தலின் கீழ் தொலைத் தொடர்பு சாதனமாக மாற்றம் கண்டது. இன்று மின்னியல் தபால், மின்னியல் சஞ்சிகை, மின்னியல் வெளீயீடு, ரெல்நெட், தொடர் கலந்துரையாடல், உலகின் பரந்த வலை என்பன மூலம் நவீன தொடர்பாடல் துறை எமக்குச் சேவையளித்து வருகின்றது.

தொடர்பாடல், தகவல் பரிமாறல் எனும் இருவகையினாலான இணைய தகவற்றுறையின்  சேவை மக்களின் அன்றாட வாழ்விற்கு முதுகெலும்பாய்த் திகழ்கின்றது.

அதேபோல் நவீன தொலைத் தொடர்பில் செய்மதிகளும் நேரடிப்பங்களிப்பைச் செய்கின்றன. மேற்குல நாடுகளே இதனை வினைத்திறனுடன் அதிகளவில் பயன்படுத்துகின்றன. இந்நாடுகளில் வாகனங்களில் "நெவிகேடர்" பொருத்தப்பட்டுள்ளன. இவை பாதை வழிகாட்டியாகும். நாம் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்பினால் செய்மதியின் துணையுடன் குரல் சமிக்ஞயாக எமக்கது பாதையை வழிகாட்டிச் செல்லும்.

எமது அன்றாட வாழ்வோடு பிணைந்துள்ள இத் தொடர்பாடல்கள் மூலம் மக்களின் கலை, வர்த்தகம், பொழுதுபோக்கு மேம்படுத்தப்படுகின்றது. அதுமாத்திரமுன்றி அனர்த்தவேளைகளில் எமதுயிர்களைப் பாதுகாக்கவும் இது உதவுகின்றது.

தொலைத்தொடர்பானது  தொழினுட்பத்தின் வளர்ச்சியோடு போஷிக்கப்பட்டு  வருவதால் ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்கும் ஒப்பற்ற சாதனமாகவும் விளங்குகின்றது.

1865 ல் உருவான சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் குரலாக (International Telecommunication Union)  உலக தொலைத் தொடர்பு தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 17ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதன் வளர்ச்சியினால் மறுபக்கம் நாடுகளை வேவு பார்த்தல், கலாச்சார சீரழிவு, முரண்பாடுகளும் பகைமைகளும் தோன்றுதல் போன்ற பிரதிகூலங்களும் காணப்படுகின்றன.

எவ்வாறாயினும் இன்றைய நவீன வாழ்வில் இத் தொலைத்தொடர்புச் சேவையின் பங்களிப்பு இன்றியமையாததொன்றாகும்.

உலக ஊடக சுதந்திர தினம்



மே - 3
--------  ஒருவர் தன்  மன எண்ணங்கள், செயல்களை அவ்வாறே வெளிப்படுத்தும் தன்மையை "சுதந்திரம் " என்கின்றோம்..இச்சுதந்திரப் போக்கு தடைசெய்யப்படும் சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் வெடிக்கின்றன. அவை குடும்பம், மதம், சமூகம், நாடு, இனம், மொழி என விரிவுபடுத்தப்படுகின்றது.

இச்சுதந்திர தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகமாக "மனித உரிமைகள் சாசனம்" விளங்குகிறது. மனித உரிமை சாசனம் 19 ல் பேச்சுரிமை வலியுறுத்தப்படுகின்றது. 

இந்த வகையில் சுதந்திரமான ஒருவர்        தடையின்றி தனது கருத்தை தெரிவிக்கும் உரிமையுள்ளவர் என்பதை உலகெங்கும் பறைசாற்றும் விதமாக "உலக ஊடக தினம்" அனுஷ்டிக்கப்படுகின்றது.

மனித மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமானதே தொடர்பாடல். ஆரம்ப காலத்தில் "தீமூட்டல்" மூலம் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட மனிதர், பின்னர் சீனர்கள் காகிதங்களைக் கண்டுபிடித்ததன் விளைவாக கடிதம், தந்தி, பத்திரிகை மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்கினர்.
இன்றைய நவீன காலமோ இணையம், மின்னஞ்சலாக மாற்றப்பட்டுள்ளது.

பல்வேறு கோணங்களிலிருந்தும் தகவல்களைத் திரட்டி அவற்றுக்கு உருவம் கொடுப்பவர்களே பத்திரிகையாளர்கள். ஆனாலின்று பத்திரிகைச் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டு, சிறைப்படுத்தப்பட்ட நிலையிலேயே உலக ஊடக தினம் முன்வைக்கப்படுகின்றது..

எத்தகைய நெருக்கடியிலும் மக்களுக்கு நடுநிலையான செய்திகளை பத்திரிகைகளினூடாக வழங்க வேண்டியது பத்திரிகையாளர்களின் கருத்தாகும். ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை இப் பத்திரிகைக்குண்டு.

