About Me

2013/01/14

மல்லிகை


கூந்தல் வெளிகளில்
குடியிருக்கும்
அழகு தேவதை!

உஷ்ணத்தின் காமத்தை
சிகையுறிஞ்சாது தடுக்கும்
பூக்கூடை!

சூரியன் எட்டிப் பார்க்கையில்
சூட்சுமமாய் இதழ் சுருக்கும்
மென் தேகத்தாள்!

நறுமண ஆட்சேர்ப்பால்
நார் சேர் பூமாலையாய்
தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்!

ஜாஸ்மின் நாமம் சுமந்தே
ஐவிதழ் வரிகளுக்குள்
ஐக்கியமான ஹைக்கூ!

இரவின் கூடலில்
மோகித்துக் கிடக்கும்
மலர்ச் சிற்பங்கள்!

இம்சைக் காதல் தேடி
மேனி நசிக்கும் வண்டுகளுக்காய்
மகரந்தத் தூது விடும் காதலி!

கொடிப் பந்தலிலே
கொசுவம் சொருவிக் காற்றாடும்
மல்லிகைச் சாமரம்!


2013/01/13

பொங்கலோ பொங்கல்


சூரிய தங்கத்தில்
பூரிக்கும் நெல்மணிகள்............
கரமசைத்து வரவேற்கும் இனிய
தைப்பொங்கலிது!

வரப்போரம் இடை நெளித்து
கரும்பாய் முகங் காட்டும்..............
தேன்சுவை மயக்கத்தினில்
உதட்டை நனைக்கும் பொங்கலிது!

வயலோரக் காற்றில் நாணும்
வாழ்வாதார  நெல்மணிக்காய்.......
உளமெங்கும் நன்றி தேக்கி
களிக்கின்ற பொங்கலிது!

சேற்றில் விரல்  நனைத்து
நாற்றாய்  மடி சாயும்........
சோற்றுப் பருக்கை தந்தவளுக்காய்
நன்றியுரைக்கும் பொங்கலிது!

மார்கழிப் பனி விரட்டி
சோர்வையும் கொஞ்சம்  துடைத்து...........
தையாய் இதழ் விரிக்கும்
வசந்தப் பொங்கலிது!

கோமாதா நெஞ்சம் தொழுது
கோயில் திருவிளக்கேற்றி............
மத்தாப்பாய் மகிழ்வுகள் பூக்க
சித்தம் குளிர்த்திடும் பொங்கலிது!

பட்டாடை தனை செருகி
ஆதவனுக்கும் புதுப் படையல்தனையிட்டு......
உறவுகளின் ஆத்ம சுகத்தில்
திருவிழாக் காணும் பொங்கலிது!

பொங்கலின் சந்தம் கண்டு
மணக் களையினி மெல்ல விரிய...............
தையவள் வாழ்த்திடுவாள்
தரணிக்குள் பூத் தூவிடுவாள்!

Jancy Caffoor

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்





அருணோதயம்


கிழக்கின் விடியலில்
விழுந்து கிடந்தாய் ஒளிச் சிறகினை
லேசாய் உதிர்த்து!

உன் குண்டுக் கன்னங்களும்
காந்தம் உமிழும் கண்களும்
சிரிப்பில் நசியும் உதடுகளும்
பாசமாய் என்னை மேவிச் செல்லும்
நிதம்!

உன் தனிமை அலைவரிசையில்
அலையுமெனக்கு
கடிவாளமிட்டாய் அடிக்கடி
ஆசையோடு!

உன் பிடிவாதங்களும் சீற்றங்களும்
ரசனையில் குழைந்தே கலப்பதால்
தொலைபுள்ளியில்
உன்னோடு கண்ணாமூச்சியாடுகின்றேன்
கண்ணா!

ஜன்ஸி கபூர் 



2013/01/12

வைரத்துளிகள்


மோதி வீழ்கின்றன உழைப்பின் துளிகள்
நெற்றி முகட்டில் கரைந்து!

உறிஞ்சி விடும் பூக்களாய்
முகர்கின்றன கைகள் லேசாய் அவற்றை!

கைரேகைகள் கழுவப்படும் போதெல்லாம்
தலைவிதிகள் மாற்றப்படுமோ!

வடியும் நீர்க் கசிவு கண்டு
வழி விட்டு மறைகின்றது  சோம்பல் மெல்ல!

ஈர ஒத்தடங்களின் நெருடல்களில்
ஓரமாய் ஒதுங்கிக் கிடக்கின்றது ஏழ்மை வெம்மை!

உலர்ந்த வாழ்க்கைத் தரையெல்லாம்
உவப்போடு வரைகின்றது பொருளாதாரத்தை!

சோர்வுற்ற தசைகளின் முகங் கழுவல்
ஆர்வத்தோடு எட்டிப் பார்க்கின்றன தேகம் வழியாய்!

வியர்வைத்துளிகள்..............!
உழைப்பின் தேடல் தந்த வைரத்துளிகள்!

ஜன்ஸி கபூர்