நவீன தொடர்பாடலின் வளர்ச்சியும், பன்முகப்படுத்தலும் , ஆக்கிரமிப்பும் இன்றைய கால பத்திரிகைத்துறைக்குச் சவாலாக அமைந்தாலும் கூட, அதற்கீடுகொடுத்து செயற்படும் பத்திரிகைத்தறை சார்பானவர்களின் முன்னெடுப்புக்களால் பத்திரிகைத்துறை காலாவதியாகிவிடவில்லை. ஆரோக்கியமான செய்தி தாங்கலுடன் எம் கரங்களைத் தழுவியே நிற்கின்றது.




உலக தாதியர் தினம்



2012.05.12
---------------
கல்வி மற்றும் வைத்திய துறைகளுடன் சம்பந்தப்பட்டோர் வெறும் ஊதியத்திற்காக மட்டும் செயற்படுவதில்லை. இவர்கள் உண்மையில் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றும் போதே அத்துறைசார் குறிக்கோள் வெற்றி நிலையடைகின்றது. அந்த வகையிலின்று உலக தாதியர் தினம் அல்லது செவிலியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

1953 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் என்பவர் இந்த நாளை செவிலியர் நாளாகப் பிரகடனம் செய்யும்படி விடுத்த வேண்டுகோள் உரிய காலத்தில் நிறைவேற்றப்பட்டது. 1965ம் ஆண்டிலிருந்து தாதியர் சேவையை கௌரவிக்கும் விதமாக புளோரன்ஸ் பிறந்தநாளான மே 12 ம் திகதி இந் நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் செல்வச்சிறப்புமிக்க உயர் குடியைச் சேர்ந்தவர் நைட்டிங்கேள். இத்தாலி புளோரன்ஸ் எனும் இவரது பிறப்பிடத்தின் ஞாபகமாக பெற்றோர் இவருக்குப் பெயர் சூட்டினார்கள்.

தாதித் தொழிலின் மகிமையில் ஈர்க்கப்பட்ட நைட்டிங்கேள் போரில் காயம்பட்ட வீரர்களை ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். தாதியர்களுக்கான  பயிற்சிப்பள்ளியையும் இவரே முதன் முதலில் ஆரம்பித்தார். புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டில் ஆதரவற்றோர் விடுதிகளிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்ற போராட்டத்திலும் ஈடுபட்டார்.

1846 ஆம் ஜேர்மனி சென்ற இவருக்கு, அங்குள்ள கெய்சர்ஸ்வர்த் மருத்துவனைச் செயற்பாடுகள் மனங் கவர்பவையாக இருந்தது. இதனால் 1851 ல் தொடர்ச்சியாக 4 மாதங்கள் அக் குறித்த மருத்துவமனையில் தீவிரப் பயிற்சியைப் பெற்றார். அக்காலத்தில் தாதியர் சேவைக்குரிய கௌரவம் அளிக்கப்படவில்லையென்பதால் தன் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறியே அவர் தன் முழு வாழ்வையும் தாதியர் தொழிலுக்காக அர்ப்பணித்தார்.

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12 ஆம் நாளில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயபூர்வமாக இந்நாள் கொண்டாடப்படிகின்றது. இங்குள்ள செவிலியர் மூலமாக விளக்கு ஏற்றப்படும். இங்கு வருகை தரும் செவிலியர் மூலமாக ஏற்றப்பட்ட விளக்கு கைமாறப்பட்டு இறுதியில் அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இவ்வாறு செய்வதன மூலம் தாதியர் தமது அறிவைப் பரிமாறுவதாகக் கருதப்படுகிறது.

'விளக்கேந்திய சீமாட்டி', 'கைவிளக்கேந்திய காரிகை' என அனைவராலும் போற்றப்பட்ட புளோரன்ஸ் ஒரு எழுத்தாளரும், புள்ளிவிபரவியலாளருமாவார்.

ப்ரிய சகி!



ப்ரிய சகி!

சந்தனங் குலைத்த உன்
மதி முகத்தில் ..................
வீழ்ந்து தெறிக்கும் புன்னகைகளை
களவாய்ப் பொறுக்கி பதிக்கின்றேன் - என்
இதழோரங்களில்!

எத்தனையோ எதிர்பார்ப்பு - நம்
இம்ஷைகளில்.....................!
என்னுள் வீழ்ந்து தவிக்கும்
தனிமையிலுன் விம்பம் மட்டுமே.........
தரித்துச் செல்கின்றதென்
மனவெளியில்

என் வீட்டு ஜன்னலோரமாய்
அடிக்கடி வீழ்ந்து கிடக்கும் உன்..................
அசைவுகளில்
இதிகாச காதலுணர்வுகளை
சேகரித்துக் கொண்டேன் !
நாளைய நம் வரலாற்றிற்காக!

என்னை நீ பார்க்கும் ஒவ்வொரு
நொடிகளும்...............
என்னுயிர் உனக்குள்ளல்லவா
ஒளிந்து கொள்கின்றது  சகீயே!


ஜன்ஸி கபூர